சென்ற ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் தனது நிறுவனப் பங்குகளின் விலைகளை வெளிநாட்டு போலி நிறுவனங்களின் மூலமாக செயற்கையாக உயர்த்திக் காட்டி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியது. கார்ப்பரேட் வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் முறைகேடு இது எனவும் குறிப்பிட்டது.
இதனைத் தொடர்ந்து வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு பங்குச்சந்தையை ஒழுங்குபடுத்தும் அமைப்பான செபியை(SEBI)ப் பணித்தது. மேலும் அதானி குழுமம் பங்குச்சந்தையில் செய்த சட்ட மீறல்களை கையாள்வதில் செபி தவறியுள்ளதா என்பது பற்றி விசாரிக்க ஒரு நிபுணர் குழுவையும் அமைத்தது.
இந்த நிபுணர் குழுவானது இரண்டு மாதங்கள் விசாரணை மேற்கொண்டு மே 2023 ல் செபியின் தரப்பில் ஒழுங்குமுறை தோல்வி எதையும் கண்டறிய முடியவில்லை என்று தனது முடிவை அறிவித்தது. ஆனால் இந்த முடிவு அபத்தமானது என்பதைத்தான் ஹிண்டன்பர்கின் இரண்டாவது அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.
அதாவது செபியின் தலைவராக உள்ள மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் அதானி குழுமத்திற்கு தொடர்புடைய மொரிசியஸ் மற்றும் பெர்முடா தீவுகளில் உள்ள போலியான நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர் என குற்றம் சாட்டியது. முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனத்தில் பங்குதாரராக இருப்பவரே அந்த முறைகேட்டை விசாரித்தால் உண்மை எப்படி வெளியே வரும்?
ஆனால் அந்த முதலீடுகள் மாதபி புச் செபியின் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பு செய்யப்பட்டவை எனத் தம்பதியினர் விளக்கம் அளித்து தப்பிக்க முயல்கின்றனர். செபி தரப்பிலும் மாதபி தனது முந்தைய முதலீடுகள் குறித்த விபரங்களை ஏற்கனவே வெளிப்படுத்தியதாகவும், தான் சார்ந்த விசாரணை விஷயங்களில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டதாகவும் கூறியது. ஆனால் இப்போது எழும் கேள்வி என்னவென்றால் நிபுணர் குழுவை ஏப்ரல் 2 அன்று நேரில் சந்தித்து விளக்கம் அளித்தபோது இந்த முதலீட்டு விபரங்கள் குறித்து மாதபி தெரிவித்தாரா என்பதுதான்.
நிபுணர் குழுவிடம் மாதபி புச் உண்மையை ஒப்புக் கொண்டாரா?
உச்ச நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு முன்னாள் நீதிபதி அபய் மனோகர் சப்ரேவைத் தலைவராகக் கொண்டிருந்தது. அதில் முன்னாள் பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதி ஜே.பி.தேவதர், மூத்த வழக்கறிஞர் சோமசேகர், வங்கிகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்த ஓ.பி.பட், கே.வி. காமத் மற்றும் தொழிலதிபர் நந்தன் நிலகேணி ஆகியோர் அங்கம் வகித்தனர்.
உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில், செபி தனது விசாரணையை நடத்தும் விதம் குறித்து நிபுணர் குழுவிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது. டெல்லியில் மாதபி இந்த நிபுணர் குழுவை சந்தித்த போது, அதானி குழுமத்தின் முறைகேடு மற்றும் மோசடி ஆகியவற்றுடன் தொடர்புடைய நிதிகளில் மாதபி புச் மற்றும் அவரது கணவரின் முதலீடுகள் குறித்து நிபுணர் குழுவிடம் கூறிவிட்டு விசாரணையில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டாரா என்பது பற்றி “ஸ்க்ரோல்” இணைய இதழ் சார்பாக நிபுணர் குழுவில் இடம் பெற்றிருந்த ஐந்து பேரிடமும் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் இதற்கு யாருமே பதில் அளிக்கவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் அதானி குழுமம் தொடர்பான வழக்கைத் தொடுத்த மனுதாரர்களில் ஒருவரான வழக்கறிஞர் விஷால் திவாரி ஸ்க்ரோலிடம், “மாதபியோ, செபியோ இது குறித்து நிபுணர் குழுவிடம் தெரிவிக்காமல் இந்த உண்மையை மறைத்துள்ளனர். ஏனெனில் அதன் அறிக்கையில் இது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை” என்றார்.
நிபுணர் குழுவின் தவறான முடிவு!
உச்ச நீதிமன்ற வழக்கில் மற்றொரு மனுதாரரான சட்ட மாணவி அனாமிகா ஜெய்ஸ்வால், நிபுணர் குழுவில் இடம் பெற்றிருந்த பட் மற்றும் சுந்தரேசன் ஆகியோர் அதானி குழுமத்துடன் தொழில் ரீதியாக தொடர்பு வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் ஆட்சேபனைகளை எழுப்பினார். ஆனால் அவற்றை உச்ச நீதிமன்றம் கணக்கில் கொள்ளாமல் புறம் தள்ளியது.
ஜெய்ஸ்வாலின் வழக்கறிஞரான நேஹா ரதி, நிபுணர் குழுவானது தனது அறிக்கையில் செபியின் பல தோல்விகளை வெளிப்படுத்தியதாகவும், அதானியின் சந்தை விதிமீறல்களை சுட்டிக்காட்டியதாகவும், இருப்பினும் இறுதியில் அதானி குழுமத்துக்கு நன்னடத்தைச் சான்று வழங்கி விட்டது என்றும் தெரிவித்தார்.
ஏப்ரல் 2016 முதல் அதானி குழும நிறுவனங்களில் 13 வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகள் பற்றி செபி விசாரித்து வருவதாகவும் இன்னும் அதன் உரிமையாளர்களை அடையாளம் காண தவறியுள்ளதாகவும் நிபுணர் குழு குறிப்பிட்டுள்ளது. ஹிண்டன்பர்கின் அறிக்கை இந்த முதலீட்டாளர்களுக்கும், அதானி குழுமத்துக்கும் இடையேயான தொடர்பை சுட்டிக்காட்டுகிறது. சட்டவிரோதமான முறையில் இது போன்ற முதலீடுகள் வருவதாகவும், அதன் மூலம் பங்குச் சந்தையில் செயற்கையாக பங்குகளின் விலைகளை அதிகரித்து மோசடி நடப்பதாகவும் அம்பலப்படுத்துகிறது.
நிபுணர் குழுவின் அறிக்கையில் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் 2014 – லேயே அதானி குழுமம் பங்குச் சந்தையில் இது போன்ற முறைகேடுகளை செய்து வருவதாகவும், குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மின் உபகரணங்களை அதிக விலை வைத்து வாங்கிய விசயத்தில் செபி கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதையும் சுட்டிக்காட்டி உள்ளது.
இப்படி கணிசமான ஆதாரங்கள் கிடைத்த போதிலும் 6278 கோடி மதிப்பிலான இந்த மோசடி குறித்து செபி உரிய விசாரணை நடத்தி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அறிக்கை கூறுகிறது. 2020 ஆம் ஆண்டு சில அதானி நிறுவனங்களின் மீது செபி விசாரணைகளை நடத்தியது. சட்ட மீறல்களில் ஈடுபட்டதற்கு போதிய சான்றுகள் இருந்த போதும், அதானி குழுமத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும் நிபுணர்குழு குறிப்பிட்டுள்ளது.
படிக்க:
♦ ”தேசத்தின் சொத்துக்களை சூறையாடிய அதானியின் சொத்துக்களை பறிமுதல் செய்!” என முழங்குவோம்!
♦ ஹிண்டன்பர்க் இரண்டாம் அறிக்கை: செபியின் தலைவர்- அதானி- மோடி கும்பலின் மோசடி அம்பலம்!
ஏப்ரல் 2018 முதல் டிசம்பர் 2022 வரையிலான காலகட்டத்தில் அதானி குழுமத்தின் பங்குச்சந்தை வர்த்தகத்தில் 849 முறை வர்த்தக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதும், செபி செயலற்ற தன்மையுடன்தான் இருந்துள்ளது. முறைகேடுகளை தடுப்பதில் செபியின் தோல்வியை இது பிரதிபலிக்கிறது. இந்த எச்சரிக்கைகளில் 603 விலை அளவை மோசடியாக தீர்மானிப்பது தொடர்பானதாகவும், 246 சந்தேகத்திற்குரிய உள் வர்த்தகம் (Insider Trading) தொடர்பானவையாகவும் இருந்தன. ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து அதானி பங்குகளின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்த பிறகே, அசாதாரண விலை நகர்வுகள் நிகழ்ந்ததை செபி ஒப்புக்கொண்டது. பொருளாதார நிபுணரான பிரசென்ஜித் போஸ், ஒழுங்குமுறை தோல்விக்கான பெரிய ஆதாரத்தை தொகுத்து வழங்கினாலும் நிபுணர் குழுவானது தெளிவற்ற தவறான முடிவுகளை எடுத்துள்ளது. இதை செபியின் ஒழுங்குமுறை தோல்வி என முடிவு செய்ய மறுத்துள்ளது என தி ஹிந்துவில் எழுதியுள்ளார்.
விசாரணையை இன்னும் முடிக்காத செபி!
நிபுணர் குழுவானது செபி மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோதும், இறுதியில் எந்த ஒழுங்குமுறை தோல்வியையும் கண்டறிய முடியவில்லை என நற்சான்றிதழ் வழங்கி தனது அறிக்கையை மே 2023 -ல் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து விட்டது. ஆனால் செபி இன்னும் விசாரணையை முடிக்காமல் உள்ளது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
செபி தனது விசாரணையை மே 2023 – ல் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. எனினும் செபி, நீதிமன்ற காலக்கெடுவை அதன் பிறகும் பல முறை தவற விட்டு ஓராண்டுக்கு மேலாக அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட பட்டியலிடப்படாத மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை உள்ளடக்கிய பல சிக்கலான பரிவர்த்தனைகளை மேற்கோள் காட்டி அடுத்தடுத்து அவகாசம் கேட்டது.
கூட்டுக் களவாணிகள்!
செபி விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்காத நிலையிலும், உச்ச நீதிமன்றம் இந்த ஆண்டு ஜனவரியில் பொதுநல மனுக்களை தள்ளுபடி செய்து இறுதித் தீர்ப்பை வழங்கியது. செபியிடம் இருந்து விசாரணையை சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றத் தேவையில்லை எனவும், விசாரணையை மூன்று மாதத்திற்குள் முடிக்கவும் மீண்டும் செபிக்கு காலக்கெடு விதித்தது. பிப்ரவரியில் ஜெய்ஸ்வால், தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கூறியதையும் கடந்த மாதம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திவாரி இந்த ஆண்டின் தொடக்கத்தில் செபியின் விசாரணை குறித்த நிலை அறிக்கையை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்ற பதிவாளர் இந்த மனுவை பட்டியலிடவே மறுக்கிறார். இதை எதிர்த்து சென்ற வார தொடக்கத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்தார். அவர் ஸ்க்ரோலிடம் “மாதபிக்கு எதிரான புதிய குற்றச்சாட்டுகள் பொதுமக்கள் மனதில் சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. எனவே செபி தனது விசாரணையை முடித்து இறுதி முடிவுகளை உடனே வெளியிட வேண்டும்” என்றார்.
நேஹா ரதி,”செபி 2020 முதல் அதானி விவகாரத்தில் விசாரணை நடத்துகிறது. முடிவு ஏன் எட்டப்படவில்லை என்பது இப்போதுதான் புரிகிறது. நீதிமன்றம் செபி மீது நம்பிக்கை வைத்துள்ளதால் இப்படி தாராளமாக நடந்து கொள்கிறது. ஆனால் அது தவறு என்று நிரூபணம் ஆகி உள்ளது” என்கிறார்.
அதானி குழுமம் நிகழ்த்திய மாபெரும் நிதி முறைகேடுகளால் பொதுமக்களின் பணம்தான் சூறையாடப் பட்டுள்ளது. இப்படியான தில்லுமுல்லுகள் நடக்காமல் கண்காணிப்பதற்காகத்தான் செபி எனும் கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளது. முறைகேடுகளை கண்காணித்து தடுக்கத் தவறிய செபியையே, இதை விசாரித்து அறிக்கை தர உச்ச நீதிமன்றம் பணித்ததுதான் கொடுமை. ஒன்றரை ஆண்டுகள் ஆன பிறகும் விசாரணையை முடிக்காததுடன் அதானி குழுமத்திற்கு இதுவரை ஒரு குறிப்பாணையும் (Notice) அனுப்பவில்லை என்பது எவ்வளவு பெரிய கேலிக்கூத்து.
செபியின் தலைவர் மற்றும் அதானி குழுமத்துக்கு இடையே உள்ள உறவு குறித்து அம்பலமான பிறகும், அவர் இன்னும் பதவியில் நீடிக்கிறார். அவரை பதவி விலகக் கோரியும், இவ்விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டு குழுவின்(JPC) விசாரணை நடத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க நடக்கும் சதி என பாசிச பாஜக அரசு வழக்கமான சதிக் கோட்பாட்டை முன்வைத்து தப்பிக்க முயல்கிறது.
அதானி குழுமமும், செபியும், உச்ச நீதிமன்றமும், பாசிச மோடி அரசும் இணைந்து இந்த மாபெரும் ஊழல் முறைகேடுகளை மூடி மறைக்க முயல்கிறார்கள். அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து நடத்தும் வீரியமான போராட்டத்தால்தான் இந்த கூட்டுக் களவாணிகளைத் தாண்டி உண்மைகளை வெளிக்கொணர முடியும்.
- குரு