ஜோதிராவ் பூலே பிறந்த தினமான ஏப்ரல் 11 அன்று இந்த கட்டுரையை வெளியிட திட்டமிட்டு இருந்தோம். ஆனால் இயலவில்லை.
ஜோதி ராவ் பூலே 1827ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் நாள் கோவிந்த்ராவ், சிம்பாய் தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார்.
நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்த காலகட்டத்தில் அரசு கட்டமைப்பும், ஆதிக்க சாதி வெறியர்களும் பெரும்பான்மை மக்களின் மீது நடத்தி வருகின்ற சாதி தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக போராடுவதும், அதற்கு உரிய தீர்வை பெறுவதற்கு ஒட்டு மொத்த சமூகத்தையும் தட்டி எழுப்புவதும் கடுமையான பணியாக உள்ளது.
ஆனால் 150 ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய சமூக அமைப்பில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமத்துவ உரிமைக்காகவும், கல்வி உரிமைக்காகவும், பெண்களின் மீதான ஆணாதிக்க ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடுவதற்கு நெஞ்சுரமும், துணிச்சலும் வேண்டும்.
இந்திய சமூக அமைப்பில் பார்ப்பனர்களைத் தவிர கல்வி கற்றுக்கொள்ளும் உரிமை பார்ப்பனர் அல்லாத வைசியர், சத்திரியர்களுக்கு பெரும்பான்மையாகவும், சூத்திரர், பஞ்சமர்களுக்கு முற்றாகவும் கிடையாது என்பதை முதலில் புரிந்துக் கொண்டால் தான் இந்தப் போராட்டங்களின் மகத்துவம் நமக்கு விளங்கும்.
குருகுல கல்வியில் படிப்பதற்கு பார்ப்பனர் மற்றும் குறிப்பிட தக்க சில ஆதிக்க சாதியினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் என்ற நிலையில், அனைவருக்கும் கல்வி பெறும் உரிமை வேண்டும் என்றும், கல்வி உரிமை தான் மனிதனை முன்னேற்றுவதற்கான முக்கியமான வழிமுறை என்று முன்வைத்து இந்திய சமூக அமைப்பிலேயே முன்னோடியாக போராடியவர் தான் ஜோதிபாய் பூலே.
ஆண்களுக்கே இந்த நிலைமைதான் என்றால் சமூகத்தில் மிகவும் கீழாக ஒடுக்கப்பட்டு கிடந்த தலித் மக்களை விட கீழாக நடத்தப்பட்டவர்கள் தான் பெண்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். பெண்கள் மீதானா ஆணாதிக்க வெறியாட்டங்களும் பாலியல் வன்கொடுமைகளும் இன்றளவும் தொடர்வதற்கு இந்த சமூக ரீதியிலான ஒடுக்குமுறை தான் முக்கியமான காரணமாகும்.
பார்ப்பன சாதியில் பிறந்தாலும் சரி! பிற சாதிகளில் பிறந்தாலும் சரி பெண்கள் மீது ஆணாதிக்க ஒடுக்குமுறை சமூக ஒழுங்காகவே பாதுகாக்கப்பட்டு வந்தது. வருகிறது.
கல்விதான் அனைத்துக்கும் தீர்வு என்பதை உணர்ந்த பூலே. கல்வியைப் பரப்பும் பணியை தன் வீட்டில் இருந்தே தொடங்கினார். தன் மனைவி சாவித்திரி பாய்க்கு கல்வி கற்பித்தார். இதன் மூலம் இந்தியாவில் முதல் பெண் ஆசிரியராக சாவித்திரிபாய் உருவானார். 1851-ல் இந்தியாவில் முதல் முறையாக மகளிருக்கான பள்ளியைத் தொடங்கி, கணவன், மனைவி இருவரும் சேர்ந்து பள்ளியை நடத்தினர்.
இவரது முனைப்புகளால் அரசுப் பள்ளிகள் அதிகம் தொடங்கப்பட்டன. பெண்களுக்கும் சூத்திர பஞ்சமா சாதிகளுக்கும் கல்வி உரிமை மறுக்கப்பட்ட காலத்தில் பூலேவும் அவரது மனைவி சாவித்திரிபாயும் இணைந்து போராடி 200 பள்ளிகளைத் திறந்தனர்.
`balhatya pratibandhak griha’ எனக் கைவிடப்பட்ட பெண்களுக்காக இல்லம் ஒன்றையும் நடத்தினார். பெண் சிசுக்கொலைக்கு எதிராக இல்லம் தொடங்கி கணவன் மனைவி இருவரும் அதற்கு எதிராகப் பிரசாரம் செய்தார்கள் .1882 ம் ஆண்டு வெளியிடப்பட்ட பெண் விடுதலை பற்றிய தவறான கருத்துக்களைக் கொண்ட ஆய்வுக் கட்டுரையான, `ஸ்திரீ புருஷ்துலானா’ என்பதை எதிர்த்துக் குரல் கொடுத்த ஒரே தலைவர் ஜோதி ராவ் பூலே ஆவார்.
ஆதிக்க சாதி ஆண்களால் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களையும், தன் இளம் வயதில் வயதானவர்களுக்கு மணமுடிக்கப்பட்ட கணவனை இழந்த பெண்களுக்காகத் தனியாக பள்ளியைத் தொடங்கினார். ஏட்டுக்கல்வியை தாண்டி கைவினை பொருட்கள், ஓவியம், தையல் என்று பன்முக திறமைகளை கற்றுத்தந்தார். இதை பொறுத்து கொள்ள முடியாமல் பல பொய் வழக்குகள் அவர் மேல் தொடரப்பட்டது.
படிக்க:
♦ கல்வித் தளங்களில் மாணவர்களின் பிரச்சினைகள் – தீர்வுகள்
♦ கல்வி வள்ளல்கள் நடத்தும் ஆங்கில வழி கல்வி நிறுவனங்களின் அக்கிரமங்கள்!
சமூக விடுதலைக்காக போராடுகின்றவர்கள் பிரிட்டன் காலனி அரசு பயங்கரவாதத்தின் ஒடுக்குமுறைகளுக்கு ஆட்படுவதும் சிறை கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதும் சமூகத்தில் ஆதிக்க சாதி குண்டர் படையினரால் தாக்கப்படுவது, கொலை செய்யப்படுவது ஆகியவையும் தலைவிரித்தாடிய காலத்திலேயே இந்த வழக்குகளை எதிர் கொண்டு போராடினார் ஜோதி ராவ் பூலே.
ஒடுக்கப்பட்ட மக்களின் சமத்துவ உரிமைக்காகவும், பெண்களின் மீதான ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் பெண்கள் உள்ளிட்டு பார்ப்பனர் அல்லாத அனைவரின் கல்வி உரிமைக்காகவும் தனது இணையர் சாவித்திரி பாய் பூலேயோடு இணைந்து சத்ய ஷோதக் சமாஜ்’ என்ற அமைப்பை 1873-ல் தொடங்கினார்.
“சமூகநீதி, சமத்துவம், தனிநபர் சுதந்திரம், சகோதரத்துவம், அனைவருக்கும் கல்வி, சிறப்பு இடஒதுக்கீடு போன்ற கொள்கைகளை முன்வைத்து இந்த அமைப்பு போராடியது.
இந்தியப் பொருள் முதல் வாத மரபை எடுத்துக் கொண்டால் மக்களை நீண்ட காலமாக நால்வர்ண பாகுபாடு மற்றும் சனாதன ஒடுக்கு முறையின் கீழ் அவர்களின் உரிமையை நசுக்கி வந்த பார்ப்பனிய சித்தாந்தத்திற்கு எதிராக போராடிய மரபை பொருள் முதல்வாத மரபாக நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் பார்ப்பனியத்துக்கு எதிராக கlலகம் செய்தவர்கள் அனைவரையும் நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பது இந்த காலகட்டத்தில் மிகவும் முக்கியமான அவசியமான பணியாக மாறியுள்ளது.
பார்ப்பனியத்திற்கும், இந்தியாவில் நிலவி வருகின்ற சாதி தீண்டாமைக் கொடுமைகளுக்கும் எதிராக போராடி ஒடுக்கப்பட்ட மக்கள் பெற்ற உரிமைகள் அனைத்தும் ஆர் எஸ் எஸ் பாஜக கும்பலினால் மீண்டும் ஒழித்துக் கட்டப்பட்டு வருகிறது.
உரிமைகள் ஏதுமற்ற அடிமைகளை உருவாக்குகின்ற ஆரிய பார்ப்பன சாம்ராஜ்யத்தை தனது லட்சியமாகக் கொண்டு செயல்படுகின்ற ஆர்எஸ்எஸ் பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியானது இந்தியாவை மீண்டும் பல நூற்றாண்டுகளுக்கு பின்னே கொண்டு சென்று காட்டுமிராண்டிகளை போல உருவாக்கி வருகிறது.
இந்த கொடுமைகளுக்கு எதிராக 150 ஆண்டுகளுக்கு முன்பே போராடிய ஜோதி ராவ் பூலே போன்றவர்களின் போர்க் குணத்தை, எந்த பிரதிபலிப்பும் எதிர்பாராமல் சமூகத்திற்காக உழைத்த உன்னதமான சிந்தனை முறையை வரித்துக் கொள்வோம்.
அம்பேத்கர், பெரியார் போன்ற போராளிகளுக்கு எல்லாம் முன்னோடியாக இந்திய சமூக அமைப்பில் உண்மையான மகாத்மாவாக வாழ்ந்து மறைந்த பூலேவின் வாழ்க்கையை நினைவில் ஏந்துவோம்.
ஆர் எஸ் எஸ் பாஜகவின் பார்ப்பன பாசிச ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டத்தில் பூலேவின் போராட்ட மரபை உயர்த்தி பிடிப்போம்.
இறந்தவர்களுக்கு திவசம் கொண்டாடுவதைப் போல ஆண்டுக்கு ஒரு முறை அவர்களின் படத்தை வைத்து மாலையிடுவது; அஞ்சலி செலுத்துவது,, உரத்தக் குரலில் சபதம் ஏற்பது என்பதை தாண்டி உண்மையான சமூக நீதிப் போராட்டத்திற்கும், சமத்துவமான அமைப்பை உருவாக்குவதற்கும் உடல், பொருள், ஆவி மூன்றின் மூலமாகவும் உண்மையான சேவையில் இறங்குவோம்.
- மருது பாண்டியன்






