ங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து பார்ப்பனர்களும், பனியாக்களும் நாட்டின் அதிகாரத்தை மாற்றிக்கொண்டதன் 75-ஆவது ஆண்டு நிறைவை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடி திளைத்துக் கொண்டுள்ள இந்த கும்பலின் கொண்டாட்டத்தை அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாத ஏழைகள், வேலையில்லா இளைஞர்கள், போதுமான வருமானம் இல்லாத குடிமக்கள், கடனில் உழலும் விவசாயிகள் தலையிலும் திணித்துக் கொண்டுள்ளனர்.

பார்ப்பன-பனியா கும்பலின் கொண்டாட்டம் அவர்களைப் பொறுத்தவரையில் சரிதான். ஆனால் உண்மையிலேயே இந்த அமுத பெருவிழா மக்கள் கொண்டாட தகுந்ததுதானா?

1979-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், 13-ஆம் தேதி லாகூர் ஜெயிலில் “ஜதின்தாஸ்” என்ற புரட்சிகர விடுதலைப் போராளி அரசியல் கைதிகளுக்கான அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி ஏறக்குறைய 63 நாட்கள் உண்ணாவிரதமிருந்து தனது 24 வயதில் உயிர் நீத்தார். அந்த நாளை அரசியல் கைதிகளுக்கான நாளாக ஜனநாயக உரிமைகளுக்கான அமைப்புகள் கடைப்பிடிக்கின்றன.

நாட்டின் விடுதலைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராடியவர்களை தேசத்துரோக வழக்கு, சதி வழக்குகள் என்று ஆயிரக்கணக்கானவர்களை சிறையிலேயே கொன்று குவித்தனர், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய காலனியவாதிகள். அதில் பெரும்பாலானவர்கள் முறையான மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டே சாவுக்குத் தள்ளப்பட்டனர்.

அத்தகைய காலனியவாதிகளிடமிருந்து விடுதலை அடைய நாடே போராடிக் கொண்டிருந்தபோது பிரிட்டிஷாரின் ஷூக்களை நக்கிக் கொண்டிருந்த கூட்டம் தற்போது ஆட்சிக்கு வந்ததிலிருந்தே மக்கள் போராளிகளை பொய்யான குற்றச்சாட்டின் பேரில் ஆண்டுக்கணக்கில் விசாரணையின்றி ஜாமின் வழங்காமல் சிறையிலைடைத்துள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது போடப்பட்ட கான்பூர் சதி வழக்கில் “வன்முறைப் புரட்சியின் வழியாக பிரிட்டனிடமிருந்து இந்தியாவை முழுமையாகப் பிரிப்பதன் மூலம் பிரிட்டிஷ் இந்தியாவின் மீதான, பேரரசரின் இறையாண்மையைப் பறிக்க” சதிசெய்ததாக  ஜதின்தாஸ் முதலானோர் குற்றம்சாட்டப்பட்டனர்.

அதைப்போலவே இன்றைய புதிய இந்தியாவின்,  “பேரரசரைக்” கொல்ல சதி செய்ததாக வரவரராவ், சுதா பரத்வாஜ், வெர்னான் கொன்சால்வேஸ், ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்ட BK-16 வழக்கில் குற்றவாளிகளாக்கப்பட்டோரும் உமர் காலித், பத்திரிக்கையாளர் சித்திக் காப்பான் (இவர்களில் சிலருக்கு தொடர் சட்டப்போராட்டத்தின் மூலம் ஜாமீன் கிடைத்துள்ளது ) போன்றோர் மீது அந்நிய நாட்டு மக்களை ஒடுக்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பயன்படுத்திய தேசத்துரோக சட்டம்  போன்ற சட்டங்களுடன் இன்னும் கொடூரமான UAPA, NSA, இந்திய ஆயுதச் சட்டம் போன்ற சட்டங்களைக் கொண்டு, சொந்த நாட்டு மக்களை ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பல் தலைமையிலான அரசு ஒடுக்கிவருகிறது.

இவர்களில் ஏற்கனவே ஜார்கண்ட் பழங்குடி மக்களுக்காக போராடிய, பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட பாதிரியார் ஸ்டேன் சாமி, கட்சிரோலியைச் சேர்ந்த பண்டு நரோடே, ரஞ்சித் முர்மு என்ற பழங்குடியின போராளிகளும் மருத்துவ உதவி மறுக்கப்பட்டதால் சிறையிலேயே உயிரிழந்திருக்கின்றனர்.

இவர்களைப் போலவே,” பீமா கோரேகான்” வழக்கிலும் இன்னபிற பொய்யான வழக்குகளிலும் சிறையிலடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை சிறையிலேயே கொன்று விடத்துடிக்கிறது ஆர்.எஸ்.எஸ்-பாஜக பாசிச கும்பல்!. போலியோவால் 95% செயலிழந்துவிட்ட, சக்கரநாற்காலியில்லாமல் இயங்கமுடியாத,  ‘பேராசிரியர் சாய்பாபா’ மற்றும் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள,  ‘ வெர்னான் கொன்சால்வேஸ்’ உள்ளிட்ட அரசியல் கைதிகளின் மீது நடத்தப்படும் இத்தகைய அப்பட்டமான மனித உரிமை மீறலை தேசிய மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் கண்டுகொள்ளாமல் கள்ள மவுனம் காக்கின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியாத நாடுகளை மட்டும் குறிவைத்து மனித உரிமை மீறல் நடப்பதாகக் குற்றம் சாட்டி இந்தியாவில் நடக்கும் எண்ணிலடங்கா மனித உரிமை அத்துமீறல்களை சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்கின்றன.

அரசியல் கைதிகளைத்  தவிர பொய்யான குற்றச்சாட்டுகளின் கீழ் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், தலித், மற்றும் பழங்குடியினர் ஆண்டு கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். UAPA சட்டத்தினால் மட்டும் இன்று வரையில் சிறையிலடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 6,482 பேர். இது மட்டுமல்லாமல் சிறையில் வாடும் அரசியல் கைதிகளுக்கு, இழைக்கப்படும் கொடுமைகளும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலின் ஆட்சிக்காலத்தில் அதிகரித்துள்ளது.

அரசியல் கைதிகளுக்கு சிறையில் புத்தகங்கள், ஆடைகள், குடும்ப உறுப்பினர்களின் சந்திப்பு, மற்றும் அத்தியாவசிய தேவைகளான கண்கண்ணாடி உள்ளிட்டவை மறுக்கப்படுகின்றன. ஆர்.எஸ்.எஸ்-பாஜக பாசிச கும்பலின் ஆட்சியில், மாற்று கருத்து கொண்டவர்களாலும், மாற்று மதநம்பிக்கை கொண்டோராலும், ஒடுக்குமுறையை எதிர்ப்போராலும் நிரம்பி வழியும் சிறைச்சாலைகளைக் கொண்டுள்ள இந்தியா ஒரு  சுதந்திர நாடாம்! அதற்கு அமுதப் பெருவிழா ஒரு கேடாம்!

அனைத்து அரசியல் கைதிகளையும், அப்பாவிகளையும் விடுவிக்க தொடர் சட்டப்போராட்டங்களையும், மக்கள் போராட்டங்களையும் நடத்தும் அதேவேளையில் அன்றைய ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளை விரட்டியடிக்க நாடுமுழுவதும் திரண்டெழுந்த போராட்டங்களைப் போலவே தற்போதைய பாசிசவாதிகளையும் விரட்டியடிக்க நாடுமுழுவதும் உள்ள முற்போக்கு, ஜனநாயக, இடதுசாரி இயக்கங்களையும்;  பாசிசத்திற்கு எதிரான அனைத்து மக்களையும், ஒன்றுதிரட்டி ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலை வீழ்த்தும் இரண்டாம் சுதந்திர போராட்டத்துக்கும் நாம் தயாராகவேண்டும்.

  • ஜூலியஸ்

மூலக்கட்டுரை: Political Prisoners Unite the British Raj and ‘New India’ (thewire.in)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here