Modern Timesம் கம்யூனிஸ கோட்பாடும்


னநிலை பிறழ்ந்து சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் இருந்து மீண்டு வரும் கதாநாயகன் வேறு ஒரு உலகத்தை காண்கின்றான்.கடுமையான பொருளாதார நெருக்கடியில், தொழிற்சாலைகள் மூடப்பட்டு கிடக்கின்றன, வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகின்றது. தொழிலாளர்கள் கூட்டம் வீதியில் திரண்டு நின்று பெரும் முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்துகிறார்கள். அப்போது அந்த வழியே  கட்டுமானத் தொழிலாளர்களை ஏற்றி வரும் லாரியில் இருந்து சிவப்புக்கொடி கீழே விழுகின்றது. கொடியை எடுத்து லாரியில் இருப்போரிடம் கொடுப்பதற்கு லாரியின் பின் இவன் ஓடுகின்றான். கையில் சிவப்பு க்கொடியுடன் ஓடும் இவன்தான் போராட்டத்திற்கு தலைவன் என்று கருதிய போலீஸ், “ஓ நீதான் தலைவனா? கம்யூனிஸ்ட்?” என்று கேட்டு போலீஸ் வண்டியில் ஏற்றுகின்றனர். இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. நீதிமன்றம் இவனை சிறையில் அடைக்க உத்தரவு இடுகின்றது. இந்தக் காட்சி, அடக்குமுறை கருவியான போலீசின் கண்மூடித்தனமான அணுகுமுறையை மட்டும் இன்றி, கம்யூனிஸ்டு என்பவன் போராட்டத்தில் முன்னே நிற்பான் என்ற யதார்த்தத்தையும் சொல்லும்.

சிறையில் இருக்கும்போது, சிறையில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் ஒரு கும்பலின் முயற்சியை இவன் தன்னை அறியாமலேயே முறியடித்து விட, சிறை நிர்வாகம் அவனுக்கு சிறைக்குள் ஒரு சொகுசு வாழ்க்கையை அனுமதிக்கிறது. பத்திரிகைகள் தரப்படுகின்றன.ஆனால் வரும் செய்திகள் எல்லாம் வேலைநிறுத்தம், வன்முறை, போராட்டம் என்றே இருக்க, “நல்லவேளை, ஜெயிலுக்கு வந்தது நல்லதா போச்சு!” என்று நிம்மதி அடைகின்றான். நகர அதிகாரி ஒருநாள் இவனுக்கு மன்னிப்பு அளித்து “உனக்கு விடுதலை”என்று சொன்னதும் நடுங்கிப் போகின்றான்! வெளியே போனால் பிழைக்க முடியுமா? நேரத்துக்கு சாப்பாடு கிடைக்குமா? சாப்ளினின் முத்திரை இந்தக் காட்சியில் பளிச்சிடும். “ஐயா! நான் இங்கே சந்தோசமாக இருக்கேன்! என்னை இங்கேயே இருக்க விடுங்கள்” என்று கெஞ்சும்போது, முதலாளித்துவ சமூகத்தில் சிறைச்சாலையை விடவும் மோசமாக சிறைக்கு வெளியே உள்ள பொதுவாழ்க்கை கேடுகெட்டு கிடப்பதை குத்தலும் கேலியுமாக சொல்லி உடைக்கின்றார் சாப்ளின்.

வெளியே வந்து பார்த்த வாழ்க்கை கொடூரமாக இருப்பதை பார்த்து நடுங்கி, மீண்டும் சிறைக்கு செல்வதே உத்தமம் என்று முடிவு செய்கின்றான். தெரிந்தே ஒரு குற்றம் செயகின்றான், போலீஸ் அவனை கைது செய்கின்றது. ஏற்கனவே அறிமுகம் ஆன ஒரு இளம்பெண்ணை போலீஸ் வண்டியில சந்திக்கின்றான். ஒரு சரிவில் வண்டி தாறுமாறாக திரும்பும்போது இருவரும் கீழே உருண்டு தப்பித்து ஓடுகின்றார்கள். கைவிடப்பட்ட ஒரு பழைய வீட்டில் இருவரும் குடியேறுகின்றனர். அன்பை மட்டுமே பரிமாறிக்கொண்டு ஒன்றாக வாழ முடிவு செய்கின்றனர். குடியிருக்க வீடில்லாத கிரெடிட் கார்ட், வீட்டுக்கடன், டாப் அப் லோன் சமூகத்தில் குடிமகன் ஒவ்வொருவருக்கும் வாழ்வில் ஒருமுறையாவது வரும் சொந்த வீட்டுக்கனவு இவர்களுக்கும் வருகின்றது. தோட்டம் சூழ்ந்த அழகிய வீடு. ஜன்னலை தொட்டுக்கொண்டு நிற்கும் ஆரஞ்சு மரத்தில் இருந்து ஒரு பழத்தை அலட்சியமாக பறிக்கின்றான். சமையலறை வாசலைத் தொட்டுக்கொண்டு திராட்சைக்கொடியில் குலைகள் வா வா என அழைக்கின்றன. கனத்து கீழிறங்கும் மடி நிறைய பாலை சுமந்து கொண்டு ஒரு பசு எப்போதும் சமையலறையை ஒட்டி வந்து நின்று கொண்டு “கறந்துட்டு போங்க” என்ற பாவனையில் தயாராக நிற்கின்றது. இந்த உலகத்தின் ஒவ்வொரு சாமானியனுக்கும் உள்ளபடியே கிடைக்க வேண்டியவைதான் இவை அனைத்தும்.

Assembly line தொழில்நுட்பம் தொழிலாளர்களை எந்த அளவுக்கு நொடி நேரமும் ஓய்வின்றி பணி செய்ய நிர்ப்பந்திக்கிறது, அவர்களை எப்படி மற்றொரு எந்திரமாக மனதளவிலும் உடல் அளவிலும் மாற்றி விடுகின்றது என்பதையும் ஓய்வற்ற உழைப்பின் காரணமாக தொழிலாளி எப்படி மனபிறழ்வுக்கு ஆளாகின்றான் என்பதையும் இந்தப்படத்தில் அவர் சித்தரித்தது போல் இதுவரையில் வேறு எந்தப் படத்திலும் காட்டப்பட்டது இல்லை. உணவு நேரத்திலும் உற்பத்தியை நிறுத்தாமல் இருப்பது எப்படி என்று சிந்திப்பதே முதலாளித்துவம் என்பதை, தொழிலாளிக்கு உணவூட்டும் எந்திரத்தை கண்டுபிடித்து பரிசோதனை செய்யும் காட்சியில் நகைச்சுவை போங்க அவர் காட்டி இருந்தாலும் அதனுள் பட்டவர்த்தனமாக தென்படுவது முதலாளித்துவத்தின் கோர முகம்தான். அந்த வகையில் அக்காட்சியில் மேலோங்கி நிற்பது அவலச்சுவைதான்.

அவருடைய படங்களில் காட்சிகளும் வசனங்களும் சமூக சீரழிவுகளை எள்ளி நகையாடுபவை, சுரண்டல் பேர்வழிகளின் முகமூடியை கிழிப்பவை.  நகைச்சுவையாகவே இவற்றை காட்சிப்படுத்திய போதே அமெரிக்க அரசு அவரை தன் நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை, அவரை அமெரிக்க எதிரிகள் பட்டியலில் வைத்திருந்தது.  கம்யூனிஸ்ட் என்று சொன்னது. ஹிட்லரின் “ஒழித்துக்கட்டப்பட வேண்டியவர்கள்” பட்டியலில் சார்லி சாப்ளினின் பெயர் இருந்தது.

1936இல் இப்படத்தை வெளியிடுகின்றார் சாப்ளின். 1937இல் the great dictator படத்தை தயாரிக்க தொடங்குகின்றார். 1939இல் ஏகாதிபத்தியங்களுக்கு இடையே ஆன முரண்பாடுகள் முற்றி இரண்டாம் உலகப்போராக வெடிக்கின்றது. உண்மையில் 1917இல் முடிவுற்ற முதல் உலகப்போரின் தொடர்ச்சிதான் இரண்டாம் போர். முதலாம் போரின் முடிவில் உலக நாடுகள் நிர்ப்பந்தம் செய்து ஜெர்மனியின் பொருளாதாரத்தையும் ராணுவ பலத்தையும் ஒடுக்கி அடக்கியதால்தான் கோபமுற்ற ஜெர்மனி ஹிட்லரின் ஆட்சியின் கீழ் இரண்டாம் போரை தொடங்கியது என முதலாளித்துவ வரலாற்று ஆசிரியர்கள் சொல்வார்கள். அது, ஒரு காரணம் மட்டும்தான். 1917க்குப் பின் அமெரிக்க, பிரிட்டிஷ், ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய ஏகாதிபத்திய நாடுகள், முதல் உலகப்போரில் ஏற்பட்ட பெரும் பொருளாதார சரிவை ஈடு செய்யும் நோக்கில் தங்களுக்குள் நாடு பிடிக்கும் போட்டியில் தீவிரமாக இறங்கியதுதான் முக்கியமான காரணம்.

இப்படியான கால கட்டத்தில் சார்லி சாப்ளின் என்ற மகத்தான கலைஞன்,  தன் திறமையை, முதலாளித்துவ சமூக சீரழிவுகளை அம்பலப்படுத்த திரைப்படம் என்ற கருவியை, ஊடகத்தை மிகச்சிறப்பாக பயன்படுத்திக் கொண்டான். விக்ட்டோரியா மகாராணியின் ஆட்சி சொர்க்கம் என்று மற்றவர்கள் புகழ்ந்தபோது “அது ஒரு நரகம்” என்று வெளிப்படையாக விமர்சனம் செய்தவர், அதே லண்டன் மாநகரில் பிறந்த சார்லி சாப்ளின். 1930களின் பொருளாதார பெருமந்தமும் 2008இல் அமெரிக்காவில் மீண்டும் நிகழ்ந்த பொருளாதார பெருமந்தமும், முதலாளித்துவ சமூகத்தின் சீரழிவுகளைத்தான் அம்பலப்படுத்தின. அவர் தன்னை ஒருபோதும் கம்யூனிஸ்ட் என்று வெளிப்படையாக சொல்லிக்கொண்டது இல்லை, ஆனால் அவர் சொல்லும் செயலும் அவரை கம்யூனிஸ்ட் என்றே காலம் நெடுகிலும் வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டே இருந்தன.

1940-50 காலத்தில் குடியரசு கட்சி செனட்டர் ஆன ஜோசப் மெக் கார்த்தி  Joseph McCarthy தலைமையில் Second Red Scare ரகசிய கோப்பின் கீழ் , கம்யூனிஸ்ட் என சந்தேகிக்கப்படுபவர்கள், அதாவது அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் ஆக கருதப்பட்ட கலைஞர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. FBI சாப்ளினை Parlour Bolshevik என்று குறிப்பிட்டது. FBI இயக்குனர் ஆன J Edgar Hoover, உளவு அமைப்பான MI5 ஐ ஏவி சாப்ளினை உளவு பார்த்தார். பட்டியலில் சாப்ளினுடன் இருந்த பிற கலைஞர்கள்:

கவிஞர் Langston Hughes

இயக்குனர், எழுத்தாளர் Orson Welles

இசைக்கலைஞர் Leonard Bernstein

பாடகர்,  நடிகர் (பெண்மணி) Lena Horne

திரைக்கதை ஆசிரியர் Dalton Trumbo

கவிஞர், எழுத்துக்கள், விமர்சகர் (பெண்மணி) Dorothy Parker.

 

இந்தப் பட்டியலை வாசிக்கும்போது பீமா கோரேகான் பொய் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ள சமூகப்போராளிகள் நம் நினைவுக்கு வந்தால், இன்றைய அரசு எப்படிப்பட்டது என்பதை புரிந்துகொள்ளலாம்.

கலைஞர்கள் ஒவ்வொருவரும் கம்யூனிஸ்ட் ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லைதான், ஆனால் எந்த ஒரு கலைஞனும் பொது உடைமைக் கோட்பாட்டுக்கு எதிரானவன் ஆக ஒருபோதும் இருக்க முடியாது.

சார்லி சாப்ளின் 16.4.1889-25.12.1977

(மீள்பதிவு)

மு இக்பால் அகமது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here