‘ஆன்மசுகம்’ அளிப்பதாக கூறி ‘ஆத்மசுகம்’ அளித்த நித்தி கைலாசா பயணம்!
தமிழகத்தின் பிரபல ‘கசமுசா’ சாமியாரும், மதுரை ஆதீனத்தின் முன்னாள் இளைய தம்பிரானுமான சுவாமி நித்யானந்த பரமஹம்சர் கோமாவிற்கு போய்விட்டதாக ஊடகங்கள் கிசுகிசுக்களை பரப்பத் துவங்கியுள்ளன.
ஆர்எஸ்எஸ்-பாஜக முன்வைக்கின்ற ‘இந்து ராஷ்டிரா’ என்ற ராமராஜ்யம் அமைந்தால் யார் யாரெல்லாம் சுகபோகமாக ஜீவிப்பார்கள் என்பதற்கு திருவண்ணாமலை நித்தியானந்தன் எடுப்பான சாட்சியாகும்.
மனிதனுக்கு ஆறறிவு, ஆனால் மனிதனின் ஏழாம் அறிவை நான் திறந்து காட்டுகிறேன் என்று ஜெகஜால வித்தை செய்து, ‘படித்த பல முட்டாள்களை’ தனது சீடர்கள் ஆக்கிக்கொண்டார் நித்தி. பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் குறுகிய காலத்தில் கிளையை பரப்பினார். அதுமட்டுமன்றி சுமார் 10 மில்லியன் சீடர்களை கொண்டு கிளைகளை திறந்து ஆன்மீக சேவை செய்து வந்த நித்தியானந்தா ஒரு வழியாக கோமாவிற்கு சென்றுவிட்டார் என்று நித்தியின் முன்னாள் சீடர்களும், என்னது கோமாவா சமாதிக்கு சென்று திரும்புகிறேன் என்று நித்தியும் லூட்டி அடிக்கிறார்கள்.
பாலியல் குற்றச்சாட்டுகள், சிறுவர்-சிறுமியர் கடத்தல், பத்திரிக்கையாளர்களை தாக்குவது, எதிர்ப்பாளர்களை ஆசிரமத்திலேயே கொன்று புதைப்பது, சீடர்களிடம் சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு ஆட்டையை போடுவது, ஆசிரமத்திலேயே பவுன்சர்களை வைத்துக்கொண்டு பந்தாவாக சுற்றி வருவது போன்ற கைதேர்ந்த கிரிமினல்களை போல நடமாடிய நித்தியானந்தா குஜராத் மற்றும் கர்நாடகா போலீஸ் தேட ஆரம்பித்ததால் நாட்டை விட்டு ஓடி கைலாசா என்று ஒரு “இந்து நாட்டை” உருவாக்கினார்.
உண்மையான கடவுள் பக்தர்கள் முகம் சுளிக்கின்ற வகையில் பல்வேறு ஆபாச, வக்கிர சீரழிவுகளை பக்தி என்ற பெயரிலும், ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரிலும், சத்சங்கம், தியானம் போன்ற பெயர்களிலும் கடை விரித்து வந்த கிரிமினல் உண்மையான ‘கைலாசாவிற்கு’ புறப்பட்டு விட்டார் போலும்.
கார்ப்பரேட் சாமியார்கள் பெரும்பாலும் பிறப்பால் பார்ப்பனர்களாக இருந்தால் ஆர்எஸ்எஸ்-பாஜக அவர்களை பாதுகாக்கிறது. ஒருவேளை சூத்திரர்களாக இருந்துவிட்டால் பீடாதிபதி பதவிக்கு போட்டியாக கிளம்புகின்ற சாமியார்களை கட்டம் கட்டி ஒழித்துக் கட்டுகிறது. இதிலும் வர்ண பேதத்தை கடைபிடிக்க தவறுவதில்லை.
நித்யானந்தாவைப் பற்றி ஏன் இந்த பதிவு என்று வாசகர்கள் ஆச்சரியப்படலாம். இந்து சாமியார்களின் யோக்கியதையை உலகறியச் செய்த நித்தியானந்தாவிற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.
பல பக்கங்களில் எழுதி புரிய வைப்பதைவிட சில வீடியோக்களின் மூலம் ஆன்மீகம், கடவுள் நம்பிக்கை, இந்து மத தத்துவம் போன்றவற்றை பற்றி ‘எளிமையாக புரியவைத்த’ நித்யானந்தா சமாதி நிலையை அடைவது மனதிற்கு ஏதோ செய்கிறது.
கதவைத் திற காற்று வரட்டும், மனதை திற மகிழ்ச்சி பொங்கட்டும், ஆத்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும் என்றெல்லாம் குமுதம், விகடன் போன்ற மஞ்சள் பத்திரிக்கைகள், டுபாக்கூர் எழுத்தாளர்கள் துணையுடன் ஆன்மீக கடை பரப்பிவந்த நித்தியானந்தாவின் சொத்துக்கள் அனைத்தையும் நிபந்தனையின்றி பறிமுதல் செய்து மக்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும்.
இந்தியாவிலிருந்து கடத்திச் சென்ற கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை தங்க கட்டிகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்திருந்த நித்யானந்தாவுக்கு கல்தா கொடுத்த வங்கிகளின் மோசடி காரணமாக மனம் வெதும்பி, உடல் இளைத்து நோய்வாய்ப்பட்டு கோமாவிற்கு சென்று விட்டார் என்கிறார்கள்..
படிக்க:
♦ ராத்திரி.. சிவ ராத்திரி!
♦ வள்ளலாரைச் சிந்திப்போம்! – கவிஞர் கரிகாலன்.
‘ஊனினை உருக்கு உள்ளொளி பெருக்கு’ என்று திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர், உடலை வருத்தி ஊராய்த் திரிந்து உழவாரப்பணி செய்து தேவாரப் பாடல் பாடிய திருநாவுக்கரசர், பட்டினத்தார் போன்ற துறவிகள் இருந்ததாக நம்பப்படும் நாட்டில் ஒருவேளை சோற்றைக் கூட துறக்க விரும்பாத துறவிகளின் லட்சணத்தை புட்டு புட்டு வைத்த நித்யானந்தா சமாதியானது அல்லது கோமாவிற்கு சென்றது நமக்கெல்லாம் வருத்தம்தான்.
இன்னும் சிலகாலம் உயிருடன் இருந்து ஆர்எஸ்எஸ்-பாஜக வின் ஆசியுடன் இந்தியாவிற்கு திரும்பி வந்து சேவை செய்தால், பக்தி, இந்துமதம் என்ற பெயரில் கார்ப்பரேட் சாமியார்கள் செய்யும் மோசடிகளை அம்பலப்படுத்தும் நமது வேலையை சுலபமாக்கும்.
- சண்.வீரபாண்டியன்.