காஷ்மீர் மனித உரிமை செயல்பாட்டாளர் குர்ரம் பர்வேஸ் கைது!


ம்மு-காஷ்மீர் சிவில் சமூக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குர்ரம் பர்வேஸ்(khurram parvez) 22/11/2021 அன்று ஸ்ரீநகரில் UAPA (Unlawful Activities Prevention Act) என்ற கொடிய சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தீவிரவாதிகளுக்கு பண உதவி செய்தார் என்ற பொய்யான குற்றச்சாட்டின் பேரில் குர்ரம் பர்வேஸ் கைது செய்யப்பட்டது இந்திய மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் மட்டுமல்லாது உலக தழுவிய மனித உரிமை கழகங்களின் கண்டனத்துக்கும் உள்ளாகி இருக்கிறது.

தேசிய புலனாய்வு முகமை (NIA) கடந்த திங்கள் கிழமை அன்று அவரது அலுவலகத்தில் மற்றும் வீட்டில் நடத்திய சோதனையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், ஐ.நா.-வுக்கான மனிதஉரிமைகள் பாதுகாப்பு சிறப்பு அறிக்கையாளர், சித்திரவதைகளுக்கெதிரான உலக அமைப்பு, ராபர்ட் F. கென்னடி மனித உரிமைகள் அமைப்பு,  இந்தியாவிலுள்ள மனித உரிமை அமைப்புகள் மற்றும் செயல்பாட்டாளர்கள் உட்பட அனைவரும் மனித உரிமைகளின் பாதுகாவலரான குர்ரம் பர்வேஸ்-சை கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்துள்ளனர்.

ஐ.நா.-வுக்கான மனிதஉரிமைகள் பாதுகாப்பு சிறப்பு அறிக்கையாளர் மேரி லாலர், காஷ்மீரில் குர்ரம் பர்வேஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் கவலையளிக்கின்றன. இந்திய அரசு அவரை கைது செய்துள்ளது மட்டுமின்றி அவர் மீது தீவிரவாதம் தொடர்பான பொய்யான குற்றச்சாட்டுகளையும் புனைந்துள்ளதுள்ளது. அவர் ஒரு தீவிரவாதி அல்ல அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குர்ரம் பர்வேஸ் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகலாம் என்று அஞ்சுவதாக ஜெனிவாவில் உள்ள சித்திரவதைகளுக்கெதிரான உலக அமைப்பு கூறுகிறது.

பர்வீஸ் ஸ்ரீநகரில் விசாரிக்கப்பட்ட பின்னர் டெல்லிக்குக் கொண்டு செல்லப்படுவார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் அக்டோபரில் NIA காஷ்மீரில் பல இடங்களில் தொடர் சோதனை மேற்கொண்டது. அதில் குர்ரம் பர்வேஸ்-சின் அலுவலகமும் வீடும் அடக்கம். சில  NGO-க்களும், ட்ரஸ்டுகளும் நிதி வசூல் செய்து தீவிரவாத மற்றும் பிரிவினைவாதிகளுக்கு பணஉதவி செய்வதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில் இத்தகைய சோதனைகள் நடத்தப்பட்டன.

காஷ்மீரில் மனித உரிமை செயல்பாட்டாளர் குர்ரம் பர்வேஸ் கைது செய்யப்பட்டிருப்பது தீவிரவாத எதிர்ப்பு சட்டங்கள் எப்படி தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் குற்றவாளிகளாக்கப்படுவதையும், மாற்றுக்கருத்து கொண்டவர்கள் ஒடுக்கப்படுவதையும் காட்டுவதாக உள்ளது என ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு தனது அறிக்கையில் கூறியுள்ளது.

ராபர்ட் F. கென்னடி மனித உரிமைகள் அமைப்பின் தலைவரான கெர்ரி கென்னடி மனித உரிமை செயல்பாட்டாளர்களை முடக்கவும் தண்டிக்கவும் முயற்சிப்பதை விட இந்திய அதிகாரிகள் மனித உரிமைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

காஷ்மீரில் இந்திய பாதுகாப்புப் படைகளின் மனித உரிமை மீறல்களை பர்வேஸ் தைரியமாக அம்பலப்படுத்தியதையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ததையும், சர்வதேச மனித உரிமைகளை மதித்து நடக்கும்படி இந்திய அரசை தொடர்ந்து  நிர்பந்தப்படுத்தியதையும் இந்த அமைப்புகள் பாராட்டுகின்றன.

இந்தியாவின் பிரபலமான மனித உரிமை செயல்பாட்டாளர்கள் யோகேந்திர யாதவ் மற்றும் கவிதா ஸ்ரீவஸ்தவா மனித உரிமைக்காக செயல்படுவது குற்றமா என்றும், பர்வேஸ்-ன் கைது அவமானகரமானது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

2016-ம் ஆண்டு பொதுபாதுகாப்பு சட்டத்தின்படி பர்வேஸ் கைது செய்யப்பட்டு 76 நாள் சிறைவாசத்துக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

ஜன்ஹஸ்டக்செப்(Janhastakshep) எனும் காஷ்மீர் மக்கள் கூட்டுக்குழு  UAPA போன்ற சட்டங்கள் ஆளும் வர்க்கத்தின் மக்கள் விரோத போக்குகளை அம்பலப்படுத்துபவர்களை கைது செய்யவும் குரல்வளையை நெறிக்கவும்   பயன்பட்டுவருகிறது என்று கூறுகிறது. அனைத்து ஜனநாயக அமைப்புகளும் பர்வேஸின் விடுதலைக்கு தொடர்ந்து குரல் கொடுப்பதுடன் பாசிச சக்திகளுக்கு எதிராக போராடுபவர்களைப் பாதுகாக்கவும் அறைகூவல் விடுத்துள்ளது.

மிர்சா வாஹித், கௌஹார் கிலானி போன்ற காஷ்மீரைச் சேர்ந்த எழுத்தாளர்களும், உள்ளூர் மக்களும் பர்வேஸின் விடுதலையை வலியுறுத்துகின்றனர்.

தமிழில்: செந்தழல்

https://www.newsclick.in/Global-Rights-Community-Others-Condemn-Arrest-Kashmiri-Activist-Call-Release

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here