நவீன திரிபுவாதத்தை முறியடித்து 1970 களில் எழுந்த நக்சல்பாரி இயக்கத்தாலும், “சமூக பொருளாதாரப் படிவத்தை ஆய்வு செய்யாமல், புறநிலையில் நிலவும் அரசியல் சூழலை மட்டும் மதிப்பீடு செய்து இயக்கத்தை நடத்தும்” நச்சுப் பிடியிலிருந்து தப்பிக்க முடியவில்லை. இந்தியப் புரட்சியை நீண்ட காலம் கல்வியிருந்த இந்த நச்சுப் பிடியிலிருந்து விடுவிக்க அரசியல் – கோட்பாட்டு ஆவணங்களை வகுத்து புரட்சியின் பாதையை வரையறுப்பது உடனடி இன்றியமையாத வரலாற்றுப் பணியாக இருந்தது. அதைத்தான் எமது அமைப்பு செய்து முடித்தது.
புரட்சிக்கு தலைமை தாங்குகின்ற அரசியல் விஞ்ஞானமான போர்த்தந்திரங்களையும் செயல் தந்திரங்களையும் வகுத்து செயல்படுகின்ற மார்க்சிய லெனினிய வழிமுறையின்றி தன்னெழுச்சியான வழிமுறையிலும், தான் மார்க்சியம் என்று புரிந்து கொண்ட அரைகுறையான சித்தாந்த புரிதல் அடிப்படையிலும் இயக்கத்தை கொண்டு செல்வதன் மூலம் இந்தியாவின் புரட்சிகர அரசியல் தற்காலிகமாக பின்னடைந்துள்ளது என்பது உண்மைதான்.
பாட்டாளி வர்க்கத்தின் அடித்தளமான அதாவது விவசாயிகள் மற்றும் தொழிலாளர் களுடன் ஒன்றிணைந்து தனது வர்க்க வாழ்க்கையை இறக்கம் செய்து கொண்டு வாழ்வதற்கு மறுதலிக்கின்ற குட்டி முதலாளித்துவ போக்குடைய தலைமை, அது விவசாய வர்க்கத்திலிருந்து வந்திருந்தாலும் சரி அல்லது படிப்பாளிகள் மத்தியில் இருந்து வந்திருந்தாலும் சரி பாட்டாளி வர்க்க இயக்கத்தை சீரழிக்கின்றது. இதனை சீனத்தின் அனுபவத்திலிருந்து கீழ்க்கண்ட மேற்கோள் மூலமாக நாம் கற்றுக் கொள்ள முடியும்.
படிக்க: சீனப்புரட்சியின் 75 ஆண்டு நிறைவும், நமது பணிகளும்!
”பல தோழர்கள் அரசியல் ரீதியான ஒரு முடிவுக்கு வர இயலாத போது அல்லது தனிப்பட்ட குரோதங்கள் அல்லது கோஷ்டி வாதிகளால் உருவாக்கப்படும் சண்டைகளால் அவர்கள் சோர்வடைந்து செயல்படாமல் இருந்துவிடுகின்றனர். இது எந்த விதத்தில் பார்த்தாலும் குட்டி முதலாளித்துவ நம்பிக்கையற்ற வாதமாகும். உண்மையில் புரட்சியானது நாள்தோறும் முன்னோக்கிச் செல்கிறது. ஒருக்கால் ஒரு கட்சி ஊழியர் மக்கள் மத்தியில் ஆழமாகச் சென்று அவர்களுடைய உணர்வுகளை உயர்த்துவதில் ஈடுபடுவரானால் அவருக்குத் தனது உணர்வுகளைத் தக்க வைத்துக் கொள்வதில் எந்த பிரச்சனையும் இராது.
கட்சியைப் பொருத்தவரை அது ஏற்கனவே பரந்துபட்ட மக்களின் கட்சியாக உள்ளது. உறுதியான போராட்டத்தில் தோழர்கள் அனைவரும் ஐக்கியப்பட்டு நிற்கும் வரை விரல்விட்டு எண்ணக்கூடிய எத்தர்கள் நமது அமைப்புக்குக் குழிபறிக்க முடியாது. செயல்படாமை என்பது வீழ்ச்சி அடைவதின் ஒரு அறிகுறியாகும்.” கட்சியிலிருந்து பாட்டாளி வர்க்கமற்ற சித்தாந்தத்தை உறுதியாக ஒழித்துக் கட்டுவது பற்றி. சூ-என்-லாய்
சீனப் புரட்சி 75 வது ஆண்டு நிறைவு என்ற சூழலில் இந்தியாவில் புரட்சியை முன்னெடுத்து செல்ல மனப்பூர்வமாக செயல்பட துவங்கிய மார்க்சிய லெனினிய அமைப்புகள் மத்தியில் அரசியல், சித்தாந்த நடைமுறையில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு அடிப்படை தலைமையில் ஏற்பட்ட சந்தர்ப்பவாத நடைமுறைகளேயாகும்.
படிக்க: சீனப்புரட்சியின் 75 ஆண்டு நிறைவும், நமது பணிகளும்! பாகம்-2
ஏகாதிபத்தியமும் பாட்டாளி வர்க்கப் புரட்சியும் என்ற லெனினிச சகாப்தத்தின் நிகழ்ச்சி போக்கு நிறைவு பெறாத சூழலில் கம்யூனிச இயக்கங்கள் மேலும் தனிநபர் வாதத்தை முன்வைத்து பிளவுபட்டு போவதும், சொந்த வாழ்க்கையில் இழப்புகளற்ற புரட்சியை நடத்துவதற்கு பொருத்தமான திருத்தல்வாத, அதிநவீன திருத்தல்வாத வழிமுறைகளை கையாள்வதற்கு அலைந்து திரிகின்ற குட்டி முதலாளித்துவ நபர்களின் தலைமையில் சீரழிந்தும் கிடக்கிறது என்பதுதான் இன்றைய இந்திய, உலக கம்யூனிச இயக்கங்களின் நிலைமை ஆகும்.
ஆனால் இதிலிருந்து நாம் விரக்தி அடைவதற்கு ஏதுமில்லை. லெனினிச சகாப்தத்தில் இரு துருவ ஏற்றத்தாழ்வு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலகை சூறையாடுகின்ற ஏகாதிபத்திய நிதி மூலதனம் அவற்றின் கருவிகளான கார்ப்பரேட்டுகள் வெறும் 150 நிறுவனங்கள் உலகில் உள்ள சொத்துக்களை தனது கைப்பற்றி வைத்திருப்பதும், அதற்கு நேர் எதிராக உலக மக்கள் தொகையில் 99% மக்கள் வறுமை, நிரந்தர வேலை வாய்ப்பின்மை, ஏற்றத்தாழ்வு அதிகரிப்பது பல்வேறு பிற்போக்கு சித்தாந்தங்களினால் வழிநடத்தப்படுவது, அடக்குமுறைக்கு உள்ளாக்கப் படுவது, கடுமையாக சுரண்டப்படுவது என்று இரு துருவ ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
நிகழ்கால அரசியல் மாற்றங்களைச் சிறிதும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ‘இடது’ சாகசவாத ஆயுதப் போராட்ட வழிபாடு அல்லது தன்னெழுச்சியான, போர்க்குணமிக்க, பொருளாதாரவாதப் போராட்டங்களையும் நாடாளுமன்றப் பங்கேற்பையும் இணைக்கும் வலது சந்தர்ப்பவாத சமரசப் பாதை – என்ற இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டு, மார்க்சிய லெனினிய மக்கள் திரள் புரட்சிப் பாதை ஒன்று இருக்க முடியாது என்ற கருத்து 1980-களில் மேலோங்கியிருந்தது. நெருக்கடியான இந்த நிலைமைகளில் சரியானதும் மூன்றாவதுமான ஒரு மக்கள்திரள் பாதையை வகுக்க முடியும் என்று போராடி நிலை நாட்டப்பட்டதுதான் எமது அமைப்பு நடைமுறை. அதே வகையில் அரசியல் முன்முயற்சியின் அடிப்படையில் மக்கள் திரள் பாதைக்கு பொருத்தமான செயல்தந்திரம் வகுத்து புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்கிறோம்.
ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் ஆகக் கேடான வடிவமாக, ஆக பிற்போக்குத்தனமான வகையில் உருவான இந்திய வகைப்பட்ட கார்ப்பரேட் காவி பாசிசத்தின் கொடூரமான தாக்குதலுக்கு கீழ் உள்ளாக்கப்படுகின்ற பெரும்பான்மை மக்களை சரியாக வழி நடத்திச் செல்வதற்கு அரசியல் ரீதியில் திசைவிலகலற்ற வலது, இடது போக்குகளுக்கு எதிராக சரியான அரசியல் நடத்தை வழியை முன்வைத்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
அந்த வகையில் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்தி ஜனநாயக கூட்டரசு என்ற தற்காலிக இடைக்கால புரட்சிகர அரசாங்கம் ஒன்றை நிறுவுகின்ற பாதையில் முன்னேறி வருகின்ற மார்க்சிய லெனினிய இயக்கங்கள் சீனப் புரட்சியின் 75 ஆவது ஆண்டு கால நிறைவை அரசியல் விஞ்ஞான கண்ணோட்டத்தில் மதிப்பீடு செய்கிறது. அதிலிருந்து கற்றுக் கொள்ளவும் முயற்சிக்கின்றது.
இந்த காலகட்டத்தில் வெல்லற்கரிய மார்க்சிய லெனினியமே வழிகாட்டும் சித்தாந்தம் என்பதும், சீனப் புரட்சியிலிருந்து கற்றுக் கொண்ட நீண்ட கால மக்கள் யுத்த பாதை அதற்கு பொருத்தமான அரசியல் மற்றும் ராணுவ நடவடிக்கைகளை முன்வைத்து செயல்படுகின்ற மார்க்சிய, லெனினிய இயக்கங்கள் தான் உண்மையிலேயே புரட்சியை வழிநடத்தி செல்லும் என்பது தான் சீனப் புரட்சியின் 75வது ஆண்டு கால அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஆகும்.
முற்றும்
- ஆல்பர்ட்.