1980-களில் தேர்தல் புறக்கணிப்பு பற்றி தமது கருத்துகளை முன்வைத்தார், தமிழகத்தில் கோபட் காந்தி என்று அறியப்படுகின்ற தோழர். கதீப் அன்சாரி, “எனவே தேர்தல்களின்போது பணக்காரர்களின் கட்சிகளாக ஜனதாவும், காங்கிரசும் இருக்கின்றன என்று கண்டனம் செய்வது மட்டும் மக்கள் திரளின் உணர்வை உயர்த்துவதற்கு போதாது; ஏனெனில், இந்த அறிதலைக் கொண்டு அவர்கள் வேறொரு கட்சியின் பால் திரும்புவது நடக்கக் கூடியதே. தேவையானது என்னவெனில் எதிரிக்கு எதிராக முழுமையான கண்ணோட்டத்தில் தெளிவான நிலை எடுப்பதாகும்; ஏனெனில் இதுதான் இப்போதுள்ள கட்டமைப்பிற்குள் ஒரு கட்சியிடமிருந்து மற்றொரு கட்சிக்கு மாறும் விசச் சூழலில் இருந்து அவர்களது சிந்தனையை விடுவிக்கும்”

தோழர். லெனின் கூறியதாவது “புரட்சியின் வளர்ச்சி பற்றிய புறவயமான ஆய்வை ஒரு மார்க்சியவாதி செயல்தந்திரம் பற்றிய தனது வாதங்களுக்கு அடித்தளமாக கொள்ளவேண்டும்”. (மென்சிவிசத்தின் நெருக்கடி, டிசம்பர் 1906) “வர்க்க உணர்வு மிக்க பாட்டாளி வர்க்கத்துக்கு தேர்தல் பற்றிய செயல் தந்திரம் என்பது ஒரு குறிப்பிட்ட போராட்டத்தை அதாவது தேர்தலை அது வரித்துக் கொண்ட பொது செயல் தந்திரங்களுக்கு ஏற்ப அமைப்பதாகவே இருக்கும். எந்த சூழ்நிலைகளிலும் அதன் செயல்தந்திரம் பற்றிய கோட்பாடுகளை மாற்றுவதையும் அல்லது இச்செயல் தந்திரங்களின் மையத்தை மாற்றுவதையும் இது எந்த விதத்திலும் குறிப்பதாகாது.” உண்மையில் இது “வர்க்க சுயேச்சையை பொது விதியாகவும், புரட்சிகர முதலாளித்துவடான கூட்டு அல்லது ஒப்பந்தங்களை ஒரு விதிவிலக்காகவும் கடைபிடிக்க பாட்டாளி வர்க்க கட்சிக்கு ஆணையிடுகிறது” (ஒரு முட்டாளின் தீர்ப்பை கேட்கும்போது-ஜனவரி 1907).

புறக்கணிப்புக்கு எதிரான வாதங்களுக்கு மறுப்பு மற்றும் நாடாளுமன்ற தேர்தலை புரட்சிகரமான முறையில் பாவிப்பது குறித்து லெனின் ஆகிய கட்டுரைகளில் தோழர் கதீப் அன்சாரி முன்வைத்துள்ள வாதங்கள் இவைதாம்.

முதுபெரும் தலைவரான, தோழர். கோபட் காந்தி கூட “இலட்சக்கணக்கிலான விவசாயிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் இன்று வரை அதனை பயன்படுத்திக் கொள்ளும் அரசியல் களம் உருவாகவில்லை. அரசியலற்று இருப்பது பெருமை என்று அவர்கள் நம்புகிறார்கள். இதுபோல அரசியலற்று இருந்த தொழிற் சங்கங்களையும் இயக்கங்களையும் எங்கள் காலங்களில் நாங்கள் பார்த்திருக்கிறோம். ஒரு அரசியல் களம் உருவாகவில்லை என்றால் இந்தப் போராட்டம் ஒரு முட்டுச் சந்தில் முடிந்துவிடும்.

இதுபோல் ஒரு முடிவுக்கு வந்த பல போராட்டங்களையும், இயக்கங்களையும் நாங்கள் பார்த்திருக்கிறோம் அந்தப் புள்ளியில்தான் நக்சல்களும் ’தேர்தல் புறக்கணிப்பு’ என்று தவறிழைக்கிறார்கள். தேர்தல் புறக்கணிப்பு, தவறானவர்கள் வருகைக்கே வழிவகுக்கும்” என்று 40 ஆண்டுகளுக்கு முன் தான் முன் வைத்த தேர்தல் புறக்கணிப்பு முழக்கத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனும் போது, அரசியல் தற்குறிகள் பிறரை வசை பாடுவதிலும், செயலற்ற முறையில் வீட்டில் முடங்கவுமே தேர்தல் புறக்கணிப்பு குறித்து கதைத்து திரிகின்றனர்.. “அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பாதான்! ஆனால் முளைக்கவில்லையே!” என்ன காலக் கொடுமை.

தேர்தல் புறக்கணிப்பு என்பதையே சிலர் செயலற்ற முழக்கமாகவும், திரும்ப, திரும்ப பஜனைப் பாடும் வகையிலும் ஒப்பித்தனர். அவர்களது கூடாரத்திலேயே மாமன், மச்சான், பெண்டு பிள்ளைகள் யாரும் இதனை சட்டை செய்யவில்லை. ஆனாலும் தமிழகத்தில் 72% வாக்கு பதிவு மட்டுமே நடந்த நிலையில் மீதம் 28% தமது பக்கம் வந்து விட்டதாக புளகாங்கிதம் அடைந்தனர்.

1970-களில் வரையறுக்கப்பட்ட கட்சி திட்டத்தை பருண்மையாக அமுல்படுத்துவதற்கு பொருத்தமான அரசியல் செயல்தந்திரங்களை, எமது அமைப்பு வரையறுத்து செயல்படத் துவங்கியது. தொண்ணூறுகளின் துவக்கத்தில், ’நாடு மறுகாலனியாவதை முறியடிப்போம்! பார்ப்பன (இந்து) மதவெறி பாசிசத்தை முறியடிப்போம்!’ என்ற அரசியல் செயல்தந்திர முழக்கத்தின் கீழ் பல்வேறு போராட்டங்களை கொண்டு சென்றோம்.

அவ்வாறு 1993-ஆண்டு கருவறை நுழைவு போராட்டம் என்று அறிவித்து திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கருவறை நுழைவு போராட்டத்தை அறிவித்தோம். அப்போதும் அரசியல் தற்குறிகள் பலர் திக, திமுக பாணியில் பெரியார், அம்பேத்கரை முன்வைத்து செயல்பட துவங்கி விட்டார்கள். மார்க்சிய பார்வையில் இருந்து விலகி விட்டார்கள், அவ்வளவுதான் என்று கூச்சலிட்டனர்.

பார்ப்பன (இந்து) மதவெறி அபாயத்தை வெறும் முழக்கமாக முன் வைத்துக்கொண்டு பிரச்சாரம் செய்து கொண்டிராமல், அந்த முழக்கத்தை பரந்துபட்ட மக்களுக்கு கொண்டு செல்கின்ற வகையில் ஆண்டுதோறும் தமிழ் மக்கள் இசை விழாவை, தஞ்சையில் நடத்தி லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் புரட்சிகர அரசியலை கொண்டு சென்றோம். அப்போதும் அரசியல் தற்குறிகள் தமிழ், தமிழினம் என்று குறுகிய கண்ணோட்டத்தில் செயல்படுகிறார்கள். பாட்டாளி வர்க்க அரசியலில் இருந்து விலகி விட்டார்கள் என்று கூச்சலிட்டார்கள்.

இடஒதுக்கீடு குறித்த போராட்டத்தில் இட ஒதுக்கீடு என்பது அரசு பதவிகளை கைப்பற்ற நடக்கும் மேல் சாதிகளுக்கு இடையிலான சண்டை என்று நிலைப்பாடு எடுத்து, இட ஒதுக்கீடு மட்டுமே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப்படும் மக்களுக்கு விடுதலையை தராது என்று புதிய ஜனநாயகம் இதழில் எழுதினோம். தென் மாவட்டங்களில் நடந்த ஆதிக்க சாதி வெறியாட்டங்களை கண்டித்து, தீண்டாமை குற்றம் புரியும் ஆதிக்க சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்! என்று இயக்கம் எடுத்தோம். அப்போதும் அரசியல் தற்குறிகள் பார்ப்பனக் கும்பலும், துக்ளக் சோவும் இவர்களும் ஒன்று என்று கூச்சலிட்டார்கள்!

அதைத்தொடர்ந்து காவிரியில் தமிழகத்தின் உரிமை பறிக்கப்பட்ட போதும், தமிழ் தேசிய இனத்தின் மீது பார்ப்பன இந்திய தேசியத்தின் தாக்குதல்களைத் தொடர்ந்த போதும் அதனை எதிர்த்து பல்வேறு அரசியல் போராட்டங்களை நடத்தியுள்ளோம். இவை அனைத்தும் அரசியல் தற்குறிகள் முன்வைப்பதை போல குறுகிய இனநலனில் இருந்தோ, சந்தர்ப்பவாத போக்கிலோ முன்வைக்கப்பட்டது அல்ல. பாட்டாளி வர்க்க சர்வதேசிய கண்ணோட்டத்திலிருந்து ஒடுக்கப்படுகின்ற தேசிய இனங்களின் அடையாளங்களை முன்னிறுத்தி, அந்த தேசிய இன மக்களை வர்க்க ரீதியாக அணி திரட்டுவதற்காக செயல்பட்டோம். இவை ’சித்தாந்த புலிகள்’ என்று தனக்குத் தானே பீற்றிக்கொள்ளும் அரசியல் தற்குறிகளுக்கும், அவர்களது விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும் ஒருபோதும் புரியாது.

அமெரிக்க மேல்நிலை வல்லரசின் ஒற்றை துருவ ஆதிக்கத்தின் கீழ் நாடு மறுகாலனியாவதன் தீவிரத் தன்மையும், அதனை நிறைவேற்ற கார்ப்பரேட்- காவி பாசிசம் ஏறித்தாக்கி வரும் சூழலில் ஜப்பான் ஆக்கிரமிப்புக்கு எதிராக சீன நாட்டை ஒன்றுபடுத்திய தோழர் மாவோவின் வழிமுறையை கையாண்டு பாசிசத்தை வீழ்த்த மக்களை அணிதிரட்டும் வகையில் செயல்படுகிறோம்.

”சீனா ஒரு கடுமையான நெருக்கடியை எதிர் நோக்கி உள்ளது. இந்த சூழ்நிலைகளில் நாம் என்ன செய்ய வேண்டும் ஐயத்திற்கு இடமின்றி அவசர தேவையானது ஜனநாயக சீர்திருத்தங்கள் ஏற்படுத்துவதும், தற்போதைய நெருக்கடியை கடப்பதும், ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களை தோற்கடிப்பதற்காக நேச நாடுகளுடன் ஒத்துழைப்பு, போரிடும் நாட்டிலுள்ள ஜப்பானிய எதிர்ப்பு சக்திகளை எல்லாம் அணி திரட்டுவது என்று ஒன்றுபடுத்துவதும், இதன் மூலம் சீன மக்கள் தங்களை ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து விடுவித்து கொள்ளக்கூடிய நோக்கத்திற்காக எல்லா அரசியல் கட்சிகள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளையும், எந்த இயக்கத்தையும் சாராத மக்களின் பிரதிநிதிகளையும் ஒன்று சேர்த்து தற்காலிக ஜனநாயக கூட்டு அரசாங்கம் ஒன்றை நிறுவுவதே ஆகும்.” இதன் அடிப்படையிலேயே கார்ப்பரேட்-காவி பாசிசத்தை வீழ்த்தி, ஜனநாயக கூட்டரசை நிறுவும் வகையில் செயல்படுகிறோம்.

இன்று ஏறித் தாக்கி வரும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு, ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவையும் உள்ளடக்கிய பரந்த ஐக்கிய முன்னணி ஒன்றின் மூலம் மட்டுமே முடியும் என்பதால் அந்த ஐக்கிய முன்னணி நிறுவுவதற்கான திசைவழியில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். அதேசமயத்தில் திமுக உள்ளிட்ட ஆளும் வர்க்க கட்சிகளின் இரட்டை நிலைப்பாடுகள், அரசியல் சந்தர்ப்பவாத போக்குகள், பாட்டாளி வர்க்கத்திற்கு எதிரான அரசியல் போன்றவற்றை நிபந்தனையற்ற முறையில் சகித்துக் கொண்டு அவர்களுடன் ஐக்கியத்தை பேணுவது என்பது இதன் பொருளல்ல.

“முரண்பாட்டின் குறித்த தன்மையைப் பற்றி ஆராயும் போது நாம் இந்த இரு பக்கங்களையும் ஆராய வேண்டும். அதாவது ஒரு வளர்ச்சிப் போக்கில் உள்ள முதன்மை முரண்பாட்டையும், முதன்மையற்ற முரண்பாடுகளையும் மற்றும் ஒரு முரண்பாட்டின் முதன்மைக் கூறையும், முதன்மையற்ற கூறையும் ஆராய வேண்டும். இது போன்று, முரண்பாட்டின் இவ்விரு பக்கங்களுடைய வேறுபட்ட இயல்புகளையும் ஆராயாவிட்டால் நாம் சாரமற்ற ஆய்வில் முழ்கி, முரண்பாட்டைத் திட்டவட்டமாக புரிந்து கொள்ள இயலாதவர்களாவோம். இதனால் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான சரியான வழி முறைகளைக் கண்டுபிடிக்க முடியாதவர்களாகவும் இருப்போம்.

முரண்பாட்டில் உள்ள இருபக்கங்களுடைய இந்த வேறுபட்ட இயல்பானது அல்லது குறித்த பண்பானது சக்திகளின் சமமற்ற  தன்மையை புலப்படுத்துகின்றது. இந்த உலகில் உள்ள எப்பொருளும் முற்றானதாகவும், சீராகவும் வளர்வதில்லை. ‘சமமான வளர்ச்சிக் கோட்பாட்டை’ அல்லது ‘சமநிலைக் கோட்பாட்டை’ நாம் எதிர்க்க வேண்டும்”.

ஒரு பொருளுக்குள் இருக்கும் இரண்டு எதிரெதிரான அம்சங்களை சரியாக புரிந்து கொண்டு கையாள்வதைத் தான் முரண்பாடுகளைப் பற்றிய விதி எமக்கு கற்றுக் கொடுத்துள்ளது.

தரகு முதலாளித்துவ கட்சியான திமுகவும், தரகு முதலாளிகளிலேயே அம்பானி, அதானி போன்ற ஒரு சிறு கும்பலின் நலனையே தேசத்தின் நலன் என்று தூக்கிப்பிடிக்கும், பார்ப்பன- பாசிச பயங்கரவாத கட்சியான பாஜகவும் ஒன்றல்ல என்பது தான் எமது நிலை. இதனாலேயே திமுகவுடன் இசைந்து போய்விட்டோம், திராவிட இயக்கங்களுக்கு சொம்பு தூக்குகிறோம், தேர்தலில் ஒரு தரப்பை புறக்கணியுங்கள் என்று கூறி விட்டதால் அவ்வளவுதான் போன்ற அரசியல் தற்குறிகளின் அவதூறுகளுக்கு மக்கள் மத்தியிலான, எமது செயல்பாட்டின் மூலம் பதிலளிப்போம். அதே சமயத்தில் தமது அணிகளிடம் ஒரு வகையிலும், பொதுவெளியில் ஒரு வகையிலும் இரட்டை நாக்குடன் பேசிக்கொண்டு திரியும் அரசியல் தற்குறிகளுக்கு அண்ணாவின் ’ஆரியமாயை’ நூலின் முன்னுரையில் கூறிய போற்றிப் பாவுடன் இந்த தொடரை முடிக்கிறோம்.

பேராசை பெருந்தகையே போற்றி!
பேச நா இரண்டுடையாய் போற்றி!
தந்திர மூர்த்தி போற்றி!
தாசர் தம் தலைவா போற்றி!
வஞ்சக வேந்தே போற்றி!
வன் கண நாதா போற்றி!
கொடுமைக் குணாளா போற்றி!
கோழையே போற்றி! போற்றி!
பயங்கொள்ளிப் பரமா போற்றி!
படுமோசம் புரிவாய் போற்றி!
சிண்டு முடிந்திடுவோய் போற்றி!
சிரித்திடு நரியே போற்றி!
ஒட்டு வித்தை கற்றோய் போற்றி!
உயர் அநீதி உணர்வோய் போற்றி!
எம் இனம் கெடுத்தோய் போற்றி!
ஈடில்லாக் கேடே போற்றி!
இரை, இதோ போற்றி! போற்றி!
ஏத்தினேன் போற்றி! போற்றி!

  • பா.மதிவதனி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here