சமீபத்திய நாட்களில் இரண்டு செய்திகள் நம்மை அதிரவைத்துள்ளன. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களின் கிட்னி விற்பனையும், மற்றொன்று அதே நாமக்கல் மாவட்டத்தில் வாங்கிய கடனை கட்ட முடியாத தொழிலாளியை ஈக்விடாஸ் வங்கி ஊழியர் மரியாதை குறைவாக பேசி மிரட்டியதும். இரண்டு செய்திகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்திக்கொண்டு அவர்களின் கிட்னியை அபகரித்துள்ளது ஒரு கும்பல். இது அதிகார வர்க்கத்தின் துணையில்லாமல் நடப்பதற்கு வாய்ப்பில்லை. இந்த கிட்னி விற்பனை பெரிய அளவில் நடந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் ஏதோ ஐந்து, ஆறு பேர் விற்பனை செய்துள்ளனர் என்பதைப் போல் தோற்றத்தை உருவாக்க முயல்கிறது திமுக அரசு.
தொழில்துறை இயந்திரங்களின் வளர்ச்சியால் விசைத்தறி தொழில் உட்பட பல கைவினைஞர்கள் வாழ்க்கை நலிவடைந்துள்ளது. இப்படியான தொழில் செய்பவர்களுக்கு, அவர்கள் வாழ்வை மேம்படுத்துவதற்கு அரசு முயற்சிகள் எடுப்பதில்லை. இதனால் பல தொழிலாளர்களின் குடும்பங்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளது.
வறுமையில் இருந்து குடும்பத்தை மீட்க அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கு வேறு வழி இல்லாமல் கந்து வட்டி கும்பலிடமும் நுண்கடன் நிறுவனத்திடமும் கொள்ளை வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் உழைக்கும் மக்கள். ஆரம்பத்தில் கிடைக்கும் வேலையை பார்த்து கடனை அடைக்க முயல்பவர்கள் அதிகரித்து வரும் விலைவாசியால் போகப் போக குடும்பத்தை நடத்தவே வழியில்லாத போது கடனை அடைப்பது எப்படி?
இதனை தான் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள் உடல் உறுப்பை விற்பனை செய்யும் மாபியா கும்பலும், இடைத்தரகர்களும்.
பிரச்சனை பெரிதான பின்னர் ஊடகங்களில் அம்பலமாகிய பிறகு சுகாதாரத்துறை நடத்திய விசாரணையில் ஒரு பெண் இவ்வாறு கூறுகிறார்: “குடும்பத் தேவைக்காக மகளிர் குழுக்களில் கடன் வாங்கினோம். வாழ்க்கை நடத்துவதற்கான வருமானம் போதாததால் குழு கடனைத் திருப்பி செலுத்த முடியவில்லை. அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கி குழு கடனைச் செலுத்தினோம்.
கடன் சுமை அதிகமாகி விட்டதால் வேறு வழி இல்லாமல் கிட்னி விற்றேன். இதற்காக 4 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தார்கள். அதைப் பெற்று வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தி உள்ளேன். எனது கணவரும் கிட்னி கொடுத்துள்ளார்” என கிட்னியை விற்ற ஒவ்வொருவருக்கும் அவர்களின் பின்னே ஒரு ‘வறுமை கதை’ உள்ளது.
அதேபோல நாமக்கல் எருமைப்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி சிவசங்கரன் என்பவர் ஈக்விடாஸ் நுண்கடன் வங்கியில் வாங்கிய கடனுக்கான தவணையை இந்த மாதம் கட்ட வாய்ப்பில்லை அடுத்த மாதம் சேர்த்து கட்டுகிறேன் என்று கூறியதால் அவரின் வீட்டிற்கு சென்று குடும்பத்தினர் மத்தியில் ஈக்விடாஸ் நிறுவனத்தின் ஊழியர் தகாத வார்த்தை பேசியதோடு ‘அவ்வளவுதான் காலிப் பண்ணிடுவேன்’ என்று மிரட்டி உள்ளார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது. ஈக்விடாஸ் நிறுவனம் அதிகார வர்க்கத்தின் துணை இல்லாமல் இப்படி மிரட்டுவதற்கு வாய்ப்பு இல்லை. கிட்னி விற்பனையும் அதைத்தொடர்ந்து வங்கியின் மிரட்டலும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.
நாமக்கல்லில் பரபரப்பாக பேசப்படும் கிட்னி விற்பனை குறித்து ஆய்வு செய்ய ஐஏஎஸ் தலைமையிலான குழு ஒன்றை அமைத்துள்ளது திமுக அரசு. எதிர்க்கட்சிகள் கிட்னி விற்பனையில் திமுக பிரமுகர் தொடர்புள்ளதாக தனது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்கிறதே ஒழிய மக்கள் அடிப்படை பிரச்சினையை களைவதற்கான வழிகளை கூறவில்லை. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனோ இதை கிட்னி திருட்டு என்று சொல்ல முடியாது கிட்னி விற்பனை என்று தான் சொல்ல வேண்டும். இந்த பிரச்சனை 2019 (அதிமுக ஆட்சி) முதலில் நடந்து வருவதாக கூறி பொறுப்பில்லாமல் மையப் பிரச்சினையை பற்றி ஆராயாமல் எஸ்கேப் ஆகிறார்.
படிக்க:
♦ பெற்ற குழந்தையை விற்ற பெற்றோர்! பிஜேபியின் ஆட்சியில் நடக்கும் கொடூரம்!!
♦ ஏழை மக்களின் நகைகளை கார்ப்பரேட்டுகள் கொள்ளை அடிக்க வழி வகுத்துள்ள ரிசர்வ் வங்கி!
அரசு சார்பில் நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் ஆய்வு என்ன சொல்லப்போகிறது. யார் யார் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள்? எத்தனை பேர் கிட்னி விற்பனை செய்துள்ளார்கள்? என்ன நடவடிக்கை எடுப்பது? என்ற அளவிலேயே சொல்லுமே தவிர, தொழிலாளர்கள் கந்துவட்டி வாங்கும் அளவுக்கு கடல் சுமை வருவதற்கு காரணம் என்ன? உடல் உறுப்பை விற்றாவது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற முடிவுக்கு அவர் வருவதற்கான காரணம் என்ன? கந்துவட்டிக் கும்பலும் நுண்கடன் நிறுவனங்களும் தொழிலாளர்களை மிரட்டுவதற்கு பின் உள்ள அதிகார வர்க்கத்தினர் யார் யார்? என்ற கோணத்தில் விசாரணை அல்லது அரசு நடத்தும் ஆய்வு செல்லப்போவதில்லை என்பதை எமது திண்ணம்.
புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவால் கடந்த 30 ஆண்டுகளாக உழைக்கும் வர்க்கம் கடன் வலையில் சிக்கி மீள முடியாத நிலையில் உள்ளது. அதே நேரத்தில் பல்லாயிரம் கோடி கடன் பெற்ற கார்ப்பரேட் முதலாளிகள் வங்கிகளால் பொதுமக்கள் மிரட்டப்படுவது போல் மிரட்டப்படுவதும் இல்லை. சில ஆண்டுகள் கழித்து வாராக் கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டு முதலாளிகளின் கடன் ரத்து செய்யப்படுகிறது. ஆனால் உழைக்கும் வர்க்கமோ மானத்திற்கு அஞ்சி ஒரு கடனை அடைக்க மறு கடன் வாங்குவது, கந்துவட்டிக்கு கடன் வாங்குவது, வட்டி கட்ட வழியில்லாமல் கிட்னியை விற்பது என முதலாளிகளுக்கு உழைப்பை விற்பதோடு வாழ்வை நடத்த உடல் உறுப்புகளை விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதனால் இப்பிரச்சினையை தீர்க்க ஆய்வுகள் உதவாது. இந்தியாவில் அதிகரித்து வரும் சமூக ஏற்றத்தாழ்வு காரணமாக வேலையின்மையும் வறுமையும் அதிகரித்து வருகிறது. வாங்கும் குறைந்த ஊதியமும் ஏதாவது ஒரு வழியிலே முதலாளிகளுக்கே திரும்பச் செல்கிறது. வறுமை ஒழிப்பதற்கும், சமமான பொருளாதார வாழ்வுக்கும் இடையூறாக உள்ள கார்ப்பரேட் கும்பலையும் அதற்கு துணை புரியும் அரசையும் அதிகார வர்க்கத்தையும் வீழ்த்தி மக்களுக்கான ஜனநாயகக் கூட்டரசை நிறுவ வேண்டிய கட்டாயத்தில் இந்திய உழைக்கும் வர்க்கம் உள்ளது.
- சுவாதி






