பசித்தால் பஜனை பாடு – மோடியின் அருளுரை

ஆரோக்கியமான உணவை பெறுவதில் பற்றாக்குறை, உணவு பொருட்களின் விலையேற்றம், உணவு விநியோகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு ஆகியவை ஏழை மக்களை ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினையில் தள்ளுகிறது

0
99

பசித்தால் பஜனை பாடு – மோடியின் அருளுரை


மீபத்தில் திருவாளர் மோடி தனது 92வது மன்கிபாத் உரையில் இந்திய குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் ஊட்டச்சத்து மேம்பட ஆன்மிக பஜனையில் ஈடுபட வேண்டும் என அருளுரை வழங்கியுள்ளார். ஏழை மக்கள் பஞ்ச காலத்தில் வயிற்றில் ஈரத்துணியை கட்டிகொண்டு பசியை சமாளிப்பது வழக்கம், அது ஒரு இருண்ட காலத்தின்- வேறு கதியற்ற மக்களின் – வழக்கம். ஆனால் இந்தியாவை உயர்த்துவேன் என சவடால் அடித்து ஆட்சியை கைப்பற்றிய மோடியின் ஆட்சியிலும் பசிக்கு பஜனை பாடும் நிலையில் இந்திய மக்கள் இருப்பது இது “நவீன இருண்டகாலம்” என்பதையே உணர்த்துகிறது.

இந்திய மக்கள் சந்திக்கும் ஊட்டச்சத்து குறைபாட்டை தீர்க்க வக்கற்ற, இந்த அரசின் முன்னே பல காரணங்கள் இறைந்து கிடக்கின்றன; ஆரோக்கியமான உணவை பெறுவதில் பற்றாக்குறை, உணவு பொருட்களின் விலையேற்றம், உணவு விநியோகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு ஆகியவை ஏழை மக்களை ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினையில் தள்ளுகிறது. மோடியின் கண்களுக்கு இதெல்லாம் பிரச்சினையாக தெரிவதில்லை.

ஏற்கனவே கொரோனாவை ஒழிக்க கை தட்டுவது, பாத்திரங்களை தட்டி ஒலி எழுப்புவது. விளக்கேற்றுவது என மோடி வழங்கிய அருளுரைகள் உலகம் முழுதும் உள்ள அறிவியலாளர்களால் கேலிக்கு உள்ளாகி இந்தியாவின் மானத்தை கப்பலேற்றியது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு முட்டாள்தனங்களை உளறியவர், இப்போது தனது ஆட்சியில் ஏற்பட்டுள்ள பொது சுகாதர பின்னடைவுக்கான ஆதாரத்துடன் வெளிவந்துள்ள தகவல்களை சரி செய்ய வக்கற்று, ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு நம்மை பஜனை பாட சொல்வதன் மூலம் தனது ஆட்சி காலத்தில் இந்திய மக்களின் வீழ்ந்து கிடக்கும் பொது சுகாதார அவலங்களின் பின்னடைவுகளில் இருந்து மீட்டெடுப்பதற்கு பதிலாக மக்களின் கவனத்தை திசை திருப்பும் யுக்தியாகும்.

இதையும் படியுங்கள்: மக்கள் நலஅரசு என்ற பம்மாத்து!!

அனைத்து பிரச்சினைகளுக்கும் நம்பிக்கை சார்ந்த தீர்வுகளை நோக்கியே மக்களை பழக்கப்படுத்துவதன் மூலம், அறிவியல் பூர்வமான நிருபிக்கப்பட்ட தீர்வுகளை செயல்படுத்துவதை சமூகத்தில் இயல்பான நடவடிக்கைகளில் இருந்து பின்னுக்கு தள்ளவே உதவும். “நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்று செயல்பட்டால்தான் எந்த பிரச்சினையும் தீர்க்க முடியும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக கண்ணும் கருத்துமாக வேலை செய்யும் மோடி, மக்களின் பொது சுகாதார நலனில் இப்படி அடிப்படை அக்கறையற்று உளறுவது எதேச்சயானது அல்ல, அடிப்படையில் இந்துத்வா என்ற வெற்று நம்பிக்கைகளின் அடிப்படையிலான பிற்போக்கு சித்தாந்தத்தை ஏற்று கொண்ட மனிதரின் பேச்சும் அவ்விதமே பிற்போக்காக இருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை. மேலும் ‘மக்களுக்கு அறிவியல் பூர்வமான, தரமான இலவச மருத்துவம் வழங்க வேண்டிய அரசின் அடிப்படை கடமை’யில் இருந்து விலகிக்கொண்டு சுகாதாரத்திற்கான பட்ஜெட் நிதியை வெட்டி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சுகாதாரம், மருத்துவத்துறைகளை திறந்துவிட்டு உலக வர்த்தக கழகத்தின் அடியாளாக செயல்படும் நோக்கத்தை உள்ளடக்கியதாகும்.

மோடியின் அருளுரைகள் மக்களை ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களுக்கு மாற்றுவதற்கு பதிலாக குழந்தைகள், தாய்மார்களின் உடல் நலனை காவு கொடுத்து, அரசின் திட்டங்கள் மூலம் இந்துத்துவ சித்தாந்தங்களை வளர்க்க ஆன்மீக பஜனை திட்டமாக பயன்படுத்தும் குரூர சிந்தனையாக உள்ளது.

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு மற்றும் விரிவான தேசிய ஊட்டச்சத்து கணக்கெடுப்பு திட்டங்கள் மூலம் கிடைத்துள்ள தரவுகளின்படி,” இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு ஒரு அபாய கட்டத்தை பிரதிபலிக்கிறது”. இந்திய குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் மற்றும் பெண்கள் ஊட்டச்சத்து மற்றும் நுண் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் கிடைத்துள்ள தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு–5ல் கிடைக்கப்பெற்ற தரவுகளில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின், வயதிற்கு ஏற்ற எடை இல்லாமையால் 32.5%குழந்தைகளும், வயதிற்கு ஏற்ற உயரம் இல்லாமையால் 35%குழந்தைகளும், உயரத்திற்கேற்ற எடை இல்லாமையால் 19.3% குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் இந்த பிரச்சினைகளில் சிறிதளவே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது.

மேலும் உணவு மற்றும் விவசாய நிறுவனம் மற்றும் உலக வங்கி ஆகியவை வெளியிட்டிருக்கும் புள்ளி விவரங்களின்படி, மோடி பிரதமரானதிலிருந்து “ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கபட்ட இந்திய மக்கள் தொகை 14.9% லிருந்து 15.5%ஆக உயர்ந்துள்ளது, என கரடியே காறிதுப்பிய கதையாக ஏகாதிபத்திய நிறுவனங்களின் தரவுகளுங்கூட நிருபிக்கின்றன.” இதன் விளைவு என்னவென்றால் ‘உலக மக்கள் தொகையில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கபட்ட 25 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இந்தியாவில்தான் உள்ளனர்’ என்ற “இழிபுகழை” இந்தியா 2019ம் ஆண்டில் பெற்றது. 2014 முதல் 2016 காலகட்டங்களில் சத்தான உணவுகள் கிடைப்பதில் நமது நாடு மேம்பாடு அடைந்தபோதிலும், அக்கால கட்டத்தில் ஓட்டுமொத்த மக்களின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கவே செய்துள்ளது.

இந்திய குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பிற்குள்ளாவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. கர்ப்பிணி தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாடு, கல்வியறிவின்மை, தாய் பால் புகட்டுவதில் உள்ள சிக்கல்கள், பேறுகால இடைவெளி, திருமண வயது மற்றும் சுகாதாரமற்ற சூழல் ஆகியவை முக்கிய காரணிகளாக உள்ளன. இந்தியாவில் 36% பெண்கள் எடை குறைபாடும் பிரச்சினையாலும், “56% பெண்கள் மற்றும் 15லிருந்து 19வயது வரையிலான 56% சிறுமிகளும் இரும்பு சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்”. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பில் 50% ஊட்டச்சத்து குறைபாடே முக்கிய காரணமாக உள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, வயதிற்கு ஏற்ற உயரம் வளர்ச்சியின்மை, குழந்தைகளின் ஆரோக்கியம், உடல் நலம், அறிவு வளர்ச்சி, கற்றல் வளர்ச்சி ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

‘அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்’ மூலமாக; குழந்தைகளின் தினசரி உணவு, ஊட்டச்சத்து குறைபாடு இடைவெளியை ஈடுகட்டும் வகையில் துணை ஊட்டச்சத்து உணவுகளை பரிந்துரைத்து அதற்கான செயல் திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. எனினும் மக்களின் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினையை தீர்க்க அரசின் தற்போதைய திட்டங்கள் போதுமான அளவு பங்களிக்கவில்லை என்பதை பெண்களின் இரும்பு சத்து குறைபாடு, இரத்த சோகை பாதிப்பு, குழந்தைகளின் எடை மற்றும் வளர்ச்சி குறைபாடு ஆகியவற்றின் தரவுகள் பளிச்சென அம்பலப்படுத்துகின்றன!

ஆனால் திருவாளர் ‘மோடியின் அருளுரைகள்’ ஊட்டச்சத்து மேம்பட பஜனை பாடுங்கள் என்று மக்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. ஒரு வேளை சங்கிகளின் கனவான இந்துராஷ்டிரம் அமைந்தால் நமது உள்ளுர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஊட்டச்சத்து மேம்பட ஆன்மிக பஜனை கச்சேரி சிகிச்சை நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!.

இந்நிலையில் இந்திய பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயல்திட்டங்கள், பல்வேறு சமூக, பொருளாதார, கலாச்சார நிலைமைகளை பருண்மையாக பரிசீலித்து பொது மக்களின் பங்களிப்பு, விழிப்புணர்வை தூண்டும் வகையில் திட்டமிட்ட விடாப்பிடியான முயற்சிகள் மூலம் சாதிக்க முடியும். அதனை செய்வதற்கு உழைக்கும் மக்கள் தங்களுக்கான அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்கும் திசையை நோக்கி முன்னேற வேண்டும்.

  • குமரன்

மூலம்: https://science.thewire.in/health/narendra-modi-malnutrition-bhajan/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here