பாலஸ்தீன மக்களே! மேலிருந்து பொழியும் குண்டு மழைகளுக்கு மத்தியில், கொத்துக்கொத்தாக செத்துக் கொண்டிருக்கும் ரத்த உறவுகளின் மத்தியில், தண்ணீருக்காகவும், உணவுக்காகவும், மருத்துவத்திற்காகவும் ஏங்கி கதறிக் கொண்டிருக்கும் உங்களுக்கு பரிந்து வீதியில் இறங்கி போராட முடியவில்லையே என்று ஒரு கம்யூனிஸ்டாக வெட்கி தலை குனிகிறேன்.
எமது நாட்டில் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து வருகின்ற சூழலில், எமது நாட்டை ஆண்டு வரும் பாசிச பயங்கரவாத கும்பல் தேர்தலில் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற மனோபாவத்தில் ஊடகங்களிலும், தனது அதிகார பலத்தைக் கொண்டு வீதிகளிலும் செய்கின்ற பிரச்சாரங்களை எதிர்கொண்டு போராடிவரும் சூழலில் உங்களில் மரண ஓலம் எங்கள் காதுகளில் விழவில்லை.
நாட்டில் நிலவுவது ஜனநாயகமா பாசிசமா என்ற மயிர் பிளக்கும் வாதத்தில் மூழ்கி திளைக்கின்றனர் எமது நாட்டின் அறிவாளிகள். அத்தகைய கூர்மதி கொண்டவர்களுக்கு மனித உயிர்களை ஈவிரக்கம் இன்றி படுகொலை செய்கின்ற சித்தாந்தத்தின் பெயர்தான் பாசிசம் என்பதை நிரூபித்துக் கொண்டுள்ளார் இஸ்ரேலின் பெஞ்சமின் நெதன்யாகு.
இங்கும் அப்படித்தான்! இஸ்ரேலின் அரசு யூத, ஜியோனிச இனவெறியை உருவாக்கி இஸ்லாமியர்களின் மீது தாக்குதலை நடத்துவதைப் போல எமது தேசத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கு உயிர் மீது அச்சத்தை உருவாக்கி, அன்றாடம் அதனை தனது கைகளில் பிடித்துக் கொண்டு வாழும் அவலத்தை உருவாக்கியுள்ளார் பிரதமர் பாசிச மோடி.
உங்களைப் போன்று இன்னமும் நாங்கள் தெருக்களில் தவிக்கவில்லை, ஒருவேளை உணவுக்காக கையேந்தி நிற்கவில்லை, எனவேதான் ரத்தமும் சதையும் கொண்ட எமது உடலில் மனசாட்சி கொண்டு சிந்திப்பதற்கு இன்னமும் நேரமும் கிடைக்கவில்லை.
ஒரு சாண் வயிற்றை கழுவுவதற்கு ஓடுகின்றோம். எதிர்காலம் உத்தரவாதமாய் இருக்கிறது என்ற கனவில் மிதந்து கொண்டு, வீடுகளைக் கட்ட கடன்களை தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்.
சமூகம் பாசிச அடக்குமுறையின் கீழ் உள்ளாக்கப்பட்டாலும் எங்கள் வாரிசுகள் மட்டும் எப்படியோ முன்னேறி விடும் என்று நப்பாசையில் பள்ளி, கல்லூரிகளில் படிக்க வைப்பதற்கு இடத்தை தேடிக் கொண்டிருக்கிறோம்.
இருக்கும் வேலையை இழந்து விட்டால் புதிதாக வேலை ஏதும் கிடைக்கவே கிடைக்காது என்ற வேலை உத்தரவாதம் அற்ற நிலையில் எமது ரத்தத்தை உறிஞ்சி கொண்டிருக்கும் முதலாளிகளுக்கு எங்கள் மீது கோபம் வராத வகையில் எங்கள் உழைப்பு சக்தியை விற்றுக் கொண்டிருக்கின்றோம்.
‘இன்று இறந்தால், நாளை பால்’ என்று எங்கள் மூதாதையர்கள் இறப்பை பற்றி எச்சரித்துள்ள போதிலும், எமது சுயநலம் கொண்ட அற்ப வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள மனசாட்சியை ஓரத்தில் வைத்து ஓடிக் கொண்டிருக்கிறோம்.
உலகை சூறையாடி வரும் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் தேசத்தில் எமதருமை மாணவர்கள் தனக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி போராடிக் கொண்டிருக்கிறார்கள் சுதந்திரப் பாலஸ்தீனம் வேண்டும் என்று. அது மட்டுமல்ல கண்ணெதிரே செத்து மடியும் மனித குலத்தின் ஒரு பகுதியை பாலஸ்தீன மக்களை காப்பாற்ற வீதியில் இறங்கு என்று வழிகாட்டி நிற்கிறார்கள்.
- படிக்க:
♦ பாலஸ்தீனத்தின் மீதான இன அழிப்பு போருக்கு எதிராக போராடுவோம்!
♦கருகிய பெண்களும் குழந்தைகளும்! ALL EYES ON RAFAH!
இஸ்ரேல் நடத்தி வரும் பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து போராட வேண்டும் என்று பேசினாலே காலப் பொருத்தமற்றது என்று நிராகரிக்கப்படுகிறோம். ஏனென்றால் எங்கள் தேசத்தில் தேர்தல் நடந்து கொண்டுள்ளது.
எதிர்காலத்தில் நடக்கப் போகும் அடக்குமுறைகளைத் தடுக்க நிகழ்காலத்தில் போராடுவது தான் சரியான மார்க்சிய அறிவியல் என்பதை ஏற்றுக் கொண்டாலும் சமகாலத்தில் நடக்கும் பயங்கரவாதத்தை எதிர்த்து மௌனமாக கடந்து போகின்ற ஒவ்வொரு கணமும் நெஞ்சை குற்றமுறச் செய்து, கண்களில் கண்ணீருடன் வெட்கி தலை குனிய செய்கிறது.
கடந்து போன நொடியும், இழந்து நிற்கும் நேரமும் எமது வாழ்வில் திரும்ப வரவே வராது என்பதை எண்ணி தலை குனிகின்றேன்!
- மணிமாறன்.
போராட அழைகின்ற சிறப்பான பதிவு தோழர்…
உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்தை வரவேற்கிறோம் தோழர். தொடர்ந்து ஆதரவளியுங்கள் தோழர்.