வினாயக் தாமோதர் சவார்க்கர்.  சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஒரு அரை நூற்றாண்டு காலம் மறக்கப்பட்ட, இன்று அதை அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு உச்சரிப்பவர்களே பொது வெளியில் சொல்லத் தயங்கிய பெயர்  மீண்டும் பேசு பொருளாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு உடனடிக் காரணம், மஹாராஷ்டிர மாநிலத்தின் பிஜேபி வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் சவார்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதற்கான முயற்சி எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையிலேயே கூறியிருக்கிறது.

பிஜேபியின் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவும் சவார்க்கரைப் புகழ்ந்து,  1857இல் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நடந்த ராணுவ வீரர்களின் எழுச்சியை முதன் முதலாக இந்தியாவின் முதல் சுதந்திரப் போராக உலகுக்குக் காட்டியவர் சவார்க்கர்தான் என்று ஒரு பொய்யைச் சொல்லியிருக்கிறார்.  பிரதமர் மோடியும் தன் ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் சவார்க்கரை 1857 எழுச்சியின் ‘சாம்பியன்’ என்று பொருள்படப் பேசியிருக்கிறார். வரலாற்று அறிவில்லாதவர்கள் இவர்களின் உரைகளைக் கேட்டால் சவார்க்கரே முன் நின்று அந்த எழுச்சியை நடத்துவது போல் தோன்றும். அதுதான் மோடி— ஷா கூட்டணியின் நோக்கமும்.

இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து நடத்திய அந்த எழுச்சிப் போராட்டத்தை காரல் மார்க்ஸ் செப்டம்பர் 16, 1857  அன்றே இந்தியாவின் ‘முதல் சுதந்திரப் போர்’ என்று வர்ணித்து நியூயார்க் டெய்லி டிரிப்யூன் பத்திரிகையில் எழுதினார். தகவல் தொழில்நுட்பம் வளராத காலத்தில் அவருக்குக் கிடைத்த தகவல்களை வைத்து எழுதிய மார்க்ஸ் புரட்சியாளர்களை எதிர்மறையாக விமரிசித்த அதே நேரத்தில், அவர்களின் ‘கொடூரமான’ செயல்பாடுகள் பிரிட்டிஷ் அரசின் கொள்கைகளுக்கான எதிர் வினையென்றே சொன்னார். பிரிட்டிஷ் ராணுவம் உலகில் பிற பகுதிகளில் செய்து கொண்டிருந்த கொடுமைகளையும் அதில் பட்டியலிட்டு பகிரங்கப்படுத்தினார்.

1857க்கு முன்பே தென்னிந்தியாவில் ஆங்காங்கு நடந்த கிளர்ச்சிகள் வரலாற்றில் பதிவு செய்யப்படாமலே போயிருந்தன என்பது மார்க்ஸுக்குத் தெரியாமல் போயிருக்க வாய்ப்புண்டு. சவார்க்கருக்கும், இன்று அவரை தேசிய ஹீரோக்களின் வரிசையில் வைக்கத் துடிக்கும் அமித் ஷா போன்றோருக்கும் தெரிந்தாலும் ஏன் பேச மாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும். (தனிக் கட்டுரையைப் பார்க்கவும்).

ஆனால் இவற்றிற்கெல்லாம் மேலான பிரச்சினை அல்லது தர்மசங்கடம், அமித் ஷாவுக்கும் சங்க பரிவாரத்திற்கும் இருக்கிறது.

வரலாற்றை ‘நம்’ பார்வையில் எழுத வேண்டும் என்று சொல்கிற அமித் ஷா சவார்க்கரின் பார்வையில் எழுதப்பட்ட 1857இன் வரலாறு குறித்த புத்தகத்தை இன்று தடை செய்ய  வேண்டும் என்றுதான் கூறுவார். அந்த அளவுக்கு இந்து—முஸ்லிம் ஒற்றுமையை வலுவாகவும் உணர்ச்சி பூர்வமாகவும்  எழுதியிருக்கிறார் சவார்க்கர். ஆனால் அவரின் கண்ணோட்டத்தில் மதவாதம் அப்போதே பொதிந்திருந்தது என்று வரலாற்றியலாளர்கள்  கூறுகிறார்கள்.

’1857இல் நடந்த முதல் சுதந்திரப் போர்’ என்கிற புத்தகத்தை சவார்க்கர் மராத்தி மொழியில் எழுதியது 1908இல். பின்னர் அது ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது.அப்போது அபினவ் பாரத் என்கிற அமைப்பினைத் தன் சகோதரருடன் நடத்தி வந்தார்.

இனி சவார்க்கரின் புத்தகத்திலிருந்து சில பகுதிகள்:

1857இல் நடந்த போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களைக் குறித்து இப்படி எழுதுகிறார்.

“மவுல்விகளின் போதனையைப் பெற்று, கற்றறிந்த பிராமணர்களின் ஆசி பெற்று, டெல்லியின் மசூதிகளிலிருந்தும், பனாரஸின் கோவில்களிலிருந்தும் சொர்க்கம் வரை சென்ற பிரார்த்தனைகளின் பலனிகளான இவர்கள்  யார்? சுயதர்மமும் சுயராஜ்யமும்தான் அவர்களின் பெரும் கொள்கைகள். உயிரினும் மேலான மதத்தின்மீது சூழ்ச்சிமிகு, அபாயகரமான, அழிவுமிக்க தாக்குதல் நடத்தப்படுவதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிந்த பிறகு, சுயராஜ்யத்தை அடைவது என்கிற புனிதமான விருப்பத்துடன் அடிமைச் சங்கிலிமீது ஆவேச அடிகள் விழுந்தபோது ’தீன், தீன்’ என்ற கோஷம் இடியாக எழுந்தது. சுயதர்மம், சுயராஜ்யம் ஆகிய கொள்கைகள் இந்துஸ்தானத்தின் புதல்வர்களின் எலும்பிலும் மஜ்ஜையிலும் பதிக்கப்படும்.”

புத்தகத்தில் கடைசி முகலாய மன்னரான பகதூர் ஷா சஃபரை தாராளமாகப் புகழ்கிறார் சவார்க்கர்.  அதைவிட அதிகமாக இன்று உத்தரப் பிரதேசத்திலிருக்கும் அவத் பிரதேசத்தை 1857இல் கைப்பற்றிய  மவுல்வி அஹமத் ஷாவையும் இவ்வாறு புகழ்கிறார்: “தேசபக்த மவுல்வியான அஹமத் ஷாவின் புனிதப் பெயர் இந்துஸ்தானத்தைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தைச் சூட்டியிருக்கிறது, அவருடைய மரணச் செய்தி லண்டனை அடைந்தபோது, பிரிட்டிஷ் ஆட்சிக்கு வட இந்தியாவில் இருந்த பெரும் வல்லமை நிறைந்த ஒரு எதிரி இனி இல்லை என்று ஆங்கிலேயர்கள் நிம்மதியடைந்தனர்.

அதேபோல் ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோரின் பெருமைகளையும் சொல்லாமல் அவர் கடந்து செல்லவில்லை. ”இந்தியாவின் சுதந்திரத்திற்கு ஏற்பட்ட அபாயத்தை முதன்முதலில் உணர்ந்தவர்கள் பூனாவைச் சேர்ந்த நானா ஃபத்னாவிஸும், மைசூரின் ஹைதர் சாஹிபும்தான். நம் கண்முன் விரிந்த நாடகத்தில் தஞ்சாவூர், மைசூர், ராஜ்கார், டெல்லி போன்ற சமஸ்தானத்தை ஆண்டவர்கள் முக்கியமான பாத்திரங்களாயிருந்தனர்” என்கிறார் சவார்க்கர்.

மராத்தா பேரரசின் பேஷ்வா பாஜி ராவின் மகன் நானா சாஹிப் தன் நம்பிக்கைக்குரிய தூதுவராக அறிவுக் கூர்மை வாய்ந்த அசிமுல்லா கானைத்தான் வைத்திருந்தார் என்றும் சவார்க்கர் குறிப்பிடுகிறார். அன்று சவார்க்கரின் உலகப் பார்வையைப் பின்வரும் பத்தியிலிருந்து அறிந்து கொள்ளலாம்:

“முதலில் இந்தியாவின் விடுதலைக்காக ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்தி, உள்நாட்டுச் சண்டைகளை நிறுத்தி, மாநிலங்களை உள்ளடக்கிய ஐக்கிய இந்தியாவை உருவாக்கி, உலகில் இருக்கும் சுதந்திர நாடுகளின் கூட்டமைப்பில்  அதற்குரிய இடத்தை அடைவதுதான் நானா சாகிப்பின் முதல் திட்டமாக இருந்தது. இஸ்லாம் மற்றும் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களின் ஐக்கிய தேசமாக இருக்க வேண்டுமென்றும் அவர் விரும்பினார். முகமதியர்கள் இந்தியாவில் ஆட்சி செய்யும் அன்னியர்களாக இருக்கும் வரை அவர்களை சகோதரர்களாகக் கருதுவது ஒரு தேசிய பலவீனத்தை ஒப்புக் கொள்வது போல்தான் இருந்தது. அதனால் அந்த எண்ணம் நீடிக்கும் வரை இந்துக்கள் முகமதியர்களை அன்னியர்களாகப் பார்ப்பது அவசியமாக இருந்தது. டெல்லியின் சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு ஆண்ட முகமதியர்களின் ஆட்சியை பஞ்சாபின் குரு கோவிந்த், ராஜபுதனத்தின் ராணா பிரதாப், புண்டேல்கண்டின் சத்ராசல், மராத்தியர் போன்றோர் அழித்து விட்டனர்; பல நூற்றாண்டுகளுக்கும்  மேல் நடந்த போர்களின் மூலம் முகமதியர்களை வென்ற இந்து இறையாண்மை தன்னை இந்தியா முழுவதிலும் ஸ்திரப்படுத்திக் கொண்டது. அந்தச் சூழலில் முகமதியர்களுடன் கைகோர்த்து செல்வது தேசிய அவமானம் அல்ல. மாறாக, அது ஒரு பெருந்தன்மையான செயல்.”

முகமதியர்களை இந்து மன்னர்கள் அடக்கி வெற்றி கண்டபின் அவர்களை சகோதரர்களாகக் கருதலாம் என்கிற இந்த இந்து மேலாதிக்கப் பார்வையின் தொடர்ச்சியை அவருடைய இந்துத்துவம் என்கிற நூலில் காணலாம். இந்துக் கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டால் இந்து இனம் விரும்பும்வரை கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் இங்கு இருக்கலாம் என்பதுதான் அவருடைய இந்த்துவக் கொள்கையின் சாரம். முஸ்லிம்கள் அடக்கப்பட்டு விட்டதால் “இந்துக்களுக்கும் முகமதியர்களுக்கும் இடையே இருந்த விரோதத்தினைக் கடந்த காலத்திற்குள் வீசி விடலாம். அவர்களுக்கிடையே இப்போது நிலவுவது ஆள்வோருக்கும் ஆளப்படுவோர்க்கும், அன்னியர்க்கும் பூர்வகுடியினருக்குமான உறவு அல்ல. அது சகோதரர்களுக்கிடையேயான உறவு. அவர்களுக்கு இடையில் நிலவும் ஒரே வேறுபாடு மதம் மட்டும்தான். இரு தரப்பினரும் இந்துஸ்தான மண்ணின் மைந்தர்கள். பெயர்கள் வேறுபட்டாலும் அவர்கள் ஒரு தாய் மக்கள். இந்தியா என்கிற ஒரே தாயின் பிள்ளைகளாக இருப்பதால் அவர்கள் ரத்த உறவு கொண்ட சகோதரர்கள்.”

1857 எழுச்சியின் உச்சகட்டத்தில் பஹதூர் ஷா சஃபரை புரட்சிக்காரர்கள் மன்னராக ஏற்றுக் கொண்டதைக் குறித்து சவார்க்கர் இப்படி எழுதுகிறார்:

“எனவே, பஹதூர் ஷா சஃபரை இந்தியாவின் அரியாசனத்தில் ஏற்றியது மீண்டும் முகமதிய ஆட்சியை ஏற்படுத்தியதாகாது என்பதுதான் உண்மை. மாறாக, இந்துக்களுக்கும் முகமதியருக்கும் இடையே நடந்த நீண்ட காலப் போர் முடிவுக்கு வந்துவிட்டது, கொடுங்கோலாட்சி முடிந்தது என்கிற பிரகடனம்தான் அது. ஆகவே, இந்துக்களும் முகமதியர்களும் மே 11, 1857 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது முதன்முதலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அவர்களது மண்ணின் பேரரசருக்கு உளப்பூர்வமான, மிகவும் விசுவாசமான வாழ்த்துகளை அனுப்பட்டும்!”

முஸ்லிம் ஆளுமைகள மட்டுமின்றி, பாமர முஸ்லிம்களையும், முல்லாக்களையும் கூட சவார்க்கர் வெகுவாகப் புகழ்கிறார். “டெல்லியில் நிறைந்து வாழும் முஸ்லிம் மக்களிடையே முல்லாக்கள் தீவிரமாகப் பணியாற்றினர். நாடு, மதம் ஆகியவற்றைக் காக்கும் லட்சியத்திற்கான போர்க்களத்தில் ரத்தம் சிந்துவதற்காக  உத்தரவு வரும்வரை ஆயிரக்கணக்கான முஸல்மான்கள் உறுதியுடன் காத்திருந்தனர்.

சவார்க்கர் கடந்த காலத்தைக் குறித்துதான் எழுதினார். ஆனால் அவருடைய எச்சரிக்கைகள் தெளிவாக எதிர்காலம் குறித்தும் இருந்தன.

“இப்போதும் ஆங்கிலேயர்கள் தங்களுடைய பழைய ஏமாற்று வேலையை மீண்டும் காண்பிக்க முயற்சி செய்வார்கள். இந்துக்களை முஸல்மான்களுக்கு  எதிராகவும், முகமதியர்களை இந்துக்களுக்கு எதிராகவும் போராடத் தூண்ட முயற்சி செய்வார்கள். ஆனால், அவர்களின் வலைக்குள் விழுந்து விடாதீர்கள் இந்து சகோதரர்களே! ஆங்கிலேயர்கள் தாம் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற மாட்டார்களென்று புத்திசாலியான இந்து சகோதரர்களுக்கு சொல்லத் தேவையில்லை.”

முஸல்மான்களே, நீங்கள் குரானை வணங்குபவர்களென்றால், இந்துக்களே நீங்கள் கோமாதாவை வணங்குபவர்களென்றால், உங்களுக்கிடையே இருக்கும் சிறு பிரச்சினைகளை மறந்துவிட்டு இந்தப் புனிதப் போருக்காக ஒன்றுபடுங்கள்! போர்க்களத்தில் ஒரே கொடியின்கீழ் திரண்டு, போராடி ரத்த ஆறுகளின் மூலம் ஆங்கிலேயரின் பெயரை இந்தியாவிலிருந்து கழுவி விடுங்கள்! இந்துக்கள் முகமதியர்களுடன் கைகோர்த்து இந்தப் போரில் இறங்கினால், முகமதியர்களும் நாட்டின் சுதந்திரத்திற்காகக் களத்தில் இறங்கினால், அவர்களின் தேசபக்திக்குப் பரிசாக பசுக்களைக் கொல்வது நிறுத்தப்படும்.”

அமித் ஷாவும் மோடியும் இந்த வரலாற்றைக் கூடச் சரியாகப் படிக்கவில்லை என்பதுதான் உண்மை. இன்று 1857 குறித்து எழுதியதை அவர்கள் மேற்கோள் காட்டக்கூட முடியாது. ஏனெனில் இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு என்பது அவர்கள் மூடி மறைக்க விரும்பும் வரலாறு.

முஸ்லிம்களைச் சகோதரர்கள் என்றும், பிரிட்டிஷ் ஆட்சியை எதிரிகளென்றும் பார்த்த சவார்க்கர் பின்னர் வரலாற்றையும் அரசியல் பார்வையையும் நேர்மாறாகத் திருப்பிப் போட்ட புரட்டு வேலை அந்தமான் சிறையில் துவங்கியது.  ஒரு மனிதனின் வாழ்க்கையில் அரசியல் பார்வைகள் மாறுவதில் ஆச்சரியமில்லை. ஆனால், அது எந்தத் திசையில் எந்த நோக்கத்திற்காக மாறுகிறது என்பதைப் பொறுத்துதான் அதனை ஏற்றுக் கொள்வதா நிராகரிப்பதா என்று முடிவு செய்ய முடியும்; அந்த மனிதனைக் குறித்த மதிப்பீடும் இருக்கும்.

தன் வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில்  ‘இந்தியாவின் ஆறு புகழ்மிகு சகாப்தங்கள்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினார். அதில்  முதல் சுதந்திரப் போர் குறித்து அவர் எழுதிய புத்தகத்தில்  இந்து தேசத்தின் பார்வையை முன்வைத்ததாகக் கூறுகிறார். முஸ்லிம்களின் பங்களிப்பு குறித்து எழுதியதை முழுவதும் மறைத்து விட்டார். அசோகர் வேதாந்த வழி வந்த இந்துக்களிடம் மிகவும் சகிப்புத் தன்மையின்றி நடந்து கொண்டார், திப்பு சுல்தான் என்கிற காட்டுமிராண்டித்தனமான சுல்தானை மராத்தியர்களும், ஆங்கிலேயர்களும் தோற்கடித்தனர்,  அக்பர் அன்னியர், இரக்கமற்றவர், சகிப்புத் தன்மையற்றவர் என்றெல்லாம் வசை பாடுகிறார்.

அவருடைய அறிவு நாணயத்திற்கு வேறு ஒரு சான்று தேவையில்லை.

சவார்க்கர் அந்தமான் சிறையிலிருந்தபோதே அவருடைய மதவாதப் பார்வை தெளிவாக வெளிப்படத் தொடங்கியது.

அந்தமான் உண்மைகள்

அந்தமானின் தனிமைச் சிறையில் அவர் செக்கிழுப்பது போன்ற  கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டார் என்பது யாரும் குறைத்து மதிப்பிட முடியாத உண்மை என்ற போதிலும் அதே போன்ற கொடுமைகளை அனுபவித்த சக சிறைவாசிகள் பிரிட்டிஷ் அரசிடம் விடுதலைக்காக மண்டியிடவில்லை என்பதும் உண்மைதான். சுபோரஞ்சன் தாஸ்குப்தா என்பவர் அது குறித்து இப்படி எழுதுகிறார்:

“வினாயக் தாமோதர் சவார்க்கர் ஒரு சுதந்திரப் போராட்டக்காரர்தான். ஆனால் சிட்டகாங் எழுச்சியில் ஈடுபட்ட புரட்சிக்காரர்களைப் போல பிரிட்டிஷாருடன் போராடி உயிர் துறக்கவில்லை; பகத்சிங், குதிராம் போஸ் ஆகியோரைப் போல பிரிட்டிஷாரை எதிர்த்து நிற்பதால் உயிரே போனாலும் சரி என்று தியாகம் செய்யவும் இல்லை. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் அவர் வீரமாகப் போராடினாலும், ஒன்றுக்கும் மேற்பட்ட தருணங்களில் ஆட்சியாளர்களிடம் மன்னிப்புக் கோரும் அளவிற்கு அவரது உணர்வு தகர்ந்து போயிருந்தது.. அந்தமான் சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட பிற புரட்சிக்காரர்கள் மன்னிப்புக் கேட்பது குறித்து கனவுகூடக் காணவில்லை.”

அந்தச் சிறையில்தான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் சவார்க்கரும் பின்னர் சங்கப் பரிவாரமும் ஒத்துழைத்த கதையின் கரு உருவானது. மதம் கடந்த தேசியம் என்று அவர் பேசிய சிறிது காலத்திற்குள்ளேயே அவருக்குள் இருந்த மதவாத விஷம் வெளிப்பட்டதும் அங்குதான், இதற்கு அவர் எழுதிய The Story of My Transportation for Life  என்கிற புத்தகமே சாட்சி. 1927இல் வெளிவந்த அந்தப் புத்தகம் தடை செய்யப்பட்டது. 1947இல் தடை நீங்கியது. சிறைக்குள்ளேயே மதரீதியான பிரிவினை வேலைகளைச் செய்தார் என்பது இந்த புத்தகத்தில் தெளிவாகிறது. சவார்க்கரின் நிலைப்பாட்டில் நிகழ்ந்த மாற்றத்திற்கு சிறையிலிருந்த முஸ்லிம் வார்டர்கள்தான் காரணம் என்று பொருள்படும்படி எழுதுகிறார் சவார்க்கர். எல்லா அரசியல் கைதிகளுக்கும் முஸ்லிம் வார்டர்கள்தான் இருந்தனர், இதனால் சக சிறைவாசிகளும், குறிப்பாக இந்துக்களும், துன்புறுத்தலுக்கு ஆளாயினர் என்கிறார்.

சிறைக்குள்ளும் மதம் மாறியவர்களைச் சுத்திகரிக்கும் ஷுத்தி இயக்கத்தை நடத்தியதாகவும், இது சிறைக்கு வெளியில் அந்தமான் தீவிலும் பரவியது என்கிறார். அவர் சொல்வது இதுதான்: “பாவிகளாகவும், கிரிமினல்களாகவும், சமூக விஷமிகளாகவும் இந்து சமூகத்தில் இருப்பவர்களை அந்தச் சமூகத்திற்குள்ளேயே வைக்க முயற்சிப்பது நேர விரயம், குழந்தைத் தனமானது என்று சொன்னால், ஆயிரம் ஆண்டுகளாக இந்து சமூகத்திற்குள் இருக்கும் சபிக்கப்பட்ட இந்தக் கீழ்மக்களை வென்றெடுக்க முஸ்லிம்கள் செய்யும் பிரச்சாரத்தை எப்படி விளக்குவது? முஸல்மான்கள் அதற்காகப் போர்களை நடத்தினர்; ஆண்களையும் பெண்களையும் வாளினால் கொன்றனர்; வீடுகளுக்குத் தீ வைத்துக்கொள்ளை அடித்தனர். சுருக்கமாகச் சொன்னால், பேரளவிலான மதமாற்றத்திற்காக அவர்கள் ஜிஹாத் என்கிற புனிதப் போரைப் பிரகடனம் செய்திருக்கின்றனர்.”

கிறிஸ்துவர்கள், முஸ்லிம்களின் மீது என் இதயத்தில் வெறுப்பில்லை; இவர்களிடையே இருந்து  மற்றவர்களை ஒடுக்கி, வன்முறைக்குள்ளாக்கும் பிரிவினரை நான் முழுமனதுடன் எதிர்க்கிறேன் என்று சொன்ன சவார்க்கர் ஷுத்தி இயக்கத்தின் மூலம் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நிரந்தரமான ஒற்றுமையை உருவாக்குவேன் என்றும் ஒரு விசித்திரமான தர்க்கத்தை முன்வைக்கிறார். ‘சுத்திகரிக்கப்பட்டு’ மீண்டும் ‘தாய் மதத்திற்கு’ வருபவர்களை எந்த ஜாதியில் சேர்த்துக் கொள்வார் என்று அவர் சொல்லவும் இல்லை, சொல்லவும் மாட்டார்.

அவ்வப்போது அன்பொழுகப் பேசும் சவார்க்கர் இதே புத்தகத்தில் மீண்டும் ஒரு குட்டிக் கரணம் அடிக்கிறார். 1914இல் முதல் உலகப் போர் துவங்கி விட்டிருந்தது. மத்திய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஜெர்மனி, ஆஸ்த்ரியா-, ஹங்கேரி, பல்கேரியா, ஆட்டோமான் ஆட்சியிலிருந்த துருக்கி ஒருபுறமும், பிரிட்டன், ஃபிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி, ருமேனியா, ஜப்பான், அமெரிக்கா எதிரிலும் நின்றிருந்தன.

துருக்கி பிரிட்டனுக்கு எதிரணியில் இருந்ததால் சவார்க்கருக்கு பயம் வந்து விட்டது. “துருக்கி ஜெர்மனியின் பக்கமும் பிரிட்டனுக்கு எதிராகவும் இருப்பதால், உலகம் முழுவதும் பரந்த இஸ்லாமியம் வந்து விடுமோ என்று எனக்கு சந்தேகங்கள் எழுந்து விட்டன. அதனால் இந்தியாவுக்கு அபாயம் நேரும். இந்தச் சூழலில் ஜெர்மனியின் நீண்ட கை இந்தியாவை நோக்கி நீண்டு, இந்தியாவிற்கு ஒரு சிக்கலான சூழலை உருவாக்கும் என்று நான் கண்டுபிடித்து விட்டேன். இது என் திட்டங்களுக்கு உகந்த சூழல்தான். ஏனெனில், பிரிட்டன்  இந்தியா கேட்கும் எல்லா உரிமைகளையும் வழங்கி விடும். போரினால் பிரிட்டனும், ஜெர்மனியும் களைத்துப் போயிருக்கும் தருணத்தில் இந்தியாவே அந்த உரிமைகளப் பறித்துக் கொள்ளலாம். ஆனால் இரண்டு வலுவான நாடுகளுக்கிடையே கடுமையான சண்டை நடக்கும் இந்தச் சூழலை இந்தியாவிலிருக்கும் முஸ்லிம்கள் ஒரு சாத்தானின் வாய்ப்பாகக் கருதி  வடக்கிலிருக்கும் முஸ்லிம் கும்பல்களை ரஷ்யாவின் உதவியுடன் அழைத்து வந்து சூறையாடி விடுவார்களோ என்கிற அச்சமும் எனக்கு இருக்கிறது,” என்கிற சவார்க்கர் பிரிட்டிஷ் அரசிடம் சரணாகதி அடைவதற்குத் தயாராகிறார். இதை எழுதுவதற்குச் சில ஆண்டுகள் முன்னர் முஸ்லிம்களை நண்பர்களாகவும், பிரிட்டிஷ் அரசை எதிரிகளாகவும் சித்தரித்த சவார்க்கர் சிறைவாசத்தின்போது  அப்படியே நேர் மாறாக இடம் மாற்றிப் போட்டு விடுகிறார்.

விடுதலை செய்தால் ஏராளமானவர்களை இந்திய ராணுவத்தில் சேர்த்து ஆஃப்கானிஸ்தானத்திலிருந்தும், துருக்கியிலிருந்தும்  நடக்கும் படையெடுப்புகளைத் தடுக்க தன்னாலான முயற்சிகள் அனைத்தையும் செய்வதாக பிரிட்டி அரசுக்கு உறுதி மொழி கொடுக்கிறார். பிரிட்டிஷ் அரசு இந்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்றும் அறிவுறுத்துகிறார். தன் விடுதலைக்காக இப்படி எழுதிய சவார்க்கர் சக சிறைவாசிகளைக் குறித்து சொல்வதையும் பார்த்தால் ஆழமாக வேரூன்றியிருக்கும் அவருடைய போலித் தனம் வெளிப்படும். போர் செய்தியை அவர்கள் ஆர்வமாக எதிர்பார்த்திருப்பதற்கு ஆழமான காரணம் ஒன்றுமில்லை, விடுதலை கிடைக்கும் என்கிற சுயநலம்தான் காரணம் என்று சொல்கிறார். இவருடைய விடுதலை தேச நலனுக்காக; பிறருடைய விடுதலை சுயநலத்துக்காக. பாரத ரத்னாவுக்காகக் காத்திருக்கும் சவார்க்கரின் ஆவிக்கு வாழ்க்கை முழுவதும் இரட்டை வேடம்தான்!

பிரிட்டனிடம் அவர் அளித்த உறுதிமொழிக்கு விடுதலை கிடைக்கவில்லையெனினும் உடனடி பலனாகப் பதவி உயர்வு கிடைத்தது. அவர் சிறையில் எண்ணெய் டிப்போவின்  ஃபோர்மேனாக ஆக்கப்பட்டார். அவருடைய உடனடி இலக்கு முஸ்லிம் சிறைவாசிகள்தாம். “நான் ஃபோர்மேனாக ஆன பிறகு முஸ்லிம்களிடமிருந்து நான் என்ன எதிர்பார்த்தேன் என்று அவர்களுக்குத் தெரியும். இந்து முறைப்படி ‘ராமா ராமா’, ‘நமஸ்கார்’, ‘வந்தே மாதரம்’ முகமன் கூறுவதில்  எனக்குப் பெருமிதம் இருப்பது அவர்களுக்குத் தெரியும்.  நான் எண்ணைய் டிப்போவின் தலைவராக்கப்பட்டேன் என்பதைக் கண்டு பயந்து நடுங்கிய அவர்கள் என்ன விலை கொடுத்தாவது என்னை தாஜா செய்வதற்குத் தயாராக இருந்தனர்.” இவர் வீர சவார்க்கர்தான்.

ஃபோர்மேன் ஆனவுடன் வார்டர்களை நீக்கி விட்டு இந்துக்களை அந்தப் பதவியில் நியமித்தார்.

அந்தமான் சிறை தொடர்பான ஆவணங்களில் தேசியத்திலிருந்து மதவாதத்திற்கு சிறைவாசிகள் (சவார்க்கர் தவிர) மாறியதாகவோ, இந்து சிறைவாசிகளை முஸ்லிம் வார்டர்கள் மோசமாக நடத்தியதாகவோ எந்தக் குறிப்பும் இல்லை என்று அறிஞர் ஏ.ஜி. நூரானி எழுதுகிறார்.

அந்தமானில் ஷுத்தி மற்றும் கல்வி தொடர்பான இயக்கங்களை மேற்கொள்ளத் தன் புதிய பதவி உதவியதாக சவார்க்கர் எழுதுகிறார். இந்தியைத் தேசிய மொழியாகப் பிரச்சாரம் செய்யவும் இதனால் வாய்ப்பு ஏற்பட்டதென்றும் கூறுகிறார்: “நாம் ஜெர்மானிய மொழியைக் கற்பது போலவே இந்தியையும் கற்க வேண்டும். ஆனால் ஒரு தாய்மொழியாகவோ அல்லது தேசிய மொழியாகவோ அந்தமானின் இந்து கலாச்சாரத்தில் இடமிருக்கவில்லை. அந்தமானுக்கு உருது தவிர வேறு மொழி தெரியவில்லை. இந்துப் பெண்கள் பேசிக்கொண்டிருக்கும்போதுகூட திருமணம் என்பதைக் குறிக்க ஷாதி என்கிற சொல்லைத்தான் இயல்பாகப் பயன்படுத்துகின்றனர். அதற்கு இணையான சமஸ்கிருதச் சொல்லையோ, இந்தி சொல்லையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் இன்று அற்புதமான ஒரு மாற்றம் அங்கு நிகழ்ந்திருக்கிறது. இந்துஸ்தான் மற்றும் இந்து கலாச்சாரத்தின் பாதுகாப்பையும் மேலாண்மையையும் பாதுகாத்து அந்தமானின் முக்கியத்துவத்தையும், எதிர்காலத்தையும் மேம்படுத்த வேண்டுமெனில் இந்தியும், நாகரியும் அங்கு கட்டாயமாக்கப்பட வேண்டும்” என்கிறார் அவர். இன்று வரை இவர்கள் மாறவில்லை.

பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் ரகசியமாக சமரசம் பேசிய சவார்க்கர் தன்னுடன் இருந்த பிற அரசியல் கைதிகளையும் இழிவுபடுத்துகிறார். அதிகாரிகளின் அழைப்புக்கும் கட்டளைக்கும் காத்திருந்த அவர்கள் அவர்களுக்கு அடிமை போலிருந்தனர் என்கிறார் இந்த வீர். இதைச் சொல்பவர் சவார்க்கரின் மீது பரிவு கொண்ட வரலாற்றியலாளர் ஆர்.சி. மஜூம்தார். “சவார்க்கர் இப்படிச் சொல்வது மிகவும் சீரியஸான குற்றச்சாட்டு. பிற அரசியல் கைதிகள் அப்படி நடந்து கொண்டனர் என்று சவார்க்கர் சொல்வதை உறுதி செய்ய நமக்கு வழியில்லை. சவார்க்கர் தன் கருத்தை நிரூபிக்க ஆதாரமும் கொடுக்கவில்லை” என்று மஜும்தாரே வருத்தப்படுகிறார்.  அதே மஜூம்தார் அந்தமான் சிறையில் நடந்த ஒரு வேலை நிறுத்தத்தின்போது சவார்க்கர் செய்த துரோகத்தையும் பதிவு செய்கிறார். 1916 முதல் 1920வரை அந்தமான் சிறையிலிருந்த ட்ரைலோக்ய நாத் சக்ரவர்த்தி தன்னுடைய சுயசரிதையில், “சவார்க்கரும் அவருடைய சகோதரரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு எங்களை ரகசியமாக ஊக்குவித்து விட்டுப் பின்னர் அவர்களே அதில் கலந்துகொள்ளவில்லை” என்று எழுதியிருப்பதை மஜூம்தார் சுட்டிக் காட்டுகிறார்.  இது குறித்து சவார்க்கர் அளித்த விளக்கம் இன்னமும் சிறப்பானது. “நாங்கள் பகிரங்கமாக வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளித்திருந்தால் அதை வாய்ப்பாகப் பயன்படுத்தி அதிகாரிகள் சிறை விதிகளின்படி எங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த சலுகைகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டு என்னை மீண்டும் தனிமைச் சிறையில் அடைத்திருப்பார்கள். எனவே எங்களிடையே இருந்த இளைஞர்களும் வலுவானவர்களும் அந்தச் சுமையை ஏற்றுக் கொள்வதுதான் நல்லது. மேலும் இந்தியாவிற்குக் கடிதம் அனுப்பும் என் உரிமையும் பறி போயிருக்கும்” என்றார் வீர்.

கருணை மனு, சரணாகதி, ஒத்துழைப்பு

ஆனால் இதையெல்லாம் விஞ்சும் வகையில் இருந்தது அவர் சிறையிலிருந்து எழுதிய மன்னிப்பு மனுக்களும் அதன் வாயிலாக பிரிட்டிஷ ஆட்சியாளர்களுடன் சமரசமும், அவர்களுடன் ஒத்துழைப்பதாக அவர் அளித்த உறுதிமொழிகளும்.

சிறைக்கு வந்து ஒரு ஆண்டு முடியும் முன்னரே பிரிட்டிஷ் அரசுக்கு ஒரு கருணை மனுவை அனுப்பினார் சவார்க்கர். ஆனால் அதில் என்ன எழுதியிருந்தார் என்கிற விவரஙகள் கிடைக்கவில்லை. இப்படி ஒரு மனுவை அவர் எழுதிய விவரமே நவம்பர் 14, 1913 அன்று எழுதிய மனுவிலிருந்துதான் தெரிய வந்தது. இரண்டாவது மனு இப்படிச் செல்கிறது:

“இறுதியாக, நான் 1911இல் அனுப்பிய மன்னிப்பு மனுவை நல்ல மனது வைத்துப் படித்துப் பார்க்க வேண்டுமென்று மேன்மை தாங்கிய உங்களுக்கு நினைவுபடுத்தி அந்த மனுவை இந்திய அரசுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளலாமா? இந்திய அரசியலின் இன்றைய நிகழ்ச்சிப் போக்கில் அரசியலமைப்புச் சட்டரீதியான நிலைப்பாட்டை அரசாங்கம் முன்வைத்திருக்கிறது. 1906–07இல் நிலவிய பதட்டமான, நம்பிக்கையற்ற இந்தியச் சூழலினால் ஏமாந்துபோய் நாங்கள் அமைதியான முன்னேற்றப் பாதையிலிருந்து விலகி  முட்கள் மண்டிய பாதைகளில் சென்றது போல் இன்று, இந்தியா மற்றும் மனிதகுலத்தின் நன்மையை மனதில் கொண்ட யாரும் கண்ணை மூடிக் கொண்டு செல்ல மாட்டார்கள்.  எனவே, அரசாங்கம் அளவில்லாத அறத்தையும் கருணையையும் காட்டி என்னை விடுதலை செய்தால்  நான் அரசியலமைப்பு சட்டரீதியான முன்னேற்றத்துக்காகவும், அந்த முன்னேற்றத்துக்கு முன்நிபந்தனையான ஆங்கிலேய அரசின்பால் காட்ட வேண்டிய விசுவாத்துக்காகவும் தீவிரமாக வாதிடுபவனாக இருப்பேன். நான் என் சக்திக்கு உட்பட்ட வகையில் எந்த விதத்தில் வேண்டுமானாலும் அரசுக்குச் சேவகம் செய்யத் தயாராயிருக்கிறேன். பெற்றோரின் வீட்டுக்குத் திரும்புவதைத் தவிர ஊதாரி மகனுக்கு என்ன வழி?”

மார்ச் 30, அன்று மீண்டும் ஒரு கருணை மனுவை அளித்தார் சவார்க்கர். அதில்,

“காலம் கடப்பதற்கு முன் என்னுடைய கோரிக்கையை சமர்ப்பிப்பதற்கு ஒரு இறுதி வாய்ப்பைத் தருமாறு” கெஞ்சினார். அரவிந்த கோஷின் சகோதரர் உட்பட தன் சக சிறைவாசிகளைக் காட்டிக் கொடுக்கும் வகையிலும் அதில் ஒரு வாசகம் இருந்தது. “போர்ட்பிளேரில் இருக்கும்போதே அவர்கள் தீவிரமான சதி செய்ததாக ஒரு சந்தேகம் இருந்தது. அந்த வகையான தீவிரவாத சிந்தனையிலிருந்து நான் வெகுதூரம் தள்ளியிருக்கிறேன். கடந்த காலத்தில் என்னிடமிருந்த புரட்சிகர மன நிலையைப் பொறுத்த வரையில் நான் கூறுவது இதுதான். இப்போது மன்னிப்புக்காக மட்டுமின்றி, பல ஆண்டுகளுக்கு முன்பே நான்  அரசுக்கு எழுதிய மன்னிப்புக் கடிதங்களில், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணியை திரு மாண்டேகு தொடங்கியவுடனே  அச்சட்டத்திற்கு ஆதரவாக இருக்கவும், அதற்கு  இணங்கி நடக்கவும் உறுதியான எண்ணத்தில் இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறேன். மாண்டேகு சீர்திருத்தங்களும் அது குறித்து பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் செய்யப்பட்ட பிரகடனமும் என்னுடைய கருத்துகளை உறுதி செய்திருக்கின்றன; இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டப் படியான முன்னேற்றத்தை முறையாகச் செய்யும் முயற்சியில் எனக்கு நம்பிக்கை இருக்கிறதென்றும் அதற்கு நான் ஆதரவாக இருப்பேனென்றும் பகிரங்கமாக உறுதியளித்திருக்கிறேன்.”

மேலும், “அரசியலமைப்புச் சட்டரீதியான பாதையில் நடப்பேன் என்கிற என் சீரிய நோக்கத்தை உண்மையுடன் வெளிப்படுத்துகிறேன்; என் அன்பையும், மரியாதையையும், பரஸ்பர உதவியையும் காட்டும் வகையில் பிரிட்டிஷ் ஆளுகைக்கு கை கொடுக்க எளியவனான நான் அனைத்து முயற்சிகளையும் செய்வேன். பிரகடனத்தில் கூறப்பட்டிருப்பது போல் அமையப் போகும் ஒரு பேரரசுடன் மனப்பூர்வமாக இணங்கி நடப்பேன்.”

இப்படிப் பேசும் சவார்க்கர், முடிவாகச் சொன்னது இதுதான்:

“அரசாங்கம் குறிப்பிட்டுச் சொல்லும் ஒரு உறுதியாக நிர்ணயம் செய்யப்பட்ட, நியாயமான காலம் வரை நானும் எனது சகோதரரும் அரசியலில் பங்கேற்க மாட்டோம் என உறுதிமொழி அளிக்க முற்றிலும் தயாராக இருக்கிறோம். இது தவிர, நாங்கள் விடுதலை செய்யப்பட்டவுடன்  நிர்ணயம் செய்யப்பட்ட காலம் வரை ஒரு குறிப்பிட்ட பகுதியில் தங்கியிருப்பது, எங்கள் நடமாட்டங்களின் விவரங்களைப் போலீசுக்குத் தெரிவிப்பது, அரசின் பாதுகாப்பை உறுதி செய்யும் உண்மையான  நோக்கத்துடன் விதிக்கப்படும் இத்தகைய நிபந்தனைகளை நானும் என் சகோதரரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம்.”

சவார்க்கரின் கருணை மனுக்களை அரசாங்கம் நிராகரித்தது.  மே 2, 1921 அன்று சவார்க்கரும் அவருடைய சகோதரர் கணேஷும் இன்றைய மஹாராஷ்டிரத்திலுள்ள ரத்னகிரி சிறைக்கும், பின்னர் எரவாடா சிறைக்கும் மாற்றப்பட்டனர். இறுதியாக ஜனவரி 6, 1924 நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டார். அந்த நிபந்தனைகள்:

பம்பாய் கவர்னரின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களிலும், ரத்தினகிரி மாவட்டத்திற்குள்ளும், குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களிலும் அவர் தங்கியிருக்க வேண்டும்.; அரசாங்கத்தின் அனுமதியின்றியும், அவசரமாக இருந்தால் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் அனுமதியின்றியும் மாவட்டத்தின் எல்லைகளைத் தாண்டிச் செல்லக் கூடாது; ஐந்து வருட காலத்திற்கு அரசாங்கத்தின் ஒப்புதலின்றி அரசியல் நடவடிக்கைகளில் தனிப்பட்ட முறையிலும், பொதுவாகவும் பங்கேற்கக் கூடாது; குறிப்பிட்ட இந்தக் காலம் முடியும் போது மீண்டும் இத்தகைய தடைகளை மீண்டும் பிறப்பிப்பது குறித்து அரசாங்கம் முடிவு செய்யும்.

அவரை விடுதலை செய்யும் ஆவணம் இப்படிக் கூறியது:

“இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாக சவார்க்கர் ஏற்கனவே கூறிவிட்டார். மேலும் பின்வரும் அறிக்கையையும் அவர் சமர்ப்பித்தார் (அப்படிச் சமர்ப்பிப்பது அவருடையை விடுதலைக்கான நிபந்தனை அல்ல என்பதை அவருக்குத் தெளிவுபடுத்திய பின்னரும்): “என் வழக்கில் நேர்மையான விசாரணை நடந்து நியாயமான தண்டனை வழங்கப்பட்டது என்று நான் இதன் மூலம் பதிவு செய்கிறேன். கடந்து சென்ற நாட்களில் நான் நடத்திய வன்முறைச் செயல்களை நான் மனப்பூர்வமான வெறுக்கிறேன்; என் சக்தி முழுமையையும் பயன்படுத்தி சட்டத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் உயர்த்திப் பிடிப்பது என் கடமையென நினைக்கிறேன்; எதிர்காலத்தில் அரசியலமைப்புச் சட்டச் சீர்திருத்தங்களை வெற்றிபெறச் செய்வதற்கு எனக்கு அனுமதியளிக்கப்பட்ட அளவிற்கு உதவுவேன்.”

அந்தமானில் கொடுமைகளை அனுபவித்த சிறைவாசிகள் அவற்றை எப்படி எதிர்கொண்டனர்? அது குறித்து சவார்க்கரே இப்படிச் சொன்னதாக மஜும்தார் எழுதுகிறார்: “அவர்களில் ஒருவர் 60 வயதான சீக்கிய அரசியல் கைதி சர்தார் சோஹன் சிங். மற்றொருவர் ராஜபுத்திர இனத்தைத் சேர்ந்த பஞ்சாபிய இளைஞர் பிரித்வி சிங். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அவர்கள் ஒரு வாய் சோறு கூட இல்லாமல் 12 நாட்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டனர். கடைசியில் சிறை நிர்வாகம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோரின் அனைத்துக் கோரிக்கைகளும் அடங்கிய மனுவை அவர்களிடமிருந்து ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. இதைத் தொடர்ந்து சோஹன் சிங் வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார். ஆனால் பிரித்வி சிங் மேலும் 12 நாட்களுக்குத் தன் போராட்டத்தைத் தொடர்ந்தார்.”

சிறையில் இருந்தபோதே சக சிறைவாசிகளைக் காட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்து தன் விடுதலைக்கு ஏங்கிய சவார்க்கரின் அரசியல் வாழ்வு முழுவதும் அப்படியே தொடர்ந்தது. கொலைச் சதிகளில் பங்கேற்று அவை நிறைவேறும் தருணத்தில் தப்பித்துக் கொண்ட வரலாற்றினை இனி பார்ப்போம்.

எய்தவன் இருக்க, சிக்கிக் கொண்ட அம்புகள்

மஹாரஷ்டிர மாநிலத்தின் நாசிக் மாவட்டத்திலிருக்கும் பாகூரில் மே 28, 1883இல் பிறந்த வினாயக் தாமோதர் சவார்க்கருக்கு பாபாராவ் என்றைழைக்கப்பட்ட கணேஷ், நாராயண் என்று இரு சகோதரர்கள். கல்லூரியில் படிக்கும்போது  இவர்கள் நடத்திய அமைப்பின் பெயர் அபினவ் பாரத் சொசைட்டி. இந்திய சுதந்திரத்திற்காகப் போராடுவதுதான் அதன் நோக்கம்.

பாரிஸ்டர் பட்டப் படிப்புக்காக சவார்க்கர் லண்டன் சென்றிருந்த நேரத்தில் மஹாராஷ்டிராவில் அபினவ் பாரத் நடத்திய சிறிய வெடிகுண்டுத் தொழிற்சாலைகளும் கிடங்குகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஜூன் 8, 1909 அன்று தேசத் துரோக குற்றத்துக்காகக் கணேஷ் சவார்க்கர் கைது செய்யப்பட்டார். இது நடந்து சில நாட்களுக்குள்ளேயே வினாயக் சவார்க்கர் லண்டனில் இருக்கும் இந்தியா ஹவுஸில் தேசத் துரோக உரையாற்றியதாக உளவுத் துறை இந்தியாவில் பயங்கரவாதம் என்கிற தலைப்பில் தயாரித்த ஆவணம் கூறுகிறது. அந்த அறிக்கை மேலும் கூறியதாவது: “சவார்க்கர் இந்த உரையை ஆற்றிய 12 நாட்களுக்குள் பிரிட்டிஷ் அதிகாரியான கர்னல் சர் வில்லியம் கர்சன் வைலி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.  அதே ஆண்டு டிசம்பர் மாதம், கணேஷ் சவார்க்கர் மீது வழக்குத் தொடுத்த  நாசிக் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் எம்.டி. ஜாக்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் மூன்று  பேருக்குத் தூக்கு தண்டனையும், 27 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப் பட்டது.” ஆயுள் தண்டனை பெற்றவர்களுள் ஒருவரான கணேஷ் சவார்க்கர் அந்தமான் சிறைக்கு அனுப்பப் பட்டார். (ஆர்.எஸ்.எஸ்.சின் ஸ்தாபர்களுள் ஒருவர் இவர்)

ஜுலை 1, 1909 அன்று வில்லியம் கர்சன் வைலியைச் சுட்டுக் கொன்றவர் மதன் லால் திங்க்ரா.  அவருடைய உண்மையான இலக்கு முன்னாள் இந்திய வைஸ்ராயான கர்சன் பிரபுதான். கர்சன் பிரபு அதிர்ஷ்டவசமாகத் தப்பி விட்டார்.  லண்டனில் உள்ள இம்பீரியல் இன்ஸ்டிடியூட்டில் இந்திய தேசிய அசோஷியேஷன் என்கிற அமைப்பின் ஆண்டு விழாக் கூட்ட முடிவில் இந்தப் படுகொலை நடந்தது. சவார்க்கரின் வாழ்க்கை வரலாறை எழுதிய தனஞ்சய் கீர் திங்க்ராவைக் குறித்து இப்படி எழுதுகிறார்:

“மதன்லால், சவார்க்கரின் விசுவாசம் மிக்க ஆதரவாளர். வைலி கொலை செய்யப் படுவதற்குச் சில நாட்கள் முன்பு, அவர் உயிர்த் தியாகம் செய்வதற்கான நேரம் வந்து விட்டதா என்று சவார்க்கரிடம் கேட்டார். சவார்க்கரிடமிருந்து பொறித்து வைத்தது போல் பதில் வந்தது: ‘ஒரு தியாகி உறுதியோடும் தயாராகவும் இருந்தால் அதுவே உயிர்த் தியாகத்திற்கான நேரம் வந்து விட்டதென்பதையே உணர்த்துகிறது.’ இந்தியாவின் முன்னாள் வைஸ்ராயான கர்சன் பிரபுதான் திங்க்ராவின் உடனடி இலக்கு.”

1950இல் வெளிவந்தபோது சில உண்மைகளை அப்போது எழுதவில்லை. சவார்க்கர் இறந்த பிறகு ராபர்ட் பாய்ன் என்கிற எழுத்தாளரிடம் அவர் சொன்ன உண்மைகள் அதிர்ச்சியளிக்கக் கூடியவை. ராபர்ட் பாய்ன் அது குறித்து எழுதியது இதுதான்:

“வைலியின் படுகொலைக்குத் தானே காரணம் என்று தனஞ்சய் கீரிடம் அவர் கூறினார். நிக்கல் பட்டை வைத்த துப்பாக்கியை மதன்லால் திங்க்ராவிடம் கொடுத்த சவார்க்கர், “இந்த முறை தோற்றால் உன் முகத்தை என்னிடம் காட்டாதே,’ என்று கடுமையாகச் சொன்னார்… லண்டன் மாநகர போலீஸ் இந்தக் குற்றத்தில் சவார்க்கருக்குப் பங்கு இருக்கிறது என்று உறுதியான சந்தேகம் கொண்டிருந்தது ஆனால் அவரைத் தண்டிக்க போதுமான ஆதாரம் இல்லை. அவர் இறுதியாக தண்டிக்கப்பட்டது நாசிக்கில் நடந்த ஜாக்சன் கொலை வழக்கில்தான். அவருக்கு அந்தமான் சிறையில் ஆயுள் தண்டனை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.”

சவார்க்கர் உயிரோடிருக்கும் வரை முதல் இரண்டு கொலை வழக்குகள் தொடர்பாகத் தனக்குத் தெரிந்த உண்மைகளை எழுதாத கீர், அவர் இறந்த பிறகு வெளியிட்ட தன் புத்தகத்தின் இரண்டாவது பதிப்பில் (1966)  இப்படிச் எழுதினார்: “திங்க்ரா இந்திய விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்யும் நாளுக்காக அவரைப் பல மாதங்கள் ஆயத்தப் படுத்தினார் சவார்க்கர்.  திட்டமிட்டபடி கர்சன் பிரபுவை திங்க்ரா கொல்லத் தவறியதை மீண்டும் மீண்டும் குத்திக் காண்பித்துக் கொண்டிருந்தார் அவர். சர் கர்சன் வைலி கொல்லப்பட்ட அன்று காலை திங்க்ராவிடம் ஒரு நிக்கல் பட்டை பதித்த துப்பாக்கியைக் கொடுத்த சவார்க்கர், ‘இந்த முறை நீ தவறினால் உன் முகத்தை என்னிடம் காட்டாதே,” என்று கூறினார்.  திங்க்ரா கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து தன்னை வழக்கிலிருந்து காப்பாற்றும் வகையில் எழுதப்பட்ட ஒரு தாள் கைப்பற்றப்பட்டது. அதில் சவார்க்கர் கைப்பட எழுதியது.

நாசிக்கில் ஜாக்சன் ஷாரதா என்கிற மராத்தி நாடகத்தைக் கண்டு கொண்டிருக்கும் அவரைச்  சுட்டுக் கொன்றவர் ஆனந்த் கான்ஹேரே. அவருடன் கூட்டுச் சதியில் ஈடுபட்ட சிலரும் கைது செய்யப்பட்டனர். சாவர்க்கர் எழுதிய ஒரு கடிதமும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது. கான்ஹேரே பயன்படுத்திய ப்ரவுனிங் துப்பாக்கியும் சவார்க்கரிடமிருந்து வந்தது என்று தெரியவந்தது.  மார்ச் 13, 1920 அன்று அவர் லண்டனில் கைது செய்யப் பட்டார். அவர்மீது வைக்கப் பட்ட குற்றச்சாட்டுகள்: இந்தியாவை ஆளும் பிரிட்டிஷ் அரசருக்கு எதிராகப்  போர் தொடுத்தார்; பிரிட்டிஷ் இந்தியாவின் மீது அரசருக்கு இருக்கும் இறையாண்மையைப் பறிக்க சதி செய்தார்; ஆயுதங்களைச் சேகரித்து, வினியோகம் செய்து, ஜாக்சனைக் கொலை செய்யத் தூண்டினார், லண்டனில் அவர் தங்கியிருந்த காலத்தில் ராஜத் துரோக உரைகளை ஆற்றினார். இந்தியாவிலிருக்கும் தன் சகாக்களுக்கு 20 ப்ரவுனிங் துப்பாக்கிகளைக் கொடுத்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு இருந்தது.

அவரை இந்தியாவுக்குக் கொண்டு வந்த கப்பல் பிரான்சின் மார்செயில்ஸ் துறைமுகத்தில் நின்றிருந்தபோது இரண்டு காவலர்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு கப்பலின் பக்கவாட்டு ஜன்னல் வழியே தப்பித்தது அவர் ஒரு வீரராகப் புகழப்படுவதற்கு முக்கியக் காரணம். அவர் பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் கேட்கும் எண்ணத்துடன் நீந்திக் கரை சேர்ந்தவுடனே மீண்டும் கைது செய்யப்பட்டார்.  பம்பாய் உயர்நீதிமன்றத்தின் 69 நாட்கள் அவர் தொடர்பான இரண்டு வழக்குகள் நடந்தன. டிசம்பர் 24, 1910 அன்று வந்த முதல் வழக்கில் அவருக்கு அந்தமான் சிறையில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அவரது சொத்துக்கள் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டாவது வழக்கில் ஜனவரி 23, 1911இல் வந்த தீர்ப்பின்படி 50 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. இரண்டு தண்டனைகளையும்  ஒரே நேரத்தில் அனுபவிப்பதற்கு அனுமதிக்க வேண்டும்  என்று அவர் எழுப்பிய கோரிக்கை சிறைவாசத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் நிராகரிக்கப் பட்டது. ஜூலை 4, 1991இல் அவர் அந்தமானிலிருக்கும் போர்ட் பிளேயர் சிறைக்குக் கொண்டு வரப்பட்டார்.

விடுதலைப் போராட்டத்தில் தீவிரவாத நடவடிக்கை என்பதை ஏற்றுக் கொண்டாலும் அவர் மற்றவர்களின் கைகளில் ஆயுதங்களைக் கொடுத்து தான் தப்பிக்கும் வகையில் செயல்பட்டார் என்பதுதான் அவர்மீது குற்றச்சாட்டு. பகத்சிங், குதிராம் போஸ் போன்றோர் அவர்களே நேரடியாக தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டனர் என்பதை ஒப்பிடும்போதுதான் சவார்க்கரின் தந்திரம் தெளிவாகப் புரியும்.

காந்தி கொலை வழக்கிலும் இதுதான் நடந்தது. இதைவிடக் கேவலமாக நடந்தது.

ஜனவரி 30, 1948 மூன்று துப்பாக்கித் தோட்டாக்கள் இந்தியாவை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தின. இந்திய அரசியல் வரலாற்றில் மாறாத வடுவை ஏற்படுத்தின. அந்தத் துப்பாக்கி நாதுராம் கோட்சேயின் கையிலிருந்தது. கோட்சேயின் சிந்தனையில் இந்துத்வ வெறி நிறைந்திருந்தது. அந்தத் துப்பாக்கிக்கும் தத்துவத்துக்கும் பின்னால் இருந்தவர் சவார்க்கர். ஆனால் அந்த துன்ப சம்பவம் நடந்தது முதல் தன் மரணம் வரை கோட்சேவுக்கும் தனக்கும் அவ்வளவு நெருக்கமில்லை என்கிற மாயையை ஏற்படுத்துவதில்தான் சவார்க்கரின் உடல், பொருள், ஆவி எல்லாம் தீவிர முயற்சியில் இருந்தது.

காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 9 பேர்: நாதுராம் கோட்சே, நாராயன் ஆப்தே, விஷ்ணு கார்க்கரே, மதன்லால பாஹ்வா, சங்கர கிஸ்டய்யா, கோபால் கோட்சே, (நாதுராமின் சகோதரர்) வி.டி. சவார்க்கர், தத்தாத்ரேய பார்ச்சூரே, திகம்பர் பாத்கே. இவர்களுள் பாத்கே அப்ரூவராக மாறியதால் அவருக்கு மன்னிப்பு வழங்கப் பட்டது. பாத்கேயின் வாக்குமூலம்தான் சவார்க்கரை தண்டனைக்கு வெகு அருகில் கொண்டு சென்றது. அவருடைய வாக்குமூலம் உண்மையானது என்று ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆத்மா சரண் அதை உறுதி செய்யும் ஆதாரங்கள் இல்லாததால் சவார்க்கரை விடுதலை செய்தார். சவார்க்கரின் மரணத்திற்குப் பின் அமைக்கப்பட்ட ஜீவன் லால் கபூர் விசாரணை ஆணையம் சவார்க்கர் குற்றவாளிதான் என்ற முடிவுக்கு வந்தது. அந்தக் கதையைச் சுருக்கமாக நாளைப் பார்ப்போம்.

தொடரும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here