ஆளும் வர்க்கத்தின் சமூக விரோதத் தாக்குதலுக்கு எதிராக தொழிலாளர்களின் பெருகி வரும் போராட்டங்கள்

2021 ஆம் ஆண்டு, தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், அதிகரித்து வரும் சுரண்டலுக்கு எதிராகவும் பல போர்க்குணமிக்கப் போராட்டங்களைக் கண்டது.

பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக முன்வந்து, ஒன்றுபட்டு போராடுவது அதிகரித்து வருகிறது. அரசியல் கட்சி அல்லது தொழிற்சங்க இணைப்பின் அடிப்படையில் அவர்களைப் பிரிக்கும் முயற்சிகளை மீறி அவர்கள் முன்வந்துள்ளனர்.

நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராகவும், வாழ்வாதாரப் பாதுகாப்பு, தொழிற்சங்கங்கள் அமைப்பதற்கான உரிமை, வேலைநிறுத்த போராட்ட உரிமை போன்ற நீண்ட காலப் போராட்டத்தின் மூலம் பெற்ற அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிராகவும் தொழிலாளர்கள் குரல் எழுப்பினர்.

பல துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிக ஊதியம் மற்றும் நல்ல வேலை நிலைமைகளுக்காகப் போராடினர். கதவடைப்பு மற்றும் ஆட்குறைப்பு போன்ற அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும் அவர்கள் போராடினார்கள்.

தனியார்மயத்தை எதிர்த்து பொதுத்துறை நிறுவனத் தொழிலாளர்கள் வீதிக்கு வந்தனர். வங்கி, காப்பீடு, மின்சாரம், இரயில்வே, இரும்பு, நிலக்கரி, விமான நிலையங்கள், ஏர் இந்தியா, துறைமுகங்கள், சாலைகள் போன்ற துறைகளில் உள்ள பொதுத்துறை ஊழியர்கள், பொது மக்களுடைய பணத்தில் உருவாக்கப்பட்ட சொத்துக்களை மிகப்பெரிய ஏகபோக முதலாளிகள் அதிக இலாபம் ஈட்டவும், மக்களைக் கொள்ளையடிக்கவும் உதவுவதற்காக அற்ப விலையில் ஒப்படைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளை எதிர்த்தனர்.

ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், தங்களைத் தொழிலாளர்களாக அங்கீகரித்து உரிய ஊதியம் வழங்க வலியுறுத்தி போராடினர். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அதிக ஊதியம் மற்றும் நல்ல பணிச் சூழலுக்காகவும், கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் சுகாதாரப் பாதுகாப்பைப் பறிக்கும் சுகாதார சேவைகள் தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிராகவும் போராடினர். கல்வியை பெரும்பாலான குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு எட்டாததாகச் செய்யும் கல்வியை தனியார்மயமாக்கும் முயற்சிகளை ஆசிரியர்கள் எதிர்த்தனர்.

2021-ல் நடந்த சில குறிப்பிடத்தக்க போராட்டங்களின் சுருக்கமான விவரங்களை கீழே பகிர்ந்து கொள்கிறோம்.

வங்கி ஊழியர்கள்

டிசம்பர் 16-17 தேதிகளில் நடைபெற்ற இரண்டு நாள் அனைத்திந்திய வேலைநிறுத்தத்தில் கிட்டத்தட்ட 9,00,000 தொழிலாளர்கள் பங்கேற்றனர். இந்த வேலைநிறுத்தத்திற்கு யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (UFBU) அழைப்பு விடுத்திருந்தது. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரின் போது வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2021-ஐ நிறைவேற்றுவதற்கான அரசாங்கத்தின் முடிவை வங்கி ஊழியர்கள் எதிர்த்தனர். ஏகபோக முதலாளிகள் அதிகபட்ச இலாபம் ஈட்டுவதற்காக, பொதுத்துறை வங்கிகளை தனியார் கைகளுக்கு மாற்றும் முதலாளி வர்க்கத்தின் தேசவிரோத, சமூக விரோதத் திட்டத்தை முறியடிக்கும் தங்கள் உறுதியை வேலைநிறுத்தத்தின் மூலம் வங்கி ஊழியர்கள் வெளிப்படுத்தினர். வங்கிகளை தனியார்மயமாக்குவது எப்படி பொது மக்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் நலன்களுக்கு எதிரானது என்பதை மக்களுக்கு விளக்குவதற்காக வங்கி ஊழியர்கள் அனைத்திந்திய அளவில் பரப்புரையை மேற்கொண்டுள்ளனர்.

வங்கி ஊழியர்களின் போராட்டத்தின் விளைவாக, வங்கிச் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் முன் வைக்கப் போவதில்லையென அரசு கடைசி நேரத்தில் முடிவு செய்துள்ளது.

காப்பீட்டுத் தொழிலாளர்கள்

ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார்மயப்படுத்தும் முயற்சிக்கு எதிராகவும், காப்பீட்டுத் துறைக்கான அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு 49% லிருந்து 74% ஆக உயர்த்தப்படுவதற்கு எதிராகவும் காப்பீட்டு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் 17 மார்ச் 2021 அன்று அனைத்திந்திய வேலை நிறுத்தத்தை ஏற்பாடு செய்து நடத்தினர்.

பாதுகாப்புத் துறைத் தொழிலாளர்கள்

ஆயுதத் தொழிற்சாலை வாரியம் நிறுவனமயப்படுத்துவதற்கு எதிராக இந்தியாவின் பாதுகாப்புத் துறை தொழிலாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஆயுதத் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் மற்றும் பிற பாதுகாப்புத் துறைத் தொழிலாளர்களின் ஒன்றிணைந்த எதிர்ப்பையும் மீறி அரசாங்கம் இந்த நிறுவனமயமாக்கல் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோமென அச்சுறுத்தியபோது, ​​அரசாங்கம் சூன் 30 அன்று அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் ஆணை (EDSO) 2021-ஐ கொண்டு வந்தது. பின்னர் இது, சூலை 23, 2021 அன்று பாராளுமன்றத்தால் ரப்பர் முத்திரையிட்டு, சட்டமாக மாற்றப்பட்டது. பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி, சேவைகள், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களின் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களை இந்தச் சட்டம் தடை செய்கிறது. வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள், பணிநீக்கம் செய்து கைது செய்யப்படுவார்களென அச்சுறுத்துகிறது.

அனைத்து ஆயுதத் தொழிற்சாலைகள் மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள், தத்தம் பணியிடங்களில் இந்த அவசரச் சட்டத்திற்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகளை நடத்தினர். ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், கேரளா, தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் உள்ள அரசு ஊழியர்களும், பிற பொதுத்துறை ஊழியர்களும் பாதுகாப்பு ஊழியர்களுக்கு ஆதரவாகவும், வேலைநிறுத்த உரிமை மீதான தாக்குதலுக்கு எதிராகவும் முன்வந்து ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர். பாதுகாப்புத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்களும் தொழிலாளர் அமைப்புகளும் சூலை 23 அன்று ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

மின்சாரத் தொழிலாளர்கள்

மின்சார ஊழியர்கள் மற்றும் பொறியாளர்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் (NCCOEEE) தலைமையில், மின்சாரத் தொழிலாளர்கள் ஆகஸ்ட் 3-6, 2021 இல் நான்கு நாட்கள் வேலை நிறுத்தத்தையும் புதுதில்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் கண்டனப் போராட்டத்தையும் நடத்தினர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட இருந்த மின்சாரம் (திருத்தம்) சட்டத்தை 2021-ஐ இரத்து செய்ய வேண்டுமென அவர்கள் கோரினர். மின்சாரத் துறையில் தற்போதுள்ள அனைத்து தனியார் உரிமங்களையும், அனுமதிகளையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும், மாநிலங்களிலும் ஒன்றியப் பிரதேசங்களிலும் மின்சாரத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக, சூலை 19 அன்று, அவர்கள் நாடு முழுவதும் போராட்டங்களை ஏற்பாடு செய்து நடத்தினர். மின்சார விநியோகத்தை தனியார் மயமாக்குவதால் ஏற்படும் பாதகமான விளைவுகளை மக்களுக்கு விளக்குவதற்காக அனைத்திந்திய அளவில் பரப்புரையை மேற்கொண்டனர். குறிப்பாக, கிராமப்புறங்களுக்கு கொடுக்கப்பட்டு வரும் மின்சாரத்திற்கான மானியத்தை நிறுத்த அரசு எப்படி திட்டமிட்டுள்ளது என்பதை விளக்கும் வகையில் விவசாயிகளிடையே மின்வாரிய ஊழியர்கள் பரப்புரை செய்தனர்.

மின்வாரிய ஊழியர்களின் போர்க்குணமிக்க போராட்ட மனப்பான்மை காரணமாக, மின்சாரத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அரசாங்கம் இன்னும் தாக்கல் செய்யவில்லை

இரயில்வே தொழிலாளர்கள்

இரயில்வேயை தனியார்மயமாக்கும் பல்வேறு நடவடிக்கைகளை எதிர்த்து இந்திய இரயில்வேயின் பல்வேறு பிரிவுகளில் உள்ள என்ஜின் டிரைவர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள், கார்டுகள், டிராக்மேன்கள் போன்றவர்கள் போராடி வருகின்றனர். அவர்கள் தங்கள் பணியின் மனிதாபிமானமற்ற நிலைமைகளுக்கு எதிராகப் போராடுகிறார்கள். தங்களின் தற்போதைய பணிச்சுமையை குறைக்கும் வகையில் காலி பணியிடங்களில் புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நிலுவையில் உள்ள தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 7 முதல் 9 வரை, அனைத்திந்திய லோகோ ரன்னிங் ஸ்டாஃப் அசோசியேஷன் இந்தியா முழுவதும் போராட்டங்களை நடத்தியது.

செப்டம்பர் 13-18 தேதிகளில் பல்லாயிரக்கணக்கான இரயில்வே ஊழியர்கள் நாடு முழுவதும் எதிர்ப்புப் பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். மத்திய அரசின் “பணமாக்கல்” திட்டத்தின் கீழ் இந்திய இரயில்வேயின் பல்வேறு சொத்துக்களைத் தனியார்மயமாக்கும் அரசின் முடிவை எதிர்த்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.

சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்கள்

தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம், மராட்டியம், கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு மற்றும் கடந்த கால நிலுவைத் தொகையை வழங்கக் கோரி தமிழக அரசு சாலைப் போக்குவரத்து ஊழியர்கள் நவம்பர் மாதம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மராட்டிய மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (MSRTC) தொழிலாளர்கள், வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் மீது மெஸ்மா (MESMA) விதிக்கப்பட்டதை எதிர்த்தும், இந்த ஆண்டு அக்டோபரில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக ஊழியர்களை இடைநீக்கம் செய்து பணிநீக்கம் செய்ததை எதிர்த்தும் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு மற்றும் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, ராஜஸ்தான் சாலைப் பணியாளர்கள் அக்டோபர் மாதத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்தத் தொழிலாளர்களை முறைப்படுத்தக் கோரி இமாச்சல் சாலைப் போக்குவரத்துக் கழக (HRTC) ஊழியர்கள் சூன் 2021 இல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள்

செப்டம்பர் 24, 2021 அன்று, நாடு முழுவதும் உள்ள சுமார் ஒரு கோடி ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள்/உதவியாளர்கள், பள்ளி சமையல்காரர்கள் மற்றும் பல்வேறு அரசுத் திட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் செய்தனர்.

ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், தங்களைத் தொழிலாளர்களாக அங்கீகரித்து நோய் விடுப்பு, பேறுகால விடுப்பு, பணிக் கொடை, ஓய்வூதியம் போன்ற பிற பயன்களோடு, சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

நிரந்தர ஊழியர்களைப் போல நிலையான சம்பளம் ஆஷா ஊழியர்களுக்குக் கிடைப்பதில்லை. அவர்களின் சேவைகளுக்கு அரசாங்கத்தால் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, ​​போதுமான பாதுகாப்பு கவசங்கள் கூட இல்லாமல், தங்கள் உயிரையும் ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து, அவர்கள் அடிக்கடி நீண்ட மணிநேரம் வேலை செய்தபோது, ​​அவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகைகள் வழங்கப்படுமென வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. ஆனால், அவர்களுக்கு ஊக்கத்தொகைகள் வழங்கப்படவில்லை. தங்களது நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, ஆஷா ஊழியர்கள், ஆகஸ்ட் 2021 இல் புதுதில்லியில் நாடாளுமன்றத்தின் முன் பெரும் போராட்டத்தை நடத்தினர்.

கடந்த ஆண்டில் ஒடிசா, குஜராத், அரியானா, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆஷா பணியாளர்கள் பல வேலைநிறுத்தங்களையும் போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். 70,000 ஆஷா பணியாளர்கள் அதிக ஊதியம், வேலையை முறைப்படுத்துதல் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றைக் கோரி சூன் 2021 இல் மராட்டியத்தில் வேலைநிறுத்தம் செய்தனர்.

மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள்

பணி நிரந்தரம், ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் அரசு மருத்துவமனைச் செவிலியர்கள் போராட்டம் நடத்தினர். பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல போராட்டங்களில் பங்கேற்றுள்ளனர். நீண்ட வேலை நேரம், மோசமான வேலை நிலைமைகள், குறைந்த சம்பளம் உள்ளிட்ட தங்களின் பிரச்சனைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். தில்லி நகராட்சியால் நடத்தப்படும் மருத்துவமனைகளில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்கள் ஊதியத்தைப் பெறுவதற்காக பலமுறை வேலைநிறுத்தம் செய்ய வேண்டியிருந்தது.

சூலை தொடக்கத்தில், மத்திய பிரதேச மாநிலம் முழுவதும் மருத்துவமனை செவிலியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தேசிய சுகாதார திட்ட (NHM) செவிலியர்களும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். நிலுவையில் உள்ள கோரிக்கைகளுடன் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை செவிலியர்கள் வலியுறுத்தினர்.

தேசிய சுகாதார திட்டத்தின் (NHM) கீழ் பணிபுரியும் உத்தரபிரதேசம் முழுவதும் உள்ள அரசு சுகாதார சேவைகளில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் டிசம்பர் 2021 தொடக்கத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள், நிரந்தரத் தொழிலாளர்களுக்கு இணையான ஊதியம், ஊதிய உயர்வு, வேலைகளை முறைப்படுத்துதல், மனிதாபிமானம் கொண்ட இடமாற்றக் கொள்கை, கொரோனா உடல்நலக் காப்பீட்டுப் பலன்கள் மற்றும் வேலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான இழப்பீடு ஆகியவற்றை கோரினர்

ஊதிய உயர்வு மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவர்கள் போராடினர்.

இதற்கிடையில், உயர் கல்வி நீட் நேர்முகத் தேர்வின் தாமதத்தின் காரணமாக, மருத்துவமனைகளில் புதிய மருத்துவர்களை சேர்ப்பது நிறுத்தப்பட்டு, தற்போது பணிபுரியும் மருத்துவர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதற்கு எதிராக தில்லி மற்றும் பிற நகரங்களில் வசிக்கும் மருத்துவர்கள் சங்கத்தின் (FORDA) கீழ் அணி திரட்டப்பட்டுள்ள மருத்துவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

பெரும் தொழிற்சாலைத் தொழிலாளர்கள்

தமிழகத்தில் பல பெரும் உற்பத்தித் தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், சுரண்டலுக்கு எதிராகவும், கொரோனா தொற்று நோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள், தொழிற் சங்க அங்கீகாரம், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, தங்குமிட வசதிகள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

ஃபோர்டு வாகன உற்பத்தி நிறுவனம் அறிவித்த தொழிற்சாலை மூடுதல் குறித்த அறிவிப்பை எதிர்த்து வேலை உரிமையை கோரி ஃபோர்டு தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா பெருந்தொற்று நோய்க்கு எதிரான தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கோரி ஹூண்டாய் தொழிலாளர்கள் போராட்டம்.

தொழிற்சங்க அங்கீகாரம் கோரி சான்மினா தொழிற்சாலைத் தொழிலாளர்கள் விடாப்பிடியாகப் போராடினர்.

சுகாதாரமான உணவு, தங்குமிட வசதிகள் கோரி ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையை முற்றுகையிட்டனர்.

ஆசிரியர்கள்

புதிய கல்விக் கொள்கைக்கும், உயர்கல்வியை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளுக்கும் எதிராக அனைத்து மத்திய மற்றும் மாநிலப் பல்கலைக்கழகங்களில் பணி புரியும் ஆசிரியர்கள் பல போராட்டங்களை நடத்தினர். மேலும், பல ஆண்டுகளாக காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் புதிய நியமனம் மூலம் நிரப்ப வேண்டுமெனவும், ஒப்பந்த மற்றும் தற்காலிக ஆசிரியர்களை முறைப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.

தில்லி மாநகராட்சிப் பள்ளிகளில் பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிக ஊதியம் மற்றும் பணியிடங்களை முறைப்படுத்தக் கோரி அழைப்பு (கெஸ்டு) ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

2021 ஆம் ஆண்டில் தொழிற்சங்கங்களும் தொழிலாளர் அமைப்புகளும் ஒன்றிணைந்து தனியார்மயமாக்கல் மற்றும் அவர்களின் உரிமைகள் மீதான வளர்ந்து வரும் தாக்குதல்களை எதிர்த்து பல கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல் முதலாளித்துவ ஏகபோகங்களின் பேராசையை நிறைவேற்றுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பொருளாதாரத்தின் தற்போதைய போக்கிற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்களின் ஒற்றுமை அதிகரித்து வருகிறது.

சமூகத்தின் பெரும்பான்மையாக உள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் முடிவெடுப்பவர்களாகவும், பொருளாதாரம் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் இருக்கும் ஒரு அமைப்பை நிறுவுவதை நோக்கி தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டம் இயக்கப்பட வேண்டும்.

நன்றி

CGPI இணையதளம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here