தலையங்கம்

நெருக்கடியை நோக்கி இந்தியப் பொருளாதாரம்!


ந்தியாவின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை ஆகியவை இந்திய பொருளாதாரத்தின் கழுத்தை நெரித்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ள வரம்பான ஆறு சதவீதம் என்பதை தாண்டி மேலே ஏறி குதித்துக் கொண்டுள்ளது. பணவீக்கம் 7% கீழ் குறையாமல் அதிகரித்து வருகிறது. இதைப் பற்றி பொறுப்புடன் பதில் சொல்ல வேண்டிய இந்திய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல், “நீ ஆளும் மாநிலத்தில் என்ன யோக்கியதை” என்று மடக்குவதன் மூலம் பாரதீய ஜனதாக் கட்சியின் கார்ப்பரேட் சேவைகளை மறைத்து, அரசின் பொருளாதாரக் கொள்கைகளை நியாயப்படுத்தி வருகிறார்.

ஆகஸ்ட்-2022 -ல் நடந்த பாராளுமன்ற விவாதத்தில் எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய விலையேற்றம் குறித்து கேட்டபோது, தற்போதைய இந்திய பொருளாதாரத்துடன் தேக்கம் (Recession) மற்றும் மந்தநிலை (Stagflation) போன்ற சொற்களை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்தார். அது மட்டுமின்றி இந்தியாவின் பொதுக்கடன் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நல்ல நிலையில் உள்ளது என்றும் வாதாடியுள்ளார்.


இதையும் படியுங்கள்: வெளியேறும் அன்னிய முதலீடு! வீழ்ச்சியில் பங்குசந்தை? திவால் நிலையை நோக்கி இந்திய பொருளாதாரம்!


இந்திய வணிக வங்கிகளின் மொத்த NPA-க்கள் (செயல்படாத சொத்துக்கள்) கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவு 5.9 புள்ளியாக குறைந்துள்ளதாகவும், பல பெரிய பொருளாதார நாடுகளே திணறிக் கொண்டிருக்கும் போது, 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் கடன் – மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 56.21% ஆக குறைந்து உள்ளது என்றும், இது பல நாடுகளின் அளவைவிட குறைவு என்று பேசியுள்ளார். அதுமட்டுமின்றி சமையல் எண்ணெய் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் மீது வரிகளை அரசாங்கம் குறைத்துள்ளது என்று சுய திருப்திப்பட்டுக் கொண்டார். இந்திய பொருளாதாரத்தின் வலிமையை பறைசாற்ற போதுமான அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளது என்ற அடிப்படையில் சவடால் அடிக்கும் வகையில் பேசியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர்களான நுபுர் சர்மா மற்றும் திவாரி ஆகிய இருவரும் முகமது நபியை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதால் ஐரோப்பிய சமூகம் மட்டுமின்றி அரேபிய நாடுகளின் கூட்டமைப்பு இந்தியாவின் மீது கடும் எரிச்சலில் உள்ளது. அரேபிய நாடுகளில் மட்டும் ஏறக்குறைய 80 லட்சம் இந்தியர்கள் பணி புரிகிறார்கள் அவர்களின் மூலம் கிடைக்கின்ற அந்நிய செலாவணி 87 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்..

எனவே அவர்களை பகைத்துக் கொள்வதற்கு ஆர்எஸ்எஸ் பாரதிய ஜனதா கட்சி தயாராக இல்லை. அது மட்டுமின்றி இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் அரேபிய நாடுகள் கணிசமான பங்கு செலுத்துகின்றன. உள்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இன வெறுப்பை தூண்டி அவர்களை எதிரியாக சித்தரிக்கின்ற ஆர்எஸ்எஸ்-பாரதிய ஜனதா அரேபிய நாடுகளுடன் உள்ள உறவை பணிவுடன் புதுப்பித்துக் கொள்கிறது.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கை, மறுகாலனியாக்க கொள்கை அமுல்படுத்த துவங்கிய பிறகு இந்தியாவின் பொருளாதாரம் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளில் உள்ள நிதி ஏகபோகங்களின் கையில் சிக்கிவிட்டது. அந்த நிதி ஏகபோகங்கள் தான் கார்ப்பரேட்டுகளை கட்டுப்படுத்துகிறார்கள். கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்துவது ஒன்றுதான் இந்தியா உள்ளிட்ட காலனி அரைக்காலனி, நவீன காலனி, மறுகாலனிய நாடுகளின் அரசுகளுக்கு உள்ள ஒரே வாய்ப்பாகும்.

இதற்கு வெளியில் அவர்கள் ஒருபோதும் சிந்திக்க மாட்டார்கள் அரசியல், பொருளாதாரக் கொள்கைகளை விமர்சிக்கின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மற்றும் கார்ப்பரேட்டுகளின் மற்றொரு பிரிவை ஆதரிக்கின்ற அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஒடுக்குவதற்கு பாசிச சர்வாதிகாரத்தை கையில் எடுக்கின்றனர். நாடாளுமன்றத்திற்குள் மாற்றுக் கருத்து வருவதை தடுப்பது மட்டுமின்றி, ஊடகங்களில் மாற்றுக் கருத்துகள் வருவதையும் கடுமையாக தடுக்கின்றனர். இதன் மூலம் மாற்று கருத்துக்களை, தன் மீது வரும் விமர்சனங்களை ஒடுக்கி விட முடியும் என்று கனவு காண்கிறார்கள்.


இதையும் படியுங்கள்: விவசாயத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியே இந்தியாவில் நடக்கும் விவசாயிகளின் நீண்ட போராட்டத்தின் அடிப்படை!


இத்தகைய சூழலில் தனக்கு சாதகமாக இந்தியா மந்தநிலைக்கு  (Stagflation)  வீழும் அபாயம் 0% மட்டுமே உள்ளது என்ற ப்ளூம்பெர்க் ஆய்வு நிறுவனத்தின் தரவுகளை காட்டி இந்திய ஒன்றியத்தின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை மடக்குவது, மிரட்டுவது என்று கையாள்கிறார். அதேசமயம் உலகவங்கி எச்சரிக்கை மற்றும் சீனாவின் 4,000 வணிக வங்கிகளின் திவால் நிலைமை தரும் எச்சரிக்கை அனைத்தையும் மறுத்து வருகிறார். சிறு, குறு தொழில்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், அனைத்து பிரிவு மக்களின் வாழ்வை கசக்கி பிழிந்து கிடைக்கும் ஜிஎஸ்டி ஜூலை 2022-ல், 1.49 லட்சம் கோடியாக, 28% உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டி ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக 1.4 லட்சம் கோடிக்கு அதிகமாக உள்ளது என பெருமையடிக்கின்றனர்.

பாரதிய ஜனதா கட்சியின் ஏகாதிபத்திய அடிமைத்தனமான பொருளாதாரக் கொள்கைகள், மக்களுடைய அன்றாட வாழ்க்கை நடைமுறையின் மீது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக அங்கொன்றும், இங்கொன்றுமாக, சிறியதும்-பெரியதுமான போராட்டங்கள் நடக்கத் துவங்கி உள்ளது. இவற்றை ஒருங்கிணைத்து கார்ப்பரேட்-காவி பாசிசத்தின் பிடியிலிருந்து நாட்டை விடுவிப்பது உடனடி கடமையாகிறது.

மக்களை நல்வாழ்க்கைக்கு கொண்டு செல்ல பொருத்தமான ஜனநாயக கூட்டரசு ஒன்றை நிறுவுவது, அதன் மூலம் கார்ப்பரேட் பிடியில் சிக்காத, சுயசார்பு பொருளாதாரம் ஒன்றை கட்டமைப்பது ஒன்றுதான் உடனடி தேவையாகும். என்பதையே இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலை நமக்கு உணர்த்துகிறது.

புதிய ஜனநாயகம்.
 ஆகஸ்ட் மாத இதழ்.

படியுங்கள்!
பரப்புங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here