பழங்குடி மக்களின் தலைவராக பிர்சா முண்டாவிற்கு அடுத்து  உருவாகியுள்ள ஹிட்மா.
பழங்குடி மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு கடந்த அரை நூற்றாண்டு காலமாக போராடி வருகின்ற மாவோயிச இயக்கத்தையும், அதன் முக்கிய தளபதியாக விளங்கிய ஹிட்மாவையும் முற்றாக ஒழிப்பதற்கு திட்டமிட்டு ஒழித்துக் கட்டி உள்ளனர்.

ந்திய மக்கள் தொகையில் சுமார் 8.6 சதவீதம் உள்ள 700க்கும் மேற்பட்ட பெயர்களில் உள்ள பழங்குடி மக்கள் எண்ணிக்கை 11 கோடியாகும்.. இந்த நாட்டின் பூர்வகுடி மக்களான பழங்குடி மக்கள் தங்களது நிலங்களை பாதுகாப்பதற்கு பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் போது போராடிக் கொண்டிருந்தார்கள்.

பிரிட்டன் ஜமீன்தாரி என்ற முறையில் நிலங்களை பங்கிட்டு கொடுத்த போது பழங்குடி மக்களின் நிலங்களை ஜமீன்தார்கள் கடனுக்கு ஈடாகவும், ஆதாரங்கள் ஏதுமில்லாத போதிலும் பிடுங்கிக் கொள்வது என்று பெரும்பான்மை பழங்குடி மக்கள் ஏமாற்றப்பட்டு கொண்டிருந்தனர்.

அவ்வாறு ஏமாற்றப்பட்ட பழங்குடி மக்களின் தலைவனாக வெகுண்டெழுந்தவர் தான் பிர்சா முண்டா. பழங்குடி மக்களை திரட்டி போராடியதன் காரணமாகவே காலனி ஆதிக்கத்தின் கொடும் சிறைக்குள் அடைக்கப்பட்டு தனது 25 வயதிலேயே மரணத்தை எதிர்கொண்ட மாவீரன் தான் பிர்சா முண்டா.

வெள்ளையரை எதிர்த்துப் போராடிய தங்களது மூதாதையரான பிர்சா முண்டா இறந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆதிவாசிகளின் நில உரிமையைக் காக்க “சோட்டாநாக்பூர் நிலக் குத்தகைச் சட்டம் 1908” கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தை நீர்த்துப் போக பாராதிய ஜனதா கட்சி 2016 -இல் மேற்கொண்ட முயற்சியின் விளைவுதான் பத்தல்கடி இயக்கத்திற்கான அடிப்படையாகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பழங்குடி மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு பல்வேறு பாதுகாப்பு கவசங்களை கொடுத்துள்ளதாக இந்திய ஆளும் வர்க்கங்கள் கடந்த முக்கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக பழங்குடி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

அரசியலமைப்புச் சட்டம் முன்வைக்கின்ற பழங்குடி மக்களின் உரிமை பற்றி பாந்த்ராவின் கல்வெட்டு என்ன சொல்கிறது?

இந்திய அரசமைப்பின் நான்கு பிரிவுகளை கீழ்கண்ட சொற்களில் அவை பிரதிபலிக்கின்றன.

இந்திய அரசியல் சட்டம் பிரிவு 13(3)(a)இன்படி, மரபு அல்லது பாரம்பரியம்தான் சட்டத்தின் உந்து சக்தி, அதுவே அரசமைப்பின் பலம்.

இந்திய அரசியல் சட்டம் பிரிவு 19(5)இன்படி, பட்டியல் மாவட்டங்கள் அல்லது பகுதிகளில் (scheduled districts or areas) வெளி ஆட்கள் அல்லது வழக்கத்திற்கு மாறான நபர்கள் நடமாடவோ, குடியிருக்கவோ, நிலைபெறவோ மற்றும் சுற்றி வரவோ அனுமதி கிடையாது.

பட்டியல் பகுதிகளில் வெளி ஆட்கள் வணிகம் செய்வதை, வர்த்தகம் அல்லது வேறு வகையிலான வேலை வாய்ப்புகளில் ஈடுடுவதை இந்திய அரசியல் சட்டம் பிரிவு 19(6) தடை செய்கிறது.

இந்திய அரசியல் சட்டம் பிரிவு 244(1)(b), பாரா 5(1) இன்கீழ் நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றத்தால் இயற்றப்படும் எந்த ஒரு சட்டமும் பட்டியல் பகுதிகளுக்கு பொருந்தாது.

மேற்கண்ட வாசகங்கள் இந்திய அரசியல் சட்டத்தின் நேரடிப் பிரதிகள் அல்ல என்றாலும் குந்த்தி ஆதிவாசிகள் அதற்கு மேற்கண்டவாறு விளக்கம் தருகின்றனர் என்பது தெரிகிறது.

உதாரணமாக, பட்டியல் பகுதிகளில் அதாவது ஆதிவாசிகள் பெருமளவில் இருக்கின்ற பகுதிகளில் அந்நியர்கள் நேரடியாக நுழைவதை அரசியல் சட்டப் பிரிவு 19(5) தடை செய்யவில்லை. மாறாக, பழங்குடி மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் அப்பகுதியில் வெளியாட்கள் சுதந்திரமாக பிரவேசிக்க, வசிக்க, வர்த்தகம் மற்றும் தொழில் செய்ய கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டங்களைக் கொண்ட வர மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்பதைத்தான் அரசியல் சட்டப் பிரிவு 19(5) சொல்கிறது.

படிக்க:

 போலி மோதல் கொலையில் கொல்லப்பட்ட மத்வி ஹிட்மா

 தொடரும் நக்சல் வேட்டை; மாவோயிஸ்ட் தலைவர்கள் படுகொலை; இந்தியப் புரட்சிக்கு பின்னடைவா?

பழங்குடி ஆலோசனைக் குழுவை கலந்தாலோசித்து பிறகு பட்டியல் பகுதிகள் தொடர்பாக நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றம் இயற்றும் சட்டங்கள் செல்லாது என மாநில ஆளுநர் அறிவிப்பதற்கு அரசியல் சட்டப் பிரிவு 244(1) அனுமதி அளிக்கிறது. பழங்குடி ஆலோசனைக் குழுவை கலந்தாலோசித்த பிறகு மாநில ஆளுநர் அறிவித்தால் மட்டுமே பொதுவான சட்டங்களை பட்டியல் பகுதிகளில் பிரயோகிக்க முடியும் என குந்த்தி ஆதிவாசிகள் விளக்கம் அளிக்கின்றனர்.

மேற்கண்ட அரசியல் சட்டப் பிரிவுகளை இந்திய நீதி மன்றங்கள் விரிவாக ஆய்வு செய்து, பழங்குடி மக்களின் பண்பாடு மற்றும் சுயாட்சித் தன்மையை பாதுகாக்கவே அரசமைப்பு முற்படுகிறது என்பதை புகழ் பெற்ற 1997 சமந்தா தீர்ப்பு மற்றும் இதர பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகள் வெளிப்படுத்தி உள்ளன என்று அரசியலமைப்புச் சட்டத்தின் ஆதரவாளர்கள் நீண்ட காலமாக வாதம் புரிந்து வருகின்றனர்.

இந்த சட்ட ரீதியான வாய்ப்புகள் எதையும் பழங்குடி மக்கள் அனுபவிப்பதற்கு பழங்குடிகளிலேயே ஒரு பிரிவினர் மிகப் பெரும் தடையாக உள்ளனர். அதாவது பழங்குடிகளில் மேல்தட்டு வர்க்கத்தினர் பாமர, படிப்பறிவற்ற பழங்குடி மக்களை ஏமாற்றி பிழைக்கின்ற குழு தலைவர்களாகவும் ஆளும் வர்க்கத்தின் அடியாள் படை மற்றும் ஏஜென்ட்களாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

மத்திய இந்தியாவின் பெரும்பான்மை பகுதிகளில் பரவிக் கிடக்கும் கனிம வளங்கள் இத்தகைய பழங்குடிகள் வாழ்கின்ற அடர்ந்த வனக்காடுகளின் கீழே உள்ளது என்பதுதான் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு உள்ள ஒரே பிரச்சனை.

இந்தப் பழங்குடி மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு கடந்த அரை நூற்றாண்டு காலமாக போராடி வருகின்ற மாவோயிச இயக்கத்தையும், அதன் முக்கிய தளபதியாக விளங்கிய ஹிட்மாவையும் முற்றாக ஒழிப்பதற்கு திட்டமிட்டு ஒழித்துக் கட்டி உள்ளனர்.

பிர்சா முண்டாவிற்கு அடுத்து பழங்குடி மக்களின் மிகப்பெரும் தலைவராக உருவெடுத்துள்ள ஹிட்மா சித்தாந்த ரீதியாக மாவோயிசத்தை ஏற்றுக் கொண்டார் என்பதும், பழங்குடி மக்களை அவர்களின் அறியாமையிலிருந்து விடுவிப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தை நம்பாமல், ‘ காடுகள் அனைத்தும் பழங்குடிகளுக்கு சொந்தம், கனிம வளங்கள் அனைத்தும் பழங்குடி மக்களின் வளர்ச்சிக்காகவே பயன்படுத்த வேண்டும் என்ற முழக்கங்களின் அடிப்படையில் போராடிக் கொண்டிருந்த ஹிட்மாவை மிகப்பெரும் அபாயகரமானவர் என்று அறிவித்து கொன்று ஒழித்துள்ளனர்.

ஆனால் நெருப்பை பொட்டலம் கட்ட முடியாது என்பதைப் போல பழங்குடி மக்கள் மத்தியில் உள்ள படித்த இளைஞர்கள் எழுதி ஒளிபரப்பியுள்ள ஹிட்மா பற்றிய பாடல் இந்தியாவின் காடுகள் எங்கும் ஒலிக்க துவங்கியுள்ளது. சமீபத்தில் நடந்த ஜார்கண்ட் மாநிலத்தின் பேரணியில் இந்த பாடல் ஒரு எழுச்சியை உருவாக்கியுள்ளது.

காலனி ஆதிக்கத்தின்போது எதிர்த்துப் போராடிய பிர்சா முண்டா விடுதலை பெற்ற இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட தலைவராகவும் பாராளுமன்றத்தில் உள்ள தலைவர்களின் படங்களில் ஒருவராகவும், ஜார்கண்ட் மாநிலத்தில் விமான நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றிற்கு அவரது பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது.

அதுபோலவே வரலாற்றின் பக்கங்களில் இருந்து ஆளும் வர்க்கங்கள் துடைத்தெறியப்படும் போது ஹிட்மாக்களின் பெயரும் அங்கே பதிக்கப்படும்.. இதுவே இந்திய மக்களின் விடுதலைக்காகவும், பழங்குடி மக்களின் விடுதலைக்காகவும் தனது  இன்னுயிரை இழந்த தியாகிகளுக்கு நாம் செய்யும் நன்றி கடன் ஆகும்.

  • மருதுபாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here