கடந்த இரண்டு தினங்களாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள கூவம் நதிக் கரையோரம் இருந்த 93 குடியிருப்புகளை ஆக்கிரமிப்பு செய்து விட்டார்கள் என்று இழிவுபடுத்தி, அதில் பல வீடுகள் இடித்து தரைமட்டமாக்க பட்டுள்ளன. சென்னையின் வளர்ச்சிக்காக பல நூற்றாண்டுகளாக உழைத்து கொடுத்து வரும் பூர்வகுடி மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு திமுக அரசு திட்டமிட்டுள்ளது.

“நீர் நிலைகளின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதன் ஒருபகுதியாக அண்ணாநகர் மண்டலம் அரும்பாக்கம், ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் கூவம் நதிக்கரையோரம் உள்ள 243 வீடுகள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளதாக” சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ஆனால் கூவத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றால் முதலில் தொல்காப்பியர் பூங்கா, மதுரவாயலில் அமைந்துள்ள எம்ஜிஆர் பல்கலைக்கழக வளாகம், ராமாபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனை தவிர பல்வேறு ஷாப்பிங் மால்கள், தனியார் கல்லூரிகள் ஆகியவை அகற்றப்பட வேண்டும். ஆனால் திராவிட கார்ப்பரேட் கட்சியான திமுக அதைச் செய்யவில்லை. மாறாக உழைக்கும் மக்கள் மீது பாய்ந்துள்ளது.
சென்னை நகரைச் சுற்றி ஓடும் கூவம் ஆறு 23.92 கிலோமீட்டர் தூரம் ஓடுகிறது. 2019 ஆம் ஆண்டு கணக்கின்படி கூவம் கரைகளில் 14 ஆயிரத்து 922 ஆக்கிரமிப்புகள் உள்ளதாக கணக்கிடப்பட்டு இருந்தது. அந்த ஆக்கிரமிப்புகளில் 60% திமுக, அதிமுக ஆட்சிகளில் ஏற்கனவே அகற்றப்பட்டு விட்டது. மீதமுள்ள 40% ஆக்கிரமிப்பாளர்கள் யார்? ’நெஞ்சுக்கு நீதியுடன்’ நேர்மையாக பட்டியலை திமுக அறிவிக்குமா? அல்லது மாநகர பொறுப்பேற்றுள்ள ககன் தீப் சிங் பேடிதான் அறிவிப்பாரா? நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு என்றால் 1906 ஆண்டு கணக்கீட்டின்படி இருந்த 474 ஏரிகள், குளங்கள் வெறும் 43 ஆக குறைந்து போனதே! எப்படி அது நடந்தது? சென்னை மாநகரமே பல ஏரிகளையும், குளங்களையும் ஆக்கரமித்து உருவாக்கப்பட்டதுதான் என்பது நாடறிந்த கசப்பான உண்மை. அந்த ஆக்ரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு விடுமா? அப்படி ஒரு அதிசயம் நடந்து விடப் போவதில்லை.
நீர்நிலைகளை பாதுகாப்பது என்ற பெயரில் வீடுகள் அகற்றப்பட்டாலும், உண்மையான நோக்கம் அதுவல்ல! “சிங்கார சென்னை” என்ற திட்டம் திமுகவின் கனவுத் திட்டமாக கருதப்படுகிறது. 1996-ல் கொண்டு வரப்பட்ட பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு பிறகு தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டது. அதுபோல சென்னை மாநகராட்சிக்கும் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுத்த முதல் மேயர் என்ற பெருமையை, தற்போதைய தமிழகத்தின் முதல்வர் மு.க. ஸ்டாலின் பெற்றார். மேயர் பதவிக்கு வந்தபோது இந்த சிங்கார சென்னை என்ற திட்டத்தை 25 ஆண்டுகளுக்கு முன்பு முன்வைத்தார்.
இந்தச் திட்டத்தின் கீழ் கார்ப்பரேட்டுகள் தமிழகத்திற்குள் வந்து செல்வதற்கு வசதியாக பளபளக்கும் சாலைகள், போக்குவரத்து நெரிசல் இல்லாத மேம்பாலங்கள், பாதசாரி சாலைகள், பூங்காக்கள், நீரூற்றுகள், கடற்கரைகளை அழகுபடுத்துதல், மெட்ரோ ரயில் திட்டம், மோனோ ரயில் திட்டம், சர்வதேச தரத்தில் சென்னை விமான நிலைய விரிவாக்கம் இவை அனைத்தையும் உள்ளடக்கிய வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சிங்கார சென்னைக்கும், 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக ஆக்கப் போகிறோம் என்று தொடர்ந்து வரும் அறிவிப்புகளுக்கும் பின்னால் கார்ப்பரேட் நலன் அடங்கியுள்ளது.
திமுக முன் வைத்த திட்டம் என்பதால் 2001 ஆம் ஆண்டில் அதிமுக தமிழகத்தின் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் சிங்கார சென்னை திட்டத்தை கைவிட்டது. 2006-ஆம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சியை பிடித்தவுடன் மீண்டும் சிங்கார சென்னைக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியது. இந்தக் காலகட்டத்தில் தான் மெட்ரோ ரயில் வேலைகள் துவக்கி வைக்கப்பட்டு, துரிதமாக வேலைகள் நடக்கத் துவங்கின. அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு, மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த திட்டத்தின் கீழ் மெட்ரோ ரயில், மோனோ ரயில் போன்றவை தவிர எந்த செயல்பாடுகளும் நடைபெறவில்லை. ஆனால் 2021-ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் பரண்மேல் தூங்கிக் கிடந்த சிங்கார சென்னை திட்டத்தை தூசுதட்டி செயல்படுத்த துவங்கிவிட்டது.
சிங்கார சென்னைதான்! ஆனால் அது யாருக்கு பயனளிக்கிறது என்பதை நாம் பரிசீலனை செய்தால் தான் உண்மை புரியும். வழக்கமாக வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக போடப்படுகின்றது என்பதை சிங்கார சென்னை -1.0, முதற்கட்ட திட்டமும், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள சிங்கார சென்னை 2.0 திட்டமும், அதனை தீவிரமாக அமுல்படுத்துவதற்கு உருவாக்கப்பட்டுள்ள ’புரஜெக்ட் புளூ’ திட்டமும் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.
கலை, மரபு, பண்பாடு, கல்வி, சுகாதாரம், விளையாட்டு, போக்குவரத்து, எளிய நடமாட்டம், அதிகார வர்க்கத்தை எளிய முறையில் அணுகுவது, இதற்கான உள் கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் சர்வதேச தரத்தில் அமைப்பது என்பது புரஜெக்ட் புளூ வின் செயல் வடிவமாக உள்ளது. ஆண்டு தோறும் கனிமொழி எம்.பி, ’சென்னை சங்கமம்’ என்று நடத்துவதற்கும், இதற்கும் தொடர்ப்பு உள்ளது.
சிங்கார சென்னையில் முக்கியமான ஒன்றான நகர அழகுபடுத்தல் திட்டம், புரஜெக்ட் புளூ என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள கடல் சார்ந்த பல்வேறு திட்டங்கள் மிகவும் அபாயகரமானவை. கடற்கரையோரங்களில் வசிக்கின்ற மீனவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவது இதற்குப் பெயர் சென்னை கடற்கரைகளின் விரிவான வளர்ச்சி என்பதாகும். நீருக்கடியில் மீன்வளம் மற்றும் நீர் விளையாட்டுகளுக்கான ’அக்வா’ மண்டலங்களை உருவாக்குவது, திருவொற்றியூர் மற்றும் உத்தண்டி உள்ளிட்ட 6 இடங்களில் கடற்கரை முகப்பு வளர்ச்சி, மாற்றுத்திறனாளிகள் கடற்கரைகளை பார்க்கும் வகையில் தளங்களை அமைப்பது ஆகியவை அனைத்தும் இதில் உள்ளடக்கியிருக்கிறது. இந்த கட்டுமான பணிகளை செய்வதற்கும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாராக உள்ளனர். மக்களின் வரிப்பணத்தில் இருந்து பல ஆயிரம் கோடிகள் கொட்டியளக்க உள்ளனர்.

இதைத் தவிர சிங்காரச் சென்னை 2.0, சென்னை முழுவதையும் சுத்தப்படுத்துவது, கூவம் நதியையும், பக்கிங்காம் கால்வாயையும் சுத்தப்படுத்துவது ஆகிய திட்டங்களும் அடங்கும் என்று அறிவித்துள்ளனர். சென்னையில் சுற்றுலா வளத்தை மேம்படுத்தும் வகையில் தற்போது உள்ள அருங்காட்சியகங்கள், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி பாம்பு பண்ணை, முதலைப் பண்ணை போன்றவை தரம் உயர்த்தப்படும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், ரிப்பன் கட்டிடம், சென்னை உயர்நீதிமன்ற கட்டிடம் உள்ளிட்ட 2467 பழங்கால கட்டிடங்கள் புதுப் பொலிவுடன் அழகு படுத்தப்படும். வள்ளுவர் கோட்டம் போன்றவை திரைப்பட படப்பிடிப்புகள் எடுக்கும் அளவிற்கு மேம்படுத்தப்படும்.
சென்னையில் தற்போது உள்ள பிரதான சாலைகள் அதாவது அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட சாலைகள், மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் அனைத்தும் இத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும் மற்றும் புதுப்பிக்கப்படும்..
சென்னையில் மிகப்பெரிய விளையாட்டு வளாகம் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டு அனைத்துவிதமான விளையாட்டுகள் மீதும் கவனம் செலுத்தப்படும். அண்ணா டவர் பூங்கா மறுவடிவ மைப்பு செய்யப்படும். குழந்தைகளுக்கான அறிவியல் மற்றும் கணித பூங்காக்கள் அமைக்கும் திட்டம் உள்ளது. இவை அனைத்தும் தகவல் தொழில்நுட்ப துறையில் ஆதிக்கம் செலுத்துகின்ற ஐடி நிறுவனங்களுக்கு, குறிப்பாக தரமணி, டைடல் பார்க், கிண்டி பகுதிகளிலுள்ள இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ, அசென்ச்சர், ஹெச்சிஎல் போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு சிங்கார சென்னை பல லட்சம் கோடிகளை வாரி வழங்க காத்திருக்கிறது. சென்னையின் அவலமாக அனைவரும் கருதும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனையை தீர்க்க, லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் உள்ளிட்ட கட்டுமான நிறுவனங்கள் சென்னையை சிங்கார படுத்த தயாராக இருக்கிறார்கள். மீனம்பாக்கத்தில் சர்வதேச தரம் கொண்ட பன்னாட்டு வானூர்தி நிலையத்தை மேம்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிங்கார சென்னை திட்டத்திற்காக சென்னை அழகுபடுத்தப்பட போகிறது என்பது உண்மைதான். ஆனால் இந்த அழகுபடுத்தலுக்காக பல ஆண்டுகளாக அங்கேயே அதாவது கூவம் நதிக் கரையிலும், அடையாறு நதியை ஒட்டியும் வசித்த மக்கள் அங்கிருந்து 50, 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூக்கி விசிறி எறியப்பட்டனர். அங்கிருந்து துடைக்கப்பட்டு கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், எழில்நகர், படப்பை போன்ற புறநகர் சேரிகளுக்கு துரத்தப்பட்டனர். 2000 ஆண்டு முதல் ஏறக்குறைய 5 லட்சம் மக்கள் இவ்வாறு தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
அதேபோல தற்போது கூவம் கரையோரத்தில் இருக்கின்ற அரும்பாக்கம், ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட மக்களையும், சத்தியவாணி முத்து நகர் நகரில் குடியிருந்த மக்களையும் அங்கிருந்து வீசி எறிந்துவிட்டு சிங்கார சென்னை திட்டத்தை உருவாக்க துடிக்கிறது திமுக. குடிசைகளை அகற்றி தான் சிங்கார சென்னையை உருவாக்க போகிறார்கள் என்ற உண்மையை NHAI-யின் கூவம் மீட்டெடுத்தல் திட்டம்-2008ன், ஆலோசகர்களான வில்பர்-ஸ்மித் நிறுவனம் போட்டு உடைத்து விட்டனர்.
இந்தியாவில் உள்ள மெட்ரோபாலிட்டன் நகரங்களில் சென்னை வளர்ந்து வருகிறது. 90களில் இருந்து சென்னை இந்தியாவில் முக்கியமான தகவல் தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக தென் சென்னையில் பல தொழில் நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன. தரமணியில் உள்ள டைடல் பூங்கா இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவாகும். சோழிங்கநல்லூர் எல்காட் தொழில்நுட்ப பூங்கா, சிறுசேரி சிப்காட் தொழில்நுட்ப பூங்கா ஆகியவை மென்பொருள் உருவாக்கம் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் உள்ளிட்ட பல பிரிவுகளில் முன்னணியில் உள்ளது. இதுமட்டுமின்றி மேலும் சில தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மருத்துவ துறையில் இந்தியாவின் தலைநகரமாக சென்னை உள்ளது. அதிலும் அப்பல்லோ, குளோபல், மியாட், ராமச்சந்திரா போன்ற கார்ப்பரேட் மருத்துவமனைகள் முன்னிலையில் உள்ளது.
ரயில் வாகன உற்பத்தியில் சென்னை முதலிடம் வகிக்கிறது. பெரம்பூரில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான ரயில் பெட்டி தொழிற்சாலை இந்தியன் ரயில்வேயில் முதன்மையான ரயில் உற்பத்தி நிலையம் ஆகும்.. அம்பத்தூரில் உள்ள சிறிய, பெரிய தொழிற்சாலைகள் தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகின்றன.
.jpg)
அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் அம்பத்தூரை சுற்றியுள்ள டிவிஎஸ் குழும தொழிற்சாலைகள், அசோக் லேலண்ட், ஹூண்டாய், போர்டு மிட்சுபிஷி, டிஐ சைக்கிள்ஸ், எம்ஆர்எப்,, பிஎம்டபிள்யூ ரெனோ நிசான் போன்ற நிறுவனங்கள் சென்னையில் முகாமிட்டு ஊர்திகள் உற்பத்தியில் இந்தியாவின் டெட்ராய்ட் என்று பெயர் பெற்றுள்ளன. இது தவிர ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக் கோட்டை, ஒரகடம், திருவள்ளூர் பகுதியில் உள்ள அப்பல்லோ, ஜேகே டயர்ஸ், பிரிஜ்ஸ்டோன், டன்லப், மிஷெலின் இரண்டு சக்கர, நான்கு சக்கர டயர் கம்பெனிகள் போன்றவை வளர்ந்து வருகிறது.

தொழிற்சாலைகள் உருவாகவும், அதை ஒட்டி வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் வளர்ச்சி பெறுவதற்கு அதை சுற்றி உள்ள மக்கள் விரட்டியடிக்கப்படுவதும், நகரின் அழகிற்கு தடையாக, அதிகமாக இருக்கிறார்கள் என்று இந்த மக்களை அங்கிருந்து விரட்டுவதும் தொடர்ந்து நடக்கிறது. மண்ணின் மைந்தர்களை விரட்டி விட்டு அவர்களின் பிணங்களின் மீதும், கண்ணீர், மனக்கொதிப்புகளின் மீது தான் தொழிற்சாலைகள் உருவாகின்றன. ஒரு சில கார்ப்பரேட்டு களின் வளர்சிக்காக பல ஆயிரம் மக்கள் வாழ்விழக்கிறார்கள். இதனை சகித்துக் கொள்ளக் கூடாது.
மீனம்பாக்கத்தில் சர்வதேச தரம் கொண்ட பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதற்கு அதனை சுற்றியுள்ள பல கிராமங்கள் விரட்டப்பட்டதை போல, தற்போதும் இரண்டாம் கட்ட விமான நிலைய விரிவாக்கம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மனப்பாக்கம் பகுதியில் 50 ஏக்கர் நிலமும், கோலப்பாக்கத்தில் 30 ஏக்கர் நிலமும், கொளல் பஜார் பகுதியில் 3 ஏக்கர் நிலமும் கையக்கபடுத்த உள்ளனர். இதுபோன்ற விரிவாக்கத் திட்டங்கள் அனைத்திலும் முதல் குறி வைக்கப்படுவது அப்பகுதியில் நீண்ட காலமாக இருக்கும் பூர்வகுடிகள் மற்றும் ஏழை, எளிய மக்கள் ஆகியோர்கள் தான்.
எனவே மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றும் சிங்கார சென்னை போன்ற கார்ப்பரேட் வளர்ச்சித் திட்டங்களை நாம் எதிர்த்து நிற்க வேண்டும் இல்லையென்றால் சென்னை என்பது நாளை நவீன தீண்டாமை நகரமாக மாறிவிடும். அங்கே மனித தன்மையற்ற காசு, பணம், துட்டு, மணி, பதவி என்று வெறியுடன் அலையும் புது வகை மிருகங்களுடன் போராட வேண்டியிருக்கும்.
02-08-2021.
பா.மதிவதனி.