வெண்ணெய் திருடன் கண்ணன் வாயும்

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியும்!


டந்த ஜுலை 11-ந்தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாசா, கனடா விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்து ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட படம் ஒன்றை வெளியிட்டார். அதை தொடர்ந்து ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம்‌ எடுக்கப்பட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. பல லட்சம் ஆண்டுகள் முன்பிருந்த நிலையை படங்கள் எடுத்ததன் மூலம் மிகப்பெரும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்த படங்களை பார்த்து சங்கிகள் தங்களுக்குள் “நமது கண்ணன் வாயில் தெரிந்த பேரண்டத்தைவிட சற்று குறைவாக தான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது” என திண்ணைப் பேச்சு பேசிக் கொண்டிருக்க வாய்ப்பு உள்ளது. இவர்கள் தான் “பிளாஸ்டிக் சர்ஜரி, விமானம்” எல்லாம் வேத காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்று வாயடைகிறவர்கள் அல்லவா!

மூடர் கூட்டமான சங்கிகளின் அறிவியலற்ற தர்க்கங்களை ஒதுக்கி வைப்போம். ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் அறிவியலாளர்கள் செய்த மாபெரும் சாதனைக்கு பின்னுள்ள அறிவியல் விவரங்களை புரிந்து கொள்ள முயல்வோம்.

கலிலியோ கண்ட உண்மையும்

விண்வெளி தொலைநோக்கியும்!

முதல் விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியவர் கலீலியோ கலீலி.  16-17 நூற்றாண்டில் வாழ்ந்த கலீலியோ விண்வெளியை தொலைநோக்கி மூலம் பார்த்து  “பூமிதான் சூரியனை சுற்றுகிறது, சூரியன்  சுற்றவில்லை” என்று உண்மையை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தார். அறிவியல் உண்மைகள் பார்ப்பன மதத்திற்கு மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா மதங்களுக்கும் கசக்கவே செய்கின்றன. அவற்றை முன்வைப்பவர்களை தங்கள் ‘கடவுளுக்கும் மதத்துக்கும்’ எதிரிகளாக சித்தரித்து ஒடுக்கின. கலிலியோ கண்டுபிடித்த உண்மைகள் அன்று ஐரோப்பாவில் கோலோச்சிய கத்தோலிக்க திருச்சபைக்கு இடியாக வந்து இறங்கியது. அதிலிருந்து தப்பிக்க கலிலியோவை இறுதி வாழ்நாள் வரை வீட்டு சிறையில் வைக்கப்பட்டார்.

அன்று, கலிலியோ பயன்படுத்திய தொலைநோக்கி ஒரு பொருளை மூன்று மடங்கு பெரிதாக காட்ட வல்லதாக இருந்தது. இன்றைக்கு பயன்படுத்தப்படும் தொலைநோக்கிகளுடன் ஒப்பிடுகையில் அவை ஒன்றுமே இல்லை எனக் கூறலாம். அந்த அளவு தற்போது விண்வெளி தொலைநோக்கிகளின் திறன்‌ பெரிதும் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அன்று பூமியில் இருந்துதான் தொலைநோக்கியை வைத்து பார்க்க வேண்டியிருந்தது..

ஹப்பில் தொலைநோக்கிக்கும்

ஜேம்ஸ் வெப்புக்கும் உள்ள வேறுபாடு!

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கிக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருக்கும் ஹப்பில் தொலைநோக்கியின் லென்ஸ் விட்டம் 2.4 மீட்டர். அது மனித கண்களால் காணக்கூடிய அலைநீளம் (400-700nm) கொண்ட ஒளியையே பதிவு செய்யக்கூடியது. இருப்பினும், அது பூமியில் வைக்கப் படாமல் விண்வெளியில் செலுத்தப்பட்டதன் விளைவாக பூமியின் Atmosphere தடுக்கக்கூடிய ஒளிக்கதிர்களையும் எந்த தடங்கலும் இன்றி பதிவு செய்ய முடிந்தது. அதே சமயம், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் லென்ஸ் 6.5 மீட்டர் விட்டம் கொண்டது. அதனால் அதன் பரப்பளவு அதிகமாகிறது. இதனால் அதிக அளவில் ஒளியை பதிவு செய்ய முடிகிறது.

மேலும், விண்வெளியில் பொருத்தப்பட்டுள்ளதால் தொலைநோக்கி வெப்பமடைவது நடக்கும். அது தொலைநோக்கியின் திறனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஹப்பில் தொலைநோக்கியின் வெப்பநிலை 200 K அளவுக்கு செல்லும், ஆனால், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் வெப்பநிலை 40K க்குள்ளாகவே நீடிக்க வைக்கப்படுகிறது. விண்வெளி என்பது பல லட்சம் மைல்கள் பரந்து விரிந்தது. அங்கே அது முழுவதையும் படம் பிடிப்பது சாத்தியமில்லை. அப்படியே படம் பிடிக்க முயன்றாலும் நாம் இருக்கும் பால்வெளியில் உள்ள ஒளி, கிரகங்கள் அதனை செய்வதில் இடையூறு ஏற்படுத்தும்.


இதையும் படியுங்கள்: ஜேம்ஸ் வெப்: பிரபஞ்சவியலில் புதிய பரிமாணம்! அறிவியல் கட்டுரை!


அத்தகைய இடையூறுகளை கணக்கில் கொண்டு ஒரு‌ குறிப்பிட்ட பகுதியில் அதிகம் கவனம் குவிப்பதன் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஹப்பில் தொலைநோக்கி அப்படி உற்று கவனித்த பகுதி விண்வெளியின்‌ பரப்பில் 1/32,00,000 அளவே ஆகும். இந்த பகுதியை உற்று நோக்கியதன் மூலம் ஹப்பில் தொலைநோக்கி எடுத்த படங்கள் வெளியிடப்பட்டிருந்தது. அந்த பகுதியை ஹப்பில் ஆழ்பகுதி என குறிப்பிடுவர்.  அதில் மட்டும் 5500 உருத்திரள்கள் (galaxy) கண்டுபிடிக்கப்பட்டன. அவை 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வகையில் படம் பிடிக்கப்பட்டது. இங்கு மிக முக்கியமான ஒரு கேள்வி எழக்கூடும். தொலைநோக்கி மூலம் 10 கி.மீ தூரத்தில் இருந்த பொருளை, இடத்தை பார்த்தேன் என்று தானே சொல்வார்கள். இது 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையை படம்படித்தார்கள். அது எப்படி என்பதுதான் அந்த கேள்வி

நவீன வகை விண்வெளி தொலைநோக்கிகள் தூரத்தை கணக்கிடுவதில்லை; அவை நேரத்தையே அளவிடுகின்றன. அதனை எளிமையாக விளக்குவது எனில் இந்த விண்வெளி தொலைநோக்கிகள் ஒரு குறிப்பிட்ட புள்ளியை பார்க்கும் வகையில் வடிவமைக்கப்படும். அந்த புள்ளியில் இருந்து வரக்கூடிய பல்வேறு வகைப்பட்ட ஒளிக் கதிர்களை வெவ்வேறு ஃபில்டர்கள், லென்ஸ்கள் மூலம் தனித்தனியாக பதிவு செய்துகொள்ளும். அதனை கணினி தொழில்நுட்பம் மூலமாக ஒன்றிணைத்து படங்கள் உருவாக்கப்படுகிறது. அவைதான் நமக்கு வெளியிடப்படுகின்றன. இதில் அந்த கதிர்களை கொண்டு எப்படி காலம் கணிக்கப்படுகிறது எனில் அந்த கதிர்களின் தன்மையிலிருந்து அதன் அலைநீளத்தின் மூலமாகவும் முடிவு செய்யப்படுகிறது.

ஒளி என்பது பொதுவாக இருந்தாலும் ஒவ்வொரு வண்ணத்துக்கும் ஒரு அலைநீளம்‌ இருக்கிறது என்ற அடிப்படை இயற்பியலில் இருந்து இதனை பார்க்க வேண்டும். அந்த தொலைநோக்கிகளில் பொருத்தப்பட்டிருக்கும் NIR கேமரா மற்றும் MIR கேமரா ஆகியவை அதிக அலைநீளம் கொண்ட கதிர்களை உள்வாங்கும்; படம் பிடிக்கும்.  ஹப்பில் தொலைநோக்கியில் பொருத்தப்பட்டிருந்த NIR கேமரா (400-700nm) அலைநீளம் கொண்ட ஒளியை மட்டுமே பதிவு செய்தது. அதனால் அந்த தொலைநோக்கியால் 400  மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை பார்க்க முடியவில்லை.

இது இந்த பேரண்டம் உருவான காலத்தில் 13.8  பில்லியன் ஆண்டுகளில் 3% சதவீதம் மட்டுமே.  ஆனால் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி 28000 nm வரை பதிவு செய்ய வல்லதாக இருந்ததால் அதனால் மேலும் பின்னோக்கி போக முடிந்தது. இப்படி ஒரு இடத்தை மட்டும் உற்றுநோக்கும் விண்வெளி தொலைநோக்கி ஒரிடத்தில் நிறுத்தி வைக்கப்படவில்லை. அவை பூமியை சுற்றி வருகிறது. இப்படி பூமியை சுற்றி வந்துகொண்டே ஒரு குறிப்பிட்ட பகுதியை உற்று நோக்கும்  வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தற்போது ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி வெளியிட்டுள்ள 6 படங்களும் வெவ்வேறு தன்மையில் உள்ளவற்றை வெளிப்படுத்துவது.

1.உடுத்திரள் கொத்து -SMACS 0723.

உடுத்திரள் என்பது சூரியன் போன்ற நட்சத்திரங்களின் கூட்டம். நாம் இருப்பது பால்வழி மண்டலம் (Milky way) உடுத்திரள்‌. அதில் இருக்கும் பல நட்சத்திரங்களில் ஒன்று தான் சூரியன். அதனை சுற்றி வரும் கோள்களில் ஒன்றான பூமியில் தான் நாம் உள்ளோம்.  SMACS 0723 என்பது பல உடுத்திரள்களை கொண்ட ஒரு உடுத்திரள் கொத்து. அந்த உடுத்திரள் கொத்தை ஹப்பில் தொலைநோக்கி படமெடுத்தபோது இந்த அளவு தெளிவாக எடுக்கவில்லை.

இதன் படத்தை 12.5 மணி நேரம் உற்று நோக்குவதன் மூலம் எடுக்கப்பட்டது. இந்த உடுத்திரள் கொத்தை ஏற்கனவே ஹப்பில் விண்வெளி தொலைநோக்கி படம் பிடித்திருந்தாலும் அதனைவிட தெளிவாக பிரித்து பார்க்கும் வகையில் ஜேம்ஸ் வெப் படமெடுத்துள்ளது. ஹப்பில் தொலைநோக்கியால் காண முடியாதவையும் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

2.கரீனா நெபுலா:

நெபுலாக்கள் என்பவை தெளிவான வரையறைக்குள் பொருந்தும் உடுத்திரள்கள் இல்லாமல் ஒரு மேகமூட்டம் போல் காட்சியளிப்பவை ஆகும். 7000-8000 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த கரீனா நெபுலாவில் பல நட்சத்திரங்கள் உருவாகும் நிலையில் உள்ளதை காட்டுகிறது. அந்த நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 100 சூரிய மண்டலத்தின் அளவுக்கு உள்ளது. இந்த நெபுலாவை முழுமையாக  பல ஆண்டுகள் தேவைப்படும். அதனால் அதன் ஒரு பகுதியை மட்டும் உற்று நோக்கியதில் அந்த சிறிய பகுதியிலேயே பல நட்சத்திரங்கள் உருவாவதை காண முடிந்தது.

3.Exoplanet WASP 96b

இது மிக அருகாமையில் 3.4 நாட்கள் தொலைவில் உள்ளது. நமது பால்வழி உடுத்திரளில் இருக்கக் கூடியது. இது சூரியனை போன்ற ஒரு நட்சத்திரத்தை வெகு அண்மையில் சுற்றி பார்த்ததில் அதன்கீழ் தண்ணீர் இருப்பதாக தெரிய‌ வந்துள்ளது.

4.ஸ்டீபன்ஸ் கியுண்டட்

இது 150 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று.  ஐந்து உடுத்திரள்கள் நெருக்கமாக இருப்பதை படம் பிடித்து காட்டுகிறது. இதில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பயன்படுத்தியதில் இந்த ஐந்து உடுத்திரள்களை தெளிவாக காட்டியது மட்டும் அல்லாமல் அதன் அண்மையில் இருக்கும் இதுவரை பார்க்கப்படாத உடுத்திரள்களையும் படம் பிடித்துள்ளது முக்கியமான அம்சமாக உள்ளது.

5.தெற்கு வளைய நெபுலா

இந்த நெபுலாவில் நட்சத்திரங்கள் உருவாகும் நிலையில் இல்லை. மாறாக, நட்சத்திரங்கள் இறப்பை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. நமது சூரிய நட்சத்திரமும் இது போல் நிச்சயம் இறக்கும் தருவாய்க்கு செல்லும். நட்சத்திரங்கள் இறக்கும்போது முதலில் அதன் மேல் அடுக்கு மட்டும் விலகி ஒரு மேகமூட்டம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். பின்னர் மெல்ல, நட்சத்திரம் முழுமையாக மறைந்து போகும். இது நடக்க பல்லாயிரம் ஆண்டுகள் பிடிக்கும். நட்சத்திரம் ஒளியுடன் இருப்பது, அதே சமயம் இறக்கும்போக்கில் செல்வது என்ற இரட்டைநிலையை படம்பிடித்ததே ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் சாதனை.

6.CEERS 93316 உடுத்திரள்

இந்த படம் முதல் ஐந்து படங்கள் வெளிவந்து சில நாட்கள் கழித்து வெளியிடப்பட்டது. இந்த படம் பிடித்தது என்பது முந்தைய ஐந்து படங்களின் சாதனையை முறியடித்ததாக கருதலாம்.  இதற்கு முன் படம்பிடித்தவை அதிக அலைநீளம் INFRA RED கதிர்களை தான். இந்த படம் ஒரு மிகப்பெரிய செவ்வொளி விலகலை கண்டுபிடித்துள்ளதாகும். செவ்வொளி விலகல் எவ்வளவு பெரிதாக உள்ளதோ அந்த அளவு அதை வெளியிடும் உடுத்திரள் பின்னோக்கிய காலகட்டத்தை சேர்ந்ததாக இருக்கும். தற்போது ஜேம்ஸ் வெப் படம் பிடித்துள்ள இந்த உடுத்திரள் 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாகும். அந்த வகையில் இதுவரை படம் பிடிக்கப்பட்ட உடுத்திரள்களிலேயே இது மிகப் பழமையானதாகும்.


இதையும் படியுங்கள் : வரலாற்றுப் புரட்டுகளைத் தொடர்ந்து மருத்துவ அறிவியலிலும் புரட்டு! ஹிப்பாக்ரட்டிஸ் எதிர் சரகர் விவகாரம்!


ஜேம்ஸ் வெப் வெளியிட்டுள்ள இந்த ஆறு படங்களும் விண்வெளியை பற்றியும், நட்சத்திரங்களின் தோற்றம் மற்றும் அழிவைப் பற்றியும், உடுத்திரள்களின் தோற்றம் மற்றும் அழிவு பற்றியும் இதுவரை மனித குலத்திற்கு இருந்த அறிவை மேலும் ஆழமாக்கியுள்ளது. பேரண்டத்தின் தோற்றத்தை விளக்கும் அறிவியலை மேலும் நம்பகத்தன்மை வாய்ந்ததாக மாற்றியுள்ளது.

இந்த பேரண்டத்தை படைத்ததாக சொல்லப்படும் ‘ஆதியும் அந்தமும் இல்லாத கடவுளின்’ பாத்திரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.  பார்ப்பன (இந்து) மதத்தின் அங்கமாக இருக்கும் ஜோதிடம், வான சாஸ்திரம் போன்றவை எத்தனை போலியானது என்பது மீண்டுமொரு முறை அம்பலமாகியுள்ளது. இந்த அறிவியல் முன்னேற்றங்கள், கண்டுபிடிப்புகள் அனைத்தும் மக்கள் வாழ்வை முன்னேற்றவும், அறிவியல் கண்ணோட்டத்தை உயர்த்தவும் கூட, அறிவியல் கண்டுபிடிப்புகளையும் தனிச்சொத்தாகவும், தேசிய சொத்தாகவும் கடைபிடிக்கும் முறைமை மாற வேண்டும்.

அறிவியல் நம்மை புதுப்புது ஆராய்ச்சிகளின் மூலம் பிரபஞ்சம் குறித்த தேடல்களை நோக்கி கொண்டு செல்கிறது. ஆனால் பழைய பிற்போக்கு, மூடக்கருத்துகளை பரப்பும் பார்ப்பன மதம் அறிவியலுக்கு புறம்பான காட்டுமிராண்டி சமூகத்தை நோக்கி பின்னுக்கு தள்ளுகிறது. எச்சரிக்கையுடன் இருப்போம்.

  • வேதநாயகம்

புதிய ஜனநாயகம்.
ஆகஸ்ட் மாத இதழ்.

படியுங்கள்!
பரப்புங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here