ருவர் தனக்கு மட்டுமே பணியாற்றினால் அவர் மிகச்சிறந்த அறிவாளியாக மாறலாம், மகத்தான ஞானியாகலாம், தலை சிறந்த கவிஞர் ஆகலாம், ஆனால் அவர் ஒரு போதும் முழுமையான, உண்மையில் மகத்தான மனிதர் ஆக முடியாது.

பொது நலனுக்காக பணியாற்றி தம்மை கௌரவப்படுத்திக் கொண்டவர்களை வரலாறு மகத்தானவர்கள் என்று அழைக்கிறது; மிக அதிகமான நபர்களை மகிழ்வித்த மனிதர்தான் மகிழ்ச்சியானவர் என்று அனுபவத்தில் தெரிகிறது. மதமே மனித குலத்துக்காக தன்னை தியாகம் செய்து கொண்ட மனிதப் பிறவியைத்தான் நமது ஆதர்சமாக கற்பிக்கிறது. இத்தகைய மதிப்பீடுகளை பொய் என்று யார் சொல்ல முடியும்?

மனிதகுலத்துக்காக பணியாற்றுவது அனைத்தையும் விட முக்கியமானதாக இருக்கும் தொழிலை நாம் தேர்ந்தெடுத்திருந்தால் எந்தச் சுமைகளும் நம்மை அழுத்தி விட முடியாது, ஏனென்றால் அவை அனைவரது நலனுக்குமான தியாகங்கள். அப்போது நாம் அற்பமான, வரம்புக்குட்பட்ட, சுயநலமான மகிழ்ச்சியை அனுபவிக்க மாட்டோம், மாறாக நமது மகிழ்ச்சி கோடிக்கணக்கானவர்களுக்கு சொந்தமாக இருக்கும். நமது செயல்பாடுகள் அமைதியாக ஆனால், நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கும். நமது இறப்புக்குப் பிந்தைய சாம்பலின் மீது நம்மை நேசிக்கும் உயர்ந்த மனிதர்களின் சூடான கண்ணீர் உருக்கப்படும்.”

கார்ல் மார்க்ஸ்.

சிறை, சித்திரவதை கொடுமைகளுக்கு அஞ்சாமல் போராடும்போது அந்த அடக்குமுறைகளின் துன்பம் நமது மனதிலும், உடலிலும் தாக்காமல் நம்மை பாதுகாக்கின்ற கம்யூனிஸ்டுகளின் வாழ்வியல் கண்ணோட்டத்தைப் பற்றி மகிழ்ச்சியுடன் தெரிவித்த காரல் மார்க்ஸ்-சின் வரிகள் தான் நமக்கு நினைவுக்கு வருகிறது.

உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம் எது? என்று காரல் மார்க்சை கேட்டபோது “போராட்டம் தான் மகிழ்ச்சியானது” என்று தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் அடைந்த செய்தியை கேட்டவுடன் புரட்சிகர, ஜனநாயக அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தில் ஒரு குழந்தை மரணம் அடைந்ததைப் போல கலங்கி நின்றனர்.

மாணவி இறந்த தினம் முதல் பள்ளியில் வன்முறை வெறியாட்டம் நடந்த தினம் வரை அன்றாடம் பள்ளியின் வாயிலிலும், மாணவியின் உடல் இருந்த மருத்துவமனை வாயிலிலும் நீதி கேட்டு தொடர்ந்து போராடினார்கள்.மக்கள் அதிகாரம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விடுதலை சிறுத்தைகள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தந்தை பெரியார் திராவிடக் கழகம் போன்ற அமைப்புகள்.

“வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலைக்கவிழுந்தார்” என்றான் பாரதி. பெரிய நெசலூர் என்ற கிராமத்தில் பிறந்திருந்தாலும், தன் மகளை பெரிய பட்டதாரியாக்கி, சமூகம் மதிக்கத்தக்க வாழ்க்கைக்கு தயாராக்க வேண்டும் என்ற கனவு, பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டார் அவரது தாய்.

தந்தையோ சிங்கப்பூரில் கூலித்தொழிலாளியாக உழைத்து, அந்த உழைப்பில் கிடைத்த வருவாயில் தன் மகளை உயர்ந்த வாழ்க்கைக்கு கொண்டு வர திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருந்தார். எல்லா பெற்றோருக்கும் இருந்ததைப் போல்தான் அந்த மாணவி ஸ்ரீமதியின் பெற்றோருக்கும் கனவுகள் இருந்தது.

கள்ளக்குறிச்சி வட்டாரத்தில் இயங்குகின்ற 70 மெட்ரிக் பள்ளிகளில் அதிக கட்டணத்தை வசூல் செய்கின்ற கனியமூர் சக்தி பள்ளியில் படிக்க வைக்க காரணம், அங்கு படித்தால் தனது மகள் சமூக அந்தஸ்தை பெற்று விடுவார் என்ற கண்ணோட்டம் தான்.

பள்ளிக்கு படிக்கச் சென்ற மாணவி பிணமாக வீட்டுக்கு திரும்புவதை எந்த தாயால்தான் பொறுத்துக் கொள்ள முடியும். அரசு, உறவினர்கள், பள்ளி நிர்வாகம் போன்ற எதனுடனும் சமரசம் இல்லாமல் மரணத்திற்கு நீதி கேட்டு வீதியில் இறங்கி போராடினார் ,ஸ்ரீமதியின் தாய். கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் இருந்த மாணவர்கள், இளைஞர்கள் ஸ்ரீமதியின் மரணம் கேட்டு துடிதுடித்தனர்.

நாமக்கல் பிராய்லர் வகை பள்ளிகளில் இது போன்று தொடர்ந்து பல சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பதால் ஸ்ரீமதி மரணத்தில் நீதி கேட்டு குற்றவாளிகளை தண்டிப்பதன் மூலம் அனைவருக்கும் ஒரு பாடம் புகட்ட முடியும் என்ற நம்பிக்கையுடன் தினமும் போராடிக் கொண்டிருந்தனர்.

அந்த வரிசையில் போராடியது தான் மக்கள் அதிகாரம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி. கள்ளக்குறிச்சி மாவட்ட செயலர் தோழர் ராமலிங்கம் தனது நோய்வாய்ப்பட்ட உடல், வயது முதிர்வு போன்ற எதையும் ஒரு பொருட்டாக கருதவில்லை.

ஒன்பதாவது படிக்கும் அவரது மகள் போல மற்றொரு மகள் தான் ஸ்ரீமதி என்ற கருத்துடன் நீதி கேட்டு போராடுவதற்கு சக்தி மெட்ரிக் பள்ளியில் நடந்த போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டார்.

மாணவர்கள், இளைஞர்களின் எழுச்சிமிகு போராட்டம் விழுப்புரம் துவங்கி சேலம், நாமக்கல், ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள பிராய்லர் பள்ளிகளில் எதிரொலித்து விடும் என்ற அச்சத்தில் ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் செய்யப்பட்ட கூலிப்படையால் வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்டது.

இந்த வன்முறை வெறியாட்டத்திற்கும், போராடிய அமைப்புகள், இயக்கங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் முதல்வர் ஸ்டாலின்  ‘கட்டுப்பாட்டில்’ உள்ள போலீசு மற்றும் மாவட்ட நிர்வாகமோ, ஆர்எஸ்எஸ் – பாஜக பின்னணியில் உள்ள பள்ளியின் நிர்வாகத்தை பாதுகாப்பதற்காக மக்கள் அதிகாரம், பெரியார் திராவிட கழகம் போன்றவற்றை பலி கொடுக்க தயாரானது.

இதையும் படியுங்கள்மாணவி ஸ்ரீமதி படுகொலை!திட்டமிட்டு குற்றவாளிகளை பாதுகாக்கும் தமிழக காவல்துறை!

300க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்களை கைது செய்து ஏறக்குறைய 50 நாட்களுக்கு மேல் சிறையில் வைத்திருந்தது. போலீஸ் மற்றும் நிர்வாகத்தின் சதித்தனங்களை அம்பலப்படுத்தி மக்கள் மத்தியில் நடத்தப்பட்ட தொடர் பிரச்சார இயக்கங்கள் மற்றும் சட்ட ரீதியான தொடர்ச்சியான போராட்டத்தின் காரணமாக மாணவர்கள், இளைஞர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றாலும் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட சிலரை குறி வைத்து போலீசு மற்றும் சிறப்பு புலனாய்வு குழு ஜோடிக்கப்பட்ட வழக்குகளின் கீழ் குண்டர் சட்டம் பாய்ச்சுவதற்கு தயாரானது.

சிறை கொடுமைகளுக்கும், சித்திரவதைகளுக்கும் கம்யூனிஸ்டுகள் எப்போதும் அஞ்சுவதில்லை. ஆனால் ‘பீமா கொரகான்’  ‘கள்ளக்குறிச்சி’ வரை வன்முறைக்கு தொடர்பு இல்லாத கம்யூனிஸ்டுகள், கம்யூனிசத்தை ஏற்றுக் கொண்ட ஜனநாயக வாதிகள், கம்யூனிசமே தீர்வு என்று பிரச்சாரம் செய்கின்ற சமூக செயல்பாட்டாளர்கள் அனைவரையும் ஒடுக்குவதன் மூலம், போராடுவதற்கு மக்கள் தயாராக மாட்டார்கள் என்ற துணிச்சல், நம்பிக்கை, திமிர்த்தனம் ஆளும் வர்க்கத்திற்கு இருக்கிறது.

இந்தக் கண்ணோட்டத்தில் தான் தோழர் ராமலிங்கம் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. அதற்கு எதிராக சட்டரீதியாக போராடுவோம். எனினும் மக்கள் மன்றத்தில் எமது போராட்டத்தின் நியாயத்தை முன் வைக்கிறோம்.

தோழர் ராமலிங்கம் உள்ளிட்டு அவருடன் அநீதியான முறையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யக்கோரி போராடுவோம், திமுக அரசின் போலீசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் பள்ளிக்கு ஆதரவான அனைத்து நடவடிக்கைகளையும் கண்டிப்போம்! மாணவியின் மரணத்திற்கு காரணமான உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசு மற்றும் தமிழக அரசின் மீது நிர்பந்தத்தை உருவாக்குவோம்!

  • பா. மதிவதனி

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here