நாட்டை கவ்வியுள்ள மிகப்பெரிய அபாயமான கார்ப்பரேட் – காவி, நவீன பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்று நாங்கள் கூறும் போது அதன் அரசியல், பொருளாதார, பண்பாட்டு, கலாச்சார அடிப்படைகளின் அடித்தளத்தை வீழ்த்துவதையே குறிப்பிடுகிறோம். அவ்வாறு வீழ்த்துவதற்க்கு முன்பு நாட்டை பாதுகாக்கும் தன்மையுடைய மாற்றுத் திட்டம் அல்லது கட்டமைப்பு ஒன்றை நாம் அடையாளம் காண வேண்டும். அந்த மாற்றுத்திட்டம் என்பதை நாங்கள் மார்க்சிய – லெனினிய சிந்தாந்தத்தை உயர்த்திப் பிடித்து, சோசலிச சமூக கட்டமைப்பையே ஒட்டு மொத்த உலகிற்கும், கம்யூனிசம் தான் தீர்வு என்று குறிப்பிடுகிறோம். அதனை நமது நாட்டில் பருண்மையாக அமுல்படுத்தும் போது புதிய ஜனநாயக புரட்சியின் மூலம் புதிய சமூக கட்டமைப்பை நிறுவ வேண்டும் என்பதையே கார்ப்பரேட் – காவி பாசிசத்திற்கு மாற்றாக முன் வைக்கிறோம்.

கம்யூனிசம் ஒன்றே தீர்வு!

இவ்வாறு நாங்கள் தீர்வு ஒன்றை முன் வைக்கும் போது அது நீண்ட காலம் பிடிக்கும் அதுவரை என்ன செய்வது? இருக்கும் சமூக கட்டமைப்பிற்குள் தீர்வை தேடுவோம், அதுவும் முற்போக்கான தீர்வாக தேடுவோம்! அதற்கு தற்போது நிலவும் அரசியல் அமைப்புச் சட்டத்தை சரியாக அமுல்படுத்துவது, அதன் உண்மைப் பொருளில் அமுல்படுத்துவது அல்லது அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது போன்ற மாற்று ஒன்றை தீர்வாக, நிலவும் இந்த சமூக கட்டமைப்புக்குள்ளேயே முன்வைக்கின்றனர் போலி கம்யூனிஸ்டுகள், போலி புரட்சியாளர்கள், முதலாளித்துவ தாராளவாதிகள் மற்றும் பல துறை அறிஞர்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்பில் முன்வைக்கப்பட்டுள்ள சோசலிச, மதச்சார்பற்ற குடியரசு என்பதை மாற்றவோ, மறுக்கவோ யாராலும் முடியாது என்கிறார்கள். அரசியலமைப்புச் சட்டத்தின் ஆன்மாவே மதச்சார்பின்மைதான், எனவே அதனால் அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடக்கும் ஆட்சியை உத்திரவாதம் செய்வதே உடனடி தீர்வு என்கின்றனர்.

ஒரு நாட்டு மக்களை ஆட்சி புரியும் அடிப்படையான அரசியல் முறையைக் கூறுவதே அந்நாட்டின் அரசியலமைப்பு ஆகும். ’அரசின் தலையாய அம்சங்களாகிய சட்டமியற்றும் சபை, நீதித்துறை ஆகியவற்றை தோற்றுவித்து, அவற்றின் அதிகாரங்களை வரையறுத்து, பொறுப்புகளை பகுத்து அவற்றுக்கு இடையே உள்ள பரஸ்பர உறவுகளை வரையறுப்பதும் அவற்றுக்கும். மக்களுக்கும் உள்ள உறவை நெறிப்படுத்துவதும் தான் அரசியலமைப்பு’ என்று அரசியலமைப்பு பற்றி பலரும் வரையறுத்து கூறுகின்றனர்.

அதிகாரம் மக்களுக்கே!
தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கும் பொது சாதிய படிநிலை அடக்குமுறை தன்மை கொண்ட இந்திய சமூக அமைப்பில் எந்த மாற்றமும் வந்துவிடக்கூடாது என்று கவனமுடன் தனது எதிர்ப்பை பதிவு செய்தனர், பார்ப்பன சனாதனவாதிகள். அரசியல் அமைப்புச் சட்டம் வரையப்பட்ட போது அரசியல் அமைப்புச் சட்டத்தின் நோக்கம், மதச்சார்பற்ற குடியரசு என்ற சொல்லை தெளிவாக குறிப்பிடவில்லை. அவ்வாறு குறிப்பிடத் தவறியது கவனக் குறைவாக நடந்துவிட்ட பிழையல்ல. கவனமாக செயல்பட்ட மோசடி. இதன் பின்னணியில் சங்கராச்சாரி உள்ளிட்ட பார்ப்பன சனாதனவாதிகள் இருந்தனர்.  1950 ல் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டம் இந்தியாவை மதச்சார்பற்ற குடியரசு என்று கூறவில்லை. மாறாக 1976 ல் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியால் கொண்டு வரப்பட்ட 42-வது அரசியல் அமைப்பு சட்டத் திருத்தத்தை ஒட்டியே இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் ‘இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற சோசலிச ஜனநாயகக் குடியரசாக அமைப்பதற்கு உறுதி பூணுவதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தான் இன்று பாசிசத்தை வீழ்த்தும் அருமருந்தாக முன் வைக்கின்றனர்.

எனவே, இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீதான மாயையை நாம் அனுமதிக்க கூடாது. அதுமட்டுமல்ல அரசியல் அமைப்புச் சட்டத்தை அப்படியே பயன்படுத்தவும் முடியாது ஏனென்றால் இந்த அரசியல் அமைப்புச் சட்டம் நமது நாட்டு மக்கள் மீது திணிக்கப்பட்ட போதே அனைத்து மக்களுக்கும் சமமான உரிமை கொடுப்பது என்ற அடிப்படையில் அது கொண்டு வரப்படவில்லை. ஏற்கனவே நமது நாட்டில் ஆதிக்கம் புரிந்து வந்த மன்னர்கள், ஜமீன்தார்கள், நிலப்பிரபுக்கள், பார்ப்பன- மேல்சாதி ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைக்கும் அதிகாரத்திற்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத, குந்தகம் விளைவிக்காத வகையில் நிறுவப்பட்டதே ஆகும்.

இந்த புதிய அரசியல் அமைப்புச் சட்டம் கீழிருந்து விவசாயிகள், தொழிலாளர்கள் கூட்டுச் சேர்ந்து 1947 வரை நிலவிய காலனிய அரசமைப்பு சட்டங்களை தூக்கியெறிந்து உருவானதல்ல: அதாவது பழைய அரசியல் கட்டமைப்பைத் தகர்த்தெறிந்து அதன் விளைவாக உருவானதல்ல. மாறாக மேலிருந்து பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் தமது நிர்வாக வசதிக்காக தனது நாட்டில் அமுல்படுத்திய வடிவத்திலான ஆட்சி அமைப்பு முறையை நிறுவினார்கள். அதனை மாகாண சட்டமன்றம், பாராளுமன்றம், அனைவருக்கும் வாக்குரிமை என்ற பகட்டான அறிவிப்புகளுடன் முன்வைத்தனர். பிரிட்டனின் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போராடும் மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்கவும், அவர்கள் மனத்திருப்தி கொள்ளும் வகையிலும் வஞ்சகமான முறையில் கொண்டு வரப்பட்டதே இந்த ஆட்சி முறையாகும்.

பிரிட்டிஷ் காலனியாதிக்கம் உருவாக்கிய பாராளுமன்ற முறை இன்றும் தொடர்கிறது.

இவ்வாறு முன்வைக்கப்பட்ட அரசியல் கட்டமைப்பு தான் வாக்களித்தபடி பெரும்பான்மை மக்களுக்கு எந்த நன்மையையும் பயக்கவில்லை. மாறாக, காலனியாதிக்க வாதிகள், அவர்களின் அடிவருடிகள், சொத்துடைமை படைத்த வர்க்கத்தை, சுருக்கமாக, ஆளும் வர்க்க நலனைப் பாதுகாக்கும் திருப்பணியை இன்றுவரை செவ்வனே செய்து கொண்டு இருக்கிறது என்பதே உண்மை.

அரசியல் சட்டத்தை ஆதரிக்கும் பலரும் அரசியல் அமைப்புச் சட்டம் டாக்டர் அம்பேத்கரால் முன்வைக்கப்பட்டது என்றே கருதுகின்றனர். அதனால் அதனை அப்படியே பயன்படுத்த வேண்டும் வாதிடுகின்றனர். இதற்கு மாற்றாக பா.ஜ.க. பாசிச கும்பல் முன்வைக்கத் துடிக்கும் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை ஏற்க முடியாது. ஏனென்றால், அவர்கள் முன்வைக்கும் அரசியல் அமைப்புச் சட்டம் மனுதர்மத்தின் அடிப்படையிலானது என்று காங்கிரசு, போலிக்கம்யூனிஸ்டுகள், தலித்தியவாதிகள் போன்றோர் முன்வைக்கின்றனர். இந்திய அரசியல் சட்டம் காலனியாதிக்கவாதிகளின் நலனை பாதுகாக்க உருவாக்கப்பட்டது. இதில் இந்திய தன்மை இல்லை எனவே இதை நாம் தூக்கி எறிய வேண்டும் என்று மற்றொருபுறம் பாஜக கூச்சலிடுகின்றனர். ஆனால் இவை இரண்டிலுமே முழு உண்மை இல்லை.

முதலில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் தன்மையை பற்றி அவர்களே கூறுவதை பார்போம். 1950- ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்பு (The Constitution of India) சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி, சனநாயகம் போன்ற பொருட்செறிந்த கோட்பாடுகளை உயர்த்திப் பிடிக்கின்றது. சமூகம், பொருளாதாரம், அரசியல் ஆகிய மூன்று தளங்களிலும் அனைவருக்கும் சமநீதி என்பதை இந்திய அரசமைப்பின் முகப்புரை தெளிவுபடுத்துகின்றது. இதையே இந்திய அரசமைப்பு சட்ட வரைவுக் குழுத் தலைவர் அம்பேத்கர் ’சமூக ஜனநாயகமும் (Social Democracy) பொருளியல் ஜனநாயகமும் (Economic Democracy) இல்லையெனில் அரசியல் ஜனநாயகம் (Political Democracy) நீடிக்காது; சமூகத் தளத்தில் பெரும்பாலான மக்கள் ஒடுக்கப்பட்ட நிலையிலும், ஒரு சிலர் உயர்ந்த அந்தஸ்திலும், பொருளாதார நிலையிலும் வாழும் நிலை தொடர்ந்து சமனற்ற நிலைக்கு இட்டுச் செல்லும்’ என்றார்.

இவ்வாறு தனது கருத்துக்களை முன் வைத்த டாக்டர். அம்பேத்கர் அரசியல் அமைப்புச் சட்டத்தை வகுக்கும் வரைவுக் குழுவில் பங்கெடுத்தது பற்றி ”ஒரு வாடகை குதிரை போல பணியாற்றினேன், என்னை என்ன செய்யச் சொன்னார்களோ, அதை என் விருப்பத்திற்கு மாறாக செய்தேன். இந்த சட்டத்தை எரிப்பதற்கு நான் முதல் ஆளாக நிற்பேன்” என்றார். (அரசியல் சட்டம் குறித்த கேள்விக்கு பதில் – 1953) 2000 ஆண்டுக் காலம் சாதிய அடக்குமுறை நிலவிய நாட்டில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவரை அரசியல் அமைப்பு சட்டம் வரைய தலைவராக நியமித்தனர் என்பது நிச்சயம் புறக்கணிக்க முடியாத அம்சம்தான். ஆனால் இதனை மட்டுமே அடிப்படையாக கொண்டு அனைத்தையும் பரிசீலிக்க முடியாது.

டாக்டர். அம்பேத்கர்

தீண்டாமை உள்ளிட்ட கொடூரக் குற்றங்கள் இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தின் படியே நியாயப்படுத்தப்படுகின்றன. கருவறைக்குள் நிலவும் தீண்டாமையும் சமூகத்தில் நிலவும் தீண்டாமைக் கொடூரங்களும் இதை நிரூபிக்கின்றன. நீண்ட காலமாக நமது நாட்டில் நிலவி வரும் ஆசிய உற்பத்தி முறையும், அதன் அடிப்படையிலான சொத்துடமை முறையும் இயல்பாகவே மக்களிடம் ஏற்றத் தாழ்வையும், சமனற்ற வாழ்க்கை முறையையும், ஜனநாயகமற்ற தன்மையையும், படுபிற்போக்குத்தனமான மூடநம்பிக்கை, மவுடீகக் கருத்துக் கள் கொண்ட வாழ்வியல் முறையையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இவை எதையும் அரசியல் சட்டம் கேள்விக்குள்ளாக்கவில்லை. சட்டப் பிரிவுகள் 25, 26 மட்டுமின்றி 13, 19, 368, 372(1) ஆகியவை பார்ப்பன, சாதி ஆதிக்கத்திற்கு பாதுகாப்பானது என்ற காரணத்தால், தந்தை பெரியார் 1957 ல் மேற்கண்ட சட்டப்பிரிவுகளை எரித்து போராட்டம் செய்தார்.

தனித்தனி அடுக்குகளைக் கொண்ட பார்ப்பன இந்து மதத்தில் ஒரு அடுக்கிலிருந்து மற்றொரு அடுக்கிற்கு ஏறவும், இறங்கவும் முடியாத தன்மை கொண்ட சமூக அடிப்படையை சிறிதும் கேள்விக்குள்ளாக்காத வகையில் உருவான அரசியல் அமைப்புச் சட்டம், தற்போது வருணாசிரமம், சனாதன தர்ம அடிப்படையிலான பா.ஜ.க. வின் பார்ப்பன இந்து சாம்ராஜ்யத்தையும் (ராமராஜ்ஜியம்) அதை நியாயப்படுத்தும் பாசிச அரசமைப்பு முறையையும் சிறிதும் கேள்விக்குள்ளாக்காது. 

தொடரும்

இளஞ்செழியன்.

ஆதார நூல்கள்;  

  • புதிய ஜனநாயகம்.
  • வினவு, கீற்று கட்டுரைகள்.
  • நக்சல்பரி முன்பும் பின்பும், தோழர் சுனிதிகுமார் கோஷ்.
  • சாதியம் பிரச்சனைக்கு தீர்வு புத்தர் போதாது,
    அம்பேத்கரும் போதாது, மார்க்ஸ் அவசிய தேவை -ரங்கநாயக்கம்மா.
  • அம்பேத்கர் தொகுப்பு நூல்கள்.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டம்.
  • காந்தியும் காங்கிரசும் துரோக வரலாறு. பு.மா.இ.மு வெளியீடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here