முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பேரனும், இந்நாள் முதல்வர் மு க ஸ்டாலின் மகனும் ஆகிய உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆக இன்று பதவி ஏற்றுள்ளார். திமுகவினரும் அதன் அனுதாபிகளும் சரியான நேரத்தில் உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என சிலிர்க்கின்றனர். எதிர்க்கட்சிகளும் சில அறிவுஜீவிகளும் வாரிசு அரசியலின் கேடு இது என்று அங்கலாய்க்கின்றனர்.

உண்மையில், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆக்கப்பட்டது எந்த ஆச்சரியத்தையோ அதிர்ச்சியையோ கொடுக்கவில்லை. மாறாக, இது நிகழும் என்று பலரும் அறிந்தே வந்துள்ளோம். 2019 ஆம் திமுக இளைஞர் அணி பொறுப்பு கொடுக்கப்பட்டது தொடங்கி, விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டது வரை கவனித்த எவருக்கும் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகப்போவது அறிந்திராத செய்தி ஒன்றுமில்லை.

அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இது வாரிசு அரசியல் மன்னராட்சி போல் திமுக தமிழ்நாட்டை ஆள்கிறது என்று கொதிக்கின்றனர். இந்த எதிர்க்கட்சிகளை நோக்கி “உங்களில் (வாரிசு அரசியல்) பாவம் செய்யாத ஒருவர் முதலில் கல்லெறியுங்கள் என்று கூறினால் அதில் ஒருவரும் கல்லெறிய இயலாது. முக்கியமாக, ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் காவி பாசிஸ்டுகளுக்கும் அவர்களின் அடிமைகளுக்கும் எந்த தகுதியும் இல்லை. அமித் ஷா மகன் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஆகும் அளவுக்கு பாஜகவிலும் வாரிசு அரசியல் நிரம்பியே உள்ளது. முதலாளித்துவ கட்சிகள் முழுவதும் நிரம்பிவிட்ட வாரிசு அரசியல் குறித்து புரிந்து கொள்ள 2023 பிப்ரவரி புதிய ஜனநாயகம் (மா-லெ) வில் வந்த கட்டுரையை தருகிறோம்.

வாரிசு அரசியல்: முதலாளித்துவ அரசியல் கட்சிகளை பீடிக்கும் நோய்!

தனது பிள்ளைகளை தன்னைப்போலவே அரசியலுக்கு ஏன் கொண்டு வர முடியவில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அவ்வப்போது விவாதம் எழுவதுண்டு. ஆனால், முதலாளித்துவ கட்சிகளிலோ தலைவரின் பிள்ளை கட்சித்தலைவராவதும் இதை வாரிசு அரசியல் என்பதாக மாற்று கட்சிகள் பேசுவதும் அடிக்கடி எழுகிறது. இந்த முரண்பாட்டிற்கு காரணமென்ன?

மருத்துவரின் பிள்ளை மருத்துவராவதும், வழக்கறிஞரின் பிள்ளை வழக்கறிஞராவதும் இயல்பாக இருப்பது போல, அரசியல்வாதியின் பிள்ளை அரசியல்வாதியாவதும் ஒரளவு நடந்து கொண்டுதான் உள்ளது. இதையெல்லாம் விட முக்கியமானது, முதலாளியின் பிள்ளை விதிவிலக்கின்றி முதலாளியாகத்தான் ஆகிறார். இதுவெல்லாம் விவாதத்திற்கு உள்ளாவதில்லை.

ஆனால், ஒரு அரசியல் கட்சித் தலைவரின் மகனோ, மகளோ அரசியலுக்கு வருவது மட்டும் முக்கிய விவாதமாகிறது. தற்போது, தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி அமைச்சரானவுடன் அதைப்பெரும் விவாதப்பொருளாக்கினர். இதில் கொடுமை என்னவென்றால், தங்கள் கட்சியில் வாரிசு அரசியலே இல்லாதது போல பா.ஜ.க, அ.தி.மு.க காரர்கள் விமர்சிப்பதுதான்.

உலகெங்கிலும் இந்தப்போக்கு இருந்து வருவதை மறைத்து விட்டு ஏதோ இந்தியாவில் மட்டும் இந்த நிலை இருப்பதாகவும் இந்திரா காந்தி தனது மகன்கள் சஞ்சய், ராஜீவ் ஆகியோரை அரசியலுக்குக் கொண்டு வந்ததுதான் வாரிசு அரசியலுக்கே அடிப்படை என்பது போல வடக்கேயிருந்து ராமச்சந்திர குகா என்பவர் எழுதியுள்ளார். காந்தியின் பேரனை நேரு பலமுறை அரசியலுக்கு வரச்சொல்லி அழைத்த போதும் அவர் வர மறுத்து பத்திரிக்கை எடிட்டராகவே வாழ்க்கையைக் கடத்தியது போல, இந்திரா மட்டும் மேற்கூறிய தவறை செய்யாமலிருந்திருந்தால், கட்சியைத் தங்கள் சொத்தாகக் கருதும் வாரிசு அரசியல் என்ற “தேசதுரோக” செயல் அரங்கேறியிருக்காது என்பதாக அவர் அங்கலாய்க்கிறார்.

இன்னும் ஒரு படி மேலே சென்று, “சமீப ஆண்டுகளில் நமது ஜனநாயகத்தின் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதாக இந்திய மற்றும் வெளிநாட்டு அறிஞர்கள் வாதிட்டுள்ளனர். இருப்பினும், இந்தியாவின் ஜனநாயக வீழ்ச்சியின் ஒரு அம்சம் அதற்குத் தகுதியான கவனத்தைப் பெறவில்லை. இது கட்சி அமைப்பின் சரிவு. உண்மையில், சில வழிகளில், பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள், சுதந்திர அமைப்புகளின் கீழ்ப்படிதல், தேர்தல் நிதியின் ஒளிவுமறைவு மற்றும் பலவற்றை விட இந்திய ஜனநாயகம் எந்தளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதற்கு இது ஒரு சிறந்த அறிகுறியாகும்.” என்று வாரிசு அரசியல்தான் ஜனநாயகத்திற்கே எதிரான தேசதுரோகம் என்பதாக எழுதியுள்ளார்.

கட்சியை தன் சொத்தாகக் கருதும் இந்த கட்சி அமைப்பின் சரிவு, பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான தாக்குதல், சுதந்திர அமைப்புகளின் (தேர்தல் கமிஷன் முதல் மத்திய தணிக்கைத்துறை, மத்திய கண்காணிப்பு ஆணையம், மத்திய புலனாய்வு அமைப்புகள், அவ்வளவு ஏன் இந்திய ஒன்றியத்தின் ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அரசமைப்புச்சட்ட அதிகாரம் கொண்ட சுதந்திர அமைப்புகளின்) கீழ்ப்படிதல், (நாட்டின் சொத்துக்களையெல்லாம் முதலாளிகளுக்கு தாரை வார்த்து விட்டு வேறு வழியில், வெளிப்படைத்தன்மை துளியுமின்றி திருட்டுத்தனமாக வாங்கிக்கொண்டு ஊழலே செய்யாத கட்சி என்று அப்பட்டமாகப் பொய் பேச வாய்ப்பளிக்கும்) தேர்தல் நிதியின் ஒளிவுமறைவு ஆகிய அனைத்தும் அரசியல் சீர்க்கேட்டை உருவாக்க வில்லையாம். இந்த வாரிசு அரசியல் மட்டும்தான் ஜனநாயகம் எந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதற்கு சிறந்த அறிகுறியாம்! நன்றாக உள்ளது முதலாளித்துவ அறிஞர்களின் தர்க்கம்.

கம்யூனிஸ்ட் கட்சியில் தோழர்களின் வாரிசுகள் கட்சிக்கு வராமலிருப்பதும், கட்சியைத் தன் சொத்தாகக்கருதி முதலாளித்துவக் கட்சிகளில் வாரிசுகள் திணிக்கப்படுவதும் தெளிவாகியிருக்கும். கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தால், சிரமங்களையும் சித்திரவதைகளையும்தான் பரிசாகப்பெற முடியும். முதலாளித்துவ கட்சிகளிலோ ஆதாயங்களையும், கட்சி குவித்து வைத்துள்ள திரண்ட சொத்துக்களையும் அளவின்றி அள்ளி சுவைக்க முடியும். அதனால்தான் ஆளும் கட்சியிலிருந்து ஆட்சிக்கே செல்ல முடியாத ம.தி.மு.க, பா.ம.க போன்ற கட்சிகள் மட்டுமின்றி திராவிடர் கழகம், வரை தங்கள் வாரிசுகளை தலைமையில் திணிக்கின்றனர்.

தி.மு.க –வின் வாரிசு அரசியலால், தான் தலைவராக முடியாமல் பாதிப்புக்குள்ளாகி அதனாலேயே தனிக்கட்சி துவங்கிய வை.கோ, தனது கட்சியிலும் வாரிசு முறையில்தான் தலைவரை உருவாக்கியுள்ளார். கட்சியைத்துவங்கும் போது, எனது குடும்பத்திலிருந்து யாரையும் கட்சிக்குள் கொண்டு வர மாட்டேன் எனத் தனது வன்னிய சொந்தங்களிடம் பகிரங்கமாக வாக்குறுதி அளித்து விட்டு தற்போது எந்த கூச்ச நாச்சமுமின்றி தனது அன்பு மகன் அன்புமணியை தலைவராக்கியுள்ளார் பா.ம.க-வின் இராமதாஸ்.

மேலே கூறியது இந்த அம்சத்தின் ஒரு பகுதிதான். மக்கள் இதை எப்படிப்பார்க்கின்றனர் என்பதுதான் நாம் பரிசீலிக்க வேண்டிய முக்கிய பகுதி. அதாவது, என்னதான் தமது விருப்பத்திலிருந்து தமது வாரிசை கட்சியின் தலைமைப்பொருப்புக்குத் திணித்தாலும், மக்கள் அதை ஏற்று ஓட்டுப்போட வேண்டுமே!

ஒரு முதலாளியின் மகனை முதலாளியாக ஏற்றுக்கொள்ளும் மக்களின் மனநிலை இதையும் இயல்பாக ஏற்றுக்கொள்கிறது. அமெரிக்கா போன்ற முன்னேறிய நாட்டிலேயே புஷ்ஷின் மகன் ஜுனியர் புஷ்ஷை ஏற்றுக்கொள்ளும் போது, நம்மைப்போன்ற ஜனநாயக விழுமியத்தை இன்னும் எட்டிப்பிடிக்காத நிலவுடமை மனோபாவம் கொண்ட நாடுகளின் மக்கள் ஏற்க மறுப்பார்களா என்ன? தங்கள் மன்னனை விஷ்ணுவின் அவதாரமாகவே கருதி, ஒன்னரை வயது குழந்தையைக்கூட மன்னனாக ஏற்றுக்கொண்டதுடன் 2001 –ல் அரண்மனைப்படுகொலை மூலம் கொல்லப்பட்ட மன்னனுக்காக தந்தையை இழந்த மகன்களைப்போல மொட்டை அடித்துக்கொண்டு சடங்குகள் செய்த நேபாள ஆண்கள் ஏராளம்.

இதே பார்ப்பனிய இந்துத்துவ – நிலவுடமை மனநிலைதான் இந்தியாவிலும் கோலோச்சுகிறது. சொத்துடமைக்கண்ணோட்டமும், நிலவுடமை மனப்பான்மையும் மாறாதவரை வாரிசு அரசியலும் மாறப்போவதில்லை. இந்திரா காந்தி கொல்லப்பட்டவுடனே அத்தனை தலைவர்கள் இருந்த போதும் அரசியலே வேண்டாமென விமான ஓட்டியாக வாழ்க்கையை நகர்த்திய ராஜீவ் காந்தியை கொண்டு வந்து பிரதமராக்க வேண்டிய ‘நிர்ப்பந்த சூழலை’ நினைவு கொள்க! இராஜீவைத்தவிர யாரை தலைவராக்கியிருந்தாலும் அந்த கட்சியின் பிற கோஷ்டிகளும், இந்திய மக்களும் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள் என்பதுதான் இந்திய மக்களின் பொது புத்தி!

இன்று இந்தியா சந்திக்கும் முக்கிய பிரச்சினையும், நாம் கவனம் தர வேண்டிய முக்கிய அம்சமும் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை எதிர்ப்பதுதான். அதை திசை திருப்பும் இத்தகைய இரண்டாம்பட்ச, மூன்றாம் பட்ச அம்சங்களை ஒதுக்கி வைத்து மையமான அரசியல் சிக்கலை எதிர் கொள்ளத் தயாராவோம்.

இது தி.மு.க – வின் வாரிசு அரசியலை எதிர்ப்பதை திசை திருப்புவதற்காக கூறப்படும் தி.மு.க அடிமைகளின் வாதம் எனக்கருதுவோருக்கு நாம் கூறுவது இதுதான்.:எப்போதுமே சமூகத்தில் ஒரு பெரிய கோட்பாடும் பல சிறிய கோட்பாடுகளும் இருந்து தீரும். பெரிய கோட்பாட்டுக்கு சிறிய கோட்பாடு விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதுதான் மார்க்கிய போதனை. இது ஒரு விஞ்ஞானம் என்ற வகையில் மார்க்சியர்கள் கற்று வைத்துள்ள அரிச்சுவடிதான். உணர்ச்சிக்கு பலியாகாமல் கள யதார்த்தத்தை சீர் தூக்கிப்பார்த்தோமானால், இதைக்கடைபிடிக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தை உணர முடியும்.

“எமர்ஜென்சி முடியும் வரை தமிழகத்தின் தி.மு.க அரசை எதிர்க்க மாட்டேன்” என்று அறிவித்து இந்திராகாந்தியின் பாசிச அடக்குமுறையை எதிர் கொள்வதற்கான வழிமுறை என்று நமக்கு எதிர்மறையில் போதிக்கிறார் விஸ்வகுரு என்று மோடியால் அழைக்கப்பட்ட காலஞ்சென்ற பாசிச கோமாளி துக்ளக் சோ.! இந்த அணுகுமுறையைதான் திமுகவின் வாரிசு அரசியலை பற்றிய வாதத்திற்கு நாமும் கடைபிடிக்க வேண்டியுள்ளது.

பொதுவாக வாரிசுகள் அரசியலுக்கு வருவதை நாம் எதிர்க்க வேண்டியது இல்லை. ஆனால் வாரிசு என்ற ஒரே அடையாளத்தை கொண்டு கட்சிக்குள் நிலவுகின்ற அரைகுறை ஜனநாயகத்திற்கும் ஆப்படிக்கின்ற வகையில் செயல்படுகின்ற முதலாளித்துவத்தின் இழிந்த அரசியலை தான் நாம் எதிர்க்க வேண்டும்.

வாரிசுகளை மக்கள் நலனுக்கு உழைக்கும் அரசியல்படுத்துகின்ற கம்யூனிஸ்டுகளின் முன்னுதாரணத்தை எடுத்துக் கொள்வோம் பிழைப்புவாத நலனுக்காக வாரிசுகளை தனக்கு பின்னால் நியமனம் செய்கின்ற முதலாளித்துவ சொத்துடமை கண்ணோட்டத்தில் இருந்து மட்டுமே வாரிசுகளை உருவாக்குகின்ற அரசியல் கட்சிகளை அம்பலப்படுத்தி வாரிசுகளுடன் இணைத்து அவர்களையும் வீட்டுக்கு அனுப்பி வைப்போம்.

அறிவழகன்.

நன்றி: புதிய ஜனநாயகம் (மா-லெ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here