
டெல்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக்கு பிப்ரவரி 5 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகளின்படி, பாஜக ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெற்று வெற்றியடைந்துள்ளது. இதன்மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின்படி, பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி, 22 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது
ஊழலை ஒழிப்பேன் என்று தொடப்பக்கட்டையுடன் களத்தில் இறங்கி நடுத்தர வர்க்கத்தின் கவனத்தை ஈர்த்த திருவாளர் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கிய உடனேயே காங்கிரஸ் ஆட்சியை தூக்கி எறிந்து விட்டு டெல்லியின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றினார்.
’சாமானிய மனிதர்களுக்கான கட்சி’ என்ற போர்வையில் தன்னார்வ தொண்டூழிய நிறுவனங்கள் முன்வைக்கின்ற என்.ஜி.ஓ பாணிலான அரசியலை நடத்தி இரண்டு முறை தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார். அவரது அரசியல் பிரவேச நோக்கம் பற்றி ஏற்கனவே எழுதியிருப்பதால் விரிவாக எழுதவில்லை.
ஆனால் இந்த முறை அவரால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்பதற்கு முக்கியமாக இரண்டு காரணங்களை முதலாளித்துவ ஊடகங்கள் முன்வைக்கின்றன.
முதலாவதாக ஊழல் எதிர்ப்பு போராளி வேடமணிந்து திரிந்துக் கொண்டிருந்த அவர் தனது வீட்டை புதுப்பிக்கின்றேன் என்ற போர்வையில் சுமார் 40 கோடி ரூபாயை செலவு செய்து, வெளிநாடுகளில் இருந்து கிரானைட் கற்களை இறக்குமதி செய்து, உல்லாச ஊதாரித்தனமாக கட்டப்பட்ட வீடு அவரது யோக்கியதையை அம்பலப்படுத்தி நாற்றம் அடிக்க செய்துள்ளது. ஆனாலும் அவரது விசுவாசக் கூட்டம் அவரை ’முற்றும் துறந்த ஞானியைப்’ போல சித்தரிக்கின்றனர். ஆனால் மக்கள் ஏமாறவில்லை.
இரண்டாவதாக ஊழல் ஒழிப்பைப் பிரதானமாகக் கொண்டு ஆட்சியைப் பிடித்த கட்சி ஆம் ஆத்மி.! அக்கட்சியின் தலைவர் கெஜ்ரிவாலே மதுபான ஊழல் விவகாரத்தில் கைதானது மட்டுமின்றி அவரது கட்சியை சேர்ந்த தலைவர்கள் கைதாகி சிறைவாசம் அனுபவித்தது பெரும் விவகாரமானது. இது கெஜ்ரிவாலின் இமேஜை மொத்தமாக காலி செய்வதாக இருந்தது. இதுவும் ஆம் ஆத்மி தோல்விக்குப் பிரதான காரணமாக இருக்கிறது.
மேற்கண்ட இரண்டு காரணங்கள் டெல்லியில் உள்ள நடுத்தர வர்க்கத்தின் நம்பிக்கையை இழக்கச் செய்துவிட்டது.
இன்னொரு புறம் டெல்லியின் வெற்றியை தீர்மானிக்கின்ற நடுத்தர வர்க்கத்தின் எண்ணிக்கை சுமார் 40 முதல் 50 சதவீதமாகும். நாட்டின் அனைத்து முக்கிய துறைகளும் அதில் பணிபுரிகின்ற உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர் வரையிலான மிகப் பெரும் எண்ணிக்கையிலான நடுத்தர வர்க்கம் டெல்லியில் குவிந்துள்ளது.
படிக்க:
🔰 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அவுட்! ஆர்.எஸ்.எஸ் இன் அடுத்த அதிரடி!
🔰 டெல்லி பாஜகவுக்கு வேலை செய்யும் தேர்தல் ஆணையம்!
இந்த நடுத்தர வர்க்கத்தை குறிவைத்து சமீபத்தில் வெளியான இந்திய ஒன்றிய பட்ஜெட் சுமார் 12 லட்சம் வருமானம் வரை வரி வில்க்கு என்று ஆரவாரமாக அறிவித்ததை எந்த விதமான ஆய்வும் இன்றி நடுத்தர வர்க்கம் ஏற்றுக் கொண்டுள்ளது என்பதைத்தான் இந்த தேர்தல் முடிவுகள் தெரிவித்துள்ளன.
இவை அனைத்திற்கும் மேலாக கார்ப்பரேட் காவி பாசிச கும்பலான ஆர்எஸ்எஸ் பாஜகவை தேர்தலில் மீண்டும் தலையெடுக்க விடாமல் தடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பதை புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இதனை நிறைவேற்ற வேண்டுமென்றால் பாசிச எதிர்ப்பு என்பதை குறைந்தபட்ச செயல் திட்டத்தை முன்வைத்து அதற்கு எதிரான அரசியல் கட்சிகள் முதல் தனி நபர்கள் வரை ஒன்றிணைப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் இப்படிப்பட்ட கண்ணோட்டம் இல்லாமல் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசும் டெல்லியை ஆட்சி செய்து வந்த ஆம் ஆத்மியும் ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சித்துக் கொண்டு பொதுவெளியில் பாசிச பாஜகவிற்கு எதிரான மனநிலையை தகர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
“டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முன்னிலை வகிப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. ஆம் ஆத்மி இந்த அளவு பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. டெல்லியில் பாஜக ஆட்சி அமையுமானால் அது தேசத்திற்கான ஒரு பின்னடைவாகவே கருத வேண்டியதாக உள்ளது.
நியாயமான முறையில் இந்த தேர்தல் நடைபெற்றிருக்குமா என்ற ஐயத்தை இது எழுப்புகிறது. இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை. காங்கிரஸ், ஆம் ஆத்மி ஒற்றுமையாக இந்தத் தேர்தலை சந்திக்கவில்லை.
இந்தியா கூட்டணி தலைவர்கள் இது குறித்து தீவிரமாக கலந்தாய்வு செய்ய வேண்டும். இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஈகோ பிரச்னைகளை பின்னுக்குத்தள்ளி விட்டு, நாட்டையும் மக்களையும் காப்பாற்றும் திசை வழியே சிந்திக்க வேண்டும்,” என்று விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது நியாயமான கவலையாகும்.
தேர்தல் மூலம் பாசிச பாஜகவை வீழ்த்த முடியாது என்று வகுப்பெடுத்துக் கொண்டு வீட்டிலேயே அமர்ந்துள்ள ‘அடைக்கோழிகள்’ தேர்தல் முடிந்த பிறகு தனது’ஆய்வு மூளையை’ பயன்படுத்தி பல்வேறு வகையில் வியாக்கியானங்களை கொடுத்து தனது தொண்டரடிப் பொடியாழ்வார்களின் மனதை திடப்படுத்தி வருகின்றனர்.

தேர்தல் மூலமாகவே பாசிசத்தை வீழ்த்த முடியாது என்பதெல்லாம் அனைவருக்கும் தெரிந்த, அதாவது சமூகத்தைப் பற்றி உண்மையிலேயே நேசிக்கின்ற புரட்சிகர ஜனநாயக சக்திகளுக்கு தெரிந்த கதை தான் என்ற போதிலும், தேர்தல்கள் இப்படிப்பட்ட பாசிச பயங்கரவாதிகளுக்கு சட்டபூர்வமான வாய்ப்பைக் கொடுத்து பல்வேறு வகையில் அதிகாரத்தை செலுத்துவதற்கு அங்கீகாரத்தை தருகிறது.
இதனைத் தான் தேர்தல் மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்றி கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவின் பல்வேறு துறைகளில் பாசிச பாஜக ஏற்படுத்தியுள்ள மாற்றத்தின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ’அடைக்கோழிகளுக்கு’ இதைப் பற்றியெல்லாம் பிரச்சனை எதுவும் இல்லை.
மாநிலங்களானாலும் சரி! யூனியன் பிரதேசங்களானாலும் சரி! அவர்களிடம் இருந்த அரைகுறை அதிகாரத்தை படிப்படியாக புடுங்கிக் கொண்டு மாநில நிர்வாகத்தை வெறும் நிர்வாக அலகாக மட்டுமே மாற்றி வருகின்ற; மாநில உரிமைகளை சட்டபூர்வமாகவே பறித்து வருகின்ற ஆர்எஸ்எஸ் பாஜக நாட்டின் தலைநகரான டெல்லியில் பெற்றுள்ள வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
மாநிலங்களின் அதிகாரங்களை பறித்த அதே வாயால், ’டபுள் இன்ஜின் சர்க்கார்’ என்று துணிச்சலாக பேசுவதற்கு பாசிச மோடிக்கு கூச்சமில்லாமல் இருக்கலாம். ஆனால் பிராந்தியக் கட்சிகள், எதிர்க்கட்சிகள் அனைத்தையும் அவர்கள் எந்த கொள்கையை பேசினாலும் சரி அவர்களை முற்றாகத் துடைத்தெறிவது; ஆம் ஆத்மி போன்ற பினாமி ஆட்சிக்கு பதிலாக தானே நேரடியாக அதிகாரத்தை கைப்பற்றுவது என்று ஒற்றை சர்வாதிகார ஆட்சி முறையை நோக்கி வேகமாக வளர்ந்து வரும் ஆர்எஸ்எஸ் பாஜகவின் தேர்தல் வெற்றிகள் கண்டிப்பாக கூர்மையாக கவனிக்கத்தக்கதாகும்.
இனியும் காலம் தாழ்த்தாமல் தேர்தல் அரசியலிலும், தேர்தலுக்கு வெளியிலும் குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையிலான பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணியை கட்டியமைத்து, பாஜகவின் நூற்றாண்டுக் கனவான ஆரிய பார்ப்பன சாம்ராஜ்ஜியத்தை நிறுவுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதுதான் டெல்லி பாஜகவின் வெற்றி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையாகும்.
- கணேசன்
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி