‘கடவுள் ராமன்’(?) Vs டார்வின் – ஏங்கெல்ஸ் – மார்க்ஸ்…! 

அயோத்தியில் மசூதி இருந்த இடத்தில்தான் ராமன் பிறந்தான்; எனவே மசூதியை இடித்தோம்; நாடு முழுவதும் பல நூற்றுக் கணக்கான இஸ்லாமியர்களைக் கொன்று குவித்து ரத்தக்களரி ஆக்கினோம்; ‘புத்திசாலி’த் தனமான நீதிபதிகள்(?) தீர்ப்பைப் பெற்று நூற்றுக்கணக்கான கோடிகள் செலவு செய்து இராமனுக்கு கோவிலையும்  கட்டி எழுப்பினோம்; தற்போது (உலகம் சிரிக்கும் அளவிற்கான) ‘ராமனுக்கே’ துரோகம் செய்து ரூ.1500 கோடிகளுக்கும் அதிகமான மாபெரும் ஊழலையும் செய்து முடித்து (தெனாவட்டாக) வலம் வருகிறோம் – ஊர் சுற்றுகிறோம் – நாடு சுற்றுகிறோம்…’ – இவைதான் இன்றைய ஆர்எஸ்எஸ் – பாஜக – இந்துத்துவ -பாசிசக் காவி(லி)க் கும்பலின் கூப்பாடு அல்லது நிலைப்பாடு…!

இந்தியாவின் அருதிப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் ‘தரித்திர’ வாழ்க்கை க்கு உண்மையான தீர்வு எங்கே இருக்கிறது என்பதைக் காண முடியாதவர்களாக பாமர உழைக்கும் மக்களின் நிலை நீடிக்கிறது. அதனால் தான் உள்ளூர் குல தெய்வங்களான நாட்டார் தெய்வங்கள் முதல் நாடு முழுவதும் விரவிக் கிடக்கும் ‘பெரு தெய்வங்கள்’ வரை, கடன் பட்டாவது பணத்தை – பொருளைக் கொட்டி அழுது வழிபட்டு தமது ‘தரித்திர’ வாழ்வில் இருந்து விடுபட்டு விடலாம் என்ற கனவில் தொடர்ந்து தத்தளிக்கிறார்கள்…!

காசி, அயோத்தி, ராமேஸ்வரம்… இப்படி வடக்கில் இருந்து தெற்கு திசைக்கும், தெற்கிலிருந்து வடக்கு திசைக்கும், கிழக்கு மேற்காகவும் நாடோடிகளாய் அலைந்து ‘தெய்வ’ வழிபாடு செய்த வண்ணம் உள்ளனர். எப்படியாவது வாழ்க்கை இன்னல் களிலிருந்து கரையேறி விடலாம் என பெரும் நம்பிக்கை கொண்டுள்ளனர! இது நடக்குமா?

அயோத்தி ராமர் கோவில் மெகா ஊழல் நடந்தேறிய பின் அக்கோவிலுக்கு வரும் கூட்டமும், காணிக்கை நன்கொடைகளும் கூட கணிசமாகக் குறைந்துள்ளது என்ற தகவல் வருகிறது. அது உண்மைச் செய்தியாக இருப்பின் மக்கள் அவ்வழியைத் தொடர்ந்திட வேண்டும் என்பதே நமது ‘பிரார்த்தனை’யாக அமையட்டும்…!

‘பூஜ்ஜியம்’ முன் சரணாகதி ஆகிக் கிடக்கும் மக்கள் கரை சேர்வார்களா…?

உலகில் தேடித் தேடிப் பார்த்தாலும் எங்கும் கிடைக்காத ‘நமது’ இந்து சமய புராண வேத இதிகாசக் குப்பைகளிலிருந்து நாம் எதனை அறிய முடிகிறது? மனித சமூகத்தின் வளர்ச்சி போக்கினை அது நான்கு (‘யுகம்’) வகைகளாக பிரித்திருக்கிறது. இது பற்றி இதே தளத்தில் முன்பு ஒரு கட்டுரையை வேறொரு கண்ணோட்டத்தில் விளக்கியிருந்தோம்.

  • கிருத யுகம் எனும் சத்திய யுகம் (17,28,000 ஆண்டுகள்)
  •  திரேதா யுகம் (12,96,000 ஆண்டுகள்)
  • துவாபர யுகம் (8,64,000 ஆண்டுகள்)
  • கலியுகம் (4,32,000 ஆண்டுகள்)

ஆக மொத்தம் 43,20,000 ஆண்டுகள். இவை மொத்தமும் சேர்ந்து ‘ஒரு மகா யுகம்’ என வரையறுத்து உள்ளது இந்தப் புளுகுனிக் கும்பல்!

தற்போது நடப்பது கலியுகமாம்? இந்த கலியுகம் முடிவடைய இன்னும் 4,26,888 ஆண்டுகள் பாக்கி உள்ளனவாம்? இந்த யுகம் முடிந்து மீண்டும் கிருதய யுகமும் முடிந்து மீண்டும் திரேதா யுகம் (நம்ம தேசிய நாயகன் ராமன் வாழ்ந்த யுகம் மீண்டும்) பிறக்க இன்னும் 17 லட்சத்திற்கும் அதிகமான ஆண்டுகள் உள்ளன. இந்த யுகக் கணக்குகள் அனைத்தும் புராண கால அளவீடுகளின்படி கணிக்கப்பட்டதாக (எவ்வித அறிவியல் ஆதாரமும் இன்றி) கதை அளக்கிறது இந்துத்துவ காவிக் கும்பல்.

தற்போது நாம் வாழும் கலியுகம் முதல் சுற்று அல்லவாம்! பிரம்மனின் படைப்புக் காலத்தின் படி இது ஒரு ‘கல்ப காலம்’! இது 28 – வது மகா யுகத்தின் (chatur yuga) 4-வது யுகமான கலியுகமாகும். இந்த நான்கு யுகங்களின் சுழற்சி முடிவுற்று மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டே இருக்குமாம்! இனி கலி யுகம் முடிந்து கிருத யுகம் துவங்குகின்ற பொழுது அது 29-ஆவது மகா யுக சுழற்சி துவங்குகின்ற தருணமாம்! முன்பு கணக்கிட்டது போல் ஒரு மகா யுகம் 43 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகள் என்றால் 28-வது மகா யுக சுழற்சியைப் பெருக்கி கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்! இப்பணியை மேற்கொள்ளும் பொழுது நிச்சயமாக மயக்கப்பட்டு விழுந்து விடுவீர்கள்!

இதிலே ‘நமது’ தேசிய நாயகன் ராமன், அவனது அப்பன் தசரதன்,  அவனது 60 ஆயிரம் பெண்டாட்டிகள், சீதை, லட்சுமணன், சுக்ரீவன் என எல்லா வானரக் கும்பலும் வாழ்ந்த திரேதா யுகம் 28 ஆவது மகா சுழற்சி முறையில் எத்தனாவது சுழற்சியில் பிறந்தார்கள் – வளர்ந்தார்கள் – வாழ்ந்தார்கள் என்பதற்கு இந்தப் ‘புண்ணியவான்கள்’ கதை அளக்கவில்லை! நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு திரைப் படத்தில் குறிப்பட்ட தைப் போல,  ‘ஏன்டா… அதற்காகப் புளுகுவதற்கு குறைந்த பட்சம் ஒரு தர்மம் நியாயம் இருக்க வேண்டாமாடா?’ – என்ற கேள்வியைத்தான் இந்த அண்டப் புளுகு –  ஆகாசப் புளுகர்களான சங்கிக் கும்பலிடம் கேட்க வேண்டி உள்ளது.

ஆக, அறிவியல் உண்மைகளுக்கு மாறாக, ராமன் பிறந்தான்; வளர்ந்தான்; வாழ்ந்தான்; தெய்வமானான்… என்பது முற்றும் முழுதான கற்பனையான கட்டுக் கதை என்பதை மக்கள் உணரத் தலைப்படல் வேண்டும். அப்பொழுது தான் இந்த பாசிசக் காவி(லி)க் கும்பலின் ரத்தக் களரியை உண்டாக்கும் – மக்களை பல வகைகளிலும் பிரித்தாளும் இறுக்கமான கொலை வெறி அபாய நிலையில் இருந்து விடுபட முடியும். மீள முடியும்.

அறிவியல் மேதை சார்லஸ் டார்வின் (1809 – 1882) ‘உயிரினங்களின் தோற்றம்’ குறித்து என்னதான் கண்டுபிடித்தார்?

பரிணாம வளர்ச்சி தத்துவத்தின் ‘பிதாமகன்’ சார்லஸ் டார்வின் என்பதை மறுக்க இயலாது.

*இயற்கைத் தேர்வு (Natural Selection) குறித்து அவரது குறிப்பான கண்டறிதல் என்பது உயிரினங்கள் தங்கள் சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு தகுதி உள்ளவை மட்டுமே பிழைத்து வாழும் என்ற புரட்சிகரமான உண்மையை இவர் கண்டறிந்து உலகிற்குத் தெரிவித்தார்.

*உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி (Theory of Evolution) குறித்து இவரது கண்டறிதல் என்பது பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒரு பொதுவான மூதாதையரிடமிருந்து படிப்படியான மாற்றங்கள் (Descent with Modification) மூலம் தோன்றியன என்று விளக்கினார்.

*’உயிரினங்களின் தோற்றம்’ (0n the 0rigin of Species) என்ற இவரது புகழ்பெற்ற நூல் 1859-இல் வெளியிடப்பட்டது. அறிவியல் வரலாற்றில் மிக முக்கிய நூலாக இந்நூல் இன்று வரை கருதப்படுகிறது. இது நவீன உயிரியலின் அடித்தளமாகும்.

பரிணாம வளர்ச்சித் தத்துவத்தை – அதன் நீட்சியைக் கண்டறிந்த டார்வின் இறுதியில் மனிதக் குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்பதை உலகிற்கு அறிவித்தார்.

டார்வின் கண்டுபிடிப்புகளின்படி குரங்கு மனிதனிலிருந்து (Common Ancestor) – நவீன அறிவியல் கணக்கீட்டின்படி ஹோமா சேபியன்ஸ் (Homo Sapiens) எனப்படும் நவீன மனித இனம் தோன்றி சுமார் 3 லட்சம் ஆண்டுகள் மட்டுமே ஆகின்றன என்பது தெளிவாகிறது.

இப்பொழுது யோசித்துப் பாருங்கள்…! இந்து சமய புராண இதிகாச குப்பைகளில் குறிப்பிட்டுள்ள நான்கு வகை யுகங்கள் – நூற்றுக்கணக்கான லடச ஆண்டுகள் பிரம்மன் வழியாக மனிதர்கள், பற்பல கடவுளர்கள் உருவெடுத்தார்கள் போன்ற அறிவியலுக்குப் புறம்பான கட்டுக் கதைகளையும், அறிவியல் பூர்வமான சார்லஸ் டார்வினின் கண்டுபிடிப்புகளையும் மூளையைச் செலவளித்து உரசிப்பாருங்கள்…

மக்களே, எது சரி என்ற உண்மை அறிந்து உங்கள் மனதை சுட்டெரிக்கும்!

ஆசான் ஏங்கெல்ஸின் ‘உழைப்பின் பாத்திரம்’ (Labour Theory) என்ன கூறுகிறது?

ஆசான் காரல் மார்க்ஸின் உற்ற தோழனான ஆசான் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் எழுதிய “குரங்கு மனிதனில் இருந்து, மனிதனாக மாறிய இடைக்காலத்தில் உழைப்பின் பாத்திரம்” (The part played by Labour in the Transition from Ape to Man) என்ற அறிவியல் நூலின்படி விலங்கு நிலையில் இருந்த மனித குரங்கு நிமிர்ந்து நடக்கத் தொடங்கியதும், தனது கைகளை உழைப்புக்கான கருவிகளை செய்ய பயன்படுத்தியதும்தான் அதை (அந்த மனிதக் குரங்கை)  முழுமையான மனிதனாக மாற்றியது என வரையறுக்கிறார். இதன் மூலம் ஆசான் ஏங்கெல்ஸ், ‘உழைப்பே மனிதனின் அடிப்படை ஆதாரம்’ என்று மிகச் சரியாகவே வரையறுத்துக் கூறினார்.

அவர் கண்டறிந்த சமூக விஞ்ஞான உண்மைகளின் படி இந்த மிக நீண்ட பரிணாம மாற்றத்திற்கு பில்லியன் கணக்கான ஆண்டுகள் (சுமார் 20 லட்சம் முதல் 30 லட்சம் ஆண்டுகள்) தேவைப்பட்டன. அப்படி ஒரு நீண்ட நெடிய பரிணாம வளர்ச்சிப் பாதையினூடேயே முழு மனித உருவம் படைத்த மனிதன் ஒருவன் உருவாகுகிறான்.

உறுதியாக பிரம்மன் ஒருவன் ஆண்டவனாக உருவெடுத்ததும் இல்லை! தேசிய நாயகன் ராமன் வாழ்ந்த சரித்திரமும் இல்லை! – என்பதை இந்த அறிவியல் மேதைகளின் கண்டுபிடிப்புகள் மூலமாக மிகச் சிறப்பாகவே மானுட உலகம் முழு உண்மையை உணர்ந்து கொள்ளலாம்.

கார்ல் மார்க்ஸின் சமூக விஞ்ஞானம் சொல்வது என்ன?

ஆசான் மார்க்ஸ் கண்டுபிடித்த இயக்கவியல் பொருள்முதல் வாதம் (Dialectical Materialism) யாது கூறுகிறது? இது இயற்கையும் சமூகமும் நிலையானவை அல்ல; மாறாக தொடர்ந்து மாறிக் கொண்டிருப்பவை என்ற தத்துவத்தை விளக்குகிறது. சமூகத்தில் ஏற்படும் அனைத்து மாற்றங்களுக்கும் காரணம் கடவுளோ அல்லது மனிதனின் ஆன்மீக சிந்தனைகளோ அல்ல; மாறாக,  பருப் பொருளான சமூகப் பொருளாதார நிலைமைகளே மாற்றத்தை ஏற்படுத்து  கின்றன; முரண்பாடுகளின் மோதல்களே.

(எ.கா.:- பழைய கருத்துக்கும் புதிய சிந்தனைக்கும் இடையிலான மோதல்) வளர்ச்சியின் அடிப்படை விதிகளாகும் என்ற தெள்ளத் தெளிவான சமூக விஞ்ஞான உண்மையைப் போட்டுடைக்கிறார் ஆசான் கார்ல் மார்க்ஸ்.

அடுத்து, வரலாற்றியல் பொருள்முதல் வாதம்

(Historical Materialism) என்ற சமூக விஞ்ஞான கண்டுபிடிப்பின் மூலம் மார்க்ஸ் மனித வரலாற்றின் போக்கை இந்த தத்துவத்தின் மூலம் தெளிவுபட விளக்கிச் சென்றார். ஒரு சமுதாயத்தின் அரசியல், சட்டம், கலாச்சாரம் மற்றும் சிந்தனைகள் அனைத்தும் அந்த சமூகத்தின் உற்பத்தி முறையைச் (பொருளாதார அடித்தளத்தை) சார்ந்து உள்ளனவே தவிர, அவை தன்னிச்சையாக உருவாவதில்லை. பொருளாதார உற்பத்தி முறை (உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்தி உறவுகள்) மாறும்போது, அதற்கேற்ப ஒட்டுமொத்த சமுதாய அமைப்புமே மாறுகிறது என்பதனை ஆணித்தரமாக நிறுவினார் ஆசான் கார்ல் மார்க்ஸ்.

ஆசான்கள் லெனின், மா-சே-துங், ஸ்டாலின் போன்றோர் மார்க்சியத்தை மேலும் மேலும் புதிய நிலைகளுக்கு ஏற்ப வளர்த்து எடுத்தனர். சமூக மாற்றப் புரட்சிகளை பாட்டாளி வர்க்கத்தினரின் பெரும் ஒத்துழைப்புடன் கண்டனர் – ஈந்தனர்! (சோசலிசப் புரட்சி,  புதிய ஜனநாயக புரட்சி)

இன்று உலக சமூகப் பொருளாதார நிலைமைகளில் புரட்சிகளைக் கண்ட நாடுகள் பலவும் சரிவுகளைச் சந்தித்து உள்ளன என்பது உண்மையே! மனித இனம் உருவாகி லட்சக்கணக்கான ஆண்டுகள் உருண்டோடி, பல்வேறு சமூகப் படிநிலைகளை தாண்டி வந்த சூழலில், இளம் பருவத்தில் உள்ள மார்சிய-லெனினிய- மாவோயிசத்திற்கு இச்சரிவு ஒன்றும் எதிர்பாராததல்ல! ஆசான்கள் இதுகுறித்து கூறாத எதுவும் அல்ல. உலக ஏகாதிபத்திய முதலாளித்துவம் அவர்களின் குலக் கொழுந்துகள் மார்க்சிய-லெனினியம் காலாவதியாகிப் போய்விட்டதாக கும்மாளம் அடிக்கலாம். ஆனால் அவை காலாவதியாக முடியாது; காரணம் விஞ்ஞானக் கண்டு பிடிப்புகள் எவையும் தோற்றதாக சரித்திரம் இல்லை. சமூக விஞ்ஞானமான சோசியலிசம் கம்யூனிசம் மீண்டும் பீனிக்ஸ் பறவை போல் பீறிட்டெழும்!

இப்போது தலைப்பிற்கு வருவோம்! கற்பனைக் கடவுள் தேசிய நாயகன் ராமனை மூலதனமாக வைத்து இந்திய நாட்டில் அரசியல் வியாபாரம் செய்யும் – மெகா ஊழல் புரியும் – கலவரங்களை – ரத்தக்களரிகளை ஏற்படுத்தும் – உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்தெடுக்கும் –  கார்ப்பரேட் காவிப் பாசிச மதவாத – ஆன்மீகவாத – அரசியல் மனித சமூகத்திற்கு ஏற்புடையதா? மாறாக உழைத்து வாழும் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், மீனவர்கள், இளைஞர்கள், வணிகர்கள், நடுத்தர வர்க்கத்தினர் என ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் நலனுக்கான – விடுதலைக்கான மேற்கண்ட மார்க்சிய – லெனினிய – மாவோ தத்துவங்கள் புதிய ஜனநாயக – சோசலிச – கம்யூனிச சமூக மாற்றங்கள் ஏற்புடையதா? என்பதை ஆழப் பரிசீலனை செய்யுங்கள்! பின்னதே மேல் என்பதை உணர முற்படுவீர்கள்!

ராமர் கோவில் மெகா ஊழல் உணர்த்தும் உண்மை யாதெனில் தந்தை பெரியார் சொன்ன…

“கடவுள் இல்லை! கடவுள் இல்லை! கடவுள் இல்லவே இல்லை!

கடவுளை உண்டாக்கியவன் முட்டாள்!

கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்!

கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி!”

என்ற கூற்றினை தவறென எவரும் செப்பிட முடியுமோ?

“மதம் மக்களுக்கு அபின்” – என்று அறைந்து சொன்னாரே ஆசான் கார்ல் மார்க்ஸ், எவ்வளவு பெரிய பேருண்மை!

எழில்மாறன்

2 COMMENTS

  1. இந்த கட்டுரையில் மிக ஆழமாக ஆன்மீகத்தைப் பற்றியும் வரலாற்றில் மனித குலத்தைப் பற்றியும் தெளிவாக விளக்கி உள்ளது மிகச்சிறப்பாக தோழர் தொகுப்பாக ஆண்டுகளை குறிப்பிட்டு ஆதாரத்தோடு விளக்கி உள்ளார் சிறப்பான முறையில் கட்டுரை வாழ்த்துக்கள் தோழர் இன்று மீண்டும் நினைவு படுத்தியதற்கு இந்த ஆன்மீக பக்தியோடு ஊழல் செய்வதை பக்திமான்கள் உணர வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here