ஜம்மு- காஷ்மீருக்கான சட்டமன்றத் தேர்தல் 10 ஆண்டுகளுக்கு பிறகு மூன்று கட்டங்களாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவின் போது 61.38% வாக்குகளும், செப்டம்பர் 25 ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 57.03% வாக்குகளும் அக்டோபர் 01 ஆம் தேதி நடந்த மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் 65.58% வாக்குகளும் என மொத்தமாக 61.33% வாக்குப்பதிவோடு சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இந்தியா சுத்ந்திரம் பெற்றதாக கூறப்பட்ட போது காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று இருக்கிறது. ”எந்த ஒரு வன்முறை சம்பவங்களும் இல்லாமல் 61.33% வாக்குப்பதிவு நடந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் அமைதியான முறையில் தேர்தல் நடந்துவிட்டது. ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு விட்டது” என சங்கிகள் சமூக ஊடகங்களில் தம்பட்டம் அடித்து வருகிறார்கள். உண்மையில் துப்பாக்கி முனையிலே ‘ஜனநாயகம்’ நிலைநாட்டப்பட்டது.
துண்டாடப்பட்டது ஜம்மு காஷ்மீர் மாநிலம் மட்டுமல்ல.
மக்களும் தான்!
1947 அதிகார மாற்றத்தில் இருந்தே காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காமல் ஒடுக்கியே வந்தன இந்திய ஒன்றிய அரசுகள். காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த போது காஷ்மீர் மக்களுக்கு வழங்கிய ஐ.நா மேற்பார்வையிலான ’சுதந்திர வாக்கெடுப்பு’ என்ற வாக்குறுதி ஒழித்துக் கட்டப்பட்டது. 2014 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பாசிச பாஜக காஷ்மீர் மக்கள் மீதான ஒடுக்குமுறையை தீவிரப்படுத்தியது. குறிப்பாக,2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 05 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட சில நாட்களில் காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக துண்டாடியது.
மாநிலம் மட்டும் பாசிச பாஜக அரசால் துண்டாடப்படவில்லை. மாநிலத்தின் மொத்த மக்களுமே துண்டாடப்பட்டனர். குறிப்பாக,அரசியல், பொருளாதாரம், இராணுவம் என பாசிச பாஜக அரசு காஷ்மீர் மக்களின் மீது மும்முனை தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட அன்றைய தினமே அரசியல் ரீதியான தாக்குதல் தொடுக்கப்பட துவங்கி விட்டது.. மாநிலம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு தொலைபேசி தொடர்புகள் மற்றும் இணைய சேவைகள் முற்றிலுமாக முடக்கப்பட்டன. அரசியல் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் தடுத்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முக்தி, ஓமர் அப்துல்லா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
06 மாதத்திற்கு பிறகு ஜனவரி 2020 இல் 2G இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டாலும், 4G இணைய சேவை பிப்ரவரி 2021-இல் தான் மீண்டும் வழங்கப்பட்டது. அதுவும் மாநிலம் முழுவதும் வழங்காமல் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இணைய சேவை வழங்குவது என இருந்தது. மாநில முழுவதும் இணைய சேவை ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் கழித்தே கிடைத்தன.
பொருளாதார தாக்குதலாக மக்கள் மீது திட்டமிட்டு அதிக வரி விதிப்பு செய்யப்பட்டது. வரி உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என வாழ்க்கை நடத்தவே போராடினர். மறுபறம், ஏராளமான ஆட்சேர்ப்பு முறைகேடுகள் நடந்தன, வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு என பொருளாதார ரீதியாக கடுமையான சிரமங்களை மக்கள் எதிர்கொண்டனர்.
இராணுவத்தின் மூலம் அடக்குமுறை செலுத்த ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். கடந்த 2023 ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை ஜம்முவில் மட்டும் 43 பயங்கரவாத தாக்குதல்களுக்கு பதிலடி என மக்கள் மீது இராணுவ அடக்குமுறை நடத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காஷ்மீரில் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக தாழ்நிலைப் போரை நடத்தி வருகிறது இந்திய ஒன்றிய பாஜக அரசு. இதனை பற்றி கேள்வி எழுப்பினாலோ, எழுதினாலோ பிரிவினைவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய்ப்படுகிறது. பிரபல எழுத்தாளரும், சமூக செயல்பாட்டாளருமான அருந்ததி ராய் மீது 10 மாதங்களுக்கு பிறகு வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
இயல்பு நிலை அமைதியா?
துப்பாக்கி முனையில் அமைதியா?
ஜம்மு காஷ்மீர் பகுதியில் அமைதி நிலவுகிறது; பயங்கரவாதம் கட்டுப்படுத்தப் படுகிறது; பொருளாதாரம் உயர்ந்து இருக்கிறது; சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது என்றெல்லாம் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பல பாஜக தலைவர்களும் பெருமை பீற்றி வந்தனர். ஆனால் உண்மையில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் இருந்து அமைதி உருவாகவில்லை. மாறாக துப்பாக்கி முனையில் மக்களை மிரட்டி பணிய வைத்தே அமைதி நிலைநாட்டப்பட்டது.
மக்களை மிரட்டி, பயமுறுத்தி மௌனமாக இருக்க செய்து விட்டு பாசிச மோடி அரசு அமைதி நிலவுகிறது என்று கூறுகிறது. அதாவது, துணைநிலை ஆளுநரின் ஆட்சியை நேரடியாக விமர்சிப்பவர்கள் மீது ஊபா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மறைமுகமாக விமர்சிப்பவர்கள் என தெரிந்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு அழைத்து மிரட்டப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் கடந்த 2014ஆம் ஆண்டு உபா சட்டத்தின் கீழ் வெறும் 45 வழக்குகள் மட்டுமே பதியப்பட்ட இருந்தன. ஆனால் 2019 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 255 ஆக உயர்ந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் கூற்றுப்படி, 2019 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 2021 வரை, காஷ்மீரில் ஊபா சட்டத்தின் கீழ் 1200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2300 க்கும் மேற்பட்ட மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2021 ஆம் ஆண்டுக்கான தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் அறிக்கை மூலம், நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான ஊபா வழக்குகள் ஜம்மு-காஷ்மீரில் பதிவாகியுள்ளன என்று தெரியவந்துள்ளது. அதேபோல், அனைத்து மாநிலங்களோடு ஒப்பிடுகையில் ஜம்மு காஷ்மீர் தான் அதிக எண்ணிக்கையிலான கலவரங்களைக் கண்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் மட்டும் 751 கலவர வழக்குகள் பதிவாகியுள்ளன. மக்களின் மீது இவ்வளவு வழக்குகளை போட்டு மிரட்டி பயத்தை உருவாக்கி மௌனமாக்கிவிட்டு அமைதி நிலவுவதாக பீற்றிக் கொள்கிறது பாசிச பாஜக அரசு.
இவ்வளவு கொடுமைகளை அனுபவித்து வரும் மக்கள் ஒரு நாள் ஓட்டு போட்டு விட்டனர் என்பதற்காக ’ஜனநாயகம்’ நிலை நாட்டப்பட்டதாக சொல்லுவது எவ்வளவு பெரிய மோசடித்தனம். இதனால் தான் சொல்கிறோம் ஜனநாயகமும், அமைதியும் காஷ்மீரில் துப்பாக்கி முனையிலேயே நிலைநாட்டப்பட்டது என்று.
அக்டோபர் 08 ஆம் தேதி காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றாலும், யூனியன் பிரதேசம் என்பதால் ஒன்றிய பாசிச பாஜக அரசே ஆதிக்கம் செலுத்தும் மக்களின் வாழ் நிலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படாது.
இன்று காஷ்மீர்? நாளை?
இன்று காஷ்மீரில் துப்பாக்கி முனையில் மக்களை மௌனமாக்கியது போல் பாசிச அரசு எந்த மாநிலத்தையும் இதே நிலைக்கு கொண்டு வரும். இதற்கேற்ற வகையில் மூன்று குற்றவியல் சட்டங்களையும் திருத்தி வைத்துள்ளது.
பாசிசத்தை முற்றிலுமாக துடைத்தெரியவில்லையெனில் அது காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ’ஒரே நாடு, ஒரே விதமான அடக்குமுறை’ என தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட அனைத்து தேசிய இன மக்களின் மீதும் அடக்குமுறைகளை கையாளும் என்பதை காஷ்மீர் நம் கண் முன் உதாரணமாக காட்டுகிறது.
பாசிசத்திற்கு எதிராக களமாடும் அரசியல் கட்சிகளை குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் ஐக்கிய முன்னணி கட்டி மேலிருந்து தேர்தல் மற்றும் தேர்தலுக்கு வெளியே பாசிசத்தின் அரசியல் அதிகாரத்தை பறிக்கும் அதே நேரத்தில், பாசிசத்திற்கு எதிராக தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் என அனைத்து வர்க்கப் பிரிவினரையும் குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் இணைத்து பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணி கட்டி யமைத்து கீழிருந்து மோதி வீழ்த்துவற்கான வேலையையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
பல்வேறு தேசிய இனங்களின் சிறைக் கூடமாக துப்பாக்கி முனையில் இந்திய தேசியத்தினால் கட்டியமைக்கப்பட்டுள்ள காஷ்மீர், மணிப்பூர் உள்ளிட்ட தேசிய இனங்கள் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையுடன் விருப்பபூர்வமாக ஒன்றிணையும் போது மட்டுமே காஷ்மீரில் உண்மையான ஜனநாயகம் நிலைநாட்டப்படும். இதனை சாதிக்க ஜனநாயக கூட்டரசு ஒன்றை உடனடியாக கட்டுவதே நம்முன் உள்ள வழி. வேறு குறுக்குப் பாதைகளே இல்லை என்பதை உணர்ந்துக் கொள்வோம்.
- தயாளன்