“ஆளும் வர்க்கத்தின் உயர் அடுக்கினரின் தேர்வை ஜனநாயகம் ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக அதனை குறைத்து மதிப்பிடுகிறது” என்று ஜனநாயகத்திற்கு எதிரான பாசிசத்தை தேர்வு செய்யுமாறு அறைகூவல் விடுத்தார் ஹிட்லர்.

1920 மற்றும் 30 களில் ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் கேடான வடிவமாக உருவெடுத்த பாசிசம் பாராளுமன்ற தேர்தல் வடிவத்தை ஒருபோதும் விரும்பவில்லை. ஆனாலும் பாராளுமன்றத்தை நிராகரிக்காமல் அதன் மூலமாக ஆட்சி அதிகாரத்தை பற்றினர் என்பதுதான் வரலாறு.

இத்தாலியில் முசோலினியும், ஜெர்மனியில் ஹிட்லரும், ஸ்பெயினில் பிராங்கோவும் தேர்தல் மூலமாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு படிப்படியாக பாராளுமன்ற ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டினார்கள்.

பாசிசம் சொல்லிக் கொள்ளப்படும் முதலாளித்துவ ஜனநாயகத்தையும், தாராளவாத முதலாளித்துவத்தையும் கடுமையாக விமர்சிப்பது வரலாற்றில் தொடர்ச்சியான நிகழ்ச்சி போக்காகவே உள்ளது. இந்த அனுபவத்திலிருந்து பாசிசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் மூலமாக ஆட்சியை பிடித்த, மீண்டும் பிடிக்க எத்தனிக்கும் இந்திய பாசிஸ்டுகளான ஆர்எஸ்எஸ் – பாஜக, ஏற்கனவே நிலவுகின்ற பழைய போலி ஜனநாயகம், தாராளவாத ஜனநாயகம் போன்ற ஆட்சியமைப்பு முறையை நிலைநாட்டுவதை ஏற்றுக் கொள்வதில்லை.

கார்ப்பரேட் முதலாளிகளிலேயே உயர் அடுக்கு பிரிவினரையும், நிலப்பிரப்புத்துவ சக்திகளில் ஆதிக்க சாதிகளை சேர்ந்தவர்களின் உயர் அடுக்கு பிரிவினரையும் ஒன்றிணைத்து ஜனநாயக வழிமுறைகளை முற்றாக ஒழித்துக் கட்டிய, பாசிச சர்வாதிகார ஆட்சியை நிறுவுவது தான் அவர்களின் நோக்கமாக உள்ளது.

முதலாளிகளிலேயே உயர் அடுக்கு பிரிவினராக தோன்றியுள்ள அதானி, அம்பானி உள்ளிட்ட தேசங்கடந்த தரகு முதலாளிகளை ஆதரிப்பதும், நீண்ட காலமாக இந்தியாவில் நிலவி வரும் அரை நிலவுடமை சமூகத்தின் ஆதிக்க சக்திகளை ஆதரிப்பதும், இதற்கு எதிராக போராடக்கூடிய வர்க்க ரீதியான அமைப்புகளை முற்றாக ஒழித்துக் கட்டுவதும் தான் பாசிஸ்டுகளின் வழிமுறையாகவே உள்ளது.

கார்ப்பரேட்டிசம் தோன்றிய காலத்திலேயே அது தொழிற்சங்க ஜனநாயகத்தையும் உரிமைகளையும் கடுமையாக ஒடுக்கியது மட்டுமின்றி, மூலதனத்தின் சர்வாதிகாரத்தின் கீழ் தொழிலாளி வர்க்கத்தையும், அதன் நேச சக்தியான விவசாயிகளையும், ஒட்டுமொத்த தேசத்தையும் கட்டுப்படுத்தியது.

தேசிய சோசலிசம் என்ற பெயரில் தனி மனிதர்களின் விருப்பங்கள், ஜனநாயக உரிமைகள், பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்தையும் பாசிச அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு கீழ்படிய செய்கின்ற வேலையை தான் பாசிசம் செய்து வந்தது.

கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவில் உணவு உண்ணும் உரிமை, உடை உடுத்தும் உரிமை ஆகியவற்றில் துவங்கி கருத்துரிமை, பேச்சுரிமை, தொழிற்சங்க உரிமை, தான் விரும்பிய கட்சிகளுக்கு வாக்களிக்கும் உரிமை உட்பட அனைத்தையும் பறித்து சர்வாதிகார முறையில் ஆளும் வர்க்கத்தின் உயர் அடுக்கு பிரிவினரின் நலனை மட்டுமே முன் நிறுத்தி செயல்படுகிறது ஆர்எஸ்எஸ்-பாஜக.

இந்த சூழ்நிலையை சரியாக வரையறுத்து தேர்தலில் ஆர்எஸ்எஸ் பாஜகவை தோற்கடிப்பதையும், அதற்கு வெளியில் விவசாயிகள், தொழிலாளிகள் உள்ளிட்டு அனைத்து வர்க்கங்களையும் ஒன்று திரட்டி பாசிசத்தை வீழ்த்துவதையும் முதன்மை பணியாக, தனது குறைந்தபட்ச செயல்திட்டமாக கொண்டு செயல்படுகின்றன மார்க்சிய-லெனினிய அமைப்புகள்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பல்வேறு மோசடிகளை செய்து, தேர்தல் விதிமுறைகளை மீறி அவர்களே முன்வைக்கின்ற தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை புறக்கணித்துவிட்டு, ஆதிக்க சாதி வெறியையும், மதச் சிறுபான்மையினருக்கு எதிரான இன வெறுப்பு அரசியலையும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செல்வவரி, சொத்து வரி விதிப்பதை கேள்விக்குள்ளாக்கியும் செயல்பட்டு வருகிறது பாசிச பாஜக.

ஆறு கட்ட தேர்தல் முடிந்து இன்று ஏழாவது கட்ட தேர்தல் நடக்கும் சூழலில் தேர்தலுக்குப் பிறகு மக்களின் வாக்குகளை நேர்மையாக எண்ணுவதும், அதில் வெற்றி பெற்றவர்களை அறிவிப்பதற்கும் தயாராக தேர்தல் ஆணையம் இல்லை, மாறாக ஆளும் வர்க்கத்தின் உயர் அடுக்கு பிரிவினர் முன்வைக்கின்ற கட்சியை, அதாவது ஆர்எஸ்எஸ் பாஜகவினரையும், அவர்கள் முன்வைக்கின்ற நபர்களையும் வெற்றி பெற்றவர்களாக அறிவிப்பதற்கு பல்வேறு சதித்தனங்களை செய்து வருகிறது.

தேர்தலில் 60%-70% வாக்குகளை பதிவு செய்த மக்களின் ஜனநாயக உரிமைகளை அதாவது அவர்கள் விருப்பப்படி தேர்வு செய்த பிரதிநிதிகளை நேர்மையாக அறிவிக்க வேண்டும் என்று போராடுவது ’தேர்தல் ஜனநாயகத்தில்’ முழுமையாக நம்பிக்கை வைத்து, அதனை பாதுகாப்பதற்காக அல்ல.

படிக்க:

♦ பாஜகவுக்கு 8 ஓட்டு! அம்மணமாக நிற்கும் தேர்தல் ஆணையம்!

 🔴 நேரலை: திருச்சியில் தபால் நிலையம் முற்றுகை போராட்டம்!

மாறாக இதுபோன்ற தேர்தல்களின் மூலம் பாசிஸ்டுகள் நடத்துகின்ற பிரச்சாரங்கள், சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்தின் மீது நடத்துகின்ற தாக்குதல்கள் ஆகியவற்றை மக்களுக்கு அம்பலப்படுத்துகின்ற வகையில் தேர்தலை ஒரு வாய்ப்பாக, போராட்ட கருவியாகவே பயன்படுத்த வேண்டியுள்ளது. தேர்தல் வரை இதைத்தான் மா.லெ அமைப்புகள் கையாண்டன.

ஜூன் -4 தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொண்டு பாசிஸ்டுகள் தனது அதிகாரத்தை ஒருபோதும் அமைதியாக இழக்க தயாராக மாட்டார்கள். எடுத்துக்காட்டாக தேர்தலை மட்டுமல்ல, தேர்தலுக்கு வெளியில் அனைத்து வகையான ஏற்பாடுகளையும் ஆர்எஸ்எஸ் பாஜக செய்து கொண்டுதான் இருக்கிறது. வன்முறைக்கும், கலவரத்துக்கும் பொருத்தமான குண்டர் படையை கீழிருந்து கட்டியமைத்துள்ளது. இது ஜெர்மனியில் ஹிட்லர் கட்டியமைத்த எஸ்.எஸ் குண்டர் படையை போன்ற தன்மையைக் கொண்டது. மூன்று நாளில் இராணுவத்தை எங்களால் கட்டியமைக்க முடியும் என்று ஆர்எஸ்எஸ் தலைவரான மோகன் பகவத் கூறுவது இதனைத்தான்.

ஆயிரக்கணக்கான யூதர்களை தூக்கிலிட்ட போது, ஹிட்லரின் பிரதான தளபதியான ஹென்றிச் ஹிம்லர், ”100 சடலங்கள், 500, 1000 சடலங்கள் குவிக்கப்பட்டாலும், அதனைக் கண்டு பலவீனமாக இருக்க நமக்கு உரிமை கிடையாது. ஏனென்றால் மனிதாபிமானம் போன்ற சொற்களுக்கு இங்கு இடமே இல்லை” என்று கொக்கரித்தான்.

அதேபோன்று கொத்து கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டாலும், அதைக் கண்டு கலங்கக்கூடாது; மனித உரிமைகளை பற்றி பேசக்கூடாது; ஜனநாயக விழுமியங்களை பற்றி கதைக்கவே கூடாது என்பதுதான் ஆர்எஸ்எஸ் தனது நாக்பூர் தயாரிப்புகளுக்கு, அதாவது குண்டர் படையினருக்கு ஷாகாக்களிலும், அதற்கு மேல் படிப்படியாக பயிற்றுவிக்கின்ற அனைத்து மட்டங்களிலும் சொல்லிக் கொடுக்கும் பாலபாடமாகும். இந்த பாடத்தை பயின்ற, வெறியூட்டப்பட்ட பார்ப்பன பாசிச பயங்கரவாத சக்திகள் அதிகாரத்திலிருந்து அமைதியாக இறங்கவே மாட்டார்கள். இந்த புரிதலிலிருந்துதான் பாசிச பாஜகவை எதிர்கொள்ள வேண்டுமேயன்றி வேறு புரிதலில் அல்ல.

எனவே, நடந்து வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் என்ற வழிமுறையை தாண்டி அது தயாராகவே உள்ளது என்பதற்கு நாட்டு நடப்புகளே சாட்சியமாக உள்ளது. அதன்படி ஒன்று தேர்தல் ஆணையத்தின் மூலம் அதிக இடங்களை பிடித்த கட்சி என்று ஆட்சியை அமைக்க அழைக்கப்படலாம். அதற்கும் மேலாக நாடு முழுவதும் அம்பலப்பட்டு நாறிப் போயுள்ள பாசிச மோடியை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக யோகி போன்ற வேறொருவரை பிரதமராக அறிவிக்கலாம். இதன் மூலம் தற்காலிகமாக பாசிஸ்டுகளின் மீதுள்ள அதிருப்தியை குறைப்பதற்கு முயற்சிக்கலாம் அல்லது ராணுவத்தைக் கொண்டு நேரடியாக ராணுவ சர்வாதிகார ஆட்சி ஒன்றை அறிவிக்கலாம் அல்லது கீழிருந்து கட்டியமைக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் மற்றும் குண்டர்படையின் மூலமாக கலவரங்களை நடத்தி பாசிச சர்வாதிகாரத்தை அறிவிக்கலாம். இந்த வழிமுறைகளில் ஏதாவது ஒன்றின் மூலம் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள கார்ப்பரேட்-காவி பாசிச சர்வாதிகார ஆட்சியை நிலை நிறுத்துவதற்கு முழு வீச்சில் செயல்படுவார்கள்.

அதனை எதிர்த்து முறியடிப்பதற்கு மக்களை திரட்டி போராட வேண்டும் என்று அறைகூவல் விடுப்பதும், விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் முனைவர்கள், மாணவர்கள் என்று பல்வேறு வர்க்க அடுக்குகளாக பிரிந்துள்ள மக்களை ஒரே அரசியல் முழக்கத்தின் கீழ் அணி திரட்டுவதும், குறிப்பாக விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் இருந்து பாசிசத்தை எதிர்கொண்டு வீழ்த்துவதற்கு பொருத்தமான படையை கட்டுவதும், அதன் மூலமாக நிரந்தரமாக பாசிசத்தை சவக்குழிக்கு அனுப்புவதற்கும் தொடர்ந்து போரிட வேண்டும்.

இந்த லட்சியத்தை எட்டுவதற்கு தற்போதுள்ள தேர்தல் ஜனநாயகத்தின் மூலமாக பாசிஸ்டுகளை தோற்கடிப்பதை முதல்படியாகவும், அதன் வழியாக மக்களுக்கு நம்பிக்கையூட்டி பாசிஸ்டுகளை நிரந்தரமாக வீழ்த்துவதற்கு தயார்படுத்துவோம்.

தேர்தல் ஆணையம், ஆர்எஸ்எஸ் குண்டர்படையின் சதிகள், வன்முறைகள் அனைத்தையும் முறியடித்து இந்தியா கூட்டணி வென்றால் பாசிசத்திற்கு பதிலாக தாராளவாத ஜனநாயகம், போலி ஜனநாயகம் போன்ற பழைய வழிமுறைகளிலேயே தங்களது ஆட்சியை புதிய ஆட்சியாளர்கள் தொடருவதற்கு எதிராக நிர்ப்பந்தத்தை கொடுத்து போராடுவோம்.

  • நன்னிலம் சுப்புராயன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here