அணைந்துவிடாமல் இருப்பது!
~
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஒருங்கிணைத்த நவம்பர் 7, ரஷ்ய சோசலிசப் புரட்சி நாள் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றினேன்.

‘ நிலம், ரொட்டி, சமாதானம் என ரஷ்யப்புரட்சியின் நோக்கத்தை எளிமையாக வரையறுத்தவர் லெனின்.

உலகில் பல்வேறு நாடுகளில் புரட்சிகள் நிகழ்ந்தன. அந்தப் புரட்சிகளின் விளைவாக அந்தந்த நாடுகளில் மட்டுமே சில மாற்றங்கள், சில நன்மைகள் நிகழ்ந்தன.

ஆனால், ரஷ்யாவில் நிகழ்ந்த நவம்பர் புரட்சியோ உலகெங்கும் வாழ்ந்த தொழிலாளர்களின், விவசாயிகளின், பெண்களின் விடுதலைக்கும், வாழ்க்கை மாற்றத்துக்குமான உத்வேகத்தை அளித்தது.

ஆட்சிக்கு வந்த மறு நிமிடமே ,
மத நிறுவனங்களின், நிலவுடமையாளர்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்!’
எனும் முதல் அராசாணையில் கையொப்பமிட்டார் லெனின்.

லெனின் ஆட்சிக்கு வந்தவுடன் காலக்கெடு வைத்து மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றினார். போல்ஷ்விக் கட்சி அதிகாரத்துக்கு
வந்த ஐந்து ஆண்டுகளில் ரஷ்யா முழுமையுமாக மின்மயமானது.

அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, வீடு, மருத்துவம் உறுதி செய்யப்பட்டது.
வேலை நேரம் எட்டு மணியாக வரையறுக்கப்பட்டது. ஞாயிறு விடுமுறை வழங்கப்பட்டது.

கூட்டுப் பண்ணைகள் உருவாக்கப்பட்டன. அந்தப் பண்ணைகளில் வேலை செய்த விவசாயிகளுக்கு பண்ணைக்குள்ளேயே வீடும் தோட்டமும் வழங்கப்பட்டது. ஒவ்வொரு கூட்டுப் பண்ணையிலும் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்கிற உந்துதலில் விவசாயிகள் போட்டி போட்டு வேலை செய்தார்கள்.

‘நாட்டை முன்னேற்ற விருப்பமிருந்தால் விடுமுறை தினங்களிலும் வேலை செய்யுங்கள்!’ கேட்டார் லெனின்.
மக்கள் ஆர்வமாக செய்தனர்.

எத்தகு சிறிய வேலை செய்வோரும் அரசியலில் பங்கேற்கும் வாய்ப்பு
திறந்து வைக்கப்பட்டிருந்தது.

லெனினுக்கு அடுத்ததாக வந்த ஸ்டாலின், ரஷ்யாவை உலகின் முன்னணி நாடாக்கினார்.

பாலைவன நாடான உஸ்பெக்கிஸ்தானில் பருத்தி விளைய வைத்து சாதனை நிகழ்த்தியது ரஷ்யர்களின் உழைப்பு.

முதலாளிகள், அடிமைத்தனம், சுரண்டல் போன்றவற்றை அறியாத புதிய தலைமுறையை ரஷ்யாவில் உருவாக்கியது நவம்பர் புரட்சி.

இந்தியாவில் இன்று என்ன நிலை? இரண்டு லட்சத்துக்கும் மேலான விவசாயிகளை தற்கொலை செய்யத் தூண்டியிருக்கின்றன அரசாங்கங்கள். சூழல் நாசப்படுத்தப்பட்டுள்ளது.

காடு, மலைகளிலிருந்து பூர்வகுடிகள் கார்ப்ரேட்களால் வெளியேற்றப் படுகின்றனர். அப்பனின் தொழிலை செய்ய வலியுறுத்துகிறது புதிய கல்விக் கொள்கை. தொழிலாளர்கள் வேலையற்று புலம் பெயர்கிறார்கள்.

நவம்பர் 7 இங்கும் தேவைப்படுகிறது!
இது எனது உரையின் சுருக்கமாக இருந்தது.

நிகழ்வில் ‘ மக்கள் அதிகாரம் ‘ மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூவின் பேச்சில் அனல் பறந்தது.

மணல்குவாரி, டாஸ்மாக் மூடும் போராட்டங்களில் மக்களை அணிதிரட்டியது, அப்போராட்டங்களில் அதிகாரிகள் மற்றும் போலிஸ்காரர்களோடு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்தார்.

முதனை ராஜாக்கண்ணு லாக்கப் கொலை போலவே கோமங்கலம் அண்ணாதுரை லாக்கப் மரணமும் இப்பகுதியில் நிகழ்ந்தது.

அந்த வழக்கை முன்னின்று நடத்தியவர் ராஜூ. இதுபோல பல மனித உரிமை மீறல் வழக்குகளில் போராடி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தந்தவர்.

இன்று நல்ல மழை. தோழர்களின் உரையும் கலைநிகழ்ச்சிகளும் சூடாக இருந்தன. நீண்ட இருபது மாதங்களுக்குப் பிறகு திரளான தோழர்கள் முன் பேசியபோது, எந்த மழையும் நம்மை அணைத்துவிடாது எனும் நம்பிக்கை பிறந்தது!

கரிகாலன்

முகநூல் பதிவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here