இன்றைய (ஜூன் 21) செய்தித்தாள்களில் சொல்லிவைத்தாற்போல் ஒரு செய்தி நம்முன் கடைவிரிக்கப்பட்டுள்ளது. அது அக்னிபாத் வீர்ர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றியது. அவர்கள் அக்னிபாத் பற்றி எழுதியுள்ளதில் உண்மை உள்ளதா என்று  கொஞ்சம் உரசிப்பார்க்கலாமா? அந்த‌ செய்தி வரிகளுக்கு இடையில் மறைந்துள்ள உண்மையை தெரிந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் தொடர்ந்து படியுங்கள்.

“4 ஆண்டு பணி முடிக்கும் அக்னி வீரர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு! மஹிந்திரா, ஆர்பிஜி, பயோகான் நிறுவனங்கள் அறிவிப்பு”

  • இது இந்து தமிழ் திசையின் 12ஆம் பக்க செய்தி.

இதையே தினமலர் எப்படி எழுதியுள்ளது தெரியுமா?

’அக்னிபத்’ வீர்ர்களுக்கு குவியும் வேலைவாய்ப்பு!  – என முதல் பக்கத்திலேயே போட்டு நீண்ட கட்டுரையையே எழுதியுள்ளது. ஏறக்குறைய இதே பாணியில்தான் தினமணி உள்ளிட்டவைகளும் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், டிவிஎஸ் மோட்டார்ஸ் உள்ளிட்ட கார்ப்பரேட்டுகள் வரவேற்று வேலை தர தயாராக இருப்பதாக தன் பங்குக்கு எழுதியுள்ளன.

தகுதியானவர்களுக்கு வேலை தர முன்வருவதும் அதை பத்திரிகைகள் எழுதுவதும் சரிதானே! இது வரவேற்க வேண்டியதுதானே என்று தோன்றுகிறதா? பொறுங்கள்! தங்கமா – பித்தளையா என‌ உரசிப்பார்ப்போம்.

கார்ப்பரேட்டுகளுக்கு என்ன அக்கறை?

      ஏற்கனவே EX.சர்வீஸ்மேன்களின் நிலை நமக்கு தெரியாதா? சர்வீஸ் முடித்த ஏகப்பட்ட வீர்ர்கள் வேலையின்றி கிடைக்கும் வேலையில் சேர்ந்து, செக்யூரிட்டியாக சல்யூட் அடிக்கிறார்கள். இன்று அக்னிபாத்துக்கு அறிவிப்பு தந்துள்ள எந்த கார்ப்பரேட்டுகளாவது இவர்களை பொருத்தமான பணியிடத்தில், கவுரமான சம்பளத்தில் வேலைக்கு எடுத்துள்ளார்களா என்பதை யோசியுங்கள்.

எங்கிருந்து வருகிறது திடீர் கரிசனம்?

இந்த ஆண்டு 10 வது படித்த,17 வயதை எட்டிய 40 ஆயிரம் இளைஞர்களுக்கு இளைஞர்களுக்கு நான்கு வருட ராணுவ பயிற்சி தொடங்க திட்டம். முதல் வருடம் என்பதால் வயதுவரம்பில் கொஞ்சம் சலுகை காட்டியுள்ளார் மோடி. தேர்வானவர்களுக்கு கீழ்படியவும், சிரமங்களை தாங்கவும், துணிந்து நிற்கவும், உடல் வலிமையை கூட்டவும் கடும் பயிற்சியை தரப்போகிறார்கள். இப்படி மோடி அரசே நம் வரிப்பணத்தில் நம் தம்பிகளை, மகன்களை வீரனாக்குகிறது. அவர்கள் நாட்டை காக்க எல்லைக்கோ, விமான, கடற்படை தளத்துக்கோ போகப்போவதில்லை.

அதில் நூற்றுக்கு 25% வீரர்களைத்தான் படைப்பிரிவுக்கு அனுப்பவுள்ளது மோடி அரசு. மீதமுள்ள 75 % பேரை (முதல் பேட்ஜில் 30 ஆயிரம் பேரை) – அதாவது இப்படிப்பட்ட ராணுவ பயிற்சியில் தேறிய இளைஞர்களை தயார் செய்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்குதான் சப்ளை செய்ய உள்ளது. அதனால்தான் மஹிந்திரா, அப்பல்லோ, டிவிஎஸ்கள் வேலைதரத் தயார் என்று கரிசனம் காட்டி குதூகளிக்கிறார்கள்.

மேற்கொண்டு படிக்க அனுமதிக்க விரும்புகிறார்களா?

கார்ப்பரேட்டுகள் இவ்வீரர்கள் படிப்பதை துளிகூட விரும்பவில்லை. உழைக்கும் வர்க்க ஏழை குடும்பத்தில் 10வது முடித்து, உடலை வருத்தி பயிற்சி செய்து அக்னிபாத்தில் தேர்வாகி, 4 வருட பயிற்சிக்குபின் இவர்களில் கல்லூரிக்கு போய் யாரும் எஞ்சினியரோ, டாக்டரோ, குறைந்த பட்சம் முதுகலை பட்டதாரியாகவோ கூட ஆகப்போவதில்லை. எந்த கல்வித்தந்தை, கல்வி வள்ளல்களும் இவர்களுக்கு தமது கல்லூரி, நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் இலவச சீட் தருவதாக அறிவிக்கவும் இல்லை. பின்னர் ஏன் அக்னிபாத்தை வரவேற்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

கார்ப்பரேட்டுகள் கொண்டாட என்ன காரணம்?

21 வயதான அக்னிபாத் இளைஞனை தாங்களே வேலைக்கு எடுப்பதாக மட்டும் அறிவிக்கிறார்களே அதன் பின்னுள்ள ரகசியம் என்ன? இவர்கள் கீழ்படிய மட்டுமே பழக்கப்படுத்தப்பட்டவர்கள் என்பதால், உரிமை கேட்கவோ, சங்கத்தில் சேர்ந்து போராடவோ மாட்டார்கள். ராணுவ பயிற்சியின் பலனாக ஷிப்ட் நேரமெல்லாம் பார்க்கத்தேவையில்லை. எப்போது கூப்பிட்டாலும் உடனே ஆஜராகி, எத்தனை மணி நேரம் வேலை செய்யச்சொன்னாலும் முணுமுணுப்பைக்கூட காட்டாமல், கடுமையாக உழைப்பார்கள். அதாவது உடல் உழைப்புக்கு அக்னிபாத்கள்; உடல் & தொழில்நுட்ப உழைப்புக்கு NEEM, FTE க்கள்.

இலவச அடியாட்களாக பயன்படுத்தப்படும் அக்னிபாத்கள்!

அதே நேரம் போராடும் தொழிலாளர்களை இவர்களை காட்டி மிரட்டுவதோடு, ஹெச்.ஆர்., மேனேஜர் உள்ளிட்ட அதிகாரிகளின் பாதுகாவலனாகவும் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ள முடியும். அக்னிபாத் தொழிலாளியை வைத்தே பிற தொழிலாளியை அடித்து நொறுக்கவைக்கவும் முடியும். இதன்மூலம் கூடுதலாக அடியாள் வேலைக்கு வரும் பவுன்சர்களுக்கான பெரும் செலவையும் தவிர்க்க முடியும். முதலாளிகளுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

இவ்வளவு எதிர்ப்பு வந்தும் மோடி அரசு பின்வாங்க மறுப்பது ஏன்?

தொழிற்சங்கங்கள் உதவியுடனோ, தாமாகவோ நிர்வாகத்தை எதிர்ப்பவர்களை எளிமையாக அடித்து வீழ்த்த முடியும். NEEM, FTE என்று இளைஞர்களை அத்துக்கூலிக்கு சுரண்டவிடாமல் தொழிலாளர் நல சட்டம் , உரிமை என்று எதிர்த்துபோராட்டம்  செய்பவர்களை கேட்டிலிருந்து கலைக்க வெளியிலிருந்து போலீஸ் படை வரத்தேவையில்லை.

ஒரு அதிகாரியை மட்டும் அனுப்பி அக்னிபாத் வீர்ர்களையே உள்ளிருந்தே அணிவகுக்க வைக்க முடியும். அமைதியான போராட்டத்தைக்கூட கேட்டிற்கு உள்ளும், வெளியிலும் தேவைக்கேற்ப இவர்களை வரவைத்து அடித்து கலைக்கவும் முடியும். தேவைப்பட்டால் தூத்துக்குடி போல துப்பாக்கியை தந்து சுடவைக்கவும் முடியும். இதன்மூலம் போலீசுக்கான, குறிபார்த்து சுடும் ஸ்னைப்பர்களுக்கான(Sniper) செலவையும்கூட குறைக்க முடியும். அப்படிப்பட்டவர்களை மட்டும்தான் அக்னிபாத்தின் மூலம் கார்ப்பரேட்டுகளுக்கு தயார் செய்து தரப்போகிறார்கள். அந்த வகையில் இனி காவிகள் ஆளும் மாநிலங்களில் போலீசிலும் (கர்நாடகா போல்) அக்னிபாத் அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

படிக்க:

இந்த கம்பெனி வேலையாவது நிலைக்குமா?

அதாவது, அக்னிபாத் இளைஞர்களுக்கு வேலை தருவதாக கூறி இவர்களை எடுப்பதே கம்பெனியில் உழைத்துக்கொண்டே போலீசு, பவுன்சர், ஸ்னைப்பர் என அனைத்தையும் ஃப்ரீ சர்வீஸாக செய்யவைத்து விடலாம் என்பதால்தான். கார்ப்பரேட்டுகள் இந்த அக்னிபாத் வேலையையாவது நிரந்தரமாக தருவார்களா? நிச்சயமாக தர மாட்டார்கள். இதுவும் NEEM போலத்தான்.

கார்ப்பரேட்டுகள் பரந்த மனதுடன் அடுத்தடுத்த ஒவ்வொரு ஆண்டும் 4 வருட பயிற்சியை முடித்து தேறிவரும் பேட்ஜ்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பார்கள்! அண்ணனின் இடத்துக்கு தம்பி வருவான். அண்ணனோ காண்ட்ராக்ட் கூலியாக வெளியே வாய்ப்பு தேடி கம்பெனி, கம்பெனியாக வாசலில் நிற்பான். இப்படி அக்னிபாத்துகளின் மூலம் பல்வேறு வகையில்  நாட்டை வல்லரசாக்கத்தான் மோடி அரசு கார்ப்பரேட்டுகளுடன் சேர்ந்து இப்படியெல்லாம் திட்டமிடுகிறது! நம்புங்கள்!

ஒருவழியாக செய்திகளை அலசிவிட்டோம். “பழையன கழிதலும் புதியன புகுதலும்” இயற்கையின் நியதியாற்றே என்று நாமும் வரவேற்கலாமா?

  • இளமாறன்.

2 COMMENTS

  1. //அவர்கள் நாட்டை காக்க எல்லைக்கோ, விமான, கடற்படை தளத்துக்கோ போகப்போவதில்லை.

    அதில் நூற்றுக்கு 25% வீரர்களைத்தான் படைப்பிரிவுக்கு அனுப்பவுள்ளது மோடி அரசு. மீதமுள்ள 75 % பேரை (முதல் பேட்ஜில் 30 ஆயிரம் பேரை) – அதாவது இப்படிப்பட்ட ராணுவ பயிற்சியில் தேறிய இளைஞர்களை தயார் செய்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்குதான் சப்ளை செய்ய உள்ளது. அதனால்தான் மஹிந்திரா, அப்பல்லோ, டிவிஎஸ்கள் வேலைதரத் தயார் என்று கரிசனம் காட்டி குதூகளிக்கிறார்கள்//

    உண்மையாகவா? செய்தி ஆதாரம் ஏதும் இருக்கிறதா, இல்லை ஊகமா?

  2. பாஜக-வின் நடைமுறைகளில் இருந்து அக்னிபாத் திட்டத்தை அணுகுவதை விடுத்து அதற்கு ஆதாரம் தேடுபவர்கள் கருப்பு பணம் ஒழிப்பு என்று பெயரில் பணம் மதிப்பிழப்பால் தொழிலை இழந்தவர்களை பற்றி அறிவித்தா பாஜக அந்த நடவடிக்கையை மேற்கொண்டது அல்லது வெளிநாடுகளில் இருந்து கருப்பு பணம் மீட்பதற்கு எனக்கு ஓட்டு போட்டு ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ள கார்ப்பரேட் சேவகன் மோடியின் பாசிச அடக்குமுறையை அனுபவித்து வருபவர்கள் உழைக்கும் மக்களே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here