வெறுப்பு பேச்சை தடுப்பதற்கு பாராளுமன்றத்தில் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்து முறைப்படுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சார்ந்த ரவிக்குமார் முன் வைத்துள்ளார்.

விழுப்புரம் சட்டக் கல்லூரியில் நீதித்துறை சார்பில் நடைபெற்ற சட்டப் பணிகள் ஆணையக் குழு சிறப்பு முகாமை துவக்கி வைக்கும் பணிகள் தொடர்பாக வந்திருந்த இந்திய ஒன்றியத்தின் சட்ட அமைச்சர் கிரண் ரிஜூஜூ -விடம் மனு கொடுத்த போது “இந்தியா சர்வதேச ரீதியில் ICCPR அமைப்பில் உறுப்பினராக இருப்பது பற்றியும், அந்த உறுப்பினர் என்ற முறையில் வெறுப்பு பேச்சுகளை தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்பதையும் வலியுறுத்தி கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ள சூழலில் இத்தகைய கோரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் வெறுப்பு பேச்சுகளை தடுப்பதற்கு சட்ட ஆணைய மசோதாவை உருவாக்கி இந்திய ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

அது மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, தென்னாப்ரிக்கா போன்ற நாடுகளில் இயற்றப்பட்ட பல்வேறு சட்டங்களை ஆய்வு செய்த பிறகு இத்தகைய வெறுப்பு பேச்சுகளை தடுப்பதற்கு சட்ட திருத்தம் கொண்டு வருவது அவசியமாக உள்ளது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய அழைப்பு விடுத்த யதி நரசிங்கானந்

ஆனால் 2024 நாடாளுமன்ற தேர்தல் அரசியலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கு வேட்டைக்கு காத்திருக்கும் ஓநாயை போல வாயை பிளந்து கொண்டிருக்கும் மோடி ஜனவரி 16, 17 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டத்தில் வெறுப்பு பேச்சுகளை தவிருங்கள் என்று கட்சிக்காரர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

“நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 400 நாட்கள் தான் இருக்கின்றன. ஆதலால் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து பேசி அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காக, மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்” என்றும்,” பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான பதான் திரைப்பட சர்ச்சையை மேற்கோள் காட்டி திரைப்படங்களுக்கு எதிரான தேவையற்ற கருத்துக்கள் கூறுவதை தவிர்க்குமாறு பாஜகவின் முக்கிய தலைவர்களையும் நிர்வாகிகளையும் தொண்டர்களையும்” அறிவுறுத்தியுள்ளார்.

இந்த ஓநாயின் திடீர் நீலிக்கண்ணீருக்கு அல்மோஸ்ட் பியார் வித் டிஜே மொஹப்பத் என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பதிலடி கொடுத்துள்ள பிரபல திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் “ நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மோடி இதைக் கூறியிருந்தால் அது மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். இப்போது அவரது கருத்தால் மாற்றம் ஏற்படும் என நான் நினைக்கவில்லை. தற்போது நிலைமை கைமீறி போய்விட்டது. யாரும் யாருடைய பேச்சையும் கேட்க மாட்டார்கள். நீங்கள் அமைதியாக இருந்து முன் முடிவுகளையும் வெறுப்பையும் ஊக்கப்படுத்தியதால் விளைந்த கூட்டம் ஒன்று தற்போது சக்தி வாய்ந்ததாக மாறி உள்ளது” என்று ஆர் எஸ் எஸ் பயங்கரவாத முகாமில் உள்ள பாசிச குண்டர் படையை பற்றி அம்பலப்படுத்தி பேசியுள்ளார்.

கடந்த எட்டாண்டுகளாக இந்தியாவில் ஆட்சியை கைப்பற்றி பாசிச பயங்கரவாத ஆட்சி நடத்தி வரும் ஆர்எஸ்எஸ் – பாஜக சங் பரிவார கும்பலுக்கு எதிராக நேர்மையான திரைப்படக் கலைஞர்கள், அறிவுஜீவிகள், நீதிபதிகள், பேராசிரியர்கள் போன்றவர்கள் பேசத் துவங்கியுள்ளனர் என்பது வரவேற்கத்தக்கதும், ஒன்றிணைக்கப்பட வேண்டியதும் ஆகும்.

விடுதலை சிறுத்தைகள் எம்பி ரவிக்குமார் போன்றவர்கள் போன்ற பாசிச எதிர்ப்பு சிந்தனை கொண்டவர்கள் உண்மையான ஜனநாயகத்தின் மீதும், மக்கள் மீதும் அக்கறை கொண்டு வெறுப்பு பேச்சை தடுக்க வேண்டும் என்று போராடுவதும், மக்களை வெறுப்புணர்ச்சிக்கு ஆட்படுத்தி தனது கட்சியின் ஆதாயத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்று அலையும் பாசிச மோடியை போன்ற மக்கள் விரோத கும்பல் வெறுப்புணர்ச்சியை பற்றி பேசுவதற்கும் அழுத்தமான வேறுபாடு உள்ளது.

இதையும் படியுங்கள்: ஆர். எஸ்.எஸ் கும்பலின் இசுலாமிய வெறுப்பு! வன்முறைக்கு தயார்.

2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நேற்று 8 ஆண்டுகளில் ஆர் எஸ் எஸ் மற்றும் சங்பரிவாரக் கும்பல் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியை தூண்டுவதும், மதச் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ரோஹிங்கியா முஸ்லிம்கள் போன்றவர்களுக்கு எதிரான இழிவுபடுத்துதல், அவமானப்படுத்துதல், வெறுப்புணர்ச்சிக்கு ஆளாக்குதல் போன்ற கிரிமினல் குற்றங்களை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அன்றாடம் பாஜகவை சேர்ந்த எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், பாசிச சன்னியாசிகள், போக்கிரித்தனம் செய்யும் சாமியார்கள் போன்ற பலரும் ஏதாவது ஒரு இடத்தில் வெறுப்பை தூண்டுகின்ற வகையில் பேசி வருவது நாடறிந்த விடயம் தான் என்றாலும் ஊடகத்தை முழுமையாக தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலை தாண்டி இப்படிப்பட்ட செய்திகள் பொதுத் தளத்தில் விவாதத்தை உருவாக்குவதில்லை.

வெறுப்பு பேச்சில் தலை சிறந்த நிபுணத்துவம் வாய்ந்த நாட்டின் பிரதமரே, அடுத்த தேர்தலை குறி வைத்து ‘வெறுப்பு பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும்’ என்று பேசுவதை அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும். நாட்டின் மதச்சார்பற்ற ஒற்றுமை உணர்ச்சிக்கும், சகோதரத்துவம், சகிப்புத்தன்மை போன்றவற்றுக்கும் எதிராக பாசிச உணர்ச்சியை தூண்டி பயங்கரவாத வெறியாட்டம் ஆடி வரும், ஆர் எஸ் எஸ் பாஜக மோடி கும்பலை அரசியல் அரங்கில் இருந்து தனிமைப்படுத்தி வீசி எறிய வேண்டும்.

  • கணேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here