ந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டு இருக்கிறது என்றும், உலகப் பொருளாதாரத்தில் உலகில் முதலில் உள்ள ஐந்து நாடுகளில் வரிசையில் இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது என்றும் ஆர் எஸ் எஸ் பாஜகவின் ‘ அறிவு மூளை’ கும்பலான பார்ப்பனக் கும்பல் தொடர்ச்சியாக வெறித்தனமாக கூச்சலிட்டு வருகிறது.

இந்திய ஒன்றியத்தின் அதிகாரத்தை கையில் வைத்துள்ள பிரதம மந்திரியின் அலுவலகம், கையடக்கமுள்ள சில கார்ப்பரேட் கைக்கூலிகளையும், பார்ப்பன பாசிச சக்திகளையும் உள்ளடக்கியதாக திகழ்வதால் இந்திய பொருளாதாரத்தை பற்றியும், வளர்ச்சி விகிதம் பற்றியும் பொய் செய்திகளை வெளியிடுவது என்பது படிப்படியாக முன்னேறி நாட்டின் ஜிடிபி பற்றி பொய் தகவல்களை வெளியிடுவது என்ற அளவு முன்னேறி உள்ளது.

சென்ற ஆண்டு கடைசி காலாண்டில் 5.6 சதவீதமாக இருந்த ஜிடிபியின் வளர்ச்சி விகிதம் ஒரே ஆண்டில் வேகவேகமாக பாய்ந்து முன்னேறி தற்போது 8.2 சதவீதமாக உள்ளது என்று இந்த கும்பல் வெளியிட்டுள்ள அறிக்கையை ஊடகங்களும், இந்தியாவில் முன்னணி தொழில்துறை நிபுணர்கள் மற்றும் முதலாளித்துவ அறிவு ஜீவிகள் அப்படியே வாந்தி எடுக்கின்றனர்.

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் பற்றி இந்திய ஒன்றிய அரசாங்கம் அதாவது ஜிடிபி பற்றி வெளியிட்டுள்ள அறிக்கை, அதற்கு முன் வைக்கப்பட்டுள்ள தரவுகள் ஆகியவை தரவரிசைப்படி பார்த்தால் சி பிரிவு தரவரிசை தகுதியிலேயே உள்ளது. இந்த சி பிரிவு என்பது கேடான பல தகவல்களை வைத்துக்கொண்டு பொய்யான புள்ளி விவரங்களை வெளியிடுகின்ற நாடுகளை தரம் பிரிக்கின்ற ஒரு அளவுகோலாகும்.

சர்வதேச செலாவணி நிதியம் என்று சொல்லப்படக்கூடிய ஐ எம் எப் இந்தியா வெளியிட்டுள்ள ஜி டி பி குறித்த அறிக்கையை சி தரவரிசைப்படி நிராகரித்துள்ளது.

இவையெல்லாம் கிடக்கட்டும். இந்த மோசடி புள்ளி விவரங்களுக்கு செருப்படி கொடுக்கின்ற வகையில் இந்தியாவின் நாணய மதிப்பானது சர்வதேச அளவில் வீழ்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியாவின் நாணயத்தின் மதிப்பு 90 ரூபாயாக உயர்ந்துள்ளது.

அதாவது ஒரு அமெரிக்க டாலர் பணம் வாங்குவதற்கு நீங்கள் 90 ரூபாய் செலுத்த வேண்டும் என்பதுதான் இதன் பொருளாகும். ஒன்றிய நிதி அமைச்சரான, பார்ப்பன மூளை வீங்கியான நிர்மலா சீதாராமன் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து கொண்டிருக்கிறது என்று பித்தலாட்டம் புரிகிறார்.

“இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை. அமெரிக்க டாலரின் மதிப்புதான் உயர்ந்துள்ளது,” என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமெரிக்காவில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்திருந்தார்.

அதாவது வகுப்பில் முதல் மதிப்பெண் (ரேங்க்) பெற்ற மாணவனை விட 30-ஆம் மதிப்பெண் (ரேங்க்) பெற்ற மாணவன் தான் உயர்ந்தவன் என்று ஒன்றை விட 30 தான் பெரியது என்று தனது ‘ ராமானுஜ கணித மூளையை’ கசக்கி தீர்வு காண்கிறார்.

இவ்வாறு தொடர்ச்சியாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்வதற்கான காரணம் என்ன என்பது பற்றி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணிபுரிகின்ற பேராசிரியரான அருண்குமார் கீழ்கண்டவாறு முன்வைக்கின்றார்.

“ரூபாயின் வீழ்ச்சி இந்தியாவின் சர்வதேச நம்பகத்தன்மை மற்றும் பொருளாதார நிலைமையின் ஓர் அறிகுறி. இது ஏற்றுமதி-இறக்குமதி, மூலதன வரவு மற்றும் அமெரிக்காவின் வரிக் கொள்கைகளால் பாதிக்கப்படுகிறது. டிரம்பின் அதிகபட்ச வரிகள் நமது ஏற்றுமதியைப் பாதித்துள்ளன. இதனால் நடப்புக் கணக்கு மோசமடைந்து, அந்நிய நேரடி முதலீடு வெளியேறுகிறது. இவை அனைத்தும் சேர்ந்து ரூபாயை பலவீனமடையச் செய்கின்றன,” என்று கூறுகிறார்.

கவனியுங்கள்! இங்கு தான் நாணயத்தின் உண்மையான மதிப்பு குறித்த சிக்கல் உருவாகிறது. அதாவது இந்தியாவின் பொருளாதாரத்தை 2030 – க்குள் 7.3 பில்லியன் அமெரிக்க டாலர் கொண்ட பொருளாதாரமாக உயர்த்தப் போகிறோம் என்று பீற்றிக்கொள்வதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதை அம்பலப்படுத்துகிறது மேற்கண்ட அருண்குமாரின் கூற்று.

தனது தனது எஜமானனான அமெரிக்காவின் அதிபர் பாசிச டிரம்ப் முன் வைத்த வரி விதிப்புக் கொள்கையை எதிர்த்து தனது நவ துவாரங்களையும் மூடி வைத்துக் கொண்டுள்ளது ஆர்எஸ்எஸ் மோடி கும்பல்,

டிரம்பின் அராஜகமான வரி விதிப்புக் கொள்கையால் இந்தியாவின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதும், இறக்குமதிக்கு அமெரிக்க டாலரை செலவு செய்ய வேண்டி உள்ளது என்பதும், அந்த இறக்குமதிக்கு தேவையான தொகையை கையில் இருந்து கொடுப்பதற்கு அதிகமான இந்திய ரூபாயை வாரி கொடுக்க வேண்டி உள்ளது என்பதையும் மறைத்துவிட்டு இந்தியா பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்றுள்ளதாக புளுகி வருகின்றனர்.

இது ஒரு புறமிருக்க, இந்தியாவில் மூலதனமிட்ட நிதி மூலதன கும்பல் தனது போக்கிரித்தன வேலையை ஆண்டு இறுதியில் செய்ய துவங்கியுள்ளது. பங்கு சந்தை தரவுகளின் படி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து 16 பில்லியன் அமெரிக்க டாலர் பணம் .

படிக்க:

 ஆட்டம் காணும் அமெரிக்க டாலர், புதிய BRICS நாணயம் வருமா?

 இந்தியப் பொருளாதாரத்தை துதிபாடும் ஐஎம்எப் தலைவர்! உண்மை என்ன?

இதே போன்ற ஒரு நிலைமை காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ஏற்பட்டது. ஏகாதிபத்திய நிதி மூலதன கும்பல் இதனை சரி செய்வதற்கு இந்தியாவில் உள்ள மக்களின் தலையில் வரிவிதிப்பையும் கட்டண உயர்வையும் கட்டச் சொல்லி உத்தரவிட்டது என்பதை அம்பலப்படுத்தி “பெட்ரோல், மின் கட்டணம், பேருந்துக் கட்டணம் என அனைத்தையும் உயர்த்தி சராசரி இந்தியனின் வாழ்க்கைத் தரத்தை வீழ்த்தினால்தான், ரூபாயின் மதிப்பு உயரும் என்பதுதான் ஏகாதிபத்திய மூலதனம் முன்வைக்கும் பொருளாதாரக் கொள்கை. அதன் ஆலோசனைப்படி கிரீஸ் அரசு எடுத்த நடவடிக்கைகள்தான் அந்நாட்டைப் படுகுழியில் வீழ்த்தின. இந்தியாவும் அதே படுகுழியை நோக்கித்தான் பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. இந்த உண்மை சராசரி ஐ.பி.எல். இந்தியர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, என்.ஆர்.ஐ இந்தியர்களுக்குப் புரிந்திருக்கிறது. அவர்கள் இந்திய வங்கிகளில் போட்டிருக்கும் டாலர் முதலீடுகளுக்குக் கூடுதல் வட்டி தருவதாக அரசு ஆசை காட்டியும் மயங்காமல், தமது முதலீடுகளை அமெரிக்காவுக்கு கொண்டு செல்கிறார்கள் இந்த இந்தியர்கள். நாட்டை நெருங்கிவரும் அபாயத்தினை அறிவிக்கின்ற எச்சரிக்கைச் சங்காக இதை எடுத்துக் கொள்ளலாம். ‘வல்லரசுக் கனவுக்கு சங்கு’ என்றும் இதனை விளங்கிக் கொள்ளலாம்” என்று டாலருக்கு நிகரான இந்திய நாணயத்தின் வீழ்ச்சி பற்றி 2012 ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகத்தில் எழுதியிருந்தோம்.

தற்போதைய நெருக்கடிக்கு ஆர்எஸ்எஸ் பாஜக சங் பரிவார கும்பலின் பொருளாதார நிபுணர்கள் முன் வைக்கின்ற காரணங்களில் ஒன்று, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் மூலதனமிட்ட முதலாளிகள், என் ஆர் ஐ இந்தியர்கள் அல்லது கார்ப்பரேட்டுகள் ஆண்டு இறுதியில் தனது கணக்கை சரி செய்வதற்காக இந்தியாவில் முதலீடு செய்யப்பட்ட பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள். மீண்டும் இந்த பணம் திரும்பி வந்து விடும் என்றெல்லாம் சதிராடிக் கொண்டுள்ளனர்.

ஏகாதிபத்திய நிதி மூலதன கும்பலானது, ஒரு நாட்டில் மூலதனத்தை கொட்டுவதற்கு முன்பாக அந்த நாட்டில் நிலவுகின்ற தொழில் அமைதி மற்றும் மக்களிடையே நிலவுகின்ற சமூக நல்லிணக்கம், தொழிலாளர்களின் வேலைத் திறன் மற்றும் அமைதி ஆகியவை அனைத்தையும் கணக்கில் கொண்டு தான் மூலதனத்தை கொட்டுகின்றனர்.

குறிப்பாக ஒரு ஆலைக்குள் மூலதனத்தை கொட்டுகின்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அல்லது ஒரு நிறுவனத்திடம் இருந்து பொருளை வாங்குகின்ற வாடிக்கையாளர்கள் அந்த நிறுவனத்தில் தொழில் அமைதி நிலவுகிறதா என்பதையும், தொழிற்சங்கங்களுடன் என்ன மாதிரியான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது என்பதையும் கேட்டு தெரிந்து கொள்கின்றனர். ஏனென்றால் தொடர்ச்சியாக இந்த நிறுவனத்தை நம்பி நாம் முதலீடு செய்ய முடியுமா அல்லது இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை நாம் வாங்குவதற்கு உத்தரவாதம் உள்ளதா என்பதை எல்லாம் சோதித்து வருகின்றனர்.

இந்த கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும்போது இந்தியாவில் தற்போது தொழில் அமைதி நிலவ வில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மையாக உள்ளது. ஏனென்றால் தொழிலாளர்களின் உழைப்பு சக்தியை கசக்கி பிழிவதற்கு 44 சட்டங்களை நான்கு சட்ட தொகுப்புகள் ஆக மாற்றுகின்ற கொடூரமான முயற்சியானது தொழில் அமைதியை சீர்குலைத்துள்ளது என்பதும், இந்தியாவின் மீது ட்ரம்பு விதித்துள்ள வரி விதிப்பு கொள்கையானது சிறு குறு தொழில் முனைவர்களை முடக்கி போட்டுள்ளது என்பதும், இந்தியாவில் தயாரிக்கப்படும் உற்பத்தி பொருள்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் தான் எதார்த்தமான உண்மை.

இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்தியாவின் நாணய மதிப்பை வீழ்ச்சி அடைய செய்துள்ளது அதாவது அமெரிக்க டாலருக்கு கொடுக்க வேண்டிய பணத்தின் அளவு உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் இந்தியாவின் நாணயம் ஆசியாவிலேயே மதிப்பில்லாத நாணயமாக மாறியுள்ளது. இதன் விளைவு மரியாதைக்குரிய பணமாக இந்தியாவின் ரூபாய் இல்லை என்பது தான் பத்தாண்டு காலம் இந்தியாவை ஆட்சி செய்து வரும் கார்ப்பரேட் நலனுக்கான பாசிச ஆர் எஸ் எஸ் மோடி கும்பல் ஆட்சியின் உண்மையான லட்சணம் ஆகும்.

  • பார்த்தசாரதி

புதிய ஜனநாயகம் தினசரி 

1 COMMENT

  1. மோடி வாயால் வடை சுடும் இந்தியாவில் சங்கிகள் வேண்டுமானால் நம்பலாம் , ஆனால் அமெரிக்க பார்ப்பன சங்கிகளோ அதை நம்ப மாட்டார்கள் என்பதை தான் இந்த டாலர் வீழ்ச்சி காட்டுகிறது.

    அந்நிய முதலீடு என்பது என்றைக்கும் எந்த நாட்டிலும் நிலைத்தன்மையான பொருளாதாரத்தை அமைக்காது அது குமிழி பொருளாதாரமாக தான் அமையும். நிலையான பொருளாதாரத்தை கட்டமைக்க சிறு குறு நிறுவனங்கள் , விவசாயம் அதைச் சார்ந்த உள்நாட்டு உற்பத்திகளை அதிகப்படுத்துவதன் மூலமாக தான் நாடு முன்னேற்றத்தை நோக்கி நகரும் .

    பாசிஸ்ட்டுகள் சங்கிகள் இதை செய்ய மாட்டார்கள்.
    நாம் தான் செய்ய வேண்டும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here