பண்டோரா பேப்பர்ஸ் வெளியிடும் உண்மைகள்! 1% பணக்காரர்கள் ‘முடியை’ புடுங்குமா?
உலகிலுள்ள கருப்பு பண முதலைகள் தனது பணத்தை ரகசியமாக சேர்த்து வைப்பதற்கு சுவிட்சர்லாந்து நாட்டை பயன்படுத்துவார்கள் ஏனென்றால் சுவிஸ் வங்கி தனது நாட்டில் பணம் போடுபவர்களின் பட்டியலை அவ்வளவு எளிதில் வெளியிடுவது கிடையாது. இதுபற்றி பிரபலமான நகைச்சுவை ஒன்றுள்ளது அதாவது இந்தியாவின் உயர் அரசியல்வாதி ஒருவர், தனது தேர்தல் வாக்குறுதி படி ஸ்விஸ் வங்கியில் உள்ள அன்னிய முதலீடுகளை கைப்பற்றுவதற்கு சென்றதாகவும், அப்போது அந்த வங்கியின் உயர் அதிகாரியிடம் பட்டியலை கோரியதாகவும், அவ்வாறு கோரியும் அவர் கொடுக்காத போது நீ இப்போது கொடுக்கவில்லை என்றால் உங்களை கொன்றுவிடுவேன் என்று துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும், அவ்வாறு மிரட்டியும் அவர் அச்சமடையவில்லை என்றவுடன், தனது கையில் இருந்த சூட்கேசை எடுத்து என் பெயரில் இந்த பணத்தை வரவு வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினாராம். சுவிஸ் வங்கி முதல் இந்தியாவின் ரிசர்வ் வங்கிகள் வரை இது தான் நிலைமை.
இந்தியாவில் முதலாளித்துவ சோம்பேறி விளையாட்டான கிரிக்கெட் ஆட்டம் மூலம் கிடைக்கப்பெறும் பெரும் தொகையையும், அதனை பயன்படுத்தி விளம்பரங்களில் நடிப்பது, சில நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக செயல்படுவது போன்ற வகையில் கோடிக்கணக்கான ரூபாய் வருமானமாக பெற்ற பிரபல விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது கருப்புப் பணத்தை இந்த விர்ஜின் தீவுகளில் முதலீடு செய்துள்ளதாக பண்டோரா பேப்பர்ஸ் அம்பலப்படுத்துகிறது. இதுபோன்ற யோக்கிய சிகாமணிகள் விவசாயிகளுக்கு எதிராகவும், மக்கள் போராட்டங்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவிக்கும் போது அவர்களின் ரசிகர்கள் யாரும் கொந்தளிக்கவில்லை. ஆனால் அவனுக்கு விளையாட்டு திறமையால் உயர்ந்த உத்தமன் என்று பெயர் வேறு.

ஆசியாவில் முதல் பணக்காரனாகவும் உலகில் 10 பணக்காரர்களில் ஒருவனாகவும் குறுகிய காலத்தில் உயர்ந்துள்ள ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானியும், அவரது பிரதிநிதிகளும் குறைந்தது 18 வெளிநாட்டு நிறுவனங்களை சொந்தமாக வைத்திருப்பதாக இந்த செய்தி தெரிவிக்கிறது. இதில் 2007-க்கும் 2013-ம் நிறுவப்பட்ட ஏழு நிறுவனங்கள் இந்திய வங்கிகளில் கடன் வாங்கியுள்ளனர். இந்த கடன் தொகையில் இந்த ’வரிகளற்ற சொர்க்கத்தில்’. குறைந்தது 1.3 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளனர். உலகின் பெரும் செல்வந்தர்கள், அதிகாரம் மிக்க தலைவர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் ஏறக்குறைய 300 க்கும் மேற்பட்டவர்கள் அனைவரும் பணமாகவும், சொத்துக் களாகவும் குவித்துள்ளனர் என்பதை தான் பண்டோரா பேப்பர்ஸ் அம்பலமாக்கியுள்ளது.
பண்டோரா பேப்பர்ஸ் ஆய்வுகளை உலகெங்கிலுமுள்ள 140 ஊடக நிறுவனங்கள் மிகப்பெரிய இந்த உலகளாவிய விசாரணையில் பங்கேற்று நடத்திள்ளனர். இந்த ஆவணங்கள் 117 நாடுகளைச் சேர்ந்த 600 புலனாய்வு ஊடகவியலாளர்கள் மூலம் சரி பார்க்கப்பட்டுள்ளது. 14 வகையான ஆதாரங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட 1.2 கோடி ஆவணங்கள் பல மாதங்களாக ஆய்வு செய்யப்பட்டன ஆய்வு செய்யப்பட்டு உண்மையை மறுக்க முடியாத நிலையில் இந்த தரவுகளை வாஷிங்டன் டி.சியில் உள்ள புலனாய்வு பத்திரிக்கையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. லண்டனிலிருந்து வெளிவரும் பிபிசி, பனோரமா, மற்றும் கார்டியன் ஆகிய ஊடகங்கள் கூட்டாக இந்த விசாரணைக்கு தலைமை தாங்கினார்.
90 நாடுகளில் 130-க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் உட்பட உலகின் மிக சக்திவாய்ந்த நபர்கள் சொந்த நாட்டு மக்களை கொள்ளையடித்து குவித்த, தங்கள் செல்வத்தை மோசடியாக கருப்பு பண முதலீடுகளின் மூலம் பதுக்கி வைக்கிறார்கள் என்பதை இந்த ஆதாரங்கள் வெளிப்படுத்துகின்றன
பண்டோரா பேப்பர்ஸ்களின் மூலம் இந்தியாவின் செல்வங்களை சூறையாடி கொழுத்து திரிகின்ற கும்பலின் டவுசர் கழண்டு உள்ளது பண்டோரா பேப்பர்ஸ் கள் ஒரு நாட்டின் எல்லைக்கு வெளியில் இயங்குகின்ற சிக்கலான நிறுவனங்களின் நெட்வொர்க் பற்றி விவரிக்கின்றன. செயலற்ற முகவரிகளின் மூலம் நிறுவனங்களை தொடங்குவது, எங்கிருந்து தொடங்கினால் அது எளிதாக இருக்கும், ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் பெயரை அடையாளம் காணாமல் ரகசியமாக மறைத்துக்கொண்டு தொடங்குவது எப்படி, எந்த நாட்டில் வரி மிகக் குறைவாகவோ அல்லது முற்றிலும் இல்லாமலும் இருக்கிறது என்பதை தேடிக் கண்டுபிடித்து அந்த நாட்டில் முதலீடு செய்வது போன்ற வழிமுறைகளின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களை வரிஏய்ப்பு செய்கின்ற மோசடி கும்பல் சுருக்கமாகச் சொன்னால் கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு முதலாளிகள் செய்த மோசடிகளை இந்த பேப்பர் அம்பலப்படுத்தியுள்ளது.
இதுபோன்ற கருப்பு பணம் பதுக்கி வைப்பவர்களுக்கும், வரி ஏய்ப்பு மோசடி பேர்வழிகளுக்கும் பிரபலமாக உள்ள கேமன் தீவுகள், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் மற்றும் சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் மொரீசியஸ் போன்ற நாடுகள் மட்டுமின்றி பட்டியலில் புதிதாக இணைந்துள்ள துபாய், அமெரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் உலகெங்கிலுமுள்ள பணக்காரர்கள், கடல் கடந்த நிறுவனங்களில் எவ்வளவு பணம் முதலீடு செய்துள்ளனர் நினைத்து மதிப்பிடவே முடியாது ஆனால் ஐசிஐஜெ(International Consortium of Investigative Journalists) மதிப்பீடுகளின் படி இது தோராயமாக 5.6 டிரில்லியன் முதல் 32 டிரில்லியன் வரை இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. உலகில் உள்ள பல நாடுகளின் அரசுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 600 பில்லியன் டாலர் வரை இழப்பை ஏற்படுத்துகிறது என்று சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது.
இன்று உலகை ஆள்கின்ற பல நாட்டு அதிபர்கள் குறைந்தபட்சம் 100 மில்லியன் டாலர் சொத்து மதிப்புக்கு மேல் சொத்து உடையவர்களே! இவர்கள் நிதி நிறுவன கம்பெனிகளின் அதிபர்களாகவும் கனிம வளங்களைச் சூறையாடுகின்ற நிறுவனங்களின் அதிபர்களாகவும், இரகசிய உலகப் பேர்வழிகளாகவும் வலம் வருகின்றனர். ஏகாதிபத்திய நிதி மூலதனம் ஆதிக்கம் செய்யும் இந்த காலகட்டத்தில் ஒரு நாட்டின் அதிபராக வருவதற்கு பல கோடி கையிருப்பு இருக்க வேண்டியுள்ளது. முதலாளிகளின் பிரதிநிதிகளாக அரசியல் கட்சிகள் செயல்பட்ட காலம் போய் முதலாளிகளே நேரடியாக அரசியல் கட்சிகளை துவங்கி ஆட்சியை கைப்பற்றுவதற்கு போட்டியிடுகின்றனர். இவர்கள் உலகம் முழுவதும் புதிதாக கார்ப்பரேட் கம்பெனிகளை துவங்குவதற்கும், அதன்மூலம் உலகையே சூறையாடுவதற்கும் உகந்த கொள்கைகளை உருவாக்குகின்றனர். இவர்களின் அடியாட்களான உலகவங்கி, ஐஎம்எப், ஐநா சபை போன்றவைகள் நேரடியாகவே இந்த உலகப் பெரும் பணக்காரர்கள் மீது அடி விழாமல் பாதுகாக்கின்ற வேலையை செய்கின்றன.
கொரானா காலக்கட்டத்தில் மக்கள் வாழ்வை இழந்து தினக்கூலிகளாகவும், நாடோடி தொழிலாளர்களாகவும், அகதிகளாகவும் மாறியுள்ளனர். அரை வயிற்றுக் கஞ்சிக்கும் வழியில்லாமல் பட்டினிச்சாவுகள் உலகில் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரானா நோய் மட்டுமின்றி புது புது வகையான நோய்கள் உருவாகி மருத்துவ கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு ஆளாகி உள்ளனர். இந்த சூழலில் பெரும் பணக்காரக் கும்பல் தனது சொத்துக்களை திருட்டுத்தனமாகப் பதுக்கி வைப்பதைக் கண்டு ஆத்திரத்துடன் போராடுவதற்கு பதிலாக இவர்களின் அயோக்கியத்தனங்களை சுவாரசியமாக ’கசிந்தது’ ’வெளியானது’ ’அம்பலமானது’ என்ற நாகரீகமான வார்த்தைகளில் முதலாளித்துவ ஊடகங்கள் எழுதுகின்றன. விக்கிலீக்ஸ், பனாமா பேப்பர், பாரடைஸ் பேப்பர், லக்ஸ் லீக்ஸ், ஃபின்சென் பைல்ஸ் வரிசையில் தற்போது பண்டோரா பேப்பர்ஸ் இணைந்துள்ளது. ஆனால் இந்த அம்பலப்படுத்தல்கள் மூலம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள பெரும் பணக்காரர்களின் சொத்தில் ஒரு சிறு துரும்பைக் கூட கழட்ட முடியாது. ஏனென்றால் இதற்கு எதிராகப் போராடுகின்ற பதிலிகளையும் அவர்களே உருவாக்குகின்றனர். அவர்களுக்கு குறிப்பிட்ட வரம்பு உள்ளது.
ஏகாதிபத்திய நிதி மூலதனத்தை அடியோடு பிடுங்கி எறிகின்ற வரையில் அல்லது அதனைக் கைப்பற்றி பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் கை மாற்றித் தருகின்ற வகையில் மாற்றத்தை நிகழ்த்துகின்ற வரையில் இது போன்ற சூடான கிசுகிசுக்கள் அல்லது அம்பலப்படுத்தல்கள், நிதி மோசடிகளை வெளிக்கொண்டுவரும் புலனாய்வு செய்திகள் போன்றவையெல்லாம் நமக்கு சில தகவல்களை தெரிவிப்பதை தாண்டி ஒன்றும் செய்துவிடப் போவதில்லை. ஏனென்றால் உலகம் முழுவதும் கொழுத்த பணக்காரர்கள் தான் நாட்டை ஆளுகிறார்கள். கார்ப்பரேட் கம்பெனிகளை நடத்துகிறார்கள். ஊடகங்களை நடத்துகிறார்கள் என்பதை அறிந்த அறிவுஜீவிகள் கூட்டம் எப்போதும் அடிமைத்தனமாகவே சிந்திக்கிறது.
ஆனால் பாட்டாளி வர்க்கம் இதுபோன்ற தரவுகள் பற்றி தெரியாமல் காலையில் எழுந்து வேலைக்குச் செல்வது, 12 மணி நேரம் 15 மணி நேரம் உழைப்பு செலுத்துவது, அதன்மூலம் ஒரு அற்ப வருவாயை பெறுவது, அதை வைத்து தனக்குத் தேவையான உணவு உட்பட பண்டங்களை வாங்கி பயன்படுத்துவது, மீண்டும் வேலைக்குச் செல்வது என்ற நிலையிலேயே வாழ பழக்கப்பட்டு வருகிறது. ஊடகங்கள், செய்தி தாள்கள், சமூக வலைதளங்கள் போன்ற அனைத்திலும் வரும் நீண்ட கட்டுரைகளை படிப்பதே தலைவலியாக இருக்கிறது. செய்தி கட்டுரைகளை முதலாளித்துவ ஊடகங்கள் போல இன்ஷார்ட்ஸ் முறையில் சொல்லமுடியுமா, வாட்ஸ் அப் போல சுருக்கி சொல்லமுடியுமா என்று கேட்கும் அளவு, அவர்களின் விரிந்த பார்வையை குறுகிய பார்வையாக மாற்றி வரும் இந்தக் காலகட்டம் மிகவும் கொடூரமானது. ஆனால் இத்தகைய போக்குகளை அப்படியே அனுமதிக்காமல், சளைக்காமல் தொடர்ந்து போராடுவோம்! ஏகாதிபத்திய நிதி மூலதன கும்பலின் கடைசி சொத்துக்களை பறிமுதல் செய்கின்ற வரையில் ஓயாமல் போராடுவோம்.
- இரா.கபிலன்