ரவிருக்கும் மார்ச் 8 இரவில் மகா சிவராத்திரி கொண்டாட தயாராகி வருகிறது ஜக்கியின் ஈஷா யோகா மையம்.

கடந்த 2022 ஆம் ஆண்டில் நடந்த மகா சிவராத்திரி விழா நேரலை சுமார் 14 கோடி பேர் பார்த்துள்ளனர். இந்த ஆண்டும் பார்க்க உள்ளனர். இது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் காணொளியை பார்த்தவர்களின் எண்ணிக்கை விட அதிகமாகி உலக சாதனை என்று பரப்பப்படுகிறது.

ஆண்டுதோறும் ஈஷாவுக்கு வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கையும், ஜக்கியின் செல்வாக்கும் வளர்ந்தே வருகிறது. வரும் 2024, மார்ச் 8 ஆம் தேதி இரவு அன்று நடக்க இருக்கும் “சிவனுடன் ஓர் இரவு” கொண்டாட்டத்தில், தமிழகத்தில் மட்டும் சுமார் 36 இடங்களில் நேரலையாக ஒளிபரப்ப இருப்பதாக அறிவித்துள்ளனர். தமிழில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, சைனீஸ், போர்த்துகீஸ், ஸ்பானிஸ், பிரெஞ்சு உள்ளிட்ட 21 மொழிகளில் உலகெங்கும் ஒலிபரப்புகிறார்கள்.

1993 ல் 10 பேருடன் தொடங்கப்பட்டு, 30 ஆவது ஆண்டாக தொடரும் இந்த கொண்டாட்டங்களை, ஏதோ ஒரு நாள் இரவில் நடக்கும் சாதாரண ஆன்மீக விழாவாக கருதி  கடந்து செல்லலாமா?

ஈஷாவில் ஒன்று கூடுவது என்பது இறை நம்பிக்கை உடைய பக்தர்களால் முன்னெடுக்கப்படும் வழமையான ஒன்று அல்ல. நடக்க உள்ள கொண்டாட்டங்கள் தமிழகத்தின் ஒரு மூலையில், கோவையின் அருகில் உள்ள சிறுவாணி மலையடிவாரத்தில் மட்டுமே நடந்து முடிவதாகவும் இல்லை.

தமிழகத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கோவில்களில் சிவன்ராத்திரி கொண்டாடப்படுகிறது. அதை இந்து சமய அறநிலையத்துறையே முன் நின்றும் செய்கிறது. இந்தியா முழுவதும் உள்ள சிவன் கோவில்களிலும் சிவராத்திரியை கொண்டாடத்தான் செய்கிறார்கள். அத்தகைய கோவில் விழாக்களை போன்றதல்ல ஜக்கியின் ஈசா கொண்டாட்டம்.

நள்ளிரவு தியானமா, அல்லது கேளிக்கை கொண்டாட்டமா?

சத்குருவிடம் கேட்டால் இரண்டும் தான் என்பார். குடியரசுத் தலைவர்கள் முதல் பிரதமர்கள், கலை உலக பிரபலங்கள், சினிமா நடிகைகள் என பல்வேறு தரப்பினரையும் வரவைத்து அதை ஒரு பக்தி பரவச விழாவாக இல்லாமல், ஒரு நட்சத்திர கலை இரவு கொண்டாட்டமாகவே நிகழ்த்துகிறார்கள்.

இந்தாண்டும் திரைப்பட பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் முதற்கொண்டு ஹாலிவுட் என நட்சத்திரங்கள் களமிறங்குகிறார்கள். ஆப்பிரிக்கா பிரான்ஸ் லெபனான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முன்னணி இசை நடன குழுவினர் மகிழ்விக்கவும் உள்ளார்கள்.

முன்பதிவு மூலம் மொய் எழுதி  நேரில் வந்து, சீட்பிடித்து, பரவச பக்திப்பேரனுபவத்தை, மெய்யுருகி, கண்களில் கண்ணீர் கசிந்தபடி அடைய நமக்கு ‘கொடுப்பினை’ வேண்டும் தான்.

அத்தகைய அதிர்ஷ்டசாலியாக இல்லாதவர்களுக்கு நேரலை செய்து, மீடியாக்களின் மூலம் தவிர்க்க முடியாதபடி அதை பார்க்க வைப்பதில் வெற்றியும் பெற்றுள்ளார், சத்குரு ஜக்கி வாசுதேவ்.

மகா சிவராத்திரி அன்று கோள்களின் நிலை காரணமாக நாம் நமது தண்டுவடத்தை, முதுகை நேராக நிமிர்த்தி வைத்து, விழிப்பாகவும் விழிப்புணர்வோடும்  செய்யப்படும் இரவு தியானத்தால் மிகப்பெரிய ஆன்மீகப் பலன்களை பெற முடியும் என்று தினமணி கயிறு திரிக்கிறது. ஆனால் ஜக்கியை நம்பி மோசம் போகாதே  என கதறுகிறார்கள் பெற்றோர்கள்.

எப்படி மொழி, மதம், இனம், நாடு கடந்து பல கோடி பேரை ஜக்கியின் சிவராத்திரி கொண்டாட்டத்தால் ஈர்க்க முடிகிறது என்பது குறித்து ஏற்கனவே நமது தளத்தில் கட்டுரைகள் வந்துள்ளன. தேவைப்படுபவர்கள் அவற்றை மீண்டும் ஒரு முறை படித்துக் கொள்ளவும்.

இதையும் படிக்க:
ஈஷாவின் மஹாசிவராத்திரி! கார்ப்பரேட் சாமியார் ஜக்கி விரிக்கும் சதிவலை!

ரத யாத்திரை நாட்டுக்கு தேவையா?

அத்வானி எப்படி ஒரு ரத யாத்திரையை நடத்தினாரோ, அது போல் இப்போது ஜக்கியின் சிவராத்திரியை முன்வைத்தும் பல இடங்களில் ரத யாத்திரைகள் நடத்தப்பட உள்ளன. இந்த ஆதியோகி ரத யாத்திரையை நடத்துபவர்கள் தென்கைலாய பக்தி பேரவை என்ற பெயரில் வலம் வருகின்றனர்.

அந்த வகையில், பிப்.26-ம் தேதி பொள்ளாச்சியில் இருந்து புறப்படும் ஒரு ஆதியோகி ரதம், சுந்தராபுரம், குனியமுத்தூர், சிங்கநல்லூர், பீளமேடு, சின்னியம்பாளையம், சரவணம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், கணபதி, காந்திரபுரம், ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், வடவள்ளி என கோவையில் பல்வேறு பகுதிகளில் மார்ச் 6-ம் தேதி வரை வலம் வர உள்ளது.

ஈஷாவிற்கு நேரில் வந்து ஆதியோகியை தரிசிக்க முடியாத மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அருள் பெறுவதற்கு இந்த ரத யாத்திரை சிறந்த வாய்ப்பாக உள்ளது. முன்னதாக, 4 ஆதியோகி ரதங்களுடன் கூடிய இந்த யாத்திரையை தவத்திரு பேரூர் ஆதீனம் அவர்கள் கடந்த ஜனவரி 5-ம் தேதி தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து ஒவ்வொரு ரதமும் தமிழ்நாட்டின் 4 திசைகளிலும் பயணம் செய்தன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 60 நாட்களில் மொத்தம் 35,000 கி.மீ பயணிக்கும் வகையில் இந்த யாத்திரை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான கிராமங்கள் வழியாக பயணம் செய்து வரும் இந்த ரதங்கள் மார்ச் 6-ம் தேதி கோவை ஈஷா யோக மையத்திற்கு வந்து யாத்திரை முடிவடைகிறது.

நவீன கார்ப்பரேட் கும்பல்களும், அவர்களை புரவலராக கொண்டு வளரும் கார்ப்பரேட் சாமியார்களும், பக்தியை வைத்து ஆள் பிடிக்கும் மத நிறுவனங்களும் இணைந்துள்ள ஒரு கூட்டணியில் சாமானிய பக்தன் தன்னை இணைத்துக் கொள்வது என்பது நாட்டின் நலனுக்கு  ஏற்றதல்ல. ஈஷாவின் ரத யாத்திரை மூலம் நாளை மதக் கலவரங்களை தூண்டி இரத்த யாத்திரையாக சீரழிக்காமல் தடுத்தாக வேண்டும்.

யார் இந்த ஜக்கி வாசுதேவ்?

ஜக்கி என்பவர் தனி நபர் அல்ல. அவர் ஒரு சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிக்கும், பரப்பும், ஒருங்கிணைக்கும் கலையில் வித்தகர். இவரின் இந்த ஆற்றலை பயன்படுத்திக் கொள்பவர்களாக உலகின் முன்னணி கார்ப்பரேட்டுகளும், இந்தியாவின் காவி பாசிஸ்டுகளும் உள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர்  சத்குரு youtube சேனலில் வெளியிடப்பட்ட ஆங்கில வீடியோ முக்கியமான ஒன்று. அதில் ஜக்கி நமது கோயில்களில் கொட்டி கிடந்த தங்கங்களை, நம்மை அடிமைப்படுத்தியவர்கள் கொள்ளையடித்துச் சென்றனர் என்றும், குறிப்பாக ஆங்கிலேயர்கள் கோயிலில் இருந்து கொள்ளை அடித்த தங்கத்தை வைத்துதான் இரண்டாம் உலகப்போரையே நடத்தினார்கள் என்றும் கதை அளக்கிறார்.

ஒரு நாட்டை அடிமைப்படுத்துபவர்கள் அந்த நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றதை மறுக்க முடியாது. அது அரண்மனையின் பொக்கிஷ அறைகளில் இருந்தாலும் சரி, கோயிலின் கர்ப்ப கிரகங்களில் இருந்தாலும் சரி, கோயில் நிலவறைகளில் இருந்தாலும் சரி, அவற்றை கொள்ளையிடவே செய்தனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இது, பிற நாடுகள் மீது படையெடுத்துச் சென்று அடிமைப்படுத்திய இந்து மன்னர்களுக்கும் பொருந்தும். அல்லது, பிற சமய பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் வாழும் பகுதிகளை பிடித்த சைவ, வைணவ மதத்தைச் சேர்ந்த மன்னர்களுக்கும் பொருந்தும்.சங்கிகளுக்கு மட்டும்தான் வரலாறு என்பது இஸ்லாமிய,கிறிஸ்தவ மத படையெடுப்பாக மட்டுமே தெரிகிறது.

கோவில் நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாதாம்!

ஆனால், இந்த வரலாற்றில் இருந்து சத்குரு ஒரு அபாயகரமான தீர்வை முன் வைக்கிறார். அதாவது, கோயில்களில் இருந்து அரசின் தலையீடு அகற்றப்பட வேண்டும் என்கிறார். கோயிலை துறவிகளிடம் சாமியார்களிடம், பார்ப்பனர்களிடம், ஒப்படைக்க வேண்டும் என்கிறார். அதாவது ஆர் எஸ் இன் குரலாகவே ஒலிக்கிறார். இப்படி பேசித்திரியும் ஜக்கி எப்படி வாழ்கிறார்?

அத்தனைக்கும் ஆசைப்பட வேண்டுமா?

ஜக்கி ஆசைப்படுவது மட்டுமின்றி, அதை அடையும் வழிகளையும் கற்று தேர்ந்துள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன இருசக்கர வாகனத்தில் சொகுசாக வலம் வரும் ஜக்கி வாசுதேவ் சர்வதேச சுற்றுலா செல்வதும் வழக்கமானதுதான். இவரது மகள் சொந்த வாழ்க்கையில் வெளிநாட்டில் செட்டில் ஆகி இருக்கும் நிலையில், ஊரான் வீட்டுப் பிள்ளைகளை தமது ஆன்மீக வலையில் வீழ்த்துகிறார் ஜக்கி. இவரின் ஆன்மீகப் பிரச்சாரத்துக்கு பலியாகிவரும் இளம் பெண்களை மொட்டையடித்து, கெஜெட்டில் பெயரையும் மாற்றி துறவிகளாக்கி வாழ்க்கையை சிதைக்கிறார் என்று பெண் பிள்ளைகளை ஜக்கியிடம் பறிகொடுத்த பெற்றோர்கள் கதறுகின்றனர்.

ஈஷாவில் தன்னை இணைத்த உடனேயே அங்கு புதிதாக பெயர் வைக்கப்பட்டு கடந்த கால வாழ்க்கையுடனான தொடர்புகள் அழிக்கப்படுகின்றன. விலகி இருந்தபோது மதிப்புடன் தெரிந்த சத்குருவின் உண்மை குணத்தை நெருங்கி பார்த்து பழகிய பின் கண்டு உணர்ந்தவர்கள் விலக நினைத்தால், ஜக்கியின் காவலர்களால் மிரட்டி பணியவைக்கப் படுகிறார்கள். தப்பியோட நினைப்பவர்கள் மர்மமான முறையில் கிணற்றில் பிணமாக மிதக்கிறார்கள்.

ஐக்கி இந்து மதத்தை மறுசீரமைக்கிறாரா?

அப்படி ஒரு மண்ணும் இல்லை. இவர் வணங்கும் கடவுளான சிவன் முன் அனைவரும் சமம் என்று தானே அமர வைக்கிறார்; அங்குசாதி மதத்துக்கு எல்லாம் இடமில்லை என மறுப்பவர்களும் இருக்கிறார்கள்தான்.

முதலில் மதம் சாராத ஆன்மீகம் என்று கதைக்கட்டி பிசினஸை தொடங்கிய ஜக்கி படிப்படியாக தியானலிங்கம், லிங்க வழிபாடு என்று வளர்ந்து இன்று ஆதியோகி என்று தன்னை இந்து மத காவலராகவே முன்னிறுத்திக் கொள்கிறார். பழைய புளித்துப்போன கள்ளையே நவீன டெட்ரா பாக்கெட்களில் அடைத்தும், மண் கலயங்களில் ஊற்றி தந்தும் லண்டனில் விற்கிறார்கள். அதுபோல் பக்தி உணர்வையும், கேளிக்கை நுகர்வு வெறியையும் கலந்து கடைவிரித்துள்ளார், சத்குரு ஜக்கி.

நள்ளிரவு தியானம்; காசுக்கேற்ற பரவசம்!

ஈசனுடன் ஓர் இரவை கழிக்க கட்டணம் செலுத்தியாக வேண்டும். இந்தியாவில் பாயும் ஆறுகளின் பெயர்களில் வகை பிரித்து 250 ரூபாயில் தொடங்கி 50 ஆயிரம் வரை கட்டணத்தை தீர்மானித்து இருக்கிறார்கள். அதிகபட்சமாக கங்கை கூப்பனை வாங்குவதற்கு 50,000 செலவிட்டாக வேண்டும். இந்த கூப்பனை வாங்கியவர்கள் மட்டும்தான் முன் வரிசையில் அமர்ந்து  நெருக்கமாக ஆடல் பாடல் கொண்டாட்டங்களை பார்த்து பரவசத்தில் கசிந்துருக முடியும்.

கூப்பனை வாங்க காசு இல்லாத பக்தனுக்கு என்று தாமிரபரணி ஆற்றின் பெயரில் இடம் ஒதுக்குகிறார்கள். அவர்களால் மேடையைக்கூட தெளிவாக பார்க்க முடியாது. மேடை இருக்கும் திசையில் வரும் வெளிச்சப் புள்ளியை மட்டுமே பார்க்க முடியும். அதாவது, ஏழை பக்தர்கள் நேரில் சென்றாலும் கண்குளிர சத்குருவை காண முடியாது. வெளியூரில் இருப்பவர்களை போன்று எல்.இ.டி திரைகளிலேயே பார்த்து கசிந்துருக வேண்டியதுதான்.

அதாவது தான் பட்டியலிட்ட பணத்தை கட்டுபவர்கள் அனைவரும் சமம். அவர்கள் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒன்றாக அமர்ந்து கொண்டாட்டத்தை கண்டு ரசித்து குதூகளிக்கலாம். சினிமா தியேட்டர்களில் தரை டிக்கெட், சோபா, பால்கனி என்றெல்லாம் நடைமுறையில் உள்ளதை போன்று கங்கை, யமுனை, கோதாவரி, காவிரி என்று வகை பிரித்து ‘சமத்துவத்தை’ பேணி வருகிறார். அதாவது ஒரு வர்க்கத்துக்குள் சமத்துவத்தை நிலை நாட்டுகிறார்.

இவர் உண்மையான சிவபக்தரா?

ஜக்கி தான் உருவாக்கிய சிவனின் பக்தர் மட்டுமே! நாம் வழிபடும் சிவனுக்கும் இவருக்கும் துளியும் சம்பந்தமில்லை. அதனால்தான் நம் கோவில்களில் எது நடந்தாலும் வாயை திறப்பதில்லை. சாதாரண சிவன் கோயில்களில் வழிபடச் சென்றால், குறிப்பாக தில்லையில் உள்ள நடராஜனை வழிபட சென்றால், தேவாரம், திருவாசகம் பாடினால், தில்லைப்பார்ப்பனர்களால் – தீட்சிதர்களால் சிவபக்தர்கள் தாக்கப்படுவது குறித்து இவர் அறச்சீற்றம் கொண்டதில்லை. தன் வழியில், தன் அளவுக்கு சாதுரியமாக முன்னேறாமல் தீட்சிதர்கள் தடுமாறுகிறார்களே என்ற வருத்தம் வேண்டுமானால் இருக்க வாய்ப்புள்ளது.

தில்லைகோவிலில் கொள்ளை அடித்து கொழுத்து வருவது யார்? நம்மை அடிமைப்படுத்திய வெள்ளையர்கள் அல்ல; தீட்சித பார்ப்பனர்களே என்ற உண்மை தெரிந்தாலும் அது குறித்து வாயை திறக்கவோ, ஒரு கண்டன  வீடியோ போடவோ தயாராக இல்லை. ஆனால் இந்து சமய அறநிலையத்துறையை கோவிலில் இருந்து விரட்டிவிட மட்டும் துடிக்கிறார். இனம், இனத்தோடுதான் சேருகிறது.

உண்மையிலேயே இல்லற வாழ்கையை துறந்து, உடைமை ஏதுமற்று, திருவோடு ஏந்தி வாழும் பிற சிவனடியார்களுக்கும், ஐக்கி வாசுதேவ் என்கின்ற கார்ப்பரேட் சாமியாருக்கும்  துளி அளவு கூட தொடர்பு இல்லை. ஆன்மீகவாதியாக வேடமிட்டு வரும் இவர், உள்ளூர் அரசியல் அல்ல; உலக அரசியல் கூட பேசுவார்.

மதிப்பிழக்கும் பாரம்பரிய கோவிலும்; ஜொலிக்கும் கார்ப்பரேட் ஆதியோகியும்!

காவி – கார்ப்பரேட் கிரிமினல்களை இனம் பிரித்து ஒதுக்க முடியாதபடி பக்தி மயக்கத்திலோ அறியாமையிலையோ உள்ள சாமானிய மக்கள் படிப்படியாக இந்த கொண்டாட்டங்களால் ஈர்க்கப்படுகிறார்கள். இவர்கள் நேற்றுவரை பூண்டி அடிவாரத்தில் உள்ள, வெள்ளியங்கிரி மலை சிகரத்தில் உள்ள சிவனை கும்பிட்டு வந்தனர்.

இன்று நிலைமை மாறிவிட்டது. வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க வருவதை விட, தற்போது ஜக்கி நிறுவியுள்ள ஆதியோகியை வழிபட வருவதையே புனித பயணம் போல் கருதிக் கொள்கின்றனர் என்பதுதான் ஆபத்தானது. அதாவது ஒண்ட வந்த பிடாரி, ஊர்ப்பிடாரியை விரட்டிய கதைதான் அரங்கேறுகிறது.

நேரடியாக ஜெய் ஸ்ரீ ராம் என   ஒருகையில் காவி கொடியுடன், மறு கையில் சூலாயுதத்துடன், கண்களில் கொலை அல்லது காம வெறியுடன் பாய்ந்து வரும் அடியாள் சங்கிகளை எப்படி எச்சரிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டுமோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் தான், பவ்யமாக, பவிசாக, பணிந்து மெல்லிய குரலில் பேசி வரும் ஜக்கி மற்றும் அவரின் சீடர்களையும் நாம் அணுக வேண்டியுள்ளது.

ஜக்கியை பத்தோடு பதினொன்றாக அலட்சியப்படுத்தலாமா?

ஒரு கருத்து மக்களை பற்றிக் கொண்டால் அது பௌதிக சக்தியாகி விடுகிறது என்றால் மார்க்ஸ். தற்போது ஜக்கி போன்றவர்களால் மொழி, இனம், நாடு கடந்த ஒற்றைச் சொல்லாக ஓம் என்ற குறிச்சொல்லாக சிவன் முன்னிறுத்தப்படுகிறார்.

இந்த சிவன் நம்மை காப்பார், நமக்கு நல்வாழ்வு தருவார் என்ற கருத்தோ; அல்லது சிவனின் இந்த கொண்டாட்டங்களில் ஈடுபடுவதன் மூலம் கிடைக்கும் கிளர்ச்சி, குதூகலம், புத்துணர்ச்சி ஆகிய இந்த உணர்வுகள் தோற்றுவிக்கும் மதிப்பீடுகளோ படிப்படியாக பல கோடி பேரை சென்றடைகிறது என்றால், அதுவும் ஒரு விளைவை உருவாக்கக்கூடிய சமூக சக்தியாக மாறக்கூடும்.

14 கோடி பேரை ஈர்த்துள்ள இந்த கார்ப்பரேட் சாமியாரால், இந்தச் சிவனை வைத்தே தமிழகத்தில் கலவரங்களையும் நடத்த முடியும். அதாவது வட மாநிலங்களில் கலவரத்துக்கு ராமர், பிள்ளையார் என்றால், தென் மாநிலங்களில் சிவனை கையில் எடுக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே இவரை அலட்சியப்படுத்தி ஒதுக்க கூடாது.

அடித்தளத்தை அடித்து நொறுக்குவது எப்படி?

சாமானிய மக்கள் ஒரு குடிசை போட்டு வாழ்ந்தாலே அது ஆக்கிரமிப்பு என இடித்து தள்ளப்படும் சூழலில், சட்ட விரோதமாக வனப் பகுதியை, பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை வளைத்து, யானைகளின் வழித்தடத்தை மறித்து ஜக்கியால் ஒரு மாய உலகமே கட்டி எழுப்பப்பட்டுள்ளது. இத்தகைய ஜக்கியை சட்டத்தின் துணைகொண்டு மட்டும் வீழ்த்தி விட முடியாது.

கார்ப்பரேட் சாமியாராக உள்ள ஜக்கியிடம் பொருளாதார பலமும், அதிகார வர்க்கத் துணையும், அரசியல் செல்வாக்கும் ஒருங்கே சேர்ந்துள்ளது. இத்தகைய நவீன கார்ப்பரேட் சாமியார்களின் பிடியிலிருந்து பக்தர்களை, உழைக்கும் மக்களை, தமிழர்களை மீட்க வேண்டும் என நினைக்கும் ஒவ்வொருவரும் எச்சரிக்கையுடன் இதை பரிசீலிக்க வேண்டியுள்ளது.

அன்றாட சமூக பிரச்சினைகளை பற்றி சிந்திக்க விடாமல் திசை திருப்பும் ஜக்கியின் சிவன்ராத்திரிக்கு மாறாக, கடவுள் மறுப்பு நாத்திக பிரச்சாரத்தை முன்னெடுப்பதால் மட்டும் ஜக்கியின் செல்வாக்குக்குள் செல்லும் பக்தர்களை தடுத்து நிறுத்தி விட முடியாது. பக்தர்கள், சீடர்கள் தமது அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சமூக பிரச்சினையின் மூல வேர் பொருளாதாரத்தில்தான் ஆழமாக ஊடுவியுள்ளது. அதை அம்பலப்படுத்துவதையும் இணைத்தே முன்னெடுக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த தொடர் போராட்டங்கள் இல்லாமல், கலந்துரையாடல்கள் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் இல்லாமல், கார்ப்பரேட் – காவி பாசிசத்தின் அரசியல் பொருளாதார பண்பாட்டு தாக்குதல்கள் குறித்த ஒருங்கிணைந்த பார்வை இல்லாமல், நவீன கார்ப்பரேட் சாமியாரான ஜக்கியை விரட்டவோ, வீழ்த்தவோ முடியாது. நாமும் களமிரங்குவோம்; கோவையை, தமிழகத்தை சங்கிகளின் பிடிக்குள் போகாதபடி இடைமறிப்போம்; இந்த மண்ணை பகுத்தறிவின், வர்க்க ஒற்றுமையின் கோட்டையாக்குவோம்.

இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here