இதற்கு “மனித நூலகம்” என்று பேர்!

டென்மார்க்கில் சில நூலகங்கள் உள்ளன. அங்கே ஒரு நூலுக்குப் பதிலாக ஒரு மனிதரை வரவழைத்துக் கொள்ளலாம். அவர்களின் வாழ்க்கை உண்மைக் கதையை நீங்கள் கேட்கலாம், உணர்வு பகிரலாம், ஆலோசனை விவாதிக்கலாம். நோக்கம் : சகமனிதர் பற்றிய  தப்பெண்ணங்களை நீக்கலாம்,பரஸ்பரம் நீக்கிக் கொள்ளலாம். பொதுத் தலைப்புகள் உண்டு. எடுத்துக் காட்டாக— வேலை கிடைக்காதவர்கள், அகதிகள் ( புலம் பெயர்ந்தவர்கள் ) , இடம் பெயர்ந்தவர்கள், இருப்பிடத்திலிருந்து வலுவந்தமாக அகற்றப்பட்டவர்கள், ஒருநேரம் மகிழ்ச்சி,  ஒரு நேரம் துயரம்–துக்கம் என்று  மன அவதியில்  உழல்பவர்கள்    பெண்–ஆண்–முதியவர் இப்படிப் பலவாறாக இருக்கிறார்கள்.

முதலில், 2000-ஆம் ஆண்டு கோபன்ஹேகன் நகரில் ரோனி அபர்ஜெல் தொடங்கினார். புத்தகத்தை, நூலை அட்டையைப் பார்த்து எடைபோடக்கூடாது என்பது போலவே மனிதர்களின் கதைகளைக் கேட்பதன் மூலம் சமூகப் பொதுப்புத்தியில் கெட்டிதட்டிப் போய்விட்ட  தப்பான கருத்துக்களை வைத்து,  ஒருசார்பாகக் கழித்துக் கட்டக் கூடாது. இப்படி 85 நாடுகளில்  மனித நூலகங்கள் நடத்துகிறார்கள்.

உலகம் முழுவதும் இன்றைய சூழலில், மனிதத் தன்மையற்ற அற்ப, சுயநல, பணவெறி, இனவெறி–மதவெறி–சாதிவெறி பிடித்த சமூகநோய்ச் சூழலில் , இந்தியாவில் சிறுபான்மை மதத்தவரிடம் ஒடுக்கப்பட்ட மக்களிடம்  மனம் திறந்து பேசுவது, பகிர்வது நல்லதே. ஒருவகையில் மனநல மருத்துவத்தில் இது ஆரம்ப கட்ட கலந்தாய்வு என்று சொல்லப்படுவதுதான். ஆனால் அங்குகூட வணிகம் நுழைந்துவிட்டது. மேலே சொன்ன  மனித நூலகங்கள் விலை இல்லாக் கவிதைமடலாக பரப்பப் பட்டு வளர்க்கப்படுவது ” இதயமற்ற முதலாளித்துவ  உலகினிடையே ”  துடிக்கும் மனித இதயங்கள்தானே ?

புதிய புத்தன்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here