90-களில் தென் மாவட்டத்தில் நடந்த தொடர்ச்சியான ஆதிக்கசாதி வெறியாட்டங்களை தொடர்ந்து மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பாக “தீண்டாமை குற்றம் புரியும் சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்!”, “ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய்! அவற்றின் சொத்துக்களை பறிமுதல் செய்!” என்று தொடர்ச்சியான பிரச்சார இயக்கமும், சாதியத்தை போதிக்கும் வேத – புராணக் குப்பைகளை கொளுத்தும் போராட்டங்களும், சாதி – தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் சாதி – தீண்டாமை மறுப்பு திருமணங்களையும் நடத்தினோம்.

’தீண்டாமை குற்றம் புரியும் சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்’ என்றவுடன் இது பார்ப்பனர்களின் குரலாக ஒலிக்கிறது என்றும், துக்ளக் சோவின் வாதமும், ஆர்எஸ்எஸ் கும்பலின் வாதமும் இதுவும் ஒன்றுதான் என்றும் சீறி எழுந்தனர் அரைவேக்காடுகள். ஆனால் டாக்டர். அம்பேத்கர் வரையறுத்தபடி, இந்திய சமூக அமைப்பில் படிநிலை சாதி அமைப்புகள் என்பது படிப்படியாக அல்லாமல், தனித்தனி அடுக்குகளைக் கொண்ட சாதிகள், படிநிலையாக கட்டப்பட்டுள்ளது என்று உண்மையை புரிந்து கொண்டால் மட்டுமே இந்த முழக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்வுபூர்வமாக அறிந்து கொள்ள முடியும்.

“தாழ்த்தப்பட்டவர்களின் துயரமான நிலைமையை உணர்ந்த எவருமே தாழ்த்தப்பட்டவர்களுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என அங்கலாய்ப்பது வழக்கமான ஒன்று. இந்த பிரச்சனையில் நாட்டமுள்ள ஒருவராவது சாதி இந்துக்களை திருத்த நாம் ஏதாவது செய்ய வேண்டும் என சொல்வது மிக அரிதாகவே இருக்கிறது. திருத்தப்பட வேண்டியவர்கள் தாழ்த்தப்பட்டவர்களே என்ற கருத்து பொதுவாக காணப்படுகிறது.” என்று ஆதிக்க சாதியினரை விமர்சித்து எழுதியுள்ளார் டாக்டர் அம்பேத்கர். “அது மட்டுமல்ல திருத்த வேண்டியது தாழ்த்தப்பட்ட மக்களைத்தான், ஆதிக்க சாதிகள் நல்ல புத்தியோடு, நல்ல ஒழுக்கத்தோடு, நன்னடத்தையோடுதான் இருக்கிறான், அவனிடம் எந்த தவறும் இல்லை என்ற கருத்து சரியோ, தவறோ ஆனால் இந்த மனப்பான்மை தீண்டாமைக்கு தாங்கள் பொறுப்பல்ல என்ற ஆதிக்க சாதியினரின் சுயதிருப்திக்கு வழிவகுக்கிறது” என்று சவுக்கால் உரித்தார்.

டாக்டர்.அம்பேத்கர்

தென் மாவட்டங்களைப் போலவே ஆதிக்கசாதி வெறியாட்டமும், தீண்டாமைக் கொடுமைகளுக்கு தான் பொறுப்பல்ல என்று மனதில் கருதும் பிறப்பால் ஆதிக்க சாதியினரும், சுயதிருப்தியில் திளைக்கும் வட தமிழகத்தில், இளமை துள்ளும் வயதில் பெரும் கனவுகளுடன் சாதி மறுப்பு திருமணம் செய்துக் கொண்ட கண்ணகி- முருகேசன் படுகொலையும் இந்த கால கட்டத்தில் தான் நடந்தது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே குப்பநத்தம் புதுக்காலனியை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரது மகன் முருகேசன். ’பிறப்பால் தாழ்த்தப்பட்ட சாதியைச்’ சேர்ந்த இவர், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை பொறியாளர் படிப்பு படித்தவர். இவரும் இதே பகுதியிலுள்ள வன்னியர் இனத்தை சேர்ந்த துரைசாமி என்பவரது மகள் கண்ணகி என்பவரும் காதலித்தனர். இருவரும் 2003-ஆம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி கடலூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்துகொண்டு அவரவர் வீட்டில் தனித்தனியாக வசித்து வந்தனர் இந்த திருமணம் நடந்தபோது முருகேசனின் வயது 25 கண்ணகியின் வயது 22.

முருகேசன் – கண்ணகியின் பதிவு திருமணத்தை பெண்வீட்டார் தெரிந்து கொண்டவுடன் தங்கள் இருவரையும் பிரித்து விடுவர்கள் என்ற அச்சத்தில் முருகேசன் தனது மனைவியை விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்தார். அங்கிருந்த கண்ணகியை, அவரது பெற்றோர் கண்டுபிடித்து, அவரை  மீண்டும் ஊருக்கே இழுத்துக் கொண்டு வந்தனர். இதுநாள் வரை தான் கட்டிக் காத்து வந்த ’ஆதிக்க சாதி கௌரவம்?!’ பறிபோய் விட்டதாக எண்ணி, 08-07-2003 அன்று வண்ணான் குடிக்காட்டில் உள்ள சுடுகாட்டில் உயிருடன் துடிக்கத், துடிக்க காதுகளிலும், வாயிலும் விஷத்தை ஊற்றி படுகொலை செய்தனர். அதே இடத்தில் முருகேசனின் பெற்றோரையும் மிரட்டி முருகேசனையும் அதுபோலவே படுகொலை செய்ய வைத்தனர். பின்னர் இருவரையும் தனித்தனியாக மரத்தில் கட்டிவைத்து ஆதிக்க சாதி வெறியர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

கேட்பதற்கும், படிப்பதற்கும் மனம் பதறும் இந்த மனிதத்தன்மையற்ற கொடூர செயல் 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்றாலும், இன்று வரை தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதி வெறியர்களுக்கு உள்ள வன்முறையும், வக்கிர குணமும் குறையவில்லை. தருமபுரி திவ்யா-இளவரசன், உடுமலை கவுசல்யா-சங்கர் உள்ளிட்டு 2013 முதல் 81 ஆதிக்க சாதி வெறி படுகொலைகள் நடந்துள்ளதாக 2016 ஆம் ஆண்டு மனம் குமுறினார் எவிடென்ஸ் கதிர்.

அதன் பிறகு கொரானா பாதிப்பு துவங்கிய 2020 வரை தூத்துக்குடி, சிவகங்கை, ஈரோடு உள்ளிட்டு 60 க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன என்கிறது அரசு புள்ளி விவரங்கள். அரசின் புள்ளி விவரங்களில் உள்ள மோசடியை அம்பலப்படுத்தும் வகையில் 2013 ஆம் ஆண்டிற்கும் 2019 ஆகஸ்ட் மாதத்திற்கும் இடையில் தமிழகத்தில் 192 ஆதிக்க சாதி வெறி படுகொலைகள் நடந்துள்ளதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். இந்த படுகொலைகளை ஆணவக் கொலை, கெளரவக் கொலை என்று மென்மையாக குறிப்பிடவே மனம் கொதிக்கிறது.

இந்தியாவில் போலீசு, அதிகாரவர்க்கம், ராணுவம் உள்ளிட்ட அரசு கட்டமைப்புக்குள் இயல்பாகவே ஆதிக்கசாதி வெறி புரையோடி போயுள்ளது என்பதையும், ஆதிக்க சாதி வெறியர்களை காப்பாற்றும் கண்ணோட்டத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதையும் நிரூபிக்கின்ற வகையிலேயே விருதை போலீசு நடந்துக் கொண்டது. குப்பநத்தம் படுகொலைக்கு பிறகு ஓரளவு மனத்துணிவு பெற்ற பின்னர் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த முருகேசனின் உறவினர்கள் கொடுத்த புகாரை காவல்துறை மெத்தனமாகவே கையாண்டது. அதுமட்டுமின்றி ஆதிக்க சாதிவெறி படுகொலையை மறைப்பதற்கு, ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த முருகேசனின் பெற்றோரையும் கைது செய்து சிறையில் அடைத்தது. அப்போதைய விருத்தாசலம் காவல் நிலைய ஆய்வாளர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் ஆகிய இருவரும் இந்த ’நீதி படுகொலையை’ செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில் செயல்படும் மனித உரிமை பாதுகாப்பு மையம் அமைப்பும், தற்போது மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள  வழக்கறிஞர் ராஜூ, உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பொ. ரத்தினம் மற்றும் நெய்வேலியில் பணிபுரிந்த ஜனநாயக சிந்தனைக் கொண்ட சில உயர் அதிகாரிகள் ஆகியோர் இந்த வழக்கை விடாமல் கையில் எடுத்துக் கொண்டு தொடர்ந்து போராடி வந்தனர். பல்வேறு மிரட்டல்கள், பேரங்கள், சமரசங்கள், இவற்றுக்கெல்லாம் பணியாமல் நீதியை நிலைநாட்டுவதற்கும், ஆதிக்க சாதி வெறியர்களுக்கு உகந்த பாடம் புகட்டுவதற்கும் துணிந்து நேர்மையுடன் போராடிய காரணத்தினால் தான் இன்று இந்த வழக்கில் இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பு கிடைத்துள்ளது.

தோழர்.ராஜூ

இந்த இடத்தில் டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த விமர்சனத்தை நேர்மையாக பரிசீலிக்க வேண்டியுள்ளது. பிறப்பால் ஒடுக்கப்பட்ட மக்கள் பல்வேறு வன்கொடுமைகளுக்கு ஆளாகி நிற்கும் போது அவர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்ற வகையில் அவர்களுக்கு அறிவுரை சொல்வது அல்லது பரிந்து பேசுவது மட்டுமே ஜனநாயகப் பண்பு ஆகாது. மாறாக ஒடுக்குகின்ற சாதியைச் சேர்ந்த விவசாயியோ, தொழிலாளியோ யாராக இருந்தாலும் சாதி ஆதிக்கத்தை அவனது சிந்தனையில் இருந்து கழுவிக் களைகின்ற வகையில் தேவையான அடி கொடுப்பதற்கு தயாராக இருப்பது தான் உண்மையான ஜனநாயக பண்பாக இருக்க முடியும்.

அந்த வழிமுறையைத் தான் மனித உரிமை பாதுகாப்பு மையமும், புரட்சிகர அமைப்புகளும் கையாண்டனர். புரட்சிகர, ஜனநாயக உணர்வுடன் போராடியதால் இன்று குற்றவாளிகள் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட்டுள்ளனர். 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆதிக்கசாதி வெறி படுகொலைக்கு காரணமான கொலையாளிகள் பனிரெண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு தூக்கு தண்டணையும்  வழங்கி தீர்ப்பளித்துள்ளது கடலூரில் உள்ள மாவட்ட நீதிமன்றம்.

படிநிலை சாதி அமைப்பும், நால்வருணப் பாகுபாடும் கொண்ட இந்திய சமூகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு கட்டமைப்பு எப்போதும் இதுபோன்று நியாயவானாக நடந்துக் கொள்ளாது. “சாதி கெளரவத்திற்காக மனித சமூகத்திற்கே களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த கொலை நடைபெற்றுள்ளது. தமிழ் மண்ணில் கண்ணகி எரித்துக் கொல்லப்பட்டதே கடைசியாக இருக்க வேண்டும்” என்று தீர்ப்பு எழுதிய நீதிபதி உத்தமராசா போல ஒரு சிலர் தமிழகத்தின் ’திராவிட மாடல்’ தந்த அரிய பரிசுகள்.

அரிய இந்த தீர்ப்பு கிடைத்ததால், நிலவும் சமூக கட்டமைப்பிற்குள்ளேயே ஒரு புரட்சிக்கு முன்பாக நியாயத்தை வென்றெடுக்க முடியும் என்ற மாயையையும் நாம் கொள்ளத் தேவையில்லை. சமூகமாற்றம் நிகழ்வதற்கு முன்பாக சாதி – தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக இணையான போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும். ’தீண்டாமை குற்றம் புரிகின்ற ஆதிக்கசாதி வெறியர்களுக்கு இடஒதுக்கீடு உரிமையை ரத்து செய்’ என முன்வைத்தும் , சாதியத்தைக் கட்டிக்காக்கும் அகமணமுறையை, சுயசாதி திருமணங்களை உடைக்கும் சாதி – தீண்டாமை மறுப்பு திருமணங்கள் உள்ளிட்ட பல வழிமுறைகளில் போராட்டத்தை தீவிரமாக நடத்த வேண்டியுள்ளது.

இந்தியாவில் உள்ள ஆகப் பெரும்பான்மையான கிராமங்களில் தனி குடியிருப்பு, தனி சுடுகாடு, தனி தேநீர் குவளை, கோவிலில் நுழைய தடை, ஆதிக்கசாதி குடியிருப்புகளை தாழ்த்தப்பட்டவர்களின் குடியிருப்புகளிடம் இருந்து பிரிக்கின்ற தீண்டாமைச் சுவர்கள் உள்ளிட்ட அனைத்து வடிவங்களிலும் தீண்டாமைக் கொடுமை இன்றளவும் நீடிக்கிறது.

மேட்டுபாளையம் தீண்டாமை சுவர்

தீண்டாமையும், சாதி ஆதிக்க உணர்வு – சாதி பாகுபாடு தனது நலனுக்கு உகந்தது அல்ல என்று தீண்டத்தக்க சாதிகளின் உழைக்கும் மக்கள் தங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து உணர வேண்டும். அவ்வாறு அவர்களை உணரச் செய்வதற்கு ஆதிக்கசாதி பெருமை குறித்த மாயைகளை உடைக்கின்ற வகையிலும், ஆழ்மனதில் மண்டியுள்ள சாதி வெறியை துடைக்கும் வகையிலும் விமர்சனம் செய்ய வேண்டியுள்ளது.

’நிலமற்ற உழவர்களுக்கு நிலம்! உழைப்பவர்களுக்கு அதிகாரம்!’ என்ற முழக்கங்களின் கீழ் உழைக்கும் மக்களை ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான ஒரு வர்க்கமாக திரட்டுவதன் மூலமும் போராடுவதன் மூலமே இந்த உணர்வை உழைக்கும் மக்களுக்கு கொண்டு வரமுடியும்.

தீண்டாமை என்பது சிறுபான்மை மக்களின் மீதான பெரும்பான்மையின் ஒடுக்குமுறை. இந்த பெரும்பான்மை சாதிவெறியர்களின் தலைமையிலும், ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகளின் தலைமையிலும் இருக்கின்ற வரை சாதிவெறி கொண்டதாகவே இருக்கும். ஆனால் இதனை கண்டு சோர்வடைவதோ, புலம்புவதோ தீர்வாகாது. புதிய தாராளவாதம் தன்னை அறியாமல் விவசாயிகளையும் தொழிலாளர்களையும் ஒன்று திரட்டி கொடுக்கிறது. இந்த அம்சத்தை பாட்டாளி வர்க்கம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எனினும் உழைக்கும் மக்களை வர்க்கமாக திரட்டுகின்ற போது அதில் முரண்பாடு இல்லாமல் போய்விடும் என்பது ஒரு வறட்டு சூத்திரமாகும். ஏனென்றால் சாதி, இனம், மதம் ஆகிய அனைத்திலும் முரண்பாடுகள் நிறைந்துதான் காணப்படுகிறது. இந்த முரண்பாடுகள் உழைக்கும் வர்க்கத்தை ஒன்று கலக்க விடாமல் தடுக்கவும் செய்கிறது என்பதே இந்திய சமூகத்தில் உள்ள நிலைமையாகும்.  இந்த முரண்பாடுகளை வர்க்க ரீதியாக அவர்களுக்கு புரிய வைத்துவிட்டால், ஆளும் வர்க்கத்தை முறியடிக்கின்ற, புதிய ஜனநாயகப் புரட்சிக்கு முன்னணியில் நிற்கின்ற பாட்டாளி வர்க்கமாக அவர்களைக் கொண்டு வர முடியும். மீண்டும் ஒரு கண்ணகி – முருகேசன் படுகொலை நிகழாமல் தடுக்க இதுவே நேர்மையான வழியாகும்.

  • பா.மதிவதனி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here