சாமானியர்கள் மத்தியில் அதிகரிக்கும் வன்முறை கலாச்சாரம் ! தீர்வு என்ன?

நாம் இந்த சமூகத்தில் தான் வாழ்கிறோம். வாழ்க்கை முறையை பழக்கவழக்கங்களை கண்ணோட்டங்களை மட்டுமின்றி நமது விருப்பு வெறுப்புகளையும் கூட ஓரளவுக்கு சமூகம் தலையிட்டு தீர்மானிக்கவே செய்கிறது

0

மிழகத்தில் கிண்டியில் மருத்துவர் பாலாஜி கத்திக்குத்தை தொடர்ந்து பள்ளி ஆசிரியை ரமணி கொல்லப்பட்டார். தர்மபுரியில் வழக்கறிஞர் ஒருவர் வெட்டி சாய்க்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அரசின் மீது கண்டனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ரமணியை அரசு மேல்நிலை பள்ளியிக்குள் நுழைந்து மதன் என்பவர் ரமணியை கத்தியால் குத்தினார். இதில் அவர் பரிதாபமாக பலியானார்.

ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கண்ணனை, ஆனந்தன் என்பவர் சரமாரியாக வெட்டினார். ஓசூர் ஏரி தெருவை சேர்ந்தவர் வழக்கறிஞர் கண்ணன். ஒசூரில் பிரபல வழக்கறிஞர் சத்தியநாராயணாவிடம் இவர் ஜூனியராக வேலை பார்த்து வருகிறார். ஓசூர் நாமல் பேட்டையை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் வேறொரு வழக்கறிஞரிடம் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் நண்பர்கள் என கூறப்படுகிறது. அப்படி இருந்தும்  ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் ஆனந்தகுமார் வழக்கறிஞர் கண்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதற்கு பா.ம.க. உள்ளிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

இன்ஸ்டன்ட் தீர்வுகள்  போதுமா?

மருத்துவருக்கு கத்திக்குத்து என்றவுடன் மருத்துவமனையில் மெட்டல் டிடெக்டர், ஐ சி யு மற்றும்ஆபரேஷன் தியேட்டர் முன்பு காவலர்களை போடுவது உள்ளிட்ட  ஆலோசனைகளும், சாத்தியமான  நடவடிக்கைகளும் முன்னிறுத்தப்பட்டு வருகின்றன.

பள்ளி ஆசிரியர்களுக்கும் போதிய பாதுகாப்பு இல்லை என கூக்குரல் எழுகிறது .

இதுகுறித்து இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினரும் வேலூர் மாவட்ட அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான செ.நா.ஜனார்த்தனன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “காட்டுமிராண்டித்தனமான இச்செயலை செய்தவருக்கு கடும் தண்டனையை தமிழக அரசு வழங்கிட வேண்டும். இந்த கொடூரமான செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணத் தொகை அளிக்க வேண்டும்.

மேலும் அக்குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். மறைந்த ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அரசு பள்ளிகளில் யார் வேண்டுமானாலும் நுழைந்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை இருப்பதால் தமிழக அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாட்டினை அரசு பள்ளிகளுக்கு செய்து தர வேண்டும் என முன் வைத்துள்ளதை தினகரன் தெரிவிக்கிறது.

அனைவருக்கும் போலீஸ் பாதுகாப்பு சாத்தியமா?

எங்கெல்லாம் தாக்குதல் நடக்கிறதோ அந்தத் துறையில் உள்ள மொத்த நிறுவனங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு பெறுவது சாத்தியம் தானா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

பாதுகாப்பு கேட்பவர்களின் நோக்கம் சரியானது.குற்றவாளிகளை தூக்கில் போடுவது,மருத்துவமனையில் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு ஏற்பாடு செய்வது,நீதிமன்ற வளாகங்களில் CCTV கேமரா பொறுத்துவது அனைத்து இடங்களிலும் காவலர்களை நிறுத்துவது என அணுகும் விதத்திலும், வருகின்ற முடிவிலும் தான் கோளாறு உள்ளது.

மேற்குறிப்பிட்ட மூன்று சம்பவங்களிலும் கையில் கத்தியை எடுத்தவர்கள் தொழில்முறை கிரிமினல்கள் அல்ல. பின்னர் ஏன் வெறிகொண்டு குத்தி சாய்த்தார்கள்? இந்த கேள்விக்கான விடையை தெரிந்து கொள்ளாமல், இத்தகையவர்களை கடுமையான சட்ட பிரிவின் கீழ் சிறையில் அடைப்பது மட்டுமே தீர்வு என்பதாக நாம் நம்பி ஏமாறலாமா ?

கையில் கத்தி எப்படி வந்தது ?

ஒரு மகனாக, படித்த இளைஞருக்கு  கையில் கத்தி ஏன் வந்தது ? ஒரு காதலனின் கரத்தில் கத்தி வர காரணம் என்ன ? நண்பனையே வெட்ட ஒரு கிளர்க் துணிய காரணம் என்ன?

வெட்டிய ஒவ்வொருவருக்கும் தனது செயலுக்கான ஏதாவது ஒரு காரணத்தை முன்வைக்கவே செய்வார்கள் . இந்த மருத்துவர் எனது தாய்க்கு சரியான சிகிச்சை தரவில்லை எனது தாய் படும் கஷ்டத்தை என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை என மருத்துவர் பாலாஜியை குத்தியவர் விளக்கக்கூடும்.

வருஷக்கணக்காக என்னை காதலித்து விட்டு திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள மறுக்கிறார் என ரமணியை குத்திய இளைஞர் கூறக்கூடும்.

எனக்கு துரோகம் செய்து விட்டான் நண்பனே என்றாலும் துரோகத்தை மன்னிக்க முடியாது என்று வழக்கறிஞரை குத்தியவர் பாவ மன்னிப்பும் கேட்கக் கூடும்.

இவர்களின் பார்வையில் தம்மால் குத்துப்பட்டவர்கள் வாழ தகுதி இல்லாதவர்கள் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அல்லது தனக்கு எது நடந்தாலும் பரவாயில்லை தக்க பாடத்தை புகட்டியே தீருவேன் என்று வெறியுடன் களத்தில் இறங்கி இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

கத்தியை கையில் எடுத்தவர்களிடம் மட்டுமா தவறு உள்ளது. இவர்களை சிறைக்கு அனுப்பி விட்டால் மட்டும் பிரச்சனைகள் ஒழிந்து விடுமா ? சமூக அக்கறை உள்ள அனைவரும் இதைத்தான் சிந்தித்தாக வேண்டும் .

பொருந்தவில்லை என்றாலும் ஒரு உதாரணத்திற்காக சேத்துடன் தெருவில் வரும் பன்றியை எடுத்துக் கொள்வோம் . பேருந்து நிலையத்தில் நுழைந்து ஒரு சிலுப்பு சிலிப்பி சுத்தியும் உள்ள மக்கள் மீது சேரடிக்கிறது. ஒரு பன்றி வங்கிக்குள் நுழைந்தும் அங்கு இருப்பவர்கள் மீது சேரடிக்கிறது. ஒரு பன்றி பேருந்துக்குள் நுழைந்து பயணிகள் மீதும் சேரடிக்கிறது. இப்பொழுது இந்தப் பன்றிகளை பிடித்து கூண்டில் அடைக்கலாம் அத்துடன் பிரச்சனை தீருமா? அல்லது ஊரில் உள்ள பன்றிகளை எல்லாம் கூண்டில் அடைத்து விட முடியுமா? அல்லது பன்றிகள் புரண்டு எழும் சாக்கடைகளை பாதாள சாக்கடைகளாக்கி பராமரிக்கலாமா? மேற்கண்ட கேள்விகளில் பொருத்தமான பதில்களை நீங்களே யோசியுங்கள்.

நாம் கத்திக்குத்து சம்பவத்திற்கு மீண்டும் வருவோம் . நம் சமூகம் எப்படி மாறிக் கொண்டுள்ளது என்பதற்கான உதாரணங்கள் தான் கையில் ஆயுதத்தை எடுத்து நிற்கும் குற்றவாளிகளாக முன்னிறுத்தப்படும் கிளர்க் ஆனந்தகுமார் போன்ற  நபர்கள்.

ஊருக்கு உபதேசிக்கலாமா?

ஓரளவு சட்டம் தெரிந்து இருக்கும் ஒரு வழக்கறிஞரின் உதவியாளர் என்ற வகையில் ஒரு பிரச்சனையை தீர்க்க சட்டப்படி எப்படி அணுகுவது காவல்துறையை நீதித்துறையை சிறைத்துறையை எப்படி எதற்கு பயன்படுத்துவது என்ற புரிதல் இருந்திருக்கும். தன்னிடம் உதவி கேட்டவர்களிடமும் அரசுத் துறைகளை எப்படி அணுகி பயன்படுத்துவது என பொருத்தமாக வழிகாட்டி இருக்கவும் கூடும் .  அப்படி இருந்தும் தனக்கு ஒரு பிரச்சனை எனும் பொழுது இதில் எதையும் அவர் பயன்படுத்த விரும்பவில்லை. கையில் அறிவாளை எடுத்துள்ளார்.


படிக்க: அரசு மருத்துவர்- ஏழை நோயாளி முரண்பாடு: தீர்வுகாண வழி என்ன?


அதாவது தான் தீர்மானித்து விட்டால் போதும்; தானே போலீசு, ஜட்ஜ், சிறை காவலர் என மூன்று துறைகளின் வேலையை தன் கையில் எடுத்துக் கொண்டுள்ளார். அதாவது, கிராமத்தில் ஆதிக்க சாதி பண்ணையாரின் கட்டப்பஞ்சாயத்து பாணியில் பிரச்சனையை தீர்க்க முற்பட்டுள்ளார்.

ஆசிரியை குத்தியவர்  சின்னமனையை சேர்ந்த மீனவர் கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் பன்னீர்செல்வத்தின் மகன் மதன்(30) என்பது தெரியவந்தது.

போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் மதன் கூறியிருப்பதாவது:

ரமணியும் நானும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள். இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இதை எனது பெற்றோரிடம் தெரிவித்தேன். இதனால் ரமணியை திருமணம் செய்து வைப்பதற்காக கடந்த 2 வாரங்களுக்கு முன் எனது பெற்றோர், ரமணி வீட்டுக்கு சென்று பெண் கேட்டனர். அதற்கு ரமணி பெற்றோர் எனது மகள் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். மீன்பிடி தொழில் செய்பவருக்கு எங்கள் மகளை தர விருப்பம் இல்லை என கூறி விட்டனர். இதனால் நான் நேற்று காலை 10.10 மணியளவில் ரமணி வேலை பார்க்கும் பள்ளிக்கு சென்று அவரை சந்தித்து பேசினேன். அதற்கு ரமணி எனது பெற்றோருக்கு இந்த திருமண விவகாரத்தில் விருப்பம் இல்லை. எனக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். அவரை தான் நான் திருமணம் செய்ய உள்ளேன் என்றார். இதனால் ஆத்திரமடைந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரமணியை குத்தினேன் என வாக்குமூலம் அளித்துள்ளார் என்கிறது தினகரன்.

(https://m.dinakaran.com/article/News_Detail/1483359/amp)

ஒரு மீனவனாக உழைத்து வாழும் இளைஞனுக்கு எங்கிருந்து இவ்வளவு வெறி எண்ணம் வந்திருக்க வாய்ப்புள்ளது?

மாணவர்களே ஆசிரியர்களை கத்தியால் குத்துவதும் அமெரிக்கா போன்ற நாடுகளில் துப்பாக்கியால் சுடுவதையும் நாம் பார்த்திருக்கிறோம் தானே!

நாம் இந்த சமூகத்தில் தான் வாழ்கிறோம். வாழ்க்கை முறையை பழக்கவழக்கங்களை கண்ணோட்டங்களை மட்டுமின்றி நமது விருப்பு வெறுப்புகளையும் கூட ஓரளவுக்கு சமூகம் தலையிட்டு தீர்மானிக்கவே செய்கிறது.

சுயநலனை ஊக்குவிக்கும் கல்வி !

நீ ஃபர்ஸ்ட் மார்க் வா! நீ ஃபர்ஸ்ட் ரேங்க் எடு! நீ பந்தயத்தில் ஜெயித்து சாம்பியன் ஆகு! என்று தான் நாம் வழிகாட்டி வருகிறோம். ஒவ்வொரு தனி மாணவனையும், தன்னுடன் படிப்பவர்களையும் போட்டியாளர்களாக கருத கற்றுத் தருகிறோம்.

ஒரு மாணவன் தான் வெல்ல சக மாணவர்களை தோற்கடித்தாக வேண்டும் என்ற கண்ணோட்டத்துடனுமே வளர வழிகாட்டுகின்றன கல்வி நிறுவனங்கள். இப்படி வளரும் மாணவன் தான் நாளை இளைஞனாக வளர்கிறான். இவனிடம் சக மனிதர்களை அரவணைத்துச் செல்லும் பண்போ, விட்டுக் கொடுத்து ஒருவருக்கொருவர் உதவி கொள்ளும் சகிப்புத்தன்மையும் இருக்கும் என்றா எதிர்பார்ப்பது ? ஒரு சிலர் தனக்கு கிடைக்காதது இருக்கவே கூடாது என அழிக்கும் நிலைக்கும் செல்கிறார்கள். இதற்கு எது காரணம்?

சினிமா காட்சி வெறி !

திரைப்படங்களில் நாம் காண்பது எதை? தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில்  பண்ணையாரும் பணம் படைத்த அதிகாரிகள் முதலாளிகள் அரசியல்வாதிகளின் வாரிசுகள் அனைவரும் தான் விரும்பும் எதையும் அடைய உரிமை பெற்றவர்கள் என்று தானே வெறியேற்றுகிறது .

நுகர்வு வெறியை தூண்டும் கார்ப்பரேட் கயவர்கள் !

ஆண்கள் வாழ,  அனுபவிக்க படைக்கப்பட்ட பண்டங்களாக தான் இளம் பெண்களை காட்சிப்படுத்துகின்றனர். எந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனமும் தனது சரக்கை விற்க கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்வு செய்வது இளம் பெண்கள் இதை விரும்புவார்கள் என்று தான்.

ஜட்டி முதல் சேவிங் சென்ட் வரை பிளேடு இதைப் பயன்படுத்தினால் “பிகர் மடியும்” என்று காட்சிப்படுத்துகின்றன. இப்படி பள்ளி முதல் சமூகம் வரை அனைத்திலும் நாம் எதைக் கற்றுத் தருகிறோமோ அதாவது ஆட்சியாளர்களும் ஆளும் வர்க்கங்களும் எதை கற்றுத் தருகிறார்களோ அதன்படி தான் சமூக உறுப்பினர்களின் கண்ணோட்டமும் செயல்பாடும் அமையும்.

சேற்றில் புரண்டு எழுந்து வந்து சிலுப்பும் பன்றிகளை மட்டும் தண்டிப்பதா? சேத்து குட்டையை பராமரிப்பவர்களையும் சேர்த்து தண்டிப்பதா ? சமூகத்தின் கண்ணோட்டத்தை தீர்மானிக்கும் முக்கியமான கருவிகளில் ஒன்றாக கல்விமுறை உள்ளது. மக்களுக்கு வாழ்க்கை கண்ணோட்டத்தை தரும் முக்கியமான ஊடகங்களாக சினிமாவும், குறைந்த அளவில் சமூக ஊடகங்களும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் தாக்கத்திற்கு உட்படாமல் நாம் யாரும் வாழவோ வளரவோ வாய்ப்பே இல்லை.

எனவே ஊர் அமைதியாக இருக்க வேண்டும் என்றால் நம் வீட்டுப் பிள்ளைகள் மனிதத்தன்மை, சகிப்புத்தன்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றால் இந்த சமூகத்தின் கண்ணோட்டத்தை உருவாக்கும் பொறுப்புகளும் சரியாக இருந்தாக வேண்டும். அதற்கு ஆளும் கட்சிகள், அதிகார வர்க்கத்தினர் உருவாக்கும் கண்ணோட்டத்துக்கு பலியாவதை நாம் மாற்றியாக வேண்டும். கல்வி முறையோ சென்சார் போர்டுகளோ மக்கள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கியாக வேண்டும். அதற்கு நமக்கான அரசை அமைக்க வேண்டும். கார்ப்பரேட்-காவிப் பாசிச அரசை வீழ்த்தி விட்டு  ஜனநாயகக் கூட்டரசு அமைக்க ஒன்றிணைவோம்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here