ஈராக்கில் இஸ்லாமிய மத அடிப்படைவாத அரசு பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைத்துள்ளது. இதற்கு எதிராக ஈராக் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சட்ட வரைவு குழந்தை மீதான பாலியல் வன்முறையை சட்டபூர்வமாக்கும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகிறார்கள்.
இந்த செய்திகளை பார்க்கும்போது நாம் நாகரிக உலகில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என எண்ணத் தோன்றும். நமது நாட்டிலும் இது போல் காட்டுமிராண்டித்தனம் பார்ப்பனியத்தால் கட்டமைக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் தமிழ்நாடு ஆளுநர் ரம்மி புகழ் ஆர் என் ரவி தான் குழந்தை திருமணம் செய்து கொண்டதாக கூச்சமின்றி பொதுவெளியில் பேசினார்.
40,50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்த கொடூரம் இந்தியாவில் சில பகுதிகளில் இன்றும் தொடர்கிறது. அதனால் நாம் முன்னேறி விட்டோம் என்று பெருமைப்பட்டுக்கொள்ள தேவையில்லை.
வரலாறு நெடுகிலும் பெண்கள் மீதான அடக்குமுறை, வடிவங்கள் மாறினாலும் இன்றும் உள்ளடக்கம் மாறவில்லை. ஆண்களை பொறுத்தவரை பெண்கள் தங்களது காம இச்சைக்காகவும், இன உற்பத்திக்காகவும், பணிவிடைக்காகவும் கடவுளால் படைக்கப்பட்டுள்ள இயந்திரம் எனக் கருதுகிற ஆணாதிக்க மனோபாவம் உள்ளது. இந்த மனநிலை மத அடிப்படைவாதிகள் ஆளும் நாட்டில் மட்டுமல்லாமல் சில முன்னேறிய நாடுகளிலும் உள்ளது.
ஈராக்கை பொறுத்தவரையில் அவர்கள் அரசியலில் ஷியா மதகுரு-க்கள் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். ஈராக்கில் பெண்களின் உரிமைகளை அழிக்கத் துடிக்கிறார்கள்.
ஈராக்கில் பெண்களின் கல்வி, திருமணம் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை அவர்களின் பெற்றோர் அல்லது கணவர்களே தீர்மானிக்கிறார்கள். இதில் இந்தியாவும் விதிவிலக்கு அல்ல.
கடந்த வாரம் ஈராக் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவானது, ஈராக் மக்களின் குடும்ப விவகாரங்களில் மதக்குரு-க்கள் முடிவெடுக்க அதிகாரம் அளித்துள்ளது. இது வாரிசுரிமை, விவாகரத்து, குழந்தை பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்று விமர்சகர்கள் அஞ்சுகின்றனர்.
1959 ஆம் ஆண்டு ஈராக் முடியாட்சியின் வீழ்ச்சிக்கு பின்னர் குடும்ப விவகாரங்களில் முடிவெடுக்கும் உரிமையை மத குருக்களிடமிருந்து பறித்தது அரசு. அதனை நீதித்துறைக்கு மாற்றியது. கடந்த ஜூலை பிற்பகுதியில் முன்மொழிக்கப்பட்ட மாற்றங்களை பல சட்டத்துறையினர் எதிர்த்த காரணத்தினால் பாராளுமன்றம் திரும்பப்பெற்றது. தற்போது பாராளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்தும் சக்தி வாய்ந்த சியைட் தொகுதிகளின் ஆதரவை பெற்று பின்பு ஆகஸ்ட் 4 அமர்வில் மீண்டும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது இந்த சட்டவரைவு.
அமெரிக்க மேல்நிலை வல்லரசால் உருவாக்கப்பட்டு பின்னர் அவர்களுக்கு கீழ்ப்படிய மறுத்த காரணத்தால் கடந்த 2003ஆம் ஆண்டு கொல்லப்பட்டார் சதாம் உசேன். அதன் பிறகு ஈராக் அரசியலில் செல்வாக்கு செலுத்திய இஸ்லாமிய மதகுருக்கள் ஷரியத் சட்டத்தை அமல்படுத்துவதில் தீவிரமாக வேலை செய்தனர். அதன் ஒரு அங்கம்தான் பெண்கள் திருமண வயதை 9 ஆக குறைத்தது.
ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் அமைப்பான யுனிசெப் கூற்றுப்படி ஈராக்கில் 28 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டுள்ளனர். சட்டமியற்றப்படாத காலத்திலேயே இதுதான் ஈராக்கின் நிலை.
முகமது நபி தம் மனைவிகளில் ஒருவரான ஆயிஷாவை 9 வயதில் திருமணம் செய்ததாக கூறப்படுவதால், அந்த வயதில் பருவமடையும் பெண்களை திருமணம் செய்ய இஸ்லாம் வரலாற்று ரீதியாக அனுமதித்துள்ளது என்று மத அடிப்படைவாதிகள் வாதிடுகின்றனர்.
ஈராக் 2021 முதல் ஈரானின் ஷரியா சட்டங்களில் சிலவற்றை தங்கள் நாடுகளிலும் நடைமுறைப்படுத்தியுள்ளனர். அதில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகளை குற்றவாளிகள் என்கிறது சட்டம்.
இதில் அபராதம் மற்றும் தண்டனைகளையும் அறிவித்துள்ளனர். ஹார்மோன்களால் ஏற்படும் மாற்றத்தை ஒட்டி மருத்துவமனைகளை அணுகினாலும் தண்டனை விதிக்கப்படுகிறது. இவை அனைத்தும் மதத்தின் பெயரால் நடைபெறுகிறது.
பெண்கள் முன்னேற்றத்தை விரும்பாத இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள்!
நாகரீகத்தின் வளர்ச்சியில் பழைய பண்பாட்டை தூக்கியெறிந்துவிட்டு கல்வி, விளையாட்டு துறைகளிலும், தொழில்நுட்ப வேலைகளிலும் பீடுநடை போடுகிறார்கள் பெண்கள். கட்டாய ஹிஜாப் உள்ளிட்ட அடிமைதனத்திற்கு எதிரான போராட்டத்தில் களத்தில் நிற்கிறார்கள். அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் போராட்ட களத்தில் பெண்கள் முன்னணி பாத்திரமாக செயல்படுகிறார்கள்.
படிக்க:
♦ ஈரான்: ஹிஜாப் தீயில் கருகும் ஆணாதிக்கம்!
♦ ஈரான்: ஹிஜாப்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!
பெண்களின் இந்த முன்னேற்றத்திற்கு அடிப்படையாக கல்வி இருக்கிறது. இது அனைத்தும் மத அடிப்படைவாதிகளின் கண்ணை உறுத்துகிறது. இவர்களுக்கு அடிப்பணிந்து செல்பவர்கள், இவர்களுக்கு எதிராக களத்தில் நிற்பதை ஜீரணிக்க முடியவில்லை.
அதனால் தான் திருமண வயதை 9 ஆக குறைத்து பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்கு தடை போடுகிறார்கள். ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான் என இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் செல்வாக்கு செலுத்தும் நாடுகளில் அதிகார மையத்தை கேடாய் பயன்படுத்தி தங்களின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
ஈராக் மட்டுமல்ல… இந்தியாவின் பின்தங்கிய பல பகுதிகளிலும் குழந்தை திருமணங்கள் நடைபெறுகிறது. சிதம்பரம் தீட்சிதர்கள் இன்றும் குழந்தை திருமணம் செய்கிறார்கள். பெண்களை போகப்பொருளாக பார்க்கும் ஆணாதிக்க பண்பாட்டின் பிறப்பிடங்களாக மதமும் அதனை வைத்து பிழைப்பு நடத்தும் மத அடிப்படைவாத அரசியலுமே முதன்மையாக உள்ளது. அரசியல் விடுதலைக்கான போராட்டத்தில் சமூக விடுதலையும் அடங்கியுள்ளது என்பதை கருத்தில் கொண்டு போராடுவோம்.
- நந்தன்