பாகிஸ்தான் ஆட்சி மாற்றம்! புதிய தீர்வுகள் ஏதும் கிடையாது!


பாகிஸ்தானின் இம்ரான்கான் ஆட்சி தூக்கி எறியப்பட்டு உள்ளது. கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இஸ்லாமிய பிற்போக்கு வாதிகளிடமும்,இராணுவ சர்வாதிகாரிகளிடமும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த பாகிஸ்தானில் கவர்ச்சிவாத அரசியல் கட்சியான தெ toஹரிக்- எ- இன்சாஃப் என்ற கட்சித் தலைவரான இம்ரான்கான் பதவிக்கு வந்தபிறகு “புதிய திசையில்” பயணத்தை துவங்கியது.

அமெரிக்காவின் ஒற்றைத் துருவ ஆதிக்கத்திற்கு’கட்டுப்படாமல்’ உலக மேலாதிக்கப் போட்டியில் புதிதாக வளர்ந்து வரும் ஏகாதிபத்திய நாடான சீனாவுடன் தனது உறவுகளை மேம்படுத்திக் கொண்டார். இதனால் இம்ரான்கான் ஆட்சியை வீழ்த்துவதற்கு தொடர்ந்து அமெரிக்கா பல்வேறு சதித்தனங்களை செய்து கொண்டிருந்தது.

சீன அதிபர் ஜி ஜின் பிங்குடன் இம்ரான் கான்

1980களுக்குபிறகு காலனியாதிக்கத்தின் புதிய வடிவமாக உருவெடுத்த மறு காலனிய அரசியல்,பொருளாதார, பண்பாட்டு கொள்கைகளை கடைபிடிக்கின்ற காலனிய, அரைக்காலனிய,புதிய காலனிய நாடுகளின் அரசுக் கட்டமைப்பு தோல்வியையே தழுவி வருகிறது. இஸ்லாமிய பிற்போக்கு மற்றும் தாலிபன்கள் பாகிஸ்தானை தனது பிடிக்குள் வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாலும் மறுபுறம் பாகிஸ்தான் ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளாதார போர்ச்சக்கரத்தில் இணைக்கப்பட்டு கடும் சுரண்டலுக்கு உள்ளானது.

கொரானா காலத்தில் ஏற்பட்ட உற்பத்தி முடக்கம் மற்றும் இம்ரான் அரசு தொடர்ந்து கடைபிடித்து வந்த தனியார்மயக் கொள்கைகளின் காரணமாக பாகிஸ்தானின் பொருளாதாரம் பெரும் சரிவுக்கும், பெருமளவில் நெருக்கடிக்கும் உள்ளானது. இந்த நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு அமெரிக்கா, பாகிஸ்தானில் ஆட்சி கவிழ்ப்புக்கு ஏற்பாடு செய்தது. தனக்கு கட்டப்படாத நாடுகளில் பலவண்ண புரட்சிகளை உருவாக்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் முயற்சிகளில் அமெரிக்கா சதித்தனமாக ஈடுபடுவது உலகம் அறிந்த விடயமாகும்.

இப்படிப்பட்ட சூழலில் தற்போது இம்ரான்கான் ஆட்சிக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீப்பின் தம்பியான ஷேபாஸ் ஷெரிப் கையில் தற்போது திவாலாகி உள்ள பொருளாதாரத்தை சரி செய்வதற்கு எந்த மந்திரக்கோலும் இல்லை.மாறாக சீனாவுடன் ஏற்கனவே போடப்பட்டுள்ள ONE BELT ROAD, CPEC என்ற பொருளாதார ஒப்பந்தங்களில் எந்த மாற்றமும் கிடையாது.சார்க் பிராந்தியத்தில் இந்தியாவிற்கு போட்டியாக பிராந்திய வல்லரசாக தன்னை வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை.

படிக்க:

அதானியின் எழுச்சி! இந்திய மக்களுக்கு வீழ்ச்சி!!

பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் பாராளுமன்ற அரசியலில் ஒரு கட்சிக்கு மாற்றாக மற்றொரு கட்சியை கொண்டு வருவது, மீண்டும் அதே பொருளாதாரக் கொள்கைகளை தொடர்ந்து கடைப்பிடிப்பது போன்றவை தீர்வைத் தராது.ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு உள்நாட்டில் சுயசார்பு பொருளாதாரத்தை கட்டியமைக்கின்ற புதிய பாதையை தேர்வு செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது.

  • சண். வீரபாண்டியன்.

1 COMMENT

  1. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் திமுகவை வைத்து புரட்டி போட்டுடலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here