சென்னிமலையில் இந்து முன்னணியினர் கிறித்தவ மக்களின் மத வழிபாட்டை தடுத்து தாக்குதலில் ஈடுபட்ட கையோடு கிறித்தவ அமைப்பைச் சேர்ந்தவர் இந்து முன்னணியினரின் தாக்குதலைக் கண்டித்து பேசிய காணொளியை வைத்துக் கொண்டு சென்னிமலை முருகன் கோயிலை கல்வாரி மலையாக மாற்றப் போவதாக திட்டமிட்ட பொய்ப் பரப்புரையை மேற்கொண்டு நூற்றுக்கணக்கான மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி முடித்திருக்கிறது.

சென்னிமலையைப் போல மதுரை திருப்பரங்குன்றத்திலும் ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற திரளுவோம் எனும் பெயரில் இந்து முன்னணி அழைப்பு விடுத்திருக்கிறது.

ஒருபுறம் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் இருந்து அரசு வெளியேற வேண்டும் என்ற தீவிரமான பரப்புரையை ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அதன் துணை அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.

மறுபுறம் சமய நல்லிணக்கத்தின் அடையாளமாய் விளங்கும் சைவ , வைணவ , இசுலாமிய , கிறித்தவ கோயில்கள் வரலாற்றுக் காலத்தில் அருகருகே அமைந்த தளங்களை மையப்படுத்தி வெறுப்புப் பரப்புரையைச் செய்து வருகின்றன.

கோயில்களை கையகப்படுத்த நினைக்கும் ஆர்எஸ்எஸ் இன் திட்டத்தினை புரிந்து கொண்டால் தான் இந்தப் பரப்புரையின் பின்னணியை விளங்கிக் கொள்ள முடியும்.

கோயில்கள் உருவான காலத்தில் இருந்தே முடியாட்சி அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே கோயில்கள் இருந்து வந்தன. பல்லவ , பாண்டிய , சோழ , விசயநகர அரசுகளின் வரலாறு இதனைத் தான் குறித்து வைத்துள்ளன. மன்னராட்சி வீழ்ந்த பிறகு நவீன அரசுகள் கோயில்களை கட்டுப்படுத்த தொடங்கின. அதற்கான அடிப்படை அது பெருமளவு சொத்துக்களைக் கொண்ட ஒரு பொது நிறுவனம். தனிநபர்களின் ஊழல்களில் இருந்து கோயில்களைக் காப்பதற்கும் கோயில் வழிபாட்டில் அனைத்து மக்களுக்கும் பாகுபாடற்ற முறையில் சமத்துவத்தை நிலைநாட்டுவதும் புதிய நவீன அரசின் நோக்கமாக இருந்தது.

இந்தப் பின்னணியில் இருந்தே இந்து அறநிலையத்துறை நீதிக்கட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. விடுதலைக்குப் பிறகு ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் சட்டங்களாக இயற்றப்பட்டு அறநிலையத்துறை உருவானது.

ஆனால் தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கோயில்கள் இருக்கக் கூடாது என நாட்டின் தலைமை அமைச்சர் மோடியே பேசுகிற அளவுக்கு அறநிலையத்துறை பாஜக உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகளால் குறிவைக்கப்பட்டு வருகிறது.

இந்து மகாசபாவின் நிறுவனர்களில் ஒருவரான மதன்மோகன் மாளவியா , சவார்க்கர் போன்றோர் கோயில் வழிபாட்டில் அனைத்து மக்களும் சமத்துவமாக நுழைவதனால் இந்து தர்மம் எனும் சநாதன தர்மம் கெட்டுவிடும் என கவலை கொண்டதோடு காங்கிரஸ் மேற்கொண்ட கோயில் நுழைவுப் போராட்டங்களையும் எதிர்த்தது. குறிப்பாக மும்பை – சென்னை மாகாணங்களில் கொண்டு வரப்பட்ட அறநிலையத்துறை சட்டங்களுக்கு ஆதரவளிக்கக் கூடாது என இயக்கங்கள் நடத்தின.

மேலும் இசுலாமிய , கிறத்தவ வழிபாட்டு இடங்கள் அவர்கள் கையில் இருப்பது போலவும் இந்து கோயில்கள் மட்டும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருப்பது போலவும் ஒரு பொய்யை திட்டமிட்டு பரப்பி அறநிலையத்துறைக்கு எதிரான வெறுப்பை விதைத்து வருகின்றன.

உண்மையில் தமிழ்நாடு அரசு கடந்த பல ஆண்டுகளாக கோயில் சொத்துக்கள் பறிபோனதை கொள்ளையர்களிடம் இருந்து மீட்டு முறையாக ஆவணங்களாகப் பதிவு செய்து வருகிறது.

தமிழ்நாடு அரசு மீட்ட கோடிக்கணக்கான சொத்துக்களை ஆக்கிரமித்து வைத்திருந்தவர்கள் பெரும்பாலும் பாஜக மற்றும் அதன் துணை அமைப்பைச் சார்ந்தவர்கள் என்ற சான்று வழிப்பட்ட தகவல்களை அரசிடம் இருந்த பெற்று தீக்கதிர் நாளிதழில் தோழர் கனகராஜ் தனது கட்டுரையில் அண்மையில் வெளியிட்டிருந்தார். பாஜகவின் நயினார் நாகேந்திரன் மகன் பாலாஜி விருகம்பாக்கம் கோயிலுக்கு சொந்தமான 100 கோடி பெறுமான இடத்தை பொய்யாக பத்திர பதிவு செய்ததை நீக்கி பத்திரப் பதிவுத்துறை அண்மையில் ஆணை பிறப்பித்தது.

கோயில்களை ஆக்கிரமித்திருப்பது யார்?

இந்து அறநிலையத்துறை உருவாக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அறநிலையத்துறையை அகற்றிவிட்டு கோயில்களை கைப்பற்றத் துடிக்கும் இந்துத்துவ அமைப்புகளின் நோக்கங்களை Madras Review மக்கள் பதிப்பகம் சார்பாக வெளியிட்டுள்ள “தமிழ்நாட்டு கோயில்களை ஆக்கிரமிக்க முயலும் ஆர்எஸ்எஸ் ஜக்கி வாசுதேவ்” எனும் குறுநூல் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது.

அறநிலையத்துறை மற்றும் கோயில்களை மையப்படுத்தி இந்துத்துவ அமைப்புகள் நடத்தும் வெறுப்புப் பரப்புரையைத் தடுத்து நிறுத்த தெளிவான கருத்துகளை மக்கள் மன்றத்தில் எடுத்துச் செல்லப்பட வேண்டியது உடனடிக் கடமை.

நன்றி
தோழர் குமரன்.
முகநூல் பகிர்வு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here