தில்லியின் ஜாண்டேவாலன் பகுதியில் அம்பேத்கர் பவன் உள்ளது. இங்கு அக்டோபர் 5ஆம் தேதி தேதி அன்று 7000 பேர் இந்து மதத்தில் இருந்து வெளியேறி புத்த மதத்தை தழுவினர்.
இந்த நிகழ்வுக்கு “ஜெய் பீம் மிஷன்” என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இந்த அமைப்பு டெல்லி அமைச்சரவை அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான வழக்கறிஞர் ராஜேந்திர கௌதமால் நிறுவப்பட்டது.
இந்த நிகழ்வில் ராஜேந்திர கௌதமும், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் மருமகனும் சமூக செயல்பாட்டாளருமான ராஜ்ரத்னா அம்பேத்கரும் கலந்து கொண்டனர்.
மதம் மாறிட காரணம் என்ன?
இந்த நிகழ்வில் 86 வயதான மோகன்லால் கலந்து கொண்டார். இவர் 1970 களில் புத்த மதத்திற்கு மாறியவர்; அம்பேத்கருடன் பணியாற்றியவர்.
எதற்காக இவர் மதம் மாறினார்? மதம் மாறியதனால் ஏற்பட்ட விளைவு என்ன? என்பது குறித்து,
“அவர்கள் எங்களை வீடுகள் கட்டவோ, நல்ல ஆடைகளை அணியவோ, பள்ளிக்குச் செல்லவோ, கிணறுகளில் இருந்து தண்ணீர் குடிக்கவோ அனுமதிக்கவில்லை. பள்ளிக்கு அருகில் கூட செல்ல அனுமதிக்கவில்லை. இப்போது விஷயங்கள் சிறப்பாக உள்ளன; ஆனால் எங்கள் அடுத்த தலைமுறை சாதியின் தளைகளில் இருந்து முற்றிலும் விடுபட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.”என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியின் போது “பானைகளில் தண்ணீர் குடிப்பதற்காகவோ , மீசை வைத்ததற்காகவோ அல்லது குதிரைகளை வைத்திருந்ததற்காகவோ அல்லது குதிரை சவாரி செய்ததற்காகவோ நம் குழந்தைகள் கொல்லப்படுவதை நாம் விரும்பவில்லை என்றால் , நாம் நம்மை ஒழுங்கமைக்க வேண்டும், நமது சமூகம் ஒரு ஒழுங்கு முறையில் ஒன்றுபட வேண்டும்”…. ” மனிதர்கள் அனைவரும் சமம் என்பதே பௌத்தத்தின் அடையாளம்”…. “சாதி அமைப்பை உடைத்து, சமூகத்தை ஒன்றிணைப்போம்” என்று ராஜேந்திர கௌதம் மக்கள் மத்தியில் உரையாற்றினார். இதன் பின்னர் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதற்கு பாஜகவின் எதிர்ப்பை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தொடரப்போகும் மதமாற்றம்:
அந்த நிகழ்வில் கலந்து கொண்ட வர்ஷா (29) “பகுஜன் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எப்போதும் உச்சத்தில் உள்ளன. ஒவ்வொரு நாளும் செய்திகளில், பெண்கள் தங்கள் சாதியின் காரணமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுவதைப் பற்றி படிக்கிறோம் … இது என்னை பௌத்த மதத்தைத் தழுவ வேண்டும் என்று நினைக்க வைக்கிறது” என்றும் “நான் அனேகமாக அடுத்த முறை மதம் மாறுவேன்,” என்றும் தனது தாய் மற்றும் தம்பியுடன் அம்பேத்கர் பவன் வாசலில் நின்றபடி கூறினார்.
இதையும் படியுங்கள் : ஆர்எஸ்எஸ்-கொலைகார சாத்தான்களின் கூடாரம்.
இந்து மதத்தில் உள்ள சாதி வெறியால் உரிமைகள் ஏதும் அற்ற அடிமைகளாக பெரும்பான்மை மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மனித உரிமைகள் அனைத்தும் கொண்ட சுதந்திரமான உன்னதமான வாழ்க்கை வாழ என்ன செய்ய வேண்டும்? இதைத் தவிர!
சத்தமின்றி பம்மும் சங்கிகள்
இப்படி பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்து மதத்தில் இருந்து வெளியேறி புத்த மதத்தை தழுவிய நிகழ்வு என்பது பார்ப்பன பயங்கரவாதிகளின் நெஞ்சைக் கிழித்த அம்பு போன்றது.
“தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றி மதம் மாற்றம் செய்கிறார்கள்” என்று முன்பு பொய் பேசியது போல இவர்களால் இப்பொழுது பேச முடியவில்லை.
எனவே தான் ஆர்எஸ்எஸ் இன் தேசியத் தலைவர் மோகன் பாகவத் “கடந்த காலத்தில் இருந்த வர்ணமும் சாதியும் முற்றிலும் மறக்கப்பட வேண்டும்” என்று பேசியுள்ளார். இதைப் பார்த்து ஆஹா !இவர் திருந்திவிட்டார் என்று யாரும் நம்பி விட வேண்டாம்.
மாற்றி மாற்றி பேசும் நபரை இரட்டை நாக்கு பேர்வழிகள் என்று மக்கள் கூறுவார்கள். இது சங்கிகளுக்கு பொருந்தாது. இவர்கள் இரட்டை நாக்கு படைத்தவர்கள் அல்ல; இவர்கள் நாக்குகள் பல படைத்தவர்கள். விதம் விதமாக பொய் பேசுவதில் வல்லவர்கள்.
இந்து மதத்தில் சாதி அமைப்பு என்பது சமுதாயத்தின் நன்மைக்கானது. எனவே அதை ஒழிக்க தேவையில்லை என்று சங்கிகள் பேசிக்கொண்டிருப்பதும் நாம் அறியாததல்ல.
இந்து மக்களின் ஓட்டுக்களை பெறுவதற்கு எப்பேர்பட்ட பொய்களையும் பேசுவதற்கும் சாதி, மத வெறியை தூண்டி ஆயிரம் ஆயிரம் மக்களை கொன்று குவிப்பதற்கும் தயங்காதவர்கள் தான் பார்ப்பன பயங்கரவாதிகள்.
இதைப் புரிந்து கொண்டு இவர்கள் வரும் எல்லா வழிகளிலும் இவர்களை எதிர்த்து முறியடிக்க மக்கள் அனைவரும் ஒன்றிணைவோம்.
- பாலன்
செய்தி ஆதாரம்: Thequint.com