
உலகின் மிகப் பெரும் பயங்கரவாதியும் போர்கள், இனவெறி தாக்குதல்கள், ஆணாதிக்க வெறிபிடித்து சிந்தனைகள், பாசிசக் கொடூரங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஹை டெக் அதிபரான திருவாளர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டது முதல் உலகம் முழுவதும் உள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகள் எதிர்பார்த்ததை போலவே அதிரடியாக ஆட்டத்தை துவக்கியுள்ளார்.
தன்னுடைய அரசாங்கத்தின் பொருளாதார ஆலோசகர்கள் முதல் இராணுவ, உளவுத்துறை ஆலோசகர்கள் வரை அனைவரையும் சிறிதளவும் ஜனநாயக விழுமியமற்ற, கொடூரமான முதலாளித்துவ பயங்கரவாதிகளே தேர்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், உலக பணக்காரரான எலான் மஸ்க் மற்றும் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோர் இணைந்து அரசாங்க செயல்திறன் துறையை (DOGE) அதிபராக தேர்ந்தெடுக்கப்பட டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ட்ரம்ப் புதிய டோஜ் முயற்சியை மன்ஹாட்டன் திட்டத்துடன் ஒப்பிட்டுள்ளார், இது முதல் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான இரண்டாம் உலகப் போரின் மிக ரகசிய திட்டமாகும்.
இது குறித்து டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “அமெரிக்க தேசபக்தர் விவேக் ராமசுவாமியுடன் இணைந்து எலான் மஸ்க், அரசாங்கத் திறன் துறைக்கு (DOGE) தலைமை தாங்குவார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இரண்டு அற்புதமான அமெரிக்கர்களும் சேர்ந்திருப்பது, எனது நிர்வாகத்திற்கு அரசாங்க அதிகாரத்துவத்தை அகற்றுவதற்கும், அதிகப்படியான விதிமுறைகளைக் குறைப்பதற்கும், வீண் செலவுகளைக் குறைப்பதற்கும், கூட்டாட்சி நிறுவனங்களை மறுசீரமைக்கவும், அமெரிக்காவைக் காப்பாற்ற வழிவகுக்கும்.
இந்த துறை, அரசாங்கத்திற்கு வெளியே இருந்து ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்கும். மேலும், பெரிய அளவிலான கட்டமைப்பு சீர்திருத்தங்களை இயக்குவதற்கும், அரசாங்கத்திற்கு இதுவரை கண்டிராத ஒரு தொழில் முனைவோர் அணுகுமுறையை உருவாக்குவதற்கும், வெள்ளை மாளிகை மற்றும் மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலகத்துடன் கூட்டாளியாக இருக்கும்.
படிக்க: மீண்டும் அதிபராகிவிட்ட டிரம்ப்! அதிகரிக்கும் சொத்து மதிப்புகள்!
எலான் மற்றும் விவேக் ஃபெடரல் பீரோக்ரசியில் செயல்திறனைக் கருத்தில் கொண்டு மாற்றங்களைச் செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதே நேரத்தில், அனைத்து அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் சிறப்பாக வழிநடத்துவார்கள். அவர்களின் பணி ஜூலை 4, 2026 இல் முடிவடையும். அதிக செயல்திறன் மற்றும் குறைந்த அதிகாரத்துவத்துடன் செயல்படும் சிறிய அரசாங்கம், சுதந்திரப் பிரகடனத்தின் 250 வது ஆண்டு விழாவில் அமெரிக்காவிற்கு சரியான பரிசாக இருக்கும். அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஜான் ராட்க்ளிஃப், சிஐஏவை வழிநடத்தத் திட்டமிடப்பட்டார், முன்பு டிரம்பின் தேசிய உளவுத்துறையின் இயக்குநராக பணியாற்றினார் மற்றும் அமெரிக்க உளவுத்துறை நிறுவனங் களை மேற்பார்வையிட்டார். தெற்கு டகோட்டா கவர்னர் கிறிஸ்டி நோம், உள்நாட்டு பாதுகாப்பு செயலாளராக பணியாற்றவும், இராணுவத் தலைமையகமான பென்டகனை வழிநடத்த ஃபாக்ஸ் நியூஸ் தொகுப்பாளரான பீட் ஹெக்சேத் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனங்களில் திருவாளர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி இருவரின் தேர்வு மிகவும் கவனிக்கத்தக்கதாகும். விவேக் ராமசாமி தற்போதைய ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு இடையிலேயே பின் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
படிக்க: பாசிஸ்டின் நண்பர் அமெரிக்காவில் மீண்டும் அதிபர்!
விவேக் ராமசாமி தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, ”75% க்கும் அதிகமான கூட்டாட்சி பணியாளர்களை நீக்குவதாகவும், கல்வித் துறை, FBI மற்றும் மது, புகையிலை, துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பணியகம் உட்பட பல முக்கிய நிறுவனங்களை மூடுவதாகவும்” வாக்குறுதியளித்துள்ளார்.
எலான் மஸ்க் சமீபத்தில், ”கூட்டாட்சி செலவினங்களில் குறைந்தபட்சம் $2 டிரில்லியன் குறைப்புக்கு அழைப்பு விடுத்தார், இது அரசாங்கத்தின் பட்ஜெட்டில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை குறைப்பதற்கு திட்டத்தை முன் வைத்துள்ளார். நூற்றுக்கணக்கான ஃபெடரல் ஏஜென்சி களை நீக்குவதற்கும் அவர் முன்மொழிந்தார், அரசுத் துறையில் பல பொறுப்புகளை ஒன்றுடன் ஒன்று சேர்ப்பதன் மூலமாக செலவுகள் குறையும்” என்று வாதிட்டுள்ளார்.
அதிகாரத்துவத்தை எப்படி ‘அகற்றுவது’ என்று ஆலோசனை வழங்க டிரம்ப் மஸ்க்கை தேர்வு செய்கிறார். பயோடெக் முதலீட்டாளரான விவேக் ராமசுவாமி, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனருடன் இணைந்து இந்த திட்டத்தில் பணிபுரிவார் என்று அவர் அறிவித்துள்ளதன் பின்னணி இதுதான். அதுவும் எலான் மஸ்க்கின் விருப்பமான கிரிப்டோகரன்சியான Dogecoin ஐ குறிக்கிறது
டோஜ் ஒரு அதிகாரப்பூர்வ அரசாங்கத் துறை அல்ல – அத்தகைய ஏஜென்சிகள் காங்கிரஸின் செயல் மூலம் தான் நிறுவப்பட வேண்டும். ஆனால் அமெரிக்க நிர்வாகம் பொதுவாக பல்லாயிரக்கணக்கான ஊழியர்களைப் பயன்படுத்துகின்றன. மஸ்க் மற்றும் ராமசுவாமி ஆகியோர் வெள்ளை மாளிகை மற்றும் நிர்வாக அலுவலகம் மற்றும் பட்ஜெட்டுடன் இணைந்து ஆண்டுதோறும் $6.5 டிரில்லியன் அரசாங்க செலவிலிருந்து “பாரிய செலவுகள் மற்றும் மோசடிகளை” சமாளிப்பார்கள் என்று டிரம்ப் முன் வைத்துள்ளார்.
அதாவது மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களைக் காட்டிலும் அதிக அதிகாரம் படைத்த நிறுவனங்கள், ஆலோசகர்கள் கொண்ட அமைப்புகள்தான் இனி ஏகாதிபத்திய முதலாளித்துவ அரசுகளை பாதுகாக்கும், வழிநடத்தும் என்பதுதான் இதன் பொருளாகும். இது சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்திற்கு எதிரான பாசிச சர்வாதிகாரமாகும்.
இவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ளதை பாராட்டும் எலான் மஸ்க், ”இது ஜனநாயகத்திற்கும், சுதந்திரத்திற்கும் எதிரான செயல்பாடு அல்ல. மாறாக ’அதிகாரத்துவத்திற்கு’ எதிரான செயல்பாடு என்று பாசிச பயங்கரவாதத்தை இலைமறை காயாக வெளிப்படுத்தியுள்ளார். இது பூவுலகின் பேரழிவு மிக்க காலம் என்பதை மட்டும் நினைவில் கொள்வோம்.
- ஆல்பர்ட்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி