பிரான்சின் தலைநகர் பாரிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. எதிர்பார்த்தப்படியே பதக்கப் பட்டியலில் இந்திய வீரர்கள் ஒற்றை இலக்க எண்ணைக் கூட தாண்டவில்லை.

ஆனால் இதைப் பற்றி ஊடகங்கள் முன்பிருந்த நிலையை விட பரவாயில்லை என்றும்; டோக்கியோ ஒலிம்பிக்கில் பெற்றதை விட ஒரு பதக்கம் தான் குறைவாக பெற்றுள்ளோம் என்றும்; மயிரிழையில் பதக்கங்களை தவறவிட்ட இந்திய வீரர்கள் என்றும் எழுதி தனக்குத்தானே தட்டிக் கொடுத்துக் கொள்கின்றனர்.

இந்திய அணிக்கு ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டி போன்ற அனைத்திலும் முன்னிறுத்தப்படுகின்ற தடகள விளையாட்டுப் போட்டிகளில் பொருத்தமான நபர்களை தேர்வு செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்த்தப்படுகிறது.

உண்மையாக திறனுடையவர்கள் யாரும் ஊக்குவிக்கப்படுவதில்லை. மாறாக அரசியல் பின்னணி; அதிகார வர்க்கத்தின் தயவு’ ஸ்பான்ஸர்களின் கடைக்கண் பார்வை மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக பார்ப்பன கும்பல் எதிர்பார்க்கின்ற ’தகுதி’ ஆகியவை பல்வேறு மூலைகளில் இருந்தும் விளையாட்டு வீரர்களை கண்டுபிடிப்பதற்கு பெரும் தடையாக உள்ளது.

இந்தியாவில் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட சுமார் 60 கோடி பேரில் உடல் திறனும், விளையாட்டில் ஆர்வமும், தொடர்ச்சியான பயிற்சி கொடுப்பதற்கான சூழலும் உருவாக்கினால் நிறைய சாதிக்க முடியும்.

எடுத்துக்காட்டாக குறி பார்த்து அம்பை எய்துவதற்கு பொருத்தமாக பழங்குடி மக்கள் மத்தியில் பொருத்தமுள்ள இளைஞரை தேர்வு செய்து முறையாக பயிற்சி கொடுப்பதன் மூலம் அவரால் வில் அம்பு எய்தல் போட்டிகளில் பரிணமிக்கச் செய்ய முடியும்.

கிராமப்புறங்களில் கிணறுகளிலும், குளங்களிலும், ஆறுகளிலும் நீச்சல் அடிக்கின்ற இளம் சிறுவர்களில் பொருத்தமானவர்களை கண்டுபிடித்து சில ஆண்டுகள் பயிற்சி கொடுத்தால் நீச்சல் பந்தயத்தில் முன்னிலையில் உள்ள மைக்கேல் பெல்ப்ஸ் என்ற வீரரை முந்துவதற்கு வாய்ப்பு உள்ளது.

”இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”

என்பார் வள்ளுவர்.

அதுபோல தடகள விளையாட்டுப் போட்டிகளிலும், குழு விளையாட்டுப் போட்டிகளிலும் பொருத்தமான நபர்களை தேர்வு செய்வதற்கு விசாலமான பார்வையும் விளையாட்டு திறனை ஊக்குவிக்கின்ற கண்ணோட்டமும் கொண்ட அரசாங்கத்தால் தான் இது நிச்சயமாக முடியும்.

புராணக் கதைகளில் நாகாஸ்திரத்தை ஏவுவதன் மூலம் எதிரிகளை கொன்றழிக்க முடியும் என்றும், பிரம்மாஸ்திரத்தை விட்டு அனைவரையும் சாய்க்க முடியும் என்று கற்பனையில்  மாயாஜாலக் கட்டுக்கதைகளை (Magical realism)  உருட்டிக் கொண்டிருக்கும் மூடர் கூட்டத்திற்கு மத்தியில், நவீன அறிவியல் தொழில்நுட்பத்திற்கு பொருத்தமான விளையாட்டு திறனை வளர்ப்பதற்கு மாணவர்-இளைஞர்களிடம் உள்ள பல்வேறு ஆற்றல்களை கண்டுபிடித்து வளர்க்கக்கூடிய அரசாங்கம் ஒன்று வேண்டும்.

இந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களின் பெற்றோர் எவ்வாறு விளையாட்டை நேசிக்கிறார்களோ அது போன்ற மனநிலையில் அரசாங்கம் விளையாட்டை நேசிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஈட்டி எறிதலில் நீரஜ் சேப்ராவின் தாயார், தனது மகன் வெள்ளிப்பதக்கம் பெற்றவுடன், தங்கப் பதக்கத்தை பெற்ற பாகிஸ்தானின் அர்ஷத் நதிம் என்ற வீரரை அவன் எனது மகன்தான் என்று பாராட்டியுள்ளார். நதிமின் தாயாரோ என் மகன் வெற்றிக்கு காரணம் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தான் என்று மனப்பூர்வமாக பாராட்டியுள்ளார்.

படிக்க: 

 ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டிய வினேஷ்  தகுதிநீக்கம்: ‘சதி இல்லை’ நம்புங்கள்!
 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இந்தியா சாதிக்குமா?

அதேபோல கென்யாவின் ஓட்டப்பந்தய வீரர் ஆபெல் முட்டாய் பந்தய வெற்றிக் கோட்டிலிருந்து சில மீட்டர் தொலைவில் இருந்தார். ஆனால் பந்தயப் பாதை குறிகளால் குழப்பமடைந்து வெற்றிக் கோட்டை அடைந்துவிட்டோம் என்று ஓட்டத்தை முடித்துக்கொண்டார்.

ஒட்டத்தில் ஆபெல்லுக்கு பின்னால் (ஸ்பானிஷ் பேசும்) இவான் பெர்னாண்டஸ் இருந்தார்.  கென்ய வீரர் ஆபெல் குழம்பிப்போய்விட்டார் என்பதை உணர்ந்த இவான் தொடர்ந்து ஓடுமாறு ஆபெலை நோக்கி கத்த ஆரம்பித்தார். ஆபெல்லுக்கு ஸ்பானிஷ் தெரியாது. இவான் என்ன சொல்லுகிறார் என்று ஆபெல்லுக்கு புரியவில்லை.

தான் கூறுவது ஆபெல்லுக்கு புரியவில்லை என்பதை உணர்ந்த பெர்னாண்டஸ் ஆபெல்லை வெற்றிக்கோட்டை நோக்கி விரையச் செய்தார். இதைக் கவனித்த ஒரு நிருபர் இவானிடம், “நீங்கள் இதை ஏன் செய்தீர்கள்?” என்றார்.  அதற்கு இவான் பதிலளித்த பதில் :

“ஒரு நாள் நாம் ஒரு பக்குவமான சமுதாய வாழ்க்கை நிலைக்கு உயர்வோம் என்பது என் கனவு. அந்த சமூக அமைப்பில் நாமும் மற்றவர்களும் வெற்றி பெற வேண்டும்.”

நிருபர் முன்வைத்த அடுத்த கேள்வி : “ஆனால் நீங்கள் ஏன் கென்யாவை வெல்ல அனுமதித்தீர்கள்?”  அதற்கு இவானின் பதில் : “நான் அவரை வெல்ல விடவில்லை; அவர் வெல்லப் போகிறார். போட்டி அவருடையது” என்றார். நிருபர் வற்புறுத்தி மீண்டும் கேட்டார்: “ஆனால் நீங்கள் வென்றிருக்கலாம்!”

இவான் நிருபரைப் பார்த்து பதிலளித்தார் : “ஆனால் நான் ஆபெல்லின் குழப்பத்தை பயன்படுத்தியிருந்தால் எனது வெற்றியின் தகுதி என்னவாக இருக்கும்? இந்த பதக்கத்தின் மரியாதை என்னவாக இருக்கும்? என் அம்மா இதைப் பற்றி என்ன நினைப்பார்?”  என்கிறார் இவான்.

இதுதான் விளையாட்டை ஊக்குவிக்கின்ற மனநிலை.

தைவான் குத்துச் சண்டை வீரர் லின் யூ டிங் மீது பாலின பரிசோதனை நடந்தது. தனது நாட்டு வீரர் ஒலிம்பிக் குழுவின் மூலம் தகுதி இழப்பு செய்யப்பட வாய்ப்புள்ளது என்பதை அறிந்தவுடன் ஒட்டுமொத்தமாக நாட்டின் கடைசி குடிமகன் முதல் அதிபர் வரை ஒன்று திரண்டு ஒலிம்பிக் கமிட்டியில் மேல்முறையீடு செய்தனர். ஊடகங்களின் மூலம் பிரச்சாரம் செய்தனர். அவரை பாதுகாத்து தங்கப் பதக்கத்தை பெறச் செய்துள்ளனர். இது தான் விளையாட்டை நேசிக்கும் அரசாங்கத்தின் வேலை மற்றும் கடமை.

ஆனால் இந்தியாவில் அப்படிப்பட்ட நிலைமை கிடையவே கிடையாது. வினேஷ் போகத்தின் தோல்வியை சங் பரிவாரக் கும்பல் கொண்டாடுகிறது.

வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டவுடன் பெருமளவில் விமர்சனம் வருகின்ற வரை அவரை பாசிச மோடி அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. இதனால் அவர் வெறுத்து போய் மல்யுத்த போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார்.

இது இவருக்கு மட்டுமல்ல அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்கின்ற எண்ணற்ற இளம் விஞ்ஞானிகள், புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கின்ற எண்ணற்ற அறிவியலாளர்கள், புதிய வகை என்ஜின்களை வடிவமைக்கின்ற பொறியாளர்கள் பலர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்பது தான் இந்தியாவின் சாபக்கேடான வரலாறு.

எனவே ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் நாம் சாதிப்பதற்கு உண்மையிலேயே மக்களின் திறனை ஊக்குவிக்கின்ற அரசாங்கம் ஒன்றை நிறுவுவது தான் அடுத்த ஒலிம்பிக் போட்டியிலாவது குறைந்தபட்சம் நாட்டு மக்களின் எண்ணிக்கைக்கு பொருத்தமான வகையில் பதக்கங்களை பெறுவதற்கு தயாரிப்பதற்கு உதவும்.

”நம்மிடையே வீரர்கள் இல்லை, எனினும் மக்கள் மத்தியில் இருக்கிறார்கள்”, அத்தகைய வீரர்களை அடையாளம் காண்பதற்கு விளையாட்டின் மேல் உண்மையிலேயே அக்கறை கொண்ட ஜனநாயக கூட்டரசு வேண்டும். அதை விரைவில் உருவாக்குவதற்கான போராட்டத்தில் இறங்குவோம்.

  • முகம்மது அலி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here