கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்தி
ஜனநாயக கூட்டரசை நிறுவுவதற்கு
அரசியல், பொருளாதார துறையில்
முன் வைக்கப்படும் தீர்வுகள்.
பகுதி-1
- அதானி, அம்பானி உள்ளிட்ட தேசங்கடந்த தரகு முதலாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வோம்! தரகு முதலாளிகளுக்கு செல்வ வரி, சொத்து வரி விதிப்போம் என முழங்குகிறது புதிய ஜனநாயகம்.
- கிராமப்புறங்களில் கார்ப்பரேட் காவி பாசிசத்தின் குதிகால் நரம்புகளாக சொத்துடமையை காத்து நிற்கும், நிலப்பிரபுத்துவ-சாதி ஆதிக்க சக்திகளின் நிலங்களை பறிமுதல் செய்வோம். குத்தகை, பகடி, கிஸ்தி போன்ற வழிகளில் நடக்கும் சுரண்டலுக்கு முடிவு கட்டுவோம். முதற்கட்டமாக குறைத்து படிப்படியாக ரத்து செய்வோம்.
- ஆதீனங்கள், கோவில்கள், மடங்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள், வஃப்க் வாரியங்களிடம் குவிந்துள்ள இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை பறிமுதல் செய்து நிலமற்ற கூலி விவசாயிகளுக்கு வினியோகிப்போம் என முழங்குகிறது புதிய ஜனநாயகம்.
- விவசாயத்திற்கு முன்னுரிமை, லேசுரக எந்திரங்களுக்கு இரண்டாம் பட்ச முன்னுரிமை, கனரக எந்திரங்களுக்கு மூன்றாவது முன்னுரிமை என்ற வகையில் பொருளாதாரக் கொள்கையில் மாற்றத்தை கொண்டு வந்து சுயசார்பு பொருளாதாரத்தை கட்டமைப்போம் என அறை கூவி அழைக்கிறது புதிய ஜனநாயகம்.
- கார்ப்பரேட்டுகளுக்கு 25 லட்சம் கோடி கடன் தள்ளுபடி! உழைக்கும் மக்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் மீதும் ஜிஎஸ்டி வரி! இந்த கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம். பன்முக வரி, ஜிஎஸ்டி வரி விதிப்பை ஒழிப்போம்!
- இயற்கை வளங்கள், கனிம வளங்கள், காட்டு வளங்கள், கடல் வளங்கள் அனைத்தையும் பாதுகாப்போம். தண்ணீர் கொள்ளை முதல் மணல் கொள்ளை வரை அனைத்துக்கும் மக்கள் கண்காணிப்பு கமிட்டிகள் மூலம் முடிவு கட்டுவோம்! மக்களை தற்காத்துக் கொள்ளும் அமைப்புகளைக் கட்டுவோம்!
- ஏகாதிபத்திய நிதி மூலதனக் கொள்ளைக்கு வழிவகுக்கும் மறுகாலனியாக்கத்தை ஒழிப்போம்! இந்தியாவில் பெருகிவரும் 1:99 அடிப்படையிலான தேசங்கடந்த தரகு முதலாளிகள்×பெரும்பான்மை மக்கள் என்ற இருதுருவ ஏற்றத் தாழ்வுகளுக்கு முடிவு கட்டுவதை இலக்காக அறிவிப்போம்.
- தற்போதைய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அனைத்து வகை ஜனநாயக உரிமைகளையும் காலில் போட்டு மிதிக்கும் கார்ப்பரேட் காவி பாசிசம் மீண்டும் தலையெடுக்காத வண்ணம் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம்.
- இந்திய ஒன்றியம் என்பதை அனைத்து தேசிய இனங்களுக்கும், மொழி வழி அமைந்த மாநிலங்களுக்கும் சுய நிர்ணய உரிமையை வழங்கும், உண்மையான மாநிலங்களின் ஒன்றியமாக கட்டமைப்போம் என அறைகூவல் விடுக்கின்றது புதிய ஜனநாயகம்.
- இந்திய மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குகின்ற பாசிச பயங்கரவாத அடக்குமுறைகளையும், கருத்துரிமைகளை பறிக்கின்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் முறியடித்து உண்மையான ஜனநாயக உரிமைகளை பாதுகாப்போம் என்று முழங்குகிறது புதிய ஜனநாயகம்.
- இந்தியாவில் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு தேர்தல் உள்ளிட்ட அனைத்துவகை போராட்ட வடிவங்களையும் பயன்படுத்துவோம். தற்போது நிலவும் பாசிச சர்வாதிகாரமும், மாற்றாக முன் வைக்கப்படும் போலி ஜனநாயகமும் மக்களை பாதுகாக்காது. ஜனநாயக கூட்டரசு ஒன்றே தீர்வு. அதற்கு மேலிருந்து ஐக்கிய முன்னணியும், கீழிருந்து மக்கள் முன்னணியும் கட்டுவோம்.
- பார்ப்பன (இந்து) மதக் கொடுங்கோன்மையின் கீழ் அடக்கி ஒடுக்கப்படும் பட்டியலின மக்கள், பழங்குடிகள் மட்டுமின்றி பார்ப்பன மதத்தை ஏற்காத பல்வேறு பிரிவுகளையும், மதச் சிறுபான்மையினரின் உரிமைகளையும் பாதுகாக்கின்ற வகையில் ஜனநாயக கூட்டரசை நிறுவுவோம். சமூக நல்லிணக்க குழுக்களின் மூலம் மக்களிடையே ஒற்றுமையை உருவாக்குவோம் என்று அறை கூவி அழைக்கின்றது புதிய ஜனநாயகம்.
- கார்ப்பரேட் காவி பாசிச தாக்குதலின் கீழ் அதிகரித்துள்ள பட்டியலின, பழங்குடி மக்களின் மீது ஏவப்படும் சாதி தீண்டாமை வன்கொடுமைகள், பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க வன்முறைகள், சமூகத்திற்கு எதிரான அனைத்து வகையான கிரிமினல் குற்றங்கள், இணையவழி மோசடிகள், பொருளாதார மோசடிகள் அனைத்துக்கும் முடிவு கட்டும் வகையில் சட்டங்களை இயற்றி மக்களை ஜனநாயக கூட்டரசு பாதுகாக்கும் என அறைகூவுகிறது புதிய ஜனநாயகம்.
ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம் (மா-லெ)
மிகச் சிறப்பான முழக்கங்கள்! இம்முழக்கங்களின்கீழ் வெகுமக்களை அணிதிரட்டி இந்தியாவில் ஜனநாயகக் கூட்டரசை நிறுவிடக் களம் காப்பகம்!!
முந்தைய பதிவின் கடைசி வார்த்தை ‘காப்பகம்’ என்பது தவறு. ‘காண்போம்’ என்பதே சரி. தவறுக்கு வருந்துகிறேன்.