கடந்த மார்ச் 15 முதல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டுள்ளது.
வழக்கைப் பொருத்தவரை அண்ணாதுரை கூறியதுபோல “சட்டம் ஒரு இருட்டறை அதில் வழக்கறிஞர்களின் வாதங்களே வெளிச்சத்தைத் தருகிறது” என்பதைப்போல் சட்ட நுணுக்கங்களை முன்வைத்து போராடுவது மிகவும் அவசியமானது.
அதே சமயத்தில் ஒற்றுமையாக போராடிய தூத்துக்குடி மக்களை பிளவுபடுத்துவதற்கு வேதாந்தா என்ற கார்ப்பரேட் நிறுவனம் களத்தில் இறங்கியுள்ளது. இதனை உடனடியாக முறியடிக்க வேண்டியுள்ளது.
புதிய தாராளவாதக் கொள்கைகள் அமுல்படுத்த தொடங்கிய பிறகு கார்ப்பரேட்டுகள் தனக்கு தேவையான நிலங்கள், மலைகள், காடுகள் ஆகியவற்றிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்கு தன்னார்வ குழுக்களை களமிறக்குகின்றனர். மக்கள் நலத்திட்டங்கள் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய்களையும் வாரி இறைத்து வருகின்றனர். இதன் மூலம் கார்ப்பரேட்டுகளின் கனிமவள கொள்ளை, சுற்றுச்சூழலை நாசமாக்குகின்ற ஆலைகள் போன்றவற்றை எதிர்த்துப் போராடுகின்ற மக்களை பிளவுபடுத்துகின்றனர்.
முதல் வேலையாக பல பட்டங்களைப் படித்த இந்த நாட்டின் “எட்டப்பர்கள்” ஆக மாறிவிடும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் முதல் அறிவு ஜீவிகள் வரை அனைவரையும் தக்க சன்மானம் கொடுத்து கார்ப்பரேட் திட்டங்களை ஆதரித்து அறிக்கை வெளியிட வைக்கின்றனர்.
பாதிக்கப்படும் பகுதியில் வாழும் மக்களை பிளவு படுத்துவதற்கு கோவில் கட்டி தருவது, குளம் வெட்டிக் கொடுப்பது, சாலை அமைத்து தருவது, பள்ளிக்கூட கட்டிடங்களை சரி செய்து தருவது போன்ற அரசு மக்களுக்கு செய்து தர வேண்டிய அனைத்து பணிகளிலும் இறங்கி ஒற்றுமையாக வாழும் மக்கள் சிலரை கருங்காலிகளாகவும், தனது ஆதரவாளர்களாகவும் மாற்றுகின்ற சதிவேலைகளில் இறங்குகிறார்கள்.
90-களில் காவிரி டெல்டாவை நாசமாக்க கொண்டுவரப்பட்ட இறால் பண்ணைகள், அதன் பிறகு தொடர்ச்சியாக கொண்டுவரப்பட்ட ஆற்று மணல், தாது மணல் கொள்ளை, மலைகளை உடைத்து அள்ளப்படும் கிரானைட் முதல் கருங்கல் குவாரி, மீத்தேன் திட்டம், ஷேல் கேஸ் திட்டம், கவுத்தி- வேடியப்பன் மலையில் ஜிண்டால் நிறுவனத்தை அனுமதிக்கும் திட்டம், நியூட்ரினோ போன்ற திட்டங்கள் வரை மக்களை சாந்தப்படுத்துவதற்கு இதுபோன்ற “சமூக பொறுப்பை” ஆற்றுகிறார்கள்.
இதனையே ஆங்கிலத்தில் corporate social responsibility (CSR) என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறார்கள்.
பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள மக்களை எளிதில் விலைபேசி விடலாம் என்ற ஈனத் தனமான செயலில் இறங்கும் இது போன்ற முயற்சிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் கனிம வேட்டைக்கும், லாபவெறிக்கு நமது மக்களை பலி கொடுப்பதற்கு தயாராகியுள்ள ஆர்எஸ்எஸ்-பாஜக கார்ப்பரேட் கைக்கூலிகளை முறியடிப்பதற்கு மீண்டும் வீரம் செறிந்த போராட்டத்திற்கு தயாராவோம்.
000
தமிழக அரசின் உடனடி அவசர கவனத்திற்கு:
மீண்டும் தூத்துக்குடியை இரத்தக்களறியாக்கும் முயற்சியில் ஸ்டெர்லைட்:
தூத்துக்குடியின் அமைதியை மீண்டும் சீர்குலைக்கும் மற்றொரு கிழக்கிந்தியக் கம்பெனி ஸ்டெர்லைட்!
15 உயிர்களைப் பலிகொடுத்து மூடப்பட்ட ஸ்டெர்லைட்டை மீண்டும் திறப்பதற்கு பல நூறு கோடிகளை வாரி இறைத்து, கைக்கூலிகளை உருவாக்கி-மக்களைப் பிளவு படுத்தி, மீண்டும் தூத்துக்குடியை இரத்தக் களரியாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது சட்ட விரோத ஸ்டெர்லைட் நிறுவனம்.
தொடர்ந்து ஆங்காங்கே பணம், பொருட்கள் கொடுத்து பிரச்சினைகளை உருவாக்கி வந்த ஸ்டெர்லைட், இன்று தூத்துக்குடி பாத்திமா நகரில் பொருட்கள் விநியோகம் என்ற பெயரில் அரசு, காவல் துறை, மாநகராட்சியை ஒரு பொருட்டாக மதிக்காமல் கடும் பிரச்சனையை உருவாக்கியுள்ளது. பாத்திமா நகர் ஏரியா மக்கள் ஸ்டெர்லைட் நிர்வாகத்தினர், அவர்களது கைக்கூலிகள் பொருட்கள் வழங்கக் கூடாது என்று சொன்ன பின்பும், பணத் திமிரில் தனது கைக்கூலிகள் மூலம் பொருட்கள் கொடுக்க முயல, அப்பகுதியைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் திரண்டு – ஸ்டெர்லைட் அதிகாரிகள் – கைக்கூலிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது.
ஊடகங்கள் போராட்ட செய்திகளை மறைக்கின்ற நிலையில் சமூக ஊடகங்கள் மூலம் நாம் குரல் எழுப்புவோம்!
கிழக்கிந்தியக் கம்பெனியின் வாரிசான ஸ்டெர்லைட்டை சிப்காட்டை விட்டு அகற்று!
பொது அமைதியை சீர்குலைக்கும் ஸ்டெர்லைட் அதிகாரிகள்- கைக்கூலிகளை கைது செய்!
——————————————————————-
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.