மெரிக்க மேல்நிலை வல்லரசின் பதிலிப்போர் உத்தி காரணமாக ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்றுவருகிறது. இந்த போரின்‌ துவக்கப்புள்ளி “உக்ரைன் நாட்டை நேட்டோ அமைப்பில் இணைக்கும் முயற்சி” தான். இப்படி தூண்டியது மட்டுமல்ல, இராணுவ தளவாட உதவிகளையும் அமெரிக்கா செய்து வருகிறது. இன்னொருபுறம் ஈராக், ஆப்கன் தொடங்கி பல நாடுகளில் ‌நேரடி இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவின் இத்தகைய போக்கை அம்பலப்படுத்தும் விதமாக அமெரிக்க Congressional Research Service யின் அறிக்கை வெளியாகியுள்ளது.

மார்ச் 8, 2022 அன்று காங்கிரஸின் ஆராய்ச்சி சேவையகம் (CRS) “வெளிநாட்டில் அமெரிக்க ஆயுதப் படைகளைப் பயன்படுத்திய நிகழ்வுகள், 1798-2022” என்ற தலைப்பிலான ஆவணத்தை வெளியிட்டது.

அந்த அறிக்கை “1991 யிலிருந்து 2022க்குள் 31 ஆண்டுகளில் குறைந்தது 251 இராணுவத் தலையீடுகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. 1798 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் 218 இராணுவத் தலையீடுகளை அமெரிக்கா செய்துள்ளதாக” தெரிவிக்கிறது.

இந்த CRS அறிக்கையின்படி லத்தீன் அமெரிக்கா, கரீபியன் மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தின் பெரும்பாலான பகுதிகள் உட்பட, பூமியில் உள்ள பெரும்பாலான நாடுகளில் அமெரிக்க இராணுவம் தலையீடு செய்துள்ளது.

அந்த எண்ணிக்கை 1991க்கும் 2018 க்கு இடையில் 200 இராணுவத் தலையீடுகளாக வளர்ந்தது. 1991 இல் பனிப்போர் முடிவடைந்ததிலிருந்து, அமெரிக்க ஒற்றைத்துருவ மேலாதிக்கத்தின் தருணத்தில், வெளிநாடுகளில் வாஷிங்டனின் இராணுவத் தலையீடுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது அந்த அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது.

மொத்தம் 469 ஆவணப்படுத்தப்பட்ட வெளிநாட்டு இராணுவத் தலையீடுகளில், அமெரிக்க அரசாங்கம் 11 முறை மட்டுமே முறைப்படி போரை அறிவித்தது. இதுவும் ஐந்து தனித்தனி போர்களில் மட்டுமே என்று காங்கிரஸின் ஆராய்ச்சி சேவை குறிப்பிட்டுள்ளது.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு எதிராக, 1776 மற்றும் 1798 க்கு இடைப்பட்ட ராணுவ நிலைப்பாடுகள் மற்றும் அமெரிக்க உள்நாட்டுப் போர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை .

இதையும் படியுங்கள்: அமெரிக்க, ரசிய அரசுகளின் உலக மேலாதிக்க வெறிக்கு உக்ரைன் மக்கள் பலிகிடா!

CRS அறிக்கை “இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஆக்கிரமிப்புப் படைகளில் பங்கேற்பதற்காக வெளிநாட்டில் அமெரிக்கப் படைகள் நிறுத்தப்பட்ட, இரகசிய நடவடிக்கைகள் பட்டியலோ, அல்லது பரஸ்பர பாதுகாப்பு அமைப்புகள், அடிப்படை ஒப்பந்தங்கள் , வழக்கமான இராணுவ உதவி அல்லது பயிற்சி நடவடிக்கைகளோ இதில் சேர்க்கப்படவில்லை” என்று தெளிவுபடுத்தியுள்ளது.

CRS, “அமெரிக்காவின் மேற்குப் பகுதியை ஆய்வு செய்தல், குடியமர்த்துதல் மற்றும் அமைதிப்படுத்துதல் ஆகியவற்றில் அமெரிக்க இராணுவப் பிரிவுகளின் தொடர்ச்சியான பயன்பாட்டை” விட்டுவிட்டதாக ஒப்புக்கொண்டது.

டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் மூலோபாய ஆய்வு மையத்தில் உள்ள இராணுவத் தலையீடு திட்டம் இன்னும் அதிகமான வெளிநாட்டுத் தலையீடுகளை ஆவணப்படுத்தியுள்ளது. அந்த ஆவணத்தில் “அமெரிக்கா 1776 முதல் 500 க்கும் மேற்பட்ட சர்வதேச இராணுவ தலையீடுகளை மேற்கொண்டுள்ளது, 1950 மற்றும் 2017 க்கு இடையில் கிட்டத்தட்ட 60 சதவீதம் மேற்கொள்ளப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “மேலும் இந்த தலையீடுகளில் மூன்றில் ஒரு பங்கு 1999 க்குப் பிறகு நிகழ்ந்தது.” பனிப்போர் முடிவுற்ற பிறகு, அமெரிக்காவுக்கான அச்சுறுத்தல்கள் குறையும் என்ற நிலையில் இந்த இராணுவ நடவடிக்கைகள் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த அறிக்கைகள் அதற்கு நேர்மாறானதை வெளிப்படுத்துகின்றன-அமெரிக்கா வெளிநாடுகளில் அதன் இராணுவ ஈடுபாடுகளை அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.

செப்டம்பர் 11, 2001 இரட்டை கோபுர கட்டிடம் தாக்கப்பட்ட பிறகு அமெரிக்கா ‘பயங்கரவாதத்துக்கு’ எதிராக நடத்திய போர்கள், இராணுவ நடவடிக்கைகள் மூலம் 3.7 கோடி மக்கள் வாழ்விடத்திலிருந்து வெளியேறியுள்ளனர். அமெரிக்க இராணுவம்தான் உலகம் மக்களுக்கு எதிரான மிகப்பெரும் பயங்கரவாத அமைப்பாக உள்ளது. உலக மக்களின் அமைதிக்கும் வாழ்வுக்கும் முதன்மை எதிரியாய் நிற்கிறது அமெரிக்க மேல்நிலை வல்லரசு; கோடிக்கணக்கான மக்களை அகதிகளாக்கியுள்ளது. அதன் ஆக்கிரமிப்பு, மேலாதிக்க நடவடிக்கைகளை முறியடிக்காமல் உலக மக்களுக்கு விடிவில்லை.

திருமுருகன்

ஆதாரம்:

https://mronline.org/2022/09/16/u-s-launched-251-military-interventions-since-1991-and-469-since-1798/

https://www.nytimes.com/2020/09/08/magazine/displaced-war-on-terror.amp.html

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here