காங்கிரசு ஆட்சிக் காலத்திலேயே மாநிலங்களின் அதிகாரங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்த சூழலில், 2014 ஆம் ஆண்டில் பாசிச பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலங்கள் பெற்றிருந்த அரைகுறை அதிகாரங்களையும் முற்றாக ஒழித்துக் கட்டி இந்திய தேசியம் என்ற ஒற்றை தன்மையின் கீழ், அதாவது ’ஒரே நாடு; ஒரே ஆட்சி; ஒரே பண்பாடு’ என்பதை நிறுவுவதற்கு துடிக்கிறது. இந்து-இந்தி-இந்தியா என்ற ஆரிய பார்ப்பன சாம்ராஜ்யத்தை நிறுவுவதுதான் தனது இலக்கு என்று பகிரங்கமாக அறிவித்து செயல்படுகிறது ஆர்எஸ்எஸ் பாரதிய ஜனதா கும்பல்.

மாநிலங்களின் உரிமை பறிபோகின்றது என்று கூப்பாடு போடும் மாநில கட்சிகள், இந்திய ஒன்றியம் என்பது விருப்பத்தின் அடிப்படையில் ஒன்றிணைக்கப்பட்டதா என்ற கேள்விக்கு நேர்மையாக பதில் கூறுவதில்லை.

பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட இந்தியா விருப்பத்தின் அடிப்படையில் ஒன்றிணைக்கப்படவில்லை. மாறாக மையப்படுத்தப்பட்ட அரசு அதிகாரத்தின் கீழ் துப்பாக்கி முனையில் ஒன்றிணைக்கப்பட்டது தான் என்பதே உண்மை.

இதன் காரணமாகவே மாநிலங்களிடம் உள்ள அதிகாரங்கள் அது கல்வி உரிமையாக இருந்தாலும் சரி; வரி வசூலிக்கும் உரிமையாக இருந்தாலும் சரி; மாநிலங்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்மானிப்பதாக இருந்தாலும் சரி, அவை அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கி, ஒழித்துக் கட்டிவிட்டு ஒரே அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவதை தான் ஆர்எஸ்எஸ் பாஜக விரும்புகிறது.

மாநில உரிமை பேசுகின்ற பிராந்திய கட்சிகள், அது திராவிட இயக்கமாக இருந்தாலும் சரி; திமுகவாக இருந்தாலும் சரி மாநிலங்களுக்கு உரிமை என்பதை, தேசிய இனம் என்ற அடிப்படையில் உரிமையை கொடுக்கின்ற பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமையை கோரி போராடுவதற்கு தயாரா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது.

இந்த இடத்திலிருந்து தான் தந்தை பெரியாரின் 146 வது பிறந்தநாள் விழாவை நாம் கொண்டாட முடியும் என்று கருதுகிறோம்.

”தமிழர் உரிமை காக்கும் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் கட்டமைத்து 75 ஆண்டுகளை நிறைவு செய்தார். போராட்ட மிகு இந்த பயணம் வரலாற்றுப் பெருவிழாவாகவும், கழகத்தின் பவள விழாவாகவும், கழக முப்பெரும் விழாவில் கொண்டாடப்படுகிறது.

அரசியல், பொருளாதாரம், சமுதாய வாழ்வில் இருந்த நிலைக்கு புது வெளிச்சம் பாய்ச்சி, எல்லோருக்கும் எல்லாம் என்ற சமூகநீதிக் கொள்கை தமிழ்நாடு எங்கும் நிலைபெற வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையோடு செயல்படத் தொடங்கிய கழகம் இன்று பெரும் சமூக மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது.

தந்தை பெரியாரின் கொள்கைகளை உயர்த்தி பிடித்து, பேரறிஞர் அண்ணாவின் வழியில், முத்தமிழறிஞர் கலைஞரின் கட்டளைகளைக் கண்போல் காத்து, கழகத் தலைவரின் திராவிட மாடல் திட்டங்களைக் கழகம் செயல்படுத்தியதால் இன்றைய நவீன தமிழ்நாட்டின் மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது” என்று திமுகவின் இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இது எந்த அளவு உண்மையானது.

பெரியாரை நினைவாக நினைவு மண்டபங்கள்; பட்டி தொட்டியெங்கும் சிலைகள்; அவர் பிறந்து வாழ்ந்த ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நினைவு சின்னங்கள்; தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு பெரியார் பெயரை சூட்டுவது; முக்கியமான நகரங்களில் பேருந்து நிலையங்கள், சாலைகளுக்கு, அரசு கட்டிடங்களுக்கு பெரியார் பெயரை சூட்டுவது போன்றவை அனைத்தும் நாம் வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தான் என்ற போதிலும், அவரது வாழ்நாள் முழுதும் முன் வைத்த கொள்கைகளையும், லட்சியங்களையும் எந்த அளவிற்கு திமுக உள்ளிட்ட திராவிட இயக்கங்கள் முன்னெடுத்துச் செல்கின்றன என்பதை பொறுத்துதான் திராவிட இயக்கங்களின் நடவடிக்கைகளை நாம் மதிப்பீடு செய்ய முடியும்.

”தமிழர் விடுதலை, தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம், சாதி, மத மூடநம்பிக்கைகளை ஒழிப்பது, சமதர்ம சமுதாயம் காண்பது இவைதான் அவரது லட்சியம் கொள்கை குறிக்கோள்கள் என்றால் பொதுவுடமை புரட்சியாளர்கள் மட்டுமே உண்மையில் அவருக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்: உறுதியாக பற்றி நின்று போராடுகிறார்கள். பொதுவுடமை புரட்சியே பிரிந்து போகும் அரசியல் உரிமைடன் கூடிய தமிழர் விடுதலையை சாதிக்கும்; வர்க்கப் போராட்டம் ஒன்றே தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்றி சமதர்ம சமுதாயம் காண ஒரே வழி; மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையே சாதி, மத மூடநம்பிக்கைகளை ஒழித்து அறிவியல் அடிப்படையிலான பகுத்தறிவை நிலைநாட்டும் வாழ்க்கை தத்துவம். இந்த வகையிலே தந்தை பெரியாரின் லட்சியங்கள் கொள்கைகள் குறிக்கோள்களில் சரியானவற்றை பொதுவுடைமை புரட்சியாளர்கள் மட்டுமே நிறைவேற்றிட முடியும்”.

என்று 1978 ஆம் ஆண்டு அவரது நூற்றாண்டு விழாவின் அவசியம் குறித்து எமது உட் கட்ட்சி இதழின் கட்டுரையில் தெளிவுபடுத்தி இருந்தோம்.

ஏறக்குறைய 46 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும்  உரிமை போன்றவை தந்தை பெரியாரின் ’நெஞ்சில் குத்திய முள்’ அதனை எடுப்பதற்கு திராவிட இயக்கங்கள் குறிப்பாக திமுக முயற்சி எடுத்துள்ளது என்பதெல்லாம் சரிதான். ஆனால் அவரது கொள்கைகளையும், லட்சியங்களையும் நடைமுறைப்படுத்தாமல் குறிப்பானவற்றை மட்டும் தமக்கு சாதகமாக உள்ளது என்பதற்காகவும், தமது ஓட்டு வங்கி அரசியலுக்கு பயன்படுகிறது என்பதாலும் அமல்படுத்துவதால் பெரியாரின் கொள்கைகளை முழுமையாக அமல்படுத்துவதாக ஏற்றுக் கொள்ள முடியாது. தந்தை பெரியாரின் லட்சியங்களான, ”தமிழர் விடுதலை, தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம், சாதி, மத மூடநம்பிக்கைகளை ஒழிப்பது, சமதர்ம சமுதாயம் காண்பது” போன்ற அடிப்படையான அம்சங்களில் தேவைப்படும் அளவு எந்த முன்னேற்றமும் இல்லை.

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை கைவிட்டு அண்ணாதுரை காலத்திலேயே, ’ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று சமரசமாக அணுக துவங்கியது தற்போது மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அறநிலையத் துறை அமைச்சரான சேகர்பாபு காவி கட்டுவது; 2024 இறுதிக்குள் 2000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்வது; முருகனுக்கு மாநாடு நடத்துவது என்று பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.

தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் பார்ப்பனியத்திற்கு எதிராகவும், மூடநம்பிக்கைக்கு எதிராகவும், சாதிப்பிரிவு, மதத்துவேசத்துக்கு எதிராகவும், சமஸ்கிருத ஆதிக்கம்-இந்தித் திணிப்பிற்கு எதிராகவும் போராடியுள்ளார். கடவுள் நம்பிக்கைதான் மனிதனை முட்டாள் ஆக்குகிறது என்றும், பார்ப்பனியம் தான் சாதி, மத வேறுபாட்டிற்கு அடித்தளம் என்றும் தொடர்ச்சியான போராட்டம் நடத்தி பார்ப்பனியத்தை முற்றாக ஒழிக்கும் வகையில் களையெடுக்க பாடுபட்டார். இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் மாணவர்களை பங்கு கொள்ளச் செய்ய அவர் மேற்கொண்ட பிரச்சாரம் அளப்பரியது. பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி, பெண்ணுரிமை போராளி, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த தமிழக் மண்ணில் இன்று பார்ப்பனிய கும்பலின் ஆதிக்கம் தலைவிரித்து ஆடுகிறது.

சாதி, மத அமைப்புகளுடன் நெருக்கமான உறவு, மக்கள் மத்தியில் புரையோடிப் போயுள்ள பிற்போக்கு அம்சங்கள், கார்ப்பரேட் முதலாளிகள் கொட்டிக் கொடுத் துள்ள பண பலம், இந்திய ஒன்றிய ஆட்சியில் 10 ஆண்டுகளாக தொடர்வதால் கிடைத்துள்ள அதிகார பலம், பார்ப்பன-மேல்சாதி அதிகார வர்க்கத்தின் கூட்டு போன்றவை காரணமாக தமிழகத்தில் பாசிச பாஜக படிப்படியாக வளர்ந்து வருகிறது.

அகண்ட பாரத கனவோடு மோடி ஆட்சியமைந்தபின் ஆர்.எஸ்.எஸ், இந்து மதவெறி கும்பலுக்கு புது தெம்பும், உற்சாகமும் கிடைத்துள்ளது. இந்நிலையில்  தொடர்ச்சியான சமஸ்கிருத வார கொண்டாட்டம், சமஸ்கிருதத்திற்கு பெரும் நிதி ஒதுக்குவது, இந்தி மொழியை மட்டுமே முழுமையான அலுவல் மொழியாக்கும் திட்டம், மத்திய பல்கலைகழகங்களில் இந்தி மொழியை விருப்ப மொழியாக்கும் திட்டம் என்ற பெயரில் தாய் மொழி தமிழை அழிக்கவும், தமிழ் மக்களை அழிக்கவும் அடுத்தடுத்து தன் பார்ப்பன பாசிசக் கொள்கைகளை கட்ட விழ்த்துவிட்டுக் கொண்டு இருக்கிறது பாசிச மோடி அரசு.

நாடு முழுவதும் கார்ப்பரேட் காவி பாசிசம் பயங்கரவாதமாக தலை விரித்தாடுகின்ற சூழலில், தமிழர் விடுதலை, தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம், சாதி, மத மூடநம்பிக்கைகளை ஒழிப்பது, சமதர்ம சமுதாயம் காண்பது என்ற தந்தை பெரியாரின் கொள்கைகளையும், லட்சியங்களையும் முன்வைத்து மாணவர்களையும், இளைஞர்களையும், விவசாயிகளையும், தொழிலாளிகளையும் அணி திரட்டுவதற்கு தயாராக வேண்டும் என்பதுதான் இந்த நினைவு தினத்தை கொண்டாடுவதன் குறிக்கோளாக இருக்க முடியும்.

  • தமிழ்ச்செல்வன்.

1 COMMENT

  1. கட்டுரையாளர் கட்டுரையின் முடிவில் பெரியாரின் பிறந்த நாளை நினைவு நாளாக மாற்றி உறுதி எடுக்கச் சொல்கிறார்! சிறு தவறுதான் எனினும் கருத்துக்களை எச்சரிக்கையாகப் பதிவிடல் வேண்டும்! மற்ற வகையில் ஒப்பீடுகள் சரியானவைதான் தோழர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here