2024 மிகவும் வெப்பமான ஆண்டு என்ன செய்யப் போகிறோம்?

சர்வதேச அளவில் செயல்படுகின்ற எண்ணெய் கார்ப்பரேட் நிறுவனங்கள் புதைப்படிவ எரிபொருள் மூலமாக பல்லாயிரம் கோடிகளை கொள்ளையடித்துக் கொண்டே உள்ளனர். 

Global warming: High tempreature for this year

யற்கைக்கு எதிரான மனித குல போராட்டத்தில் மனிதனுடைய பரிணாம வளர்ச்சி மற்றும் தன்னை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி போக்கானது இயற்கையையும் மாற்றுகின்றது; அதே சமயத்தில் தன்னையும் மாற்றிக் கொள்கிறது என்பதுதான் இயற்கைக்கும் மனிதருக்கும் உள்ள உறவாக இதுவரை நீடித்து வருகிறது.

ஒன்றிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் இயற்கையைப் பற்றிய அறியாமையிலிருந்த மனித குலம் அதனைப் பற்றி புரிந்து கொண்ட பிறகு இயற்கையை எவ்வாறு பாதுகாப்பது; நீண்ட காலத்திற்கு மனித குலத்தை எவ்வாறு ஆரோக்கியத்துடன் உயிர் வாழ வைப்பது; புவிபரப்பை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதை பற்றி யோசிப்பதற்கு கற்றுக்கொண்டது.

ஆனால் மனிதர்களிலேயே சில லாபவெறி பிடித்த மிருகங்கள் பூமி பந்தை குறுகிய காலத்திற்குள் நாசமாக்கி வருகிறது என்பதன் எதிர் விளைவு தான் 2024 ஆம் ஆண்டு நிகழ்ந்த கொடூரமான வெப்பநிலை.

இதுவரை பதிவான வெப்பநிலை அளவுகளில் 2024 ஆம் ஆண்டு பதிவான வெப்பநிலை தான் மிகவும் அதிகமான வெப்பநிலை என்று அறிவிக்கின்றது வெப்பநிலை பற்றிய ஆராய்ச்சி மையங்கள்.

அதாவது சராசரி அளவுகளைத் தாண்டி 1.5° செல்சியஸ் அளவிற்கு சென்றது என்பதுதான் கொடூரமான வெப்பத்தை நாம் எதிர்கொண்டதற்கான காரணம்.

பருவநிலை மாற்றம் என்று சாதாரணமான வார்த்தைகளினால் விவரிக்கப்படுகின்ற இந்த வெப்பநிலை உயர்வானது, கொடூரமான வறட்சியையும், வெப்ப புயல்களையும், வெப்ப அலைகளையும் உருவாக்கி பல்வேறு நெருக்கடிகளை தோற்றுவித்தது.

லட்சக்கணக்கான ஆண்டுகளாக இந்த பூமியை பாதுகாத்து வந்த விலங்கினங்கள், விலங்கினங்களின் பரிணாம வளர்ச்சியில் இருந்து படிப்படியாக முன்னேறிய மனிதகுலம் உற்பத்தி முறையில் இயற்கையான உற்பத்தி முறையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு செயற்கையாக பண்டங்களை உற்பத்தி செய்கின்ற முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு மாறியதிலிருந்து தான் இந்த பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டுள்ளது.

“லாபம், லாபம் மேலும் லாபம் என்று லாபத்தை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பு” கேடுகெட்ட முதலாளித்துவம் தான். இந்த முதலாளித்துவ சமூக அமைப்பு முறையில் முதலாளிகளான அவர்களுக்குள் போட்டியில் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு ஏகபோகமாக மாறிய பிறகு நிதிமூலனத்தைக் கொண்டு உலகை சூறையாடுவதற்கு கிளம்பியது.


படிக்க: ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் குழுவும் ஏகாதிபத்திய முதலாளித்துவ ஜனநாயகத்தின் யோக்கியதையும்!.


இயற்கையை படிப்படியாக அழிப்பதன் மூலமே தனது லாபவேட்டையை தொடர்ந்து வந்த ஏகாதிபத்திய முதலாளித்துவம் இன்று பூமியை வாழ தகுதியற்றதாக மாற்றியுள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்..

பொதுவுடமை கொள்கைக்கு எதிராக தனிமனித சொத்துரிமையை பாதுகாக்கின்ற முதலாளித்துவ சமூக அமைப்பை உயர்த்தி பிடித்து சண்டமாருதம் செய்கின்ற பல்வேறு வகையான பிழைப்புவாத அறிவுஜீவிகள் முதல் முதலாளித்துவ கொடுங்கோலர்கள் வரை இயற்கையை பாதுகாப்பதற்கு பொருத்தமான கம்யூனிச சமூக அமைப்பை கேலி செய்து கொண்டும்; அதை ஒழித்து கட்டுவதற்கு முயற்சித்துக் கொண்டும்; அதற்கு நேர் எதிராக இயற்கையை அழித்து தன்னை வளர்த்துக் கொள்கின்றனர்.

இதன் காரணமாகவே பூமியின் இரு பக்கங்களிலும் உள்ள பனிப்பாறைகள் உருகத் தொடங்கி கடல் மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கின்றது. பூமியின் வெப்ப நிலை அதிகரிக்க அதிகரிக்க கடலின் வெப்பநிலையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

பசுமை குடில்  வாயுக்கள் என்று கூறப்படக்கூடிய வாயுக்கள் வெளியேற்றமானது பூமியின் மேற்பரப்பில் பாதுகாப்பு அரணாக இருக்கின்ற ஓசோன் படலத்தில் மேலும், மேலும் துளைத்துக் கொண்டே செல்வதால் சூரியனிலிருந்து புறப்படுகின்ற வெப்ப கதிர்கள் பூமியை தடையில்லாமல் தாக்கி வருகின்றது. இதன் விளைவுகளை நாம் அனுபவிக்க தொடங்கி விட்டோம்.


படிக்க: நிக்கோபார் காடுகளை அழித்து கார்ப்பரேட்டுகளுக்கு விருந்தளிக்கும் மோடி அரசு!


மழை என்றால் பேய் மழை; வெயில் என்றால் கொடூரமான வெயில்; காற்று என்றால் கொடூரமான சூறைக்காற்று; பனி என்றால் எலும்புகளை துளைக்கின்ற வகையிலான பனி என்று மனிதர்களின் இயல்பான வாழ்க்கையை பருவநிலை மாற்றமானது கொடூரமாக ஒழித்துக் கட்டி வருகிறது.

சூழலியல் பேசுகின்ற தனி நபர்கள், முதல் தன்னார்வலர்கள், ஏகாதிபத்திய தொண்டூழிய தன்னார்வ குழுக்கள் மற்றும் சூழலியல் அறிஞர்கள் வரை அனைவரும் ஒரே குரலில் மீண்டும் மீண்டும் கூறுவது என்னவெனில் புதைபடிவ எரிபொருள் அபரிமிதமாக பயன்படுத்தப்படுவது தான் புவி வெப்பமாக காரணம் என்கின்றனர்.

ஏகபோக நிறுவனங்களின் நிதி ஆதாரத்துடன் நடத்தப்படுகின்ற சூழலியல் பாதுகாப்பு மாநாடுகள் வாய் தவறாமல் புதை படிவ எரிபொருளை பயன்படுத்தக் கூடாது; படிப்படியாக குறைக்க வேண்டும்; மரபுசாரா எரிசக்தியை பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானங்கள் போடுவதுடன் சரி!

மக்கள் அதிகாரம் வாட்சப் சேனல்

சர்வதேச அளவில் செயல்படுகின்ற எண்ணெய் கார்ப்பரேட் நிறுவனங்கள் புதைப்படிவ எரிபொருள் மூலமாக பல்லாயிரம் கோடிகளை கொள்ளையடித்துக் கொண்டே உள்ளனர்.

மனித குலத்தை பாதுகாப்பது தனிப்பட்ட மனிதர்களின் பொறுப்பு என்று சுரண்டப்படுகின்ற மக்களின் தலையிலேயே பூமியை காப்பாற்றுகின்ற பொறுப்பை ஒப்படைக்கின்றனர் ஏகாதிபத்திய முதலாளித்துவவாதிகளும் கார்ப்பரேட் கொள்ளையர்களும்.

இன்னும் சுருக்கமாக சொன்னால் கொள்ளையடிப்பவர்கள் சுகபோகமாக ஏசி அறைகளிலும், குளுகுளு ஆடைகளை அணிந்து கொண்டும் தப்பித்துக் கொள்கிறார்கள். வீட்டிலிருந்து புறப்படுவது முதல் வாகனங்கள் பயணம், அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள், ஆடம்பர உல்லாச தங்கு விடுதிகள் போன்ற அனைத்திலும் குளிர்பதன சாதனங்களின் மூலம் குளிரூட்டி கொண்டு தன்னை பாதுகாத்துக் கொள்கின்றனர்.

இதற்கு நேர்மாறாக உழைப்பாளி மக்களை குற்றம் சுமத்திக் கொண்டே அதாவது ஒவ்வொருவரும் நெகிழி பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும்; புதை படிவ எரிபொருள் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் கூறிக் கொண்டே பிரச்சனையிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்கின்றனர்.

இதுபோன்ற ஏமாற்று பேர்வழிகளின் வாய் ஜாலங்களை நம்பி ஏமாறாமல் பூமியை பாதுகாப்பதற்கு பொருத்தமான சூழலியல் நடவடிக்கைகளையும், மனித குலத்தை பாதுகாப்பதற்கு பொருத்தமான சோசலிச சமூக அமைப்பை நிறுவுவதையும் நோக்கி முன்னேறுவது தான் உடனடியாக புவி வெப்பமயமாதலிலிருந்து மனித குலத்தையும், பூமியையும் பாதுகாக்கின்ற ஒரே வழியாகும்.

  • ஆல்பர்ட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here