அரசியல் அமைப்புச் சட்டம்
கருவாகி உருவான வரலாறு!!

இந்திய விடுதலைப்போராட்ட தலைமை பொறுப்பில் இருந்த காங்கிரசு 1901 லேயே கீழ்கண்ட தீர்மானத்தை இயற்றியது. ‘இந்திய மக்கள் உடனடியாக மாற்றத்தையோ புரட்சியையோ விரும்பவில்லை… நிலவுகின்ற அரசை பலப்படுத்தவும் அதை மக்களோடு நெருக்கமாக கொண்டு வரவும் தீர்மானித்துள்ளனர். இந்திய விவசாயம் மற்றும் தொழில்களை பிரதிநிதித்துவப்படுத்த அரசு செயலகத்தில் வைசிராயினுடைய நிர்வாக குழுவிலும் சில இந்திய உறுப்பினர்களிருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.’(காங்கிரசு கட்சியின் தீர்மானம்) இதன் உள்ளடக்கத்தை புரிந்து கொண்ட பிரிட்டன் அரசு வரிசையாக சில சில்லறை சீர்த்திருத்தங்களை செய்தது. 1922 ல் மகாத்மா காந்தி இந்தியர்களுக்கென அரசியல் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று கருதினார்.Understanding MK Gandhi's 'love' for his 'spiritual wife'

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பற்றி புரிந்து கொள்வதற்கு பிரிட்டன் காலனியாதிக்கத்தில் இந்தியாவை ஆள்வதற்கு பொருத்தமானவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து 1909 முதல் 1935 வரை கொண்டுவரப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்கள், அரசியல் அமைப்புச் சட்டங்களே சாட்சியமாக உள்ளது.

வங்கப் பிரிவினையால் இந்தியர்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்பையும், இந்தியப் புரட்சிகர இயக்கங்களுக்கு மக்கள் மத்தியில் இருந்த ஆதரவைக் குறைக்கவும் ஆட்சி அதிகாரத்தில் இந்தியர்களுக்கே சில உரிமைகளை வழங்க வேண்டுமென்று பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது. பிரிட்டிஷ் அரசின் நிர்வாக அதிகாரியான ஜான் மார்லே, வைஸ்ராயான மிண்டோ பிரபு இருவரும் இணைந்து ஒரு திட்டத்தை முன்வைத்தனர். இதனடிப்படையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 1909 ல் எழுதப்பட்டது. இதில் மூன்று முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன.

ஒன்று, இந்திய சட்ட மன்றங்களுக்கு இந்திய உறுப்பினர்களைத் தேர்வு செய்ய தேர்தல் முறையை அமுல்படுத்த வேண்டும். ஏனென்றால், அதுவரை நியமன உறுப்பினர்கள் தான் சட்ட மன்ற உறுப்பினர்களாக இருந்தனர்.

இரண்டு, தேர்தல் முறையில் இசுலாமியர்களுக்கு 25% இட ஒதுக்கீடும் மீதமுள்ள இடங்களை பெரும்பான்மை இந்துக்களுக்கும் ஒதுக்குவது.

மூன்றாவது, தலைமை ஆளுனர், மாநில ஆளுனர் என்று நிர்வாகக் குழுக்கள் விரிவுபடுத்தப்பட்டு அதில் இந்தியர்களுக்கு இடமளிப்பது – என்ற அடிப்படையில் காலனிய நிர்வாக முறையில் இந்தியர்களின் பங்களிப்பு அவசியம் என்ற வகையிலேயே இந்த மிண்டோ-மார்லி சீர்திருத்தம் முன்வைக்கப்பட்டது.

மிண்டோ – மார்லி சிர்த்திருத்தம்

இதன் பிறகு, மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தம் 1919ல் சில திருத்தங்களை முன்வைத்தது. குறிப்பாக, இந்தியாவை பல மாகாணங்களாகப் பிரித்து மாகாணங்களுக்கு அந்த மாகாண அரசுகளுக்கு வரையறுக்கப்பட்ட சில அதிகாரங்களை வழங்குவது, மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சட்ட மன்றம் ஆகியவற்றை முன்வைத்தது. இந்த அடிப்படையில் சென்னை, பம்பாய், வங்கம், மத்திய மாகாணம், பஞ்சாப் மாகாணம் என்று பிரிக்கப்பட்டது. இந்த மாகாணங்களை, மாகாண அரசுகளை பிரிட்டானிய மத்திய அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து ஆட்சி செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த சீர்திருத்தங்களை அப்படியே ஏற்ற இந்திய தலைவர்களைப் பற்றி மாண்டேகு செம்ஸ்போர்டு அறிக்கை கீழ்கண்டவாறு கூறியது “இந்திய மக்களில் அரசியல் மனப்பான்மை கொண்ட பகுதியினர் அறிவு பூர்வமாக நம் குழந்தைகள். நாம் முன் வைத்த கருத்துக்களை அவர்கள் மனதில் வாங்கிக் கொண்டார்கள்” என்று மகிழ்வுடன் கூறியது.

இதன் பிறகு உள்ளாட்சி நிர்வாகத்தை விரிவுபடுத்துவதற்கென்று நகராட்சி, மாநகராட்சிகளை உருவாக்கி 1920-ல் ஆட்சியமைப்பு முறையில் சில சீர்திருத்தங்களை மேற்கொண்டது. அதன் பிறகு 1921-ல் கிராம பஞ்சாயத்துக் குழுக்களை அமைத்து உள்ளாட்சி நிர்வாகத்தை மேற்கொண்டது.

பிரிட்டன் காலனியாதிக்கவாதிகள் தன்னால் 1909 ல் முன் வைக்கப்பட்ட அரசு நிர்வாக முறைகளை இந்த 12 ஆண்டுகளாக சரியாக நடைமுறைப் படுத்துகிறார்களா? மேலும் அதை எவ்வாறு சீர்திருத்துவது? என்ற நோக்கத்துடன் சைமன் என்பவர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது பிரிட்டன் அரசு. அந்தக் குழு இந்தியாவிற்கு வருகை தந்து பிரிட்டிஷ் அதிகாரிகளையும் காங்கிரசு, முசுலீம் லீக் தலைவர்களையும் சந்தித்துப் பேசியது. சைமன் குழுவை எதிர்த்துக் கொண்டே அவர்களுடன் தனது கருத்துக்களை முன்வைத்து காங்கிரசு உரையாடியது. அதன் பிறகு 1930,31,32 ஆகிய ஆண்டுகளில் 3 முறை வட்ட மேசை மாநாடு நடத்தி அதிகாரத்தை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பதை பிரிட்டன் காலனியாதிக்க வாதிகள் முன்வைத்தனர். இந்த வட்டமேசை மாநாடுகளுக்குப் பிறகு 1935-ல் முன்வைக்கப்பட்ட இந்திய அரசு சட்டம் என்பதுதான் பின்னாளில் அரசியல் நிர்ணய சபை அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுதுவதற்கு வழிகாட்டியாக இருந்தது.

பிரிட்டனின் காலனியாதிக்கத்தை தொடர்ந்து எதிர்த்துப் போராடிய மக்களின் எழுச்சிகளையும், விடுதலை வேட்கையையும் தணிப்பதற்கென்றே பிரிட்டன் அரசு தொடர்ந்து அதிகாரத்தில் இந்தியர்கள் (மேல்தட்டுப் பிரிவு) பங்கேற்பதை செய்து கொண்டே வந்தது.

குறிப்பாக காங்கிரசின் காந்தி, நேரு, பட்டேல் போன்றவர்களின் தலைமையையும் முசுலீம் லீக் ஜின்னா தலைமையையும் ஏற்க மறுத்து பிரிட்டனின் காலனியாதிக்கத்திற்கு எதிராக நடந்த கப்பற்படை எழுச்சி பிரிட்டன் காலனியாதிக்கவாதிகளை இனிமேலும் பழைய முறையில் இந்தியாவை ஆள முடியாது என்ற முடிவுக்குக் கொண்டு சென்றது. இந்த கப்பற்படை எழுச்சியில் ராயல் இந்திய கடற்படையின் 78 கப்பல்கள், 20 கடற்கரை கட்டுப்பாட்டு அமைப்புகள், 20,000 கப்பற்படை சிப்பாய்கள், ராயல் இந்தியா விமானப்படை வீர்ர்கள் 1,000 பேர் நேரடியாக பங்கேற்றனர். இதற்கு ஆதரவாக 10,000 போலீசு வேலை நிறுத்தம் செய்தனர். டேராடூனில் குர்கா சிப்பாய்கள், கப்பற்படையில் பணியாற்றிய தொழில் நுட்பப் பிரிவினர், அதை ஆதரித்து இலட்சக்கணக்கான இந்திய மக்கள் என்று பெரும்பான்மை இந்திய மக்கள் பங்கெடுத்த கப்பற்படை எழுச்சி 1857-58 ல் நடந்த ’முதல் சுதந்திரப் போருக்கு’ இணையான எழுச்சியை உருவாக்கியது. ஒருமித்த கருத்துடன் இந்து, முசுலீம், சீக்கியர் ஒற்றுமையுடன் போராடினர்.

பிரிட்டிஷ் ஆட்சியைக் கலங்கச் செய்த 1946 பிப்ரவரி கப்பற்படை எழுச்சி ! | வினவு
இந்திய கப்பற்படை எழுச்சி 1946 பிப்ரவரி

இந்தச் சூழலில் தான் மே16, 1946 அமைச்சரவை தூதுக்குழு அரசியல் நிர்ணய சபையை ஏற்படுத்த வேண்டும் என பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் 1946 டிசம்பர் 9-ல் பிரிட்டன் வைஸ்ராய் வேவல் பிரபு தலைமையில் டாக்டர் சச்சிதானந்த சின்ஹா இந்திய அரசியல் தற்காலிக நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டார். 11 டிசம்பர் 1946 டாக்டர் இராஜேந்திர பிரசாத் அரசியல் நிர்ணய சபையின் நிரந்தர தலைவராக தேர்வு செய்யப்பட்டார், தோராயமான வரைவு அறிக்கை வி.என்.ராவ் என்ற பார்பனரால் தயாரிக்கப்பட்டது. இந்த வரைவு அறிக்கையை திருத்தும் பணியே டாக்டர் அம்பேத்கருக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு  இந்திய அரசியல் நிர்ணய சபை கூடியது. இதன் மூலம் அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுதுவதற்காக 7 பேர் கொண்ட வரைவுக் குழுவை நியமித்தது. இந்த வரைவுக் குழுவில் டாக்டர் அம்பேத்கர், கோபால்சாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, கே.என்.முன்சி, சையத் முகம்மது சதக்கத்துல்லா, மாதவராவ், டி.டி.கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த வரைவுக் குழுவை முன்வைப்பதற்கு நடந்த விவாதங்களில் ‘நாம் சுதந்திரம் அடைந்த பிறகு வேறொரு அரசியல் நிர்ணய சபையை அமைப்போம்’ என்றார் நேரு. ஆனால், அந்த வாக்குறுதி இறுதி வரை நிறைவேற்றப்படவேயில்லை. பிரிட்டன் காலனிய ஆதிக்கவாதிகள் நியமித்த உறுப்பினர்களைக் கொண்டுதான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் வரைவு எழுதப்பட்டது என்பதே வரலாற்று உண்மை.

1935-ல் முன்வைக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்திற்கு மாற்றாக நிர்வாக ஆவணமாக அரசியல் அமைப்புச் சட்டத்தை முன்வைப்பது என முடிவெடுக்கப்பட்டது. ஆனால் 1935 அரசமைப்புச் சட்டத்தில் உள்ள சுமார் 250 பிரிவுகள் வார்த்தைகள் மாறாமலும் சில சொற்களை மாற்றியும் அப்படியே எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த 1935 சட்டத்தை அடிமைச் சாசனம் என்று விமர்சித்த நேரு சுதந்திரமான அரசியல் நிர்ணய சபையை நிறுவவோ புதிதாக அரசியல் அமைப்புச் சட்டத்தை முன் வைக்கவோ சற்றும் விரும்பவில்லை.

தற்போது நமது நாட்டை வழிநடத்திச் செல்லும் அரசியல் அமைப்புச் சட்டம் நமது நாட்டை காலனியாதிக்கம் செய்த பிரிட்டன் போன்ற பல ஐரோப்பிய நாடுகளின் அரசியல் அமைப்புச் சட்டத்திலிருந்து கீழ்க்கண்ட அம்சங்களை எடுத்துக் கொண்டது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகவுரை வாசகங்கள் ஆஸ்திரேலியாவிலிருந்தும், பாராளுமன்ற ஆட்சி வடிவம் பிரிட்டனிலிருந்தும், கூட்டாட்சி முறையை கனடாவிலிருந்தும், அடிப்படை உரிமைகள் குறித்த அம்சங்களை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்களிலிருந்தும், அடிப்படை கடமைகளை சோவியத் யூனியனிலிருந்தும், அரசியல் சட்ட முறையைத் திருத்துவது தொடர்பான விதிகளைத் தென் ஆப்பிரிக்காவிலிருந்தும், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் குறித்த அம்சங்களை பிரான்சிலிருந்தும், அவசர நிலைப் பிரகடனம் குறித்த வழிமுறைகளை ஜெர்மனியிலிருந்தும் எடுத்துக் கொண்டது. அரசியலமைப்பு முன்னுதாரணங்கள் என்ற தலைப்பில் மூன்று வரிசைகளில் தரப்பட்ட அந்தப் பின்னணி விவரங்களில் சுமார் 60 நாடுகளின் அரசியல் சட்டங்களின் சிறப்புத்தன்மை தொகுத்து தரப்பட்டுள்ளன.

தொடரும்

பகுதி 1ஐ  படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
கார்ப்பரேட் – காவி பாசிசத்தை தாங்கிப் பிடிக்கும் அரசியல் அமைப்புச் சட்டம்! 

இளஞ்செழியன்

 

ஆதார நூல்கள்;  

  • புதிய ஜனநாயகம்.
  • வினவு, கீற்று கட்டுரைகள்.
  • நக்சல்பரி முன்பும் பின்பும், தோழர் சுனிதிகுமார் கோஷ்.
  • சாதியம் பிரச்சனைக்கு தீர்வு புத்தர் போதாது,
    அம்பேத்கரும் போதாது, மார்க்ஸ் அவசிய தேவை -ரங்கநாயக்கம்மா.
  • அம்பேத்கர் தொகுப்பு நூல்கள்.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டம்.
  • காந்தியும் காங்கிரசும் துரோக வரலாறு. பு.மா.இ.மு வெளியீடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here