முஸ்லிம்களை பசுவை கொன்றவர்கள், பசு மாமிசத்தை வைத்திருந்தவர்கள் என்ற பெயரில் அடிப்பது; அடித்துக் கொல்வது அல்லது வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவியவர்கள் என்று கூறி இந்திய முஸ்லிம்களை அடித்து துன்புறுத்தி பங்களாதேஷின் எல்லைக்குள் துரத்தி விடுவது என்ற அயோக்கியத்தனத்தை வழக்கமாகக் கொண்டிருக்கிறது பாசிச பாஜக அரசு. அதன் வழியில் கிறிஸ்தவர்கள் மீதும் பாசிச பாஜக அரசு தாக்குதலை தொடுத்துள்ளது.
ஆள் கடத்தலிலும் மதமாற்றத்திலும் ஈடுபட்டார்கள் என்று
பஜ்ரங் தளத்தை சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், பிரான்சிஸ், பிரீத்தி மேரி எனும் இரண்டு கிருத்துவ கன்னியாஸ்திரிகளையும் அவருடன் வந்த ஒரு நபரையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது சத்தீஸ்கர் மாநிலத்தை ஆளும் பாசிச பாஜக அரசு.
கன்னியாஸ்திரிகள் வந்தனா பிரான்சிஸ் மற்றும் பிரீத்தி மேரி இருவரும் 18 இல் இருந்து 20 வயது மதிக்கத்தக்க மூன்று பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்களை கடத்தியதாகவும், அவர்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததாகவும் பொய்யான வழக்கில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் நகரின் ரயில் நிலைய காவல்துறை கைது செய்தது. இதைத் தொடர்ந்து இவர்கள் மூவரும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அந்தப் பழங்குடியின பெண்களை யாரும் சந்தித்து பேசி விடாதபடி மிகவும் ‘பாதுகாப்பாக’ ஒரு அரசு காப்பகத்தில் வைத்துள்ளனர்.
அந்த மூன்று பழங்குடியின பெண்களின் உறவினர்கள் கூறுவதோ வேறு மாதிரியாக உள்ளது.
அந்த மூன்று பெண்களில் ஒரு பெண்ணின் சகோதரி “எங்கள் பெற்றோர் உயிருடன் இல்லை. ஆக்ராவில் செவிலியர் வேலைக்காக, நான்தான் எனது சகோதரியை அந்தக் கன்னியாஸ்திரிகளுடன் அனுப்பி வைத்தேன். முன்பு நானும் கூட நகரத்தில் அவர்களுடன் வேலை செய்து இருக்கிறேன். நான் இப்பொழுது எனது சொந்த காலில் நிற்க முடிகிறது என்பதற்காக நன்றி கூறுகிறேன்” என்கிறார்.
ஒரு பழங்குடியினப் பெண்ணின் உறவினரோ “ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டோம்” என்று கூறியுள்ளனர்.
ஆக, இந்த இளம் பெண்கள் அவர்களின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் செவிலியர் வேலைக்குத்தான் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். கன்னியாஸ்திரிகள் இந்த மூன்று பெண்களை கடத்திக் கொண்டு செல்லவில்லை என்பதும் மதமாற்றம் செய்யவில்லை என்பதும் உறுதியாகத் தெரிகிறது.
ஆனால் சத்தீஸ்கரின் பாஜக முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய், பழங்குடியினப் பெண்களை மதமாற்றம் செய்வதற்காகத்தான் கன்னியாஸ்திரிகள் கடத்திச் சென்றதாக அறுதியிட்டுக் கூறுகிறார்.
இப்படிப்பட்ட முதலமைச்சர் இருக்கும் மாநிலத்தில் இந்து மத வெறியர்களின் தாக்குதல்கள் மறைமுகமாக இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.
பஜ்ரங்தள் அமைப்பின் தலைவியான ஜோதி சர்மா காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கிருத்துவ கன்னியாஸ்திரிகளை எந்தவிதமான தயக்கமும் இன்றி அடித்துள்ளார். இவர் கன்னியாஸ்திரிகளை தாக்குவது, மற்றும் மிரட்டுவது குறித்த காணொளிகள் சமூக வலைத் தளங்களில் பரவி வருகின்றன.
இதுகுறித்து, ஜோதி ஏசியாநெட் நியூஸிடம், “நான் எல்லோரையும் அடிப்பதில்லை. இந்துப் பெண்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுபவர்களைத்தான் நான் அடிப்பேன். அந்தப் பெண்கள் இந்துக்கள் என்பது எனக்குத் தெரியும், அவர்களுக்கு இந்துப் பெயர்கள் உள்ளன. அவர்களைப் பாதுகாப்பது இந்து அமைப்புகள் மற்றும் காவல்துறையின் கடமையாகும்” என்று அவர் தனது “பாசிசக் கடமை உணர்வு” பொங்க கூறினார்.
கைது செய்யப்பட்ட பெண்களை விசாரிப்பதற்கோ அடிப்பதற்கோ இந்த மதவெறியர்களுக்கு என்ன உரிமையுள்ளது? சட்டம் அதை அனுமதிக்கிறதா? காவல் நிலையத்திற்கு புகுந்து கன்னியாஸ்திரிகளை அடிக்க முடிகிறது என்றால் காவல்துறை எந்த அளவிற்கு இந்து மத வெறியர்களுக்கு உதவிகரமாக இருக்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது.
முதலமைச்சரின் மதவெறி பேச்சின் மூலம் காவல்துறை இந்த அளவிற்கு நடந்து கொள்வதற்கான தைரியம் பெறுகிறது.
சத்தீஸ்கரில் இம்மாதிரியான நடவடிக்கைகள் புதிதானவை அல்ல. இம்மாநிலத்தில் கிறிஸ்தவர்களின் மதச் சுதந்திரம் நசுக்கப்படுவது பல ஆண்டு காலமாக நடந்து கொண்டே இருக்கிறது. கிறிஸ்தவர்களை தாக்குவது அச்சுறுத்துவது என்பது பாஜகவின் ஆட்சியில் சர்வ சாதாரணமாக நடக்கும் ஒன்றாக மாறிவிட்டது.
சத்தீஸ்கர் மாநிலத்திற்கு அருகில் உள்ள ஒடிசா மாநிலத்தில் (அப்போதைய மத்திய பிரதேச மாநிலத்தில்)1999 ஆண்டு பாதிரியார் கிராஹம் ஸ்டைன்ஸ் மற்றும் அவரது ஆறு வயது மற்றும் பத்து வயது உடைய இரண்டு குழந்தைகளுடன் ஜீப்பில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது இந்து மத வெறியர்களால் எரித்துக் கொல்லப்பட்டனர். இதைக் கண்டு உலகமே அதிர்ச்சியில் உறைந்து போனது.
படிக்க:
♦ சத்தீஸ்கர் வனக்காடுகள் அதானிக்கு! உயிர்பலி பழங்குடிகள் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு!
♦ அதானி நிலக்கரி சுரங்கத்திற்கு எதிராக போராடும் சத்தீஸ்கர் பழங்குடிகள்!
இந்தக் கொடூர கொலையை செய்தவன் தர்மேந்திர சிங் கொஹ்லி RSS மற்றும் பஜ்ரங் தளம் தொடர்புடையவன். இவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பிறகு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இப்பொழுது சிறையில் இருக்கும் இவனை தர்ம வீரன் என்றும் இந்து மதத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி செய்தார் எனவே அவரை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்றும் இந்து மத வெறியர்கள் கோரி வருகின்றனர்.
இந்து மதத்தை காப்பதற்காக கொலையும் செய்யலாம் என்று கூறும் இந்து மத வெறியர்கள், பஜ்ரங்தள் அமைப்பின் தலைவி காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலர்கள் முன்பாகவே கன்னியாஸ்திரிகளை அடிப்பதை எல்லாம் பெரிய விஷயமாகவே எடுத்துக் கொள்ளப் போவதில்லை. இந்த பஜ்ரங் தள் தலைவியோ தான் அடித்த காணொளி சமூக வலைத்தளங்களில் விரிவாக பகிரப்படுவதை கண்டு மிகுந்த மன மகிழ்ச்சியில் இருப்பார் என்பது உறுதி.
இப்படி வெளிப்படையாக மத வெறியுடன் பேசுவதற்கும் செயல்படுவதற்கும் மத்தியிலும் ஒடிசாவிலும் சத்தீஸ்கரிலும் பாசிச பாஜக ஆட்சியில் இருப்பதுதான் காரணம். இந்து மத வெறியர்கள் அரசு பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படாமல் தடுக்கப்பட வேண்டும் என்பது மிக மிக அவசர அவசிய தேவையாக உள்ளது என்பதைத்தான் இது காட்டுகிறது.
மேலும் இவர்களை தேர்தலில் மட்டும் தோற்கடிப்பதன் மூலம் இந்து மத வெறியர்களை முறியடித்து விட முடியாது. இந்து மதவெறி அமைப்புகளை தடை செய்வதன் மூலம் தான், இவர்களின் மதவெறி செயல்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி உணர வைத்து இவர்களை மக்களிடமிருந்து தனிமை படுத்துவதன் மூலம் தான் இவர்களை முறியடிக்க முடியும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதற்கு இந்திய மக்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராட வேண்டும். அப்படி போராட வைப்பதற்கான வேலைகளை புரட்சிகர, முற்போக்கு, ஜனநாயக சக்திகள் அனைவரும் முன்னெடுக்க வேண்டும்.
- குமரன்







நாள்தோறும் தொலைக்காட்சிகளை பார்த்தாலும் சரி; நாளிதழ்களைப் புரட்டினாலும் சரி; பல்வேறு வகைகளிலான
கொடுஞ்செயல்கள் நடந்த வண்ணமே உள்ளன என்பதை உணர முடிகிறது. எவை எவற்றுக்குத்தான் முன்னுரிமை கொடுத்து போராடுவது என்பதுதான் இப்பொழுது பிரச்சனையாக உள்ளது. அதுவும் சங்பரிவார கூட்டத்தின் – பாஜகவின் – மோடி அரசாங்கம் பொறுப்பேற்ற நாள் முதல் அல்லது ஆர் எஸ் எஸ் இந்துத்துவா அமைப்புகள் காலூன்ற துவங்கிய காலம் முதல் இவர்களின் அட்டகாசங்களுக்கு, இந்து மக்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் இழைக்கப்படும்
கொடும் துயரங்களுக்கு அளவே இல்லாமற் போய்விட்டது. அதில் ஒன்றுதான் கேரள கன்னியஸ்திரி பெண்கள் சட்டீஸ்கர் மாநிலத்தில் மதமாற்ற பணியில் ஈடுபட்டதாக பொய் குற்றம் சாட்டி மாநிலத்தின் முதலமைச்சரும், காவல்துறையும். அவர்களை கைது செய்து கொடுமையான முறையில் சிறையில் அடைத்திருக்கிறார்கள். பக்கபலமாக நீதித்துறையும் உள்ளது. கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரி பெண்களை அடித்து உதைப்பதில் முழு உரிமை பெற்றவர்களாக ஆர்எஸ்எஸ் சங் பரிவார் கொலைகார கூட்டம் எந்நேரமும் தயாராகவே உள்ளதன. அப்படித்தான் இப்பெண்கள் அடித்து துவைத்தெடுக்கப் பட்டுள்ளார்கள். கட்டுரையாளர் தோழர் குமரன் அனைத்தையும் சிறப்பாக விளக்கி விட்டு புரட்சிகர இயக்கங்கள் மக்களை திரட்டி வீதியில் இறங்கி போராடுவதன் மூலமே அனைத்திற்கும் தீர்வு அடங்கியுள்ளதாக பதிவிடுகிறார். அதில் மாற்றுக் கருத்து இல்லை. நடைமுறையில் அகில இந்திய அளவில் இவற்றை எப்படி சாத்தியமாக்க போகிறோம் என்பது தான் நம்முன் உள்ள
கேள்வியாகவும் அடங்கியுள்ளது. மதத்தின் பெயரால் ஒருபுறம் இவ்வித சீரழிவு. அந்த மதத்திலேயே அங்க வைக்கும் இரு வேறு சாதிகளின் இளைஞரும் இளைஞியும் காதல் செய்யவே கூடாது என்று நெல்லையில் பரிதாபத்திற்குரிய இளைஞர் மென்பொருள் பட்டதாரி கவின் செல்வ கணேஷை, வெட்டி வீழ்த்தி இருக்கிறான் அடங்கா ஆணவச் சாதி வெறி பிடித்த சுர்ஜித். வேறு வழி இல்லை;
இடதுசாரி சிந்தனையாளர்களும், புரட்சிகர இயக்கங்களும், இவ்விதப் பிரச்சனைகளில்
ஒத்த கருத்துள்ளோரும் வீதிகளில் இறங்கி சமர் புரிவதைத் தவிர வேறு வழி இல்லை தான்.