இந்தியாவின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஆரிய பார்ப்பன சாம்ராஜ்யத்தை நிறுவுகின்ற நோக்கத்தில் மாற்றி வருகின்ற ஆர்எஸ்எஸ் என்கின்ற பயங்கரவாத அமைப்பு மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டது.
1925 முதல் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு முதன் முதலில் 1948 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முதல் தடை காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து 1948 ஆம் ஆண்டில் தான் விதிக்கப்பட்டது. இந்த தடைக்கான காரணமாக சர்தார் வல்லபாய் படேல் தலைமையிலிருந்த உள்துறை அமைச்சகம், ‘’நாட்டின் பல பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கொலை, கொள்ளை, சட்டவிரோத செயல்கள், தீ வைப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். நாடு இப்போது பெற்றியிருக்கும் சுதந்திரத்தைச் சீர்குலைக்கும் இந்த அமைப்பு தடை செய்யப்படுவதாக’’ கூறியது. இதன் பின்னர் 18 மாதங்களுக்குப் பிறகு காலத்துக்குப் பின்னர் இந்த தடை சர்தார் வல்லபாய் படேலே விலக்கினார்.
மீண்டும் இரண்டாவது முறையாக 1975 தடை செய்யப்பட்டது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த அவசரநிலை பிரகடனத்தின்போது ஆர்.எஸ்.எஸ் மீதான இரண்டாவது தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து தடை நீக்கப்பட்டது.
மூன்றாவது முறையாக 1992 தடை செய்யப்பட்டது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் மீதான மூன்றாவது தடை விதிக்கப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த பி.வி நரசிம்மராவ் மற்றும் உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவாண் ஆகியோர் இந்த தடையை விதித்தார்கள். பாபர் மசூதி இடிக்கப்பட்டதை ஒட்டி நாடு முழுவதும் பதற்றமான சூழல் தொடர்ந்ததால் ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணை அமைப்புகளான விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் மற்றும் இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் (சிமி) ஆகிய இயக்கங்களும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் சேர்த்து தடை செய்யப்பட்டன. இதன்பின்பு, தீர்ப்பாயத்தில் தடைக்கான காரணங்களை மத்திய அரசு தரப்பிலிருந்து சரிவரக் கொடுக்காததால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.
இவ்வாறு தடை செய்யப்பட்ட பிறகு தனது கொள்கையை மாற்றிக் கொள்ளவோ அல்லது அதிலிருந்து பின்வாங்கவோ இல்லை. ஆனால் மேலும் மேலும் மூர்க்கமாக தனது ரகசிய கொலை குழுக்களான சனாதன் சன்ஸ்தா போன்ற அமைப்புகள் இந்து சேனா, பஜ்ரங்தள் போன்ற குண்டர் படைகள் மூலமாக பகுத்தறிவாளர்கள், புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் மீது தாக்குதலை நடத்தி கொன்றொழித்து வருகிறது.
இன்னொரு புறம் நாக்பூரில் உள்ள தலைமையகத்தின் மூலம் இத்தாலியின் பாசிச பலில்லா பயிற்சி பள்ளிகளைப் போல ராணுவ பயிற்சியளித்து இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் ராணுவத்தைப் போலவே இணையான ஒரு ராணுவத்தை உருவாக்கி வைத்துள்ளது.
ஆர்எஸ்எஸ் என்ற பயங்கரவாத இயக்கத்தின் தலைவர்கள் வெளிப்படையாக செயல்படுவதில்லை. வெளிப்பார்வைக்கு மோகன் பகவத் போன்ற ஒரு சிலரை வெளிப்படுத்தினாலும், ரகசிய தன்மை கொண்ட அமைப்பாகவே ஆர்எஸ்எஸ் செயல்படுகிறது. பார்ப்பன (இந்து) மதத்தின் கொடூரமான ஆணாதிக்க வெறியுடன் செயல்படுவதால் இதுவரை பெண்களை அந்த அமைப்பில் உறுப்பினராக சேர்த்துக் கொண்டதில்லை.
இப்படிப்பட்ட பயங்கரவாத இயக்கத்தை முற்றாக தடை செய்வதும், அதில் செயல்படுகின்ற ரகசிய மற்றும் வெளிப்படையான கிரிமினல் கும்பலை கைது செய்வது அவர்கள் இதுவரை செய்துள்ள கிரிமினல் குற்றங்களுக்கு விசாரணை நடத்தி தண்டிப்பது போன்றவை இந்த காலகட்டத்தின் அவசியம் என்ற போதிலும் ஆர்எஸ்எஸ் அரசியலமைப்பான பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இது சாத்தியமில்லை..
ஆனால் இதற்கு நேர் மாறாக அரசு ஊழியர்கள் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் செயல்படக் கூடாது என்ற நடத்தை விதியை தூக்கி எறிந்து ஆர்எஸ்எஸ் ஒரு பண்பாட்டு இயக்கம் அதில் கலந்து கொள்ளலாம் என்ற போர்வையில் மீண்டும் உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள துவங்கியுள்ளது.
இந்திய ஒன்றிய பாசிச பாஜக, ’அரசு ஊழியர்கள் RSS அமைப்பின் நடவடிக்கைகளில் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்கி, இனி ஒன்றிய அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம்” என தெரிவித்துள்ளது..
படிக்க: கொலைகார ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஆள் சேர்ப்பு! தடையை நீக்கிய பாசிச கும்பல்!
1966 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் பசு வதைக்கு எதிராக பசு பாதுகாப்பு என்ற பெயரில் நாடு முழுவதும் தனது அமைப்பின் கீழ் இருந்த குண்டர் படைகளை திரட்டி கலவரங்களை நடத்தியதன் மூலம் தடை செய்யப்பட்டு அப்படிப்பட்ட தடை செய்யப்பட்ட அமைப்புகளில் கண்டிப்பாக அரசு ஊழியர்கள் பங்கெடுக்க கூடாது என்ற நடத்தை விதியும் உருவாக்கப்பட்டது.
அதன் பிறகு வாஜ்பாய் தலைமையிலாக பாஜக ஆட்சி நடந்த போதிலும், அதன் பிறகு 2014 முதல் 10 ஆண்டுகளாக பாசிச மோடி ஆட்சியில் உள்ள போதும் பாஜகவிற்கு விதிக்கப்பட்ட இந்த தடை நீக்கப்படவில்லை.
ஆனால் தற்போது ஆர்எஸ்எஸ் தலைமைக்கும், பாசிச பாஜகவின் தலைவர்களான மோடி அமித்ஷா கூட்டுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் ஆர்எஸ்எஸ்-சிடம் நற்பெயரை பெறுவதற்கு தடையை நீக்கியுள்ளது பாசிச மோடி அரசு.
ஆர்எஸ்எஸ் என்ற பயங்கரவாத இயக்கத்தை சட்டபூர்வமான அமைப்பாக மாற்றுவதற்கு திட்டமிட்டு செயல்படுகின்றனர். ஏனென்றால் ஆர்எஸ்எஸ்-சின் சித்தாந்த மற்றும் ராணுவ பயிற்சி பள்ளிகளில் உருவாக்கப்பட்ட பலர் நீதித்துறை துவங்கி கல்வி, அரசு நிர்வாகத்தின் பொறுப்புகள் மட்டுமின்றி ராணுவத்திலும் உயர் பதவிகளை பெற்று செயல்பட்டு வருகின்றனர்.
இதனால் இந்த அமைப்பில் அரசு ஊழியர்கள் உறுப்பினர்களாக இருக்கக் கூடாது என்ற விதி அவர்களுக்கு சிறிய தடையாக உள்ளது. அந்த தடையையும் சட்டபூர்வமாக நீக்குகின்ற முயற்சிதான் அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் உறுப்பினராகலாம் என்ற முடிவு.
படிக்க: ஆர்எஸ்எஸ் என்ற பயங்கரவாத அமைப்பையும், சனாதன் சன்ஸ்தான் என்ற கொலைகாரப் படையையும் தடை செய்!
நாட்டின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு சூழ்நிலைகளை ஏகாதிபத்திய நிதி மூலதனத்திற்கும், அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் புதிதாக அதற்கு போட்டியாக கிளம்பியுள்ள சீன நவீன சமூக ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்கு தாரை வார்த்துக் கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் பாஜகவின் கேடுகெட்ட மறுகாலனியாக்க நடவடிக்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகள் போராடுகிறார்கள்.
அவர்கள் சித்தாந்த ரீதியாக ஆர்எஸ்எஸ்-சின் கொள்கையை எதிர்த்து போராடுகிறார்கள் என்பது மட்டுமின்றி தற்போது கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்கின்ற விசுவாசமானா அடியாள் படையாக மாறியுள்ளதையும் அம்பலப்படுத்தி வருகிறார்கள். இந்த வகையில் ஆர்எஸ்எஸ்-சின் பயங்கரவாத நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதில் தங்களது வழிமுறைகளில் வேறுபாடு இருந்தாலும் இடதுசாரிகள் முன்னணியில் உள்ளனர்.
நாட்டை ஏகாதிபத்தியங்கள் கொள்ளையடித்து செல்வதை தடுக்கின்ற வகையில் போராடுகின்ற மாவோயிஸ்ட் போன்ற அமைப்புகளை பயங்கரவாத அமைப்பாக நிரந்தரமாக தடை செய்து வைத்திருப்பது மட்டுமின்றி, அதன் உறுப்பினர்களை எந்தவிதமான விசாரணையும் இன்றி சுட்டு பொசுக்கி வருகிறது பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் அரசாங்கம்.
நாட்டில் உள்ள மக்களிடையே மதரீதியாகவும், சாதி ரீதியாகவும் பிரிவினையை உருவாக்கி அவர்களுக்குள் மோதலை தொடர்ச்சியாக நடத்துவதற்கு வழி காட்டுகின்ற பயங்கரவாத இயக்கமான ஆர்எஸ்எஸ் நற்சான்று பெறுவதும், உண்மையான நாட்டுப்பற்றுடன் போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் மீது அடக்குமுறை ஏவப்படுவதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
அதனை சாதிக்க வேண்டுமென்றாலே கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாத ஆட்சியை தூக்கியெறிந்து ஜனநாயக கூட்டரசு ஒன்றை நிறுவுவதை நோக்கி முன்னேற வேண்டும்.
- மருது பாண்டியன்.