இந்தியாவில் உள்ள சிறைகளில் சாதிவெறி தலை விரித்து ஆடுகிறது. சிறைத்துறை நிர்வாகமே மனுதர்மத்தின்படியான சாதிவெறி நடைமுறையை அமுல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தமிழகத்திலும் கூட இதுதான் நிலைமை.
சாதி அடிப்படையில் கைதிகளுக்கு வேலை ஒதுக்குவதை பல மாநிலங்களில் சிறை கையேடுகளே வரையறுத்துள்ளன.
சிறை அதிகாரிகள் சிறையில் உள்ள கைதிகளுக்கு வேலைகளை ஒதுக்கும்பொழுது, சிறை கைதிகளின் சாதியைப் பார்த்து அவர்களின் சாதிக்கேற்ப, பட்டியலின சாதியைச் சேர்ந்த கைதிகளுக்கு மலக்குழியை சுத்தம் செய்வது, கழிவறைகளை சுத்தம் செய்வது, சிறைகளை பெருக்கி துடைத்து சுத்தம் செய்வது, போன்ற வேலைகளை ஒதுக்குகின்றனர்.
அதேசமயம் கைதிகளுக்கு மருத்துவ உதவிகளை செய்வது, சட்ட ஆவணத்துறையை கையாள்வது, சமைப்பது, சமையலுக்கு உதவி செய்வது போன்ற சமையலறை வேலைகளை ஆதிக்க சாதியினருக்கு கொடுக்கின்றனர்.
பார்ப்பனருக்கு கீழ்ப்பட்ட சாதியில் உள்ளவர்கள் சமைத்த உணவுகளை பார்ப்பனக் கைதிகள் உண்ணும்படி நேர்ந்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து மனுதர்மத்தின் ஆட்சியை சிறை நிர்வாகம் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.
சிறையில் விசாரணை கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நபர்களை எவ்வித வேலைகளிலும் ஈடுபடுத்தக் கூடாது என்பது சிறைத் துறையில் ஒரு விதியாக இருப்பினும் கூட அப்படிப்பட்ட கைதிகளில் இருந்தும் கூட பட்டியலின மக்களை வகைப்படுத்தி, பிரித்தெடுத்து மலக்குழிக்குள் இறங்கி அடைப்புகளை சுத்தம் செய்வது போன்ற வேலைகளில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துகின்றனர். மனிதர்கள் மலத்தை மனிதர்கள் அள்ளுவது தடை செய்யப்பட வேண்டும் இயந்திரங்களைக் கொண்டுதான் அள்ள வேண்டும் என்று சட்டம் உள்ளது. சட்டம் — வெங்காயம் எல்லாம் பார்ப்பன மேல் சாதியினருக்கு தான் தாழ்த்தப்பட்ட சாமானிய சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு அல்ல என்பது சிறைத்துறையின் நடைமுறையாக உள்ளது
கொலை செய்ததால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் கூட, அந்தக் கைதிகள் பார்ப்பனர்களாக இருந்தால் ‘கீழான’ சாதியில் உள்ளவர்கள் சமைத்த உணவை உண்ண முடியாது என்று மறுப்பதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. பார்பனர்களின் மறுப்பை ஏற்றுக் கொண்டு அவர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றபடி பார்ப்பனர்களைக் கொண்டு உணவு சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று சிறை கையேடு கூறுகிறது.
அதே சமயம் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் மலக்குழியில் இறங்கி வேலை செய்ய முடியாது என்று மறுத்தாலும், சட்ட விதிகளுக்கு புறம்பாக, அவர்களை கட்டாயப்படுத்தி மலக்குழிக்குள் இறக்கி சுத்தம் செய்ய வைக்கலாம் என்றும் சிறை கையேடு உணர்த்துகிறது.
படிக்க:
📌 பாசிச பயங்கரவாதிகளின் ஆட்சியில் சிறைவாசிகளின் மீதான புதிய வகை ஒடுக்குமுறை!
அர்ச்சகர் பயிற்சி முடித்த பிற சாதியினரை கோவில் கருவறைக்குள் விட முடியாது என்று கூறும் பார்ப்பனர்களை கட்டாயப்படுத்தி இந்த அரசு நிர்வாகம் சம்மதிக்க வைப்பதில்லை. ஆனால் மலக்குழிக்குள் இறங்க முடியாது என்று மறுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களை அரசு நிர்வாகம் கட்டாயப்படுத்தி மலக்குழிக்குள் இறக்குகிறது.
சாதி, சமூகத்தில் புரையோடிப் போய் உள்ள ஒரு நோய். எத்தனை சட்டங்கள் போட்ட போதும் சாதி வெறியை — சாதி, தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க முடியாததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆட்சியாளர்களின், அரசு அதிகாரிகளின் மனங்களில் ஊறிப் போய் உள்ள சாதிவெறி அவற்றுள் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. சாதிவெறி பிடித்த அதிகாரிகள், மனிதத் தன்மைக்கும் சட்டத்திற்கும் எதிராக, தனது பதவியை பயன்படுத்தி சாதி வெறியாட்டம் போட்டுக் கொண்டிருப்பதும் சாதி வெறியை ஒழிக்க முடியாததற்கு முக்கியமான காரணம்.
இப்படிப்பட்ட சாதி வெறியர்கள் அதிகாரிகளாக, ஆட்சியாளர்களாக இருந்து கொண்டு, சாதி ரீதியாக கைதிகளைப்பிரித்து சாதிவெறி ஒடுக்கு முறையை நிகழ்த்தலாம் என்று சிறைத்துறை கையேடுகளிலேயே வறையறுத்து வைத்திருக்கிறார்கள்.
இதுதான் சட்டத்தின் ஆட்சி!மனுதர்மத்தின்படியான சாதிவெறிச் சட்டத்தின் ஆட்சி!!
— குமரன்
செய்தி ஆதாரம்: Thewire