“விஷ்ணு பன்றி அவதாரமெடுத்து இரண்யாட்சனைக் கொன்றுவிட்டுத் திரும்பும் காலையில், பன்றி தான் கொண்டு வந்த பூமியைத் தனக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய உரிமை இருக்கிறதென்று கருதி அந்தப் பூமியையே அந்த பன்றி புணர்ந்ததாம். பூமியும் அதற்கு சம்மதித்து இடம் கொடுத்ததாம்.

அப்போது பூமி கர்ப்பமாகி ஒரு குழந்தையையும் பெற்று விட்டதாம். அக்குழந்தைக்கு நரகாசூரன் என்று பெயர் இட்டார்களாம். ஏன் அப்பெயர் இட்டார்கள் என்றால் நரகலைச் சாப்பிடுகின்ற பன்றிக்கும், நரகலைச் சுமக்கின்ற பூமிக்கும் குழந்தை பிறந்ததால் நரகன் என்று பெயர் இடாமல் வேறு என்ன பெயர் இடுவார்கள்?

இப்படிப் பிறந்த இந்தக் குழந்தை வங்காளத்துக்கும், அஸ்ஸாமுக்கும் மத்தியில் உள்ள ஒரு பிரதேச அரசனாக இருந்து கொண்டு பிரம்மாவின் மனைவியின் காதணியையும் வருணனின் ஆயுதத்தையும் பிடுங்கிக் கொண்டு, இந்திரனின் சிம்மாசனத்தையும் தூக்கிவர எத்தனித்தானாம்.

அதோடு தேவர்களுக்கு தொல்லை கொடுத்தானாம்; உலகத்தையும் துன்புறுத்தினானாம். தேவர்களுக்காக கிருஷ்ண பகவான் வந்து இந்த அசுரனை வதம் செய்தாராம். அந்த நாளை கொண்டாடுவதுதான் தீபாவளியாகும்”. இதுதான் தீபாவளி பற்றிய புராணக் கதை.

இந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் தீபாவளி பல ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது என்றாலும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற புதிய தாராளவாதக் கொள்கை அமல்படுத்த துவங்கிய பிறகு ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் உருவாக்கிய பல்வேறு வகையான நுகர்வு பொருட்களை காலனி, அரைக் காலனி, மறுகாலனிய நாட்டு மக்கள் தலையில் கட்டுவதற்கு இது போன்ற பிற்போக்குத்தனமான மதப் பண்டிகைகளை தீவிரமாக கொண்டாட வைக்கிறார்கள். அதேபோல இந்தியாவிலும் தீபாவளி உள்ளிட்ட மத பண்டிகைகளை கொண்டாட ஊக்கப்படுத்துகின்றனர். அதற்காக அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் பார்ப்பனியமும், ஏகாதிபத்திய முதலாளித்துவமும் இணைந்து பிறந்த மதப் பண்டிகைகளில் முதலிடம் வகிக்கின்றது தீபாவளி. தீபாவளியை ஒட்டி அமேசான் 29 ஆயிரம் கோடிக்கு வருவாய் ஈட்டி உள்ளது, தீபாவளி பண்டிகை கால இலக்காக ஒரு லட்சம் கோடிக்கு ஆன்லைன் வர்த்தகம் மூலமாக நுகர்வு பொருட்களை விற்று தீர்க்க வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளது கார்ப்பரேட்டுகள் என்பது சாதாரண விவகாரம் அல்ல. இந்தியாவில் 2025 ஆம் ஆண்டுக்குள் வளரப்போகும் சில்லறை வர்த்தகத்தின் மூலம் புழங்கும் 100 லட்சம் கோடிகளை சுருட்டுவதற்கு இந்த ஆன்லைன் வர்த்தகம் வெறிகொண்டு அலைகிறது. விளைவு லட்சக்கணக்கான வர்த்தகர்கள் பாதிப்படைந்துள்ளனர்.. உழைப்பாளிகள் கையில் இருக்கும் சில்லறை சேமிப்பும் நுகர்வு வெளியூட்டப்பட்டு உறிஞ்சப்படுகிறது.

இதையும் படியுங்கள்: அமேசான் அமோக விற்பனை! மார்க்ஸ் சொன்னது உண்மைதான்!

“விஷ்ணு, அசுரர்களால் கடைந்து எடுக்கப்பட்ட அமிர்தத்தை வஞ்சித்து தேவர்களுக்குக் கொடுப்பதற்காக அசுரர்களை ஏமாற்ற மோகினி அவதாரமெடுத்தார் என்கிறது தீபாவளி பற்றிய புராணம். ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் லாப வேட்டைக்காக, சுரண்டப்படும் கோடிக்கணக்கான பாட்டாளி வர்க்கத்தின் உழைப்பு கடைந்தெடுக்கப்பட்டு திரட்டப்படும் நிதி மூலதனம், மீண்டும் பல்வேறு நாடுகளின் செல்வ வளங்களை உறிஞ்சி கொழுப்பதற்கு ஏகாதிபத்தியங்கள் மறுகாலனியாக்க ‘மோகினி அவதாரம்’ எடுத்து ஆட்டம் ஆடுகிறது.

“தேவர்களுக்கு அமிர்தத்தை வழங்கிய  காரியம் தீர்ந்த உடன் சிவனுக்கு அந்த மோகினி அவதாரத்தின்மீது ஆசை வந்து, அவர் பின் திரிந்து, மோகினி இணங்காமல் போனதால் மோகினியை பலாத்காரம் செய்தாராம். இந்த பலாத்காரத்தின் போது,, சிவன் இந்திரியம் பூமியில் கொட்டப்பட அந்த இந்திரியம் பூமியில் வெள்ளி தங்கமாக வேர் இறங்கிவிட்டன. அதுதான் இன்று வெள்ளியும் தங்கமுமாம்.” என்று விளக்குகிறது தீபாவளி புராணக் கதை.

தங்கமும், வெள்ளியும் இன்றளவும் பாட்டாளி வர்க்கத்தின் மீதான உழைப்பு சுரண்டலை தீவிரப் படுத்துகிறது. இதற்கு இணையாக பல்வேறு வகையான நுகர்வு பொருட்களை உருவாக்குவதன் மூலம் நவீன முறையில் பாட்டாளி வர்க்கத்தின் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. என்னே நிதி மூலதன ‘மகாவிஷ்ணுவின்’ திருவிளையாடல்.

பன்றி அவதாரம் எடுக்க வேண்டிய கொடுமை மகாவிஷ்ணுவுக்கு நிகழ்ந்தது ஏனென்றால் தேவர்களை பாடாய்படுத்திய  இரணியாட்சனை கொல்வதற்கு தான். பூமியை பாயாக சுருட்டி எடுத்துக்கொண்டு ஓடி கடலுக்குள் புகுந்து கொண்ட இரணியாட்சனை கண்டுபிடித்து வதம் புரிந்த மகாவிஷ்ணு போல பூமிக்கு அடியில் இருக்கும் கனிம வளங்களை, கடலுக்கு அடியில் தேங்கி கிடக்கும் இயற்கை வளங்களை, மலைகளுக்குள் புதைந்து கிடக்கும் தனிமங்களை, தாதுக்களை வெட்டி எடுத்து லாப வேட்டையாடி வருகிறது நிதி மூலதன மகாவிஷ்ணு.

இதையும் படியுங்கள்: தீபாவளி தேவையா ? தந்தை பெரியார்

“திராவிட மக்களை அசுரன், இராட்சதன், அரக்கன் என்று கூறி அவர்களை இழிவு செய்ய எழுதினதல்லாமல் வேறு என்ன இது? வங்காளத்தில் ஆரியர் வரும் முன்பு திராவிடர்கள்தானே ஆண்டு கொண்டிருந்திருக்க வேண்டும்? ஆரியர்கள், திராவிடர்களைக் கொல்வதானால் மானம், வெட்கம் பார்க்காமல் மிருகங்களுடன் புணர்ந்தானாலும் சரி, மலத்தைத் தின்னாலும் சரி, எப்படியான இழிவான அசிங்கமான காரியத்தைச் செய்தாவது கொல்லலாம் என்கின்ற தர்மத்தை ஆரியர்களுக்கு போதிக்க வந்த மனுநூல் போன்ற ஒரு கோட் தானே ஒழிய இப்புராணங்களுக்கு வேறு என்ன கருத்து சொல்ல முடியும்?” (07.10.1944 -குடியரசு)  என்று 80 ஆண்டுகளுக்கு முன்பே கேள்வி எழுப்பினார் தந்தை பெரியார்.

பார்ப்பன (இந்து) மதத்திற்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் சூத்திரர்கள் பஞ்சமர்கள் என்று ஒடுக்கப்படுவதற்கும் அவர்களே  பெரும்பான்மை உழைக்கும் மக்களாக நீடிப்பதற்கும் உள்ள உறவை  பெரியார் சொன்னதற்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி புரிந்து கொள்வதற்கு கால் நூற்றாண்டு காலமானது.

நக்சல்பரி கட்சி தான் முதல் முதலில் இந்தியாவில் உள்ள சாதி தீண்டாமை கொடுமைகளுக்கும், பார்ப்பன (இந்து) மதத்திற்கும், நிலவுகின்ற அரை நிலப்பிரத்துவ உற்பத்தி முறைக்கும் உள்ள உறவுகளை ஆய்வு செய்து பாட்டாளி வர்க்கத்திற்கு எடுத்துக் கூறியது.

நிதி மூலதனத்தின் லாப வேட்டைக்கு ஏகாதிபத்தியங்களை ஆதரித்து நிற்பதும், ஆரிய பார்ப்பனர்களின் சாம்ராஜ்யத்தை கட்டியமைப்பதற்கு திராவிடர்களின் அதாவது அசுரர்களின் தலைவனை கொன்றொழிப்பதற்கும் உள்ள உறவுகளை புரிந்து கொண்டால் மட்டும்தான் நவம்பர் தினத்திற்கும், நரகாசுரன் வதத்திற்கும் உள்ள உறவை புரிந்து கொள்ள முடியும்.

நிதி மூலதனத்தில் லாப வேட்டைக்கு பலி கொடுக்கப்படும் நமது உழைப்பு சக்தியை திருடும் தீபாவளி கொண்டாட்டங்கள் நரகாசுரனின் பெயரால் கொண்டாடப்படுகிறது. பாட்டாளி வர்க்கத்தின் உழைப்பு சக்தி  மூலதனத்தின் லாப வெறிக்கு சக்கையாக பிழிந்து எறியப்படுகிறது. முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு தன்னையே ஒரு பண்டமாக விற்றுக்கொள்ளும் பாட்டாளி வர்க்கத்தின் ரத்தமும் சதையும் கொண்ட உண்மைக் கதையை திருத்தி எழுதுவோம்.

பூவுலகில் நவம்பர் புரட்சிகள் தொடர்ச்சியாக நடத்துவதன் மூலம் மூலதனத்தைக் கட்டுப்படுத்தும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் மற்றும் அமெரிக்க மேல்நிலை வல்லரசு என்ற மகாவிஷ்ணுவின் கொட்டத்தை அடக்குவோம். நரகாசுரனின் வதத்திற்கு பழி தீர்த்து உண்மை தீபாவளியை கொண்டாடுவோம். அது இந்தியாவின் நவம்பர் புரட்சி தினமாக மலரட்டும்.

  • சண்.வீரபாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here