நிலம், நீர், காற்று ஆகிய இயற்கையின் அம்சங்கள் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானவை. ஆனால் இன்று சக மனிதனுக்கு அதில் உரிமையில்லை என்ற நிலை ஏற்படுத்தப்படுகிறது. வனப்பகுதிகள், மலையடிவாரங்கள் மற்றும் நீர் நிலைகளை ஆக்கிரமித்து பெரு முதலாளிகள் தனது வணிக நிறுவனங்களை அமைக்கின்றனர். ஆனால் பெரும்பாலும் மக்களின் குடியிருப்புகள் மட்டுமே ஆக்கிரமிப்புகளாக பார்க்கப்படுவதுதான் பிரச்சனையாக உள்ளது.
சென்னையில் கூவம் மற்றும் அடையாறு நதிக்கரைகளில் இருந்த ஏராளமான எளிய மக்களின் குடியிருப்புகள் இடித்து அகற்றப்பட்டுள்ளன. ஆனால் இதே நதிக்கரைகளில் இதைவிடப் பெருமளவு நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ள மியாட் மருத்துவமனை, ஏசிஎஸ், மாதா மற்றும் எஸ்ஆர்எம் குழுமத்திற்கு சொந்தமான கல்லூரிகள், பல வணிகக் கட்டிடங்கள் அகற்றப்படாமல் உள்ளன.
அவற்றைப் பாதுகாக்கும் ஆளும் வர்க்கங்கள், 40 – 50 ஆண்டுகளாக ஒரே இடத்தில் வசிப்பவர்களை, அந்த இடங்களில் இருந்து வேரோடு பிடுங்குவது போல அப்புறப்படுத்தி நகருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக உள்ள கண்ணகி நகர் போன்ற இடங்களில் குடியேற்றுவது அராஜகத்தின் உச்சமாக உள்ளது. சென்னையை உருவாக்கிய உழைக்கும் மக்கள் இன்று சொந்த நகரத்திலேயே அகதிகள் போல வாழ்கின்றனர்.
அநீதியாக தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள்!
இத்தகைய அவலங்கள் இந்தியா முழுவதும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. கோவிட் தொற்று உச்சத்தில் இருந்த ஜூன்- 7, 2021 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் A.M. கன்வில்கர் மற்றும் தினேஷ் மகேஸ்வரி அமர்வு, “குடியிருப்பாளர்கள் வீடுகளில் வசிக்கும் உரிமையை விட வன நிலம் பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமானது” என்று தீர்ப்பளித்ததை அடுத்து ஃபரிதாபாத்தின் கோரி காவ்ன் வனப் பகுதியில் வசித்துக் கொண்டிருந்தவர்களின் வீடுகளை இடித்து, அவர்களை அப்புறப்படுத்தினர்.
அவர்களுக்கான வாழ்வாதாரம் குறித்தோ, அடுத்து தற்காலிக தங்குமிடமாவது வழங்கப்படுவது குறித்தோ உச்ச நீதிமன்றம் எந்தவித அக்கறையும் கொள்ளவில்லை. நீதிபதிகள் அந்த தீர்ப்பில் “காடுகளைப் பொறுத்தவரை சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. வனப்பகுதி காக்கப்பட வேண்டும். கோவிட் தொற்று என்ற சாக்கு, போக்குகளை நாங்கள் விரும்பவில்லை. குடியிருப்புகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். நான்கு வாரங்களுக்குள் இது குறித்தான அறிக்கையை அளிக்க வேண்டும்” எனக் கடுமையாக தெரிவித்திருந்தனர். கனிமவளக் கொள்ளைக்காக காடுகளை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் போது இத்தகைய அறச்சீற்றம் கொள்வார்களா இந்த நீதிபதிகள்?
கோவிட் தொடர்பான இறப்புகளை மிக மோசமாக சந்தித்துக் கொண்டிருந்த ஜூன் 2021 – ல் இப்படியான உணர்ச்சியே இல்லாத மனிதாபிமானமற்ற தீர்ப்பை வழங்கினர். அந்தப் பகுதியில் சுமார் ஒரு லட்சம் உழைக்கும் மக்கள், அவர்களில் பெரும்பாலோர் விளிம்பு நிலை மற்றும் மதச் சிறுபான்மையினராக இருந்தனர். கோவிட் ஏற்கனவே பல உயிர்களை காவு வாங்கி இருந்த நிலையில் இப்படி பேரிடியான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது.
வழக்கறிஞர்கள் அந்த மக்களுக்காக மனிதாபிமான அடிப்படையில் கருணை காட்டும்படிக் கோரியும், நீதிபதிகள் வெளியேற்றத்தை நிறுத்தக் கூறாமல், அந்தப் பணியை செய்து முடிக்க காலக்கெடுவை நிர்ணயித்ததுதான் கொடுமையின் உச்சம். இதேபோல யமுனை ஆற்றங்கரையில் குடியிருந்த மக்களுக்கும் நடந்தது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் அந்தக் குடியிருப்பாளர்களின் கதறல்களை காது கொடுத்து கேட்கக்கூட நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
பாதிக்கப்படக்கூடிய அம்மக்கள், தங்களது வீடுகளை இழந்தால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி நீதிபதிகள் துளியும் கவலைப்படவில்லை. யமுனை நதி மாசுபடுவதற்கு இந்தக் குடியிருப்பாளர்கள்தான் காரணம் எனக் குற்றம் சாட்டினர். இதற்கு ஒரு படி மேலே போய் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், (சென்னையில் தலைமை நீதிபதியாக இருந்தவர்) “இப்படி பொது இடங்களில் குடியிருக்கும் நபர்களுக்கு மாற்று இடமே வழங்க கூடாது. இப்படியான முன் நிபந்தனை ஏதுமின்றி உடனடியாக அவர்களை அகற்ற வேண்டும்” என்று கூறி அந்த மக்களுக்கு அநீதியான தீர்ப்பை வழங்கினார்.
ஏழைகளை மட்டுமே காவு வாங்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு!
2023 – ல் வீட்டு வசதி மற்றும் நில உரிமைகளுக்கான வழக்கறிஞர்கள் குழு வெளியிட்ட அறிக்கையின்படி 2020 – ல் இந்தியாவில் நடந்த அனைத்துக் குடியிருப்பு வெளியேற்ற நடவடிக்கைகளிலும், கிட்டத்தட்ட 50 சதவீதம் அளவுக்கு சுற்றுச்சூழல் திட்டங்கள், வனப் பாதுகாப்பு மற்றும் வனவிலங்குப் பாதுகாப்பு ஆகியவை காரணங்களாக கூறப்பட்டன. இது 2022 – ல் 57 சதவீதமாக அதிகரித்தது.
நகர்ப்புறங்கள் தொடர்ந்து விரிவடைந்து வரும் சூழலில், நீதித்துறையின் போக்கு மாறவில்லை என்றால் இந்த சதவீதம் மென்மேலும் அதிகரிக்கவே செய்யும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனும் பெயரில், விளிம்பு நிலை மக்களின் வீடுகளை வன்முறையைப் பயன்படுத்தி இடிப்பது வழக்கமாகிவிட்டது. சுற்றுச்சூழல் ‘ஆர்வலர்கள்’ என்பவர்களால் இது போன்ற குடியிருப்புகளை அகற்றக் கோரும் ‘பொது நல’ வழக்குகள் தொடுக்கப்பட்டு, நீதிமன்றங்களும் பெரும்பாலும் அவர்களுக்கு ஆதரவாகவே தீர்ப்புகள் வழங்குகின்றன.
நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கையை இத்தகைய தீர்ப்புகள் குலைக்கச் செய்கின்றன. இது போன்ற அடாவடித் தனமான இடப் பெயர்வுகளால், சமூக ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கின்றன. மேலும் விளிம்பு நிலை உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இவர்களை அப்புறப்படுத்தினால் மட்டும் போதும் என நமது நீதி அமைப்பு தொடர்ந்து போலியாக நம்புகிறது.
இப்படியாக குடியேறியவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று குறிப்பிடுவதன் மூலம் அவர்களை குற்றவாளிகளாக்கும் காலனித்துவ நடைமுறை இன்னமும் தொடர்கிறது. இவர்களுக்காகப் போராடும் நபர்கள் மனிதாபிமான மற்றும் அறநெறி அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் கட்டாய இடப் பெயர்வுகளை எதிர்க்கின்றனர்.
இதற்கு மாறாக டாக்டர் அமிதா பவிஸ்கர் அவர்களால் அடையாளம் காட்டப்படும் “முதலாளித்துவ சுற்றுச்சூழல்வாதிகள்” சுற்றுச்சூழலுக்காக மனித உரிமைகளை காவு கொடுக்க நினைப்பவர்களாக உள்ளனர். அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதை விடவும் அழகியல் நோக்கில் அக்கறை செலுத்தி நகர்ப்புற ஏழைகளை இடமாற்றம் செய்ய வலியுறுத்துகின்றனர்.
குடியிருப்புகளை அகற்ற வலியுறுத்தி பல நீதிபதிகள் வழங்கும் கடுமையான தீர்ப்புகள் பருவநிலை மாற்றம், காடுகளைப் பாதுகாப்பது மற்றும் நீர் நிலைகளில் அதிகரிக்கும் மாசுபாடு போன்றவற்றைத் தடுப்பதற்கான அக்கறையினால் தானே என்று சிலர் வாதிடக் கூடும். இந்த விஷயத்தில் எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கை நியாயமானதுதான் என்பதே நடைமுறையில் உள்ள கருத்தாகும். ஆனால் இத்தகைய நடவடிக்கைகளின் மூலமான சமூக விளைவுகளைக் கண்டு கொள்ளாமல் புறந்தள்ளுவதே இத்தகைய சிந்தனைக்கு அடிப்படையாக அமைகிறது.
முதலாளித்துவ சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றவர்களை விட இயற்கையையும், இப்புவியையும் காப்பதற்கான ஹீரோக்கள் போல தங்களை எண்ணிக் கொள்கின்றனர். ஆனால் இப்படியான குடியிருப்பு வாசிகள் குறித்த அவர்களது வெறுப்புக்கு உரிய அறிவியல் காரணம் எதுவுமில்லை. மாறாக அவர்களின் மனதில் ஆழமாக வேரூன்றிய தப்பெண்ணங்களின் விளைவுதான் இது.
இந்த சமூகங்கள் மிகக் குறைந்த பாதிப்புகளை மட்டுமே ஏற்படுத்துகிறார்கள் என்பதை பார்க்க மறுக்கிறார்கள். சுற்றுச் சூழலை அதிகமாக யார் சீர்குலைக்கிறார்கள் என்ற உண்மையையும் அவர்கள் புறக்கணிக்கிறார்கள். உலகத்தரம் வாய்ந்த சுற்றுச்சூழல் நிலைத்தன்மை என்பதை காண்பதற்கு பதிலாக, வெறுமனே அழகியல் தோற்றங்களில் கவனம் செலுத்துகின்றனர்.
இரசாயனப் பொறியாளர் டுனே ராய், யமுனை நதியில் அசுத்தமான நீரைக் கலப்பதில் நதிக்கரைகளில் குடியிருப்பவர்களுக்கு வெறும் 0.08% மட்டுமே பங்குள்ளது என்றும் மீதி 99.2% உலகத்தரம் வாய்ந்த நகர வடிவமைப்புக்கான சுத்திகரிப்பு நிறுவனங்கள் மூலமும், அதாவது நடுத்தர மற்றும் மேட்டுக்குடி வர்க்க மக்களின் வசிப்பிடங்களில் இருந்தும், அக்சர்தாம் கோயில் மற்றும் மெட்ரோ தலைமையகத்தில் இருந்தும் வெளியேறும் கழிவுகள்தான் என தனது ஆய்வறிக்கையில் தெரிவிக்கிறார்.
கோரி காவ்ன் குடியிருப்பு வாசிகள் விசயத்திலும் கூட அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை அல்லது ஆய்வு நடத்தக் கூட அதிகார வர்க்கம் தயாராக இல்லை. இந்தப் பகுதியில் நடத்தப்பட்ட சுரங்க நடவடிக்கையால் நிலப்பரப்பில் குறிப்பிடத் தக்க சீரழிவும், காடழிப்பும் நடந்தது. இப்படியான பெரும் சீரழிவு நடந்த நிலையில் தான், அங்கு குடியிருப்பாளர்களால் அதிக பாதிப்பு என தவறாகக் குற்றம் சாட்டப்பட்டது.
ஃபரிதாபாத்தில் உள்ள 1426 ஏக்கரில் 6.8% மட்டுமே குடியிருப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட வன நிலம் என அடையாளம் காணப்பட்டது. மீதமுள்ளவை பண்ணை வீடுகள், தங்கும் விடுதிகள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டவை தான். அத்தகைய சட்ட விரோத முதலாளிகளுக்கு சலுகைகள் அளித்த நீதிமன்றம் வெறும் ஏழு சதவீதத்திற்கும் குறைவான பகுதியில் குடியேறியவர்களை உடனடியாக வெளியேற்ற உத்தரவிட்டது.
தவறிழைப்பவர்களுக்கு தண்டனை இல்லை!
நகர்ப்புற திட்டமிடல் மற்றும் சுற்றுச்சூழல் குறித்தான விவாதங்களில், ஆற்றங்கரை மற்றும் ஏரிக்கரைகளில் குடியிருப்பவர்களை நகரத்தின் ஒருங்கிணைந்த குடியேற்றக்காரர்களாக கருதாமல் ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் மாசுபடுத்துபவர்கள் என்றுமே பார்க்கப்படும் சூழல் உள்ளது. நகர்ப்புறத்தின் செயல்பாட்டிற்கு இப்படியாக குடியேறியுள்ள ஏழைகள் இன்றியமையாத சக்திகளாக இருப்பினும், மேல்தட்டு வர்க்கம் அவர்களது உழைப்பை நம்பி இருக்க வேண்டிய சூழலிலும் கூட, அவர்களுடன் நகரத்தை பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை.
நீதிபதிகளுக்கும் இதே கண்ணோட்டம்தான் உள்ளது. அம்மக்கள் எங்கோ கண்காணாத தொலைவில் வசித்துக்கொண்டு, இவர்களுக்கான வேலையை மட்டும் வந்து செய்து கொடுக்க வேண்டும். இந்த மேட்டுக்குடி வாசிகள்தான் சுற்றுச்சூழல் சீர்கெட முதன்மைப் பங்காற்றுபவர்கள். இருப்பினும் நீதிமன்ற சலுகையைப் பெறுபவர்களும் இவர்கள்தான். வர்க்க பாசம் என்பது இதுதானே!
படிக்க:
♦ சிங்கார சென்னை 2.0. கார்ப்பரேட்டுகள் உள்ளே! பூர்வகுடிகள் வெளியே!!
♦ சென்னையில் 300 குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தும் உச்சநீதிமன்றம்!
மேல்தட்டு வர்க்கம்தான் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நெருக்கடிகளுக்கு காரணமாக உள்ளது என்பதைப் பல ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தி உள்ளன. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றங்களின் விளைவால் அதிகம் பாதிக்கப்படுவது நகர்ப்புற ஏழைகள்தான். ஆனாலும் ஆட்சியில் இருப்பவர்களின் கொள்கை முடிவுகளும் இவர்களுக்கு எதிராகத்தான் இருக்கின்றன. வேடிக்கை என்னவென்றால் சுற்றுச்சூழலை மிகக் குறைந்த அளவே சீர்கெடுப்பவர்களுக்கே தண்டனை வழங்கப்படுகிறது. இந்த அநீதிகளுக்கு முடிவு கட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு முதன்மைக் காரணமாக உள்ளவர்களுக்கு தண்டனை வழங்குவது அவசியமாக உள்ளது.
இந்தியச் சூழலில் வனப்பாதுகாப்பு, நீர் நிலைகள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனை போன்றவை ஒடுக்கப்பட்ட மக்களை வஞ்சிக்கும் விதமாகவே, வசதி படைத்த வர்க்கத்தால் பயன்படுத்தப் படுகின்றன. ஆனால் இவர்கள் தங்களது சொகுசு வாழ்க்கையை துளியளவும் தியாகம் செய்வதில்லை. மனித உரிமை மீறல்கள், ஒடுக்குமுறை, தொழிலாளர்கள் சுரண்டப்படுவது, சுற்றுச்சூழல் சீரழிவு போன்ற விஷயங்களில் நீதித்துறையில் உள்ள காலனித்துவ சிந்தனைப் போக்கு மாற வேண்டும் எனில் இது குறித்த ஆழமான உரையாடல்கள் அவசியமாகிறது.
சலுகை பெற்ற முதலாளித்துவ சமூகம் இழைக்கும் தீமைகளுக்கு விளிம்பு நிலை சமூகம் பொறுப்பாக்கப்படுவதும், துன்பங்களை அனுபவிப்பதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சுற்றுச்சூழலை சீரழிப்பதும், காலநிலை நெருக்கடியை ஏற்படுத்துவதும் முதலாளித்துவ மேட்டுக்குடி வர்க்கம்தான் என்பதால் இதற்கு அவர்களை பொறுப்பேற்க வைக்க வேண்டும். அதற்கேற்ப பெருவாரியான மக்களின் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்
- குரு







விளிம்பு நிலை மக்கள்!
விளிம்பு நிலை சமூகம்!
இவை ஏகாதிபத்திய கோட்பாட்டு ஆய்வாளர்கள் மார்க்சிய சொற்டொருக்கு எதிராக, திட்டமிட்டு பயன்படுத்தும் சொற்பதங்கள் என்று கருதுகிறேன்..
முடிந்தவரை கட்டுரைகளில் வர்க்க கண்ணோட்டத்தில் உள்ள சொற்பதங்களை எழுத முயற்சிக்கலாம்..
உங்கள் கருத்துக்களை கட்டுரையாளர்களுக்கு தெரிவிக்கிறோம்.